தீயோரைக் காணாமல் இருப்பது நல்லது




தீயோரைக் காணாது இருப்பது நல்லது

----


"துட்டனைக் கண்டால் தூர விலகு" 
"துட்டனைக் கண்டால் தூர ஓடு"

என்பன முதுமொழிகள்.

     இந்த முதுமொழிக்கு விளக்கமாக, "நீதி வெண்பா" என்னும் நூலில் ஒரு பாடல் உண்டு. நூறு பாடல்கள் கொண்ட இந்த நூலை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. விளம்பரம் இல்லாமலே அரிய செயல்களை, நமது நன்மை கருதிச் செய்துவிட்டு, சொல்லாமலே போய்விட்டார்கள்.

"கொம்புஉளதற்கு ஐந்து, குதிரைக்கு பத்துமுழம்,

வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே, --- வம்புசெறி

தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து

நீங்குவதே நல்ல நெறி".


         கொம்பு உள்ள மாடு முதலிய விலங்குகளுக்கு அருகில் போனால் முட்டும். எனவே, கொம்பு உள்ள விலங்குகளைக் கண்டால் ஐந்து முழத் தொலைவில் உடனே சென்று விடவேண்டும். குதிரைக்குப் பத்து முழத் தொலைவில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும், சினம் கொண்ட யானைக்கு ஆயிரம் முழத் தொலைவிலும் விலகி இருக்கவேண்டும். ஆனால், கொடுமைகள் மிகுந்துள்ள தீயவர்களின் கண்களில் படும்படி நேர்ந்தால், அவர்கள் கண் காணமுடியாத தொலைவில் விலகி இருப்பது நல்லது.

     காரணம் தீயவர்களைக் காண்பதே தீமையாய் முடியும். 

     இதனை வலியுறுத்தி, ஔவைப் பிராட்டியார் "மூதுரை" என்னும் நூலில் பாடி உள்ள பாடலைக் காண்போம்...

தீயாரைக் காண்பதுவும் தீதே, திரு அற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே, --- தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே, அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

     தீய குணம் உடையவரைப் பார்ப்பதும் தீமை தருவதே.  பயன் இல்லாத தீயவருடைய ணொற்களைக் கேட்பதும் தீமை தருவதே. தீயவருடைய தீய குணங்களை எடுத்துச் சொல்லுவதும் தீமையைத் தருவதே. அந்த தீயவர்களோடு கூடி இருப்பதும் தீமையையே தரும்.



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...