முயல் விட்டுக் காக்கைப் பின் போதல்

 

 

முயல் விட்டு, காக்கைப் பின் போதல்

---

 

இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள். எளிமையாகச் செய்யக்கூடிய ஒரு செயலை விட்டு, செய்து முடிக்க இயலாத ஒரு செயலைச் செய்வதால் பயனில்லை என்பதை, "முயல் விட்டுக் காக்கைப் பின் போனது" என்றும் "இருப்பதை விட்டுப் பறப்பதை பிடிக்கப் போனது" என்றும் பெரியவர்கள் சொல்வார்கள்.

 

"முயல் விட்டுக் காக்கைப் பின் போனவாறு" என்று பயனற்ற செயலைச் செய்கின்ற மக்களைப் பார்த்து, நக்கீரதேவ நாயனார், பதினோராம் திருமுறையில், "கோபப் பிரசாதம்" என்னும் அகவல் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். பயனற்ற செயல்களைச் செய்கின்ற மக்களை, இயமன் கொண்டு போகாமல் இன்னும் உலகில் வைத்திருப்பது ஏன் என்று, இயமன் மீது கோபம் கொண்டு பாடிய பாடல். ஆதலால், "கோபப் பிரசாதம்" எனப்பட்டது. மிக நீண்டதொரு பாடலை, சுருக்கித் தந்து உள்ளேன்.

 

 

"நீற்றிடைத் திகழும் நித்தனை, முத்தனை,

வாக்கும் மனமும் இறந்த மறையனை,

பூக்கமழ் சடையனை, புண்ணிய நாதனை,

இனைய தன்மையன் என்று அறிவு அரியவன்

தனை, முன் விட்டுத் தாம் மற்று நினைப்போர்,

மாமுயல் விட்டுக்

காக்கைப் பின்போம் கலவர் போலவும்....

.....             .....             .....

முன்னே அறியா மூர்க்க மாக்களை

இன்னே கொண்டு ஏகாக் கூற்றம்

தவறு பெரிது உடைத்தே தவறு பெரிது உடைத்தே".

 

இதன் பொருள் ---

 

திருநீற்றில் பொலியும் திருமேனியனாகிய சிவபெருமானை, இயல்பாகவே பாசத்தின் நீங்கியவனை, சொல்லுக்கும் மன உணர்வுக்கும் எட்டாத வேதப் பொருளாய் உள்ளவனை, மலர்கள் மணக்கும் திருச்சடையை உடையவனை, புண்ணிய நாதனை, இன்ன தன்மையை உடையவன் என்று அறிவதற்கு அருமையானவனை, இளமைக் காலத்திலேயே வழிபடுவதை விடுத்து, வேறு ஒன்றை நினைப்பவர், முயலை விட்டுக் காக்கையின் பின் செல்கின்ற வேடர்களைப் போன்றவர்கள். இவர்களைக் கூற்றுவன் ஆனவன் இப்பொழுதே கொண்டு போகாதது பெரும் தவறு ஆகும்.  

 

வேட்டையாடுபவன் முயலின்பின் விடாது சென்றால் பயன் பெறுவான். அதை இடையில் விட்டுவிட்டுக் காக்கைப்பின் போனால் என்ன பயன் பெறுவான்? ஒன்றையும் பெறான். இது பயன் தருவதை விட்டுப் பயன் தாராததைத் தொடர்வதற்கு உவமையாகும். கலவர் --- படைக்கலம் எந்தியவர்; வேட்டையாடுபவர்.

 

இளமைக் காலத்திலேயே,சிவபரம்பொருளை வழிபடாது விட்டு, சமணர்களைச் சார்ந்து இருந்ததற்கு இரங்கி அப்பர் பெருமான், பாடி தேவாரப்பாடல் ஒன்று....

 

 

"என்பு இருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்டு,

     என்னை ஓர் உருவம் ஆக்கி,

இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு,

     என் உள்ளம் கோயில் ஆக்கி,

அன்பு இருத்தி அடியேனைக் கூழாட்கொண்டு

     அருள் செய்த ஆரூரர் தம்

முன்பு இருக்கும் விதி இன்றி முயல்விட்டுக்

     காக்கைப்பின் போனவாறே".

 

இதன் பொருள் ---

 

எலும்புகளை அடித்தளமாக அமைத்து நரம்புகளையும் தோலையும் பொருந்துமாறு இணைத்து, எனக்கு ஓர் உருவத்தைக் கொடுத்து, இன்பங்களை நுகர் பொருளாக வைத்து, முன்பு அடியேன் செய்து குவித்திருந்த வினைகளைப் போக்கி அடியேனுடைய உள்ளத்தைத் தம் இருப்பிடமாகச் செய்து அடியேன் உள்ளத்தில் அன்பினை நிலைநிறுத்தி, அடியேனை ஆளுதலைக் கடமை(கூழைமை)யாகக் கொண்ட ஆரூர்ப் பெருமானுடைய திரு முன்னர் இருக்கும் வாய்ப்பினை நெகிழ விட்டு, கைப் பற்றுதற்கு எளிதாய் உண்பார்க்குச் சுவையை உடையதான முயலை விடுத்துக் கைப்பற்றுதற்கும் அரிதாய்க் கைக்கொண்டாலும் உண்பதற்குத் தகுதியற்றதாய் உள்ள காக்கை பின் சென்ற அறிவிலியைப் போல ஆகிவிட்டேனே!

