செருப்பில் மாட்டிய சிறுகல்

 

 

 

செருப்பில் மாட்டிய சிறுகல்

----

 

 

     நாம் ஒரு செயலை முடிக்க எண்ணி வழிநடை மேற்கொண்டு இருப்போம். அப்போது, நமது செருப்பில் அல்லது ஷூவில் ஒரு சிறு கல் மாட்டிக் கொள்ளும். அது நம்மை மேற்கொண்டு நடக்கவிடாமல் துன்புறுத்தும். செருப்பையோ, ஷூவையோ உடனடியாகக் கழற்றி, அந்தச் சிறுகல்லை அகற்றி விட்டு, நமது வழிநடையைத் தொடருவோம்.

 

     அதுபோலவே, கெட்ட எண்ணம் உடைய கீழ்மக்கள், நல்லோருக்குத் துன்பம் தந்து அவரது செயல் முடியாதவண்ணம் இடையூறு செய்வர். எப்போதும் தம்மைச் சேர்ந்தவருக்குத் துன்பத்தையே செய்து கொண்டு இருப்பர். வெகு விநயமாகவும் செய்வர். அவர்களின் செயல் நமது முன்னேற்றத்தைத் தடுப்பதாகவே அமையும். தமக்கு ஏதும் பயனில்லையானாலும், நல்லோரது முன்னேற்றத்தைத் தடுப்பதே அவரது குறிக்கோளாகவும் இருக்கும்.

 

அப்படிப்பட்டவர்களை வகைப்படுத்திப் பார்க்கலாம்.

 

1. தன்னை யாரும் மதிக்காதபோது, தம்மைத் தாமே மதித்துக் கொண்டு, செய்யக் கூடாத செயல்களைச் செய்து கொண்டே இருப்பர்.

 

2. தம்மை மிகுதியாக மதிப்பவரிடத்தில், அவரது மனம் கோணாதபடி அவருக்கு நன்மையைத் தரும் செயல்களைச் செய்து வருதல் வேண்டும். ஆனால், அவர்கள் விரும்பத் தகாத செயல்களையே செய்துகொண்டு இருப்பர்.

 

3. எப்போதும் உள்ளத்தில் ஏதாவது வஞ்சக எண்ணத்தை வைத்துக் கொண்டு, பிறரை எப்படியாவது வருத்திக் கொண்டே இருப்பர்.

 

     இப்படிப்பட்டவர்கள் நல்லவர்கள் போலத்தான் தோன்றுவார்கள். புறத்தோற்றத்தை வைத்து அவரை நம்பி ஏமாறுவோம். அவர்கள் செயலை வைத்து, அவரை இனம் கண்டு ஒதுக்கி வைக்கவேண்டும். அப்போதுதான், நமது நல்ல எண்ணங்களும், செயல்களும் ஈடேறும்.

 

     நல்லோருக்குத் தொல்லை தருவதையே தமது தொழிலாகக் கொண்டுள்ள, இவர்களைத் தான், "செருப்பில் மாட்டிக் கொண்ட பருக்கைக் கல்" என்கின்றது "பழமொழி நானூறு" என்னும் பதினெண்கீழ்க் கணக்கு நூல்.

 

பாடலைக் காண்போம்...

 

 

தருக்கி ஒழுகித் தகவு அல்ல செய்தும்,

பெருக்க மதித்தபின் பேணாத செய்தும்,

கரப்பு உடை உள்ளம் கனற்றுபவரே

செருப்பு இடைப் பட்ட பரல்.

 

இதன் பொருள் ---

 

     தருக்கி ஒழுகி தகவல்ல செய்தும் --- (பிறர் தன்னை மதியாத இடத்து) தன்னைத் தானே மதித்து ஒழுகித் தகுதியல்லாத செயல்களைச் செய்தும், பெருக்க மதித்தபின் பேணாத செய்தும் --- பிறர் தன்னை மிகுதியும் மதித்த இடத்து அவர் விரும்பத் தகாதனவற்றைச் செய்தும், கரப்பு உடை உள்ளம் கனற்றுபவர் --- மறைந்த எண்ணங்கொண்டு பிறரை வருத்துபவர், செருப்பு இடைப்பட்ட பரல் --- செருப்பின்கண் பொருந்தி இருக்கும் பருக்கைக் கல்லை ஒப்பர்.

 

         கீழ்மக்கள் பெரியோர் செய்யும் செயல்களுக்கு இடையூறாக நிற்பர். செருப்பின்கண் உள்ள பரல் தன்னை உடையானைச் செல்லாதவாறு தடுத்தல்போல, உள்ளத்தில் கரவு உடையார் பெரியோர் செயல்களுக்கு இடையூறாக நின்று விலக்குவர்.

 

 

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...