 

அடியேனைக் கூழாட்கொண்டு அருள் செய்த ஆரூரருடைய திருமுன் இருக்கும் விதியில்லாதவன் என்று தன்னை நொந்து கொள்கின்றார். முன்பு இருக்கும் விதியில்லை என்றதால் பின்பு இருக்கும் விதியுள்ளது எனல் பெறப்பட்டது. எதன் பின்பு? சமண் சமயக் கொள்கையின் நீங்கி வந்ததன் பின்பு.

 

திருமங்கை ஆழ்வாரும், "சிறிய திருமடல்" என்னும் ஒரு அகவல் பாடலில், இக் கருத்தை வைத்துப் பாடி உள்ளார்.

 

 

"ஆராயில் தானே அறம்பொருள் இன்பம் என்று

ஆரார் இவற்றின் இடையதனை எய்துவார்,

சீரார் இருகலையும் எய்துவர் --- சிக்கெனமற்று

ஆரானும் உண்டு என்பார், என்பதுதான் அதுவும்

ஓராமை அன்றே, உலகத்தார் சொல்லும் சொல்

ஓராமை ஆமாறு அது உரைக்கேன், கேளாமே

கார்ஆர் புரவி ஏழ் பூண்ட தனிஆழி

தேரார் நிறைகதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு

ஆரா அமுதம் அங்கு எய்தி, அதினின்றும்

வாராது ஒழிவது ஒன்று உண்டே. அது நிற்க,

ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே".

                 

இதன் பொருள் ---

 

நூல் பயன் என்று சொல்லப்பட்ட அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றனுள் இன்பத்தைப் பெறுவோர், சிறப்புள்ள அதன் பகுதிகளான அறம் பொருள் என்னும் இரண்டையும் பெறுவர். இவை அல்லாமல் சிறந்தது வேறு உண்டு என்று உலகத்தார் சொல்லுவது அறிவின்மை ஆகும். அது எவ்வாறு என்று கூறுகின்றேன் கேளுங்கள். மேக மண்டலத்தில் சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய ஒரே சக்கரம் உடைய தேரில் சஞ்சரிக்கின்றான். வெப்பக் கிரணங்களை உடைய அச் சூரியனின் மண்டலத்தைத் தாண்டி, மேலே பரமபதத்தைச் சென்று அடைந்து, அங்கு திருப்தி பிறக்காமல், அமுதமாகிய பரம்பொருளை அடைந்து, அவ்விடத்தில் இருந்து திரும்பி வராமல் இருத்தல் ஒன்று உண்டோ? புலாலை விரும்புவோர், உடலில் தசைப் பகுதி அதிகமாக உள்ள முயலைத் தொடராமல், வானில் மரக்கிளைகளில் பறக்கும் காக்கையைப் பிடிக்க வேட்டையாடித் தொடர்வதோ?

 

அர்ச்சை நிலையானது பற்றுவதற்கு எளிதாய் இருக்க, அதை விடுத்துப் பரத்துவத்தை நாடுவதோ என்பது கருத்து.

 

இதே கருத்தில் அமைந்த ஒரு பாடல், "பழமொழி நானூறு" என்னும் நூலில் இருந்து.....

 

 

அற்றாக நோக்கி அறத்திற்கு அருளுடைமை

முற்ற அறிந்தார் முதல் அறிந்தார், --- தெற்ற

முதல்விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம்

முயல்விட்டுக் காக்கை தினல்.

 

இதன் பொருள் ---

 

அறச் செயல்களைச் செய்வதற்கு அடிப்படையாக உள்ளத்தில் அருளை (அன்பு, கருணை, இரக்கம்) உடையவராக இருத்தல் சிறந்த பண்பாகும். இதனையே தமது ஒழுக்கமாகக் கொண்டு, தெளிந்து அறிவோடு, அறம் செய்யவேண்டியதன் காரணத்தை முழுதுமாக அறிந்து அறச் செயல்களை செய்பவர் ஆவார்.

 

அறத்திற்கு முதலாக இருக்கவேண்டிய பண்பாகிய அருளை விட்டு, அறச் செயல்களின் திறத்தை அறியாமல், அறச் செயல்களைக் கைவிட்டவருடைய பாதுகாப்பு அற்ற ஒழுக்கமானது, நிலத்தில் ஓடுகின்ற, தசைப் பகுதி நிறைந்ததும், உண்பதற்குச் சுவை உள்ளதும் ஆகிய முயலைப் பிடிப்பதை விட்டுவிட்டு, வானத்தில் பறந்து செல்லுகின்ற காக்கையைப் பிடித்துத் தின்ன ஆசைப்பட்டதைப் போன்றது.

 

முயல் காக்கையைய விடச் சிறந்தது. அதுபோலவே, நல்லொழுக்கமும் சிறந்த பயனைத் தருவது. எளிதில் அடையக் கூடியதை விட்டு அரிது முயன்றும் அடையக் கூடாத செயலுக்கு ஆளப்படும் பழமொழி, 'முயல் விட்டுக் காக்கை தினல்' என்பது.

 

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...