சிவராத்தி, நவராத்திரி வழிபாடு

 

                     கலைமகள் வழிபாடு என்னும் சரசுவதி பூசை.  விஜயதசமி.

----

 

     நவராத்திரி என்று சொல்லப்படும் ஒன்பது இரவுகள், முப்பெருந்தேவியரை வழிபடுகின்றோம். முதல் மூன்று நாட்கள், இச்சா சத்தியாகிய துர்க்கை வழிபாடு. அடுத்த மூன்று நாட்கள், ஞான சத்தியாகிய திருமகள் வழிபாடு. அடுத்த மூன்று நாட்கள், கிரியா சத்தியாகிய கலைமகள் வழிபாடு.

 

     சிவராத்திரி என்று ஒரு நாளையும், நவராத்திரி என்று ஒன்பது நாள்களையும் கொண்டாடுகின்றோம்.

 

     சிவராத்திரியாவது, விரதம் காத்து, இரவு முழுக்க விழித்திருந்து வழிபாடு செய்கின்றோம். நவராத்திரி ஒன்பது நாட்களும் அவ்வாறு இரவு முழுதும் விழித்து இருந்து வழிபாடு செய்வதில்லை.

 

     இந்த ராத்திரி (இரவு) வழிபாடுகள் எதற்காக உண்டாக்கப்பட்டன என்பதை அறிந்து கொண்டால் பயனுள்ளதாக அமையும். எப்படி வழிபாட்டினை மேற்கொள்வது என்னும் திறம் விளங்கும்.

 

     உயிர்கள் அனைத்திற்கும் அந்தந்த இனத்திற்கு ஏற்ற அறிவு உண்டு. எனவேதான், உயிர்களை ஓர் அறிவு முதல் ஆறு அறிவு வரை என்று பகுத்து வைத்தார்கள் நமது முன்னோர். ஒர் அறிவு முதல் ஐந்து அறிவு வரை உள்ள உயிர்களுக்கு உள்ளவை புலன் அறிவு ஆகும். அந்த அறிவானது தனது தேவையை அறிந்து உயிர் வாழத் தகுந்ததாகவே அமைந்தது. உற்று அறிவது, சுவைத்து அறிவது, மோந்து அறிவது, பார்த்து அறிவது, கேட்டு அறிவது ஆகியவை ஐந்து அறிவுகள்.

 

ஒன்று அறிவு அதுவே உற்று அறிவதுவே,

இரண்டு அறிவு அதுவே அதனொடு நாவே,

மூன்று அறிவு அதுவே அவற்றொடு மூக்கே,

நான்கு அறிவு அதுவே அவற்றொடு கண்ணே,

ஐந்து அறிவு அதுவே அவற்றொடு செவியே,

ஆறு அறிவு அதுவே அவற்றொடு மனனே,

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே....

 

புல்லும் மரனும் ஓர் அறிவினவே,

நந்தும் முரலும் ஈர் அறிவினவே,

சிதலும் எறும்பும் மூ அறிவினவே,

நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே,

மாவும் மாக்களும் ஐ அறிவினவே,

மக்கள் தாமே ஆறு அறிவு உயிரே....

 

என்றது தொல்காப்பியம் மரபியலில்.

 

     புல், செடி, கொடி, மரம், மலை முதலியவை உற்று அறிவது ஆகிய ஓர் அறிவினை உடையவை.

 

     சங்கு, சிப்பி, நத்தை முதலியவை, உற்று அறியும் அறிவோடு, சுவைத்து அறிவது ஆகிய இரண்டு அறிவுகளை உடையவை.

 

     செல், எறும்பு முதலியவை, உற்று அறியும் அறிவு, சுவைத்து அறியும் அறிவு ஆகிய இரண்டோடு, மோந்து அறிவது என மூன்று அறிவுகளை உடையவை.

 

     நண்டு, தும்பி முதலியவை, உற்று அறிவது, சுவைத்து அறிவது, மோந்து அறிவது என்னும் மூன்று அறிவுகளோடு, கண்டு அறிவது என்னும் நான்காவது அறிவையும் உடையவை.

 

     விலங்குகளும், மக்களில் பகுத்தறிவு இல்லாதவரும், உற்று அறிவது, சுவைத்து அறிவது, மோந்து அறிவது, கண்டு அறிவது என்னும் நான்கு அறிவுகளோடு கேட்டு அறிவது என்னும் ஐந்தாவது அறிவையும் உடையவை.

மாக்கள் என்பது, மனித உடம்பை எடுத்து, மன அறிவாகிய பகுத்துணர்வு இல்லாமல் விலங்குபோல் தமது தேவைக்காக மட்டுமே வாழ்பவர்கள்.

 

     தக்கது இது, தகாதது இது என்று பகுத்து அறிந்து, தனக்குத் தக்கதைப் பிறர்க்கும் புரிந்து, தனக்குத் தகாதவற்றைப் பிறர்க்குச் செய்யாமல் விடுத்தல் மன அறிவு என்னும் ஆறாவது அறிவு ஆகும். ஆறாவது அறிவு இருந்தால் அவன் மனிதன். அந்த அறிவு விளக்கம் பெறவேண்டும்.

 

     எனவே, அறிவு விளக்கம் பெறுவதற்காக, பள்ளியில் பயிலத் தொடங்குகின்றோம். ஓரளவுக்கு பிழைப்பு நடத்தும் வல்லமை பெற்ற பிறகு கல்வி கற்பதை நிறுத்திக் கொண்டு, பிழைப்பு நடத்துவதில் நாட்டம் கொள்கின்றோம். அறிவுக்கு எல்லை இல்லை என்பதை அறிதல் வேண்டும். "அறிதோறும் அறியாமை கண்டற்றால்" என்றார் நாயனார். அறிவின் எல்லையானது, நூல்களைப் பயிலப் பயில விரிந்துகொண்டே செல்லும். எனவே, "கற்றனைத்து ஊறும் அறிவு" என்றும் தெளிவித்தார் நாயனார். "என் ஒருவன் சாந்துணையும் கல்லாதவாறு?" என்று ஒரு வியப்புக் குறிப்புடன் கூடிய வினாவையும் திருவள்ளுவ நாயனார் எழுப்பினார். சாகும் வரையில் கூட நூல்களைக் கற்காமல் வாழ்நாளை வீணாக்குகின்றவர்களைப் பார்த்துச் சொன்னது மட்டுமல்ல, சாகும் வரையிலும் கூட நூல்களைப் பயிலுவதை விட்டுவிடாமல் அறிவு விளக்கத்தைப் பெற்றுக் கொண்டே இருத்தல் வேண்டும் என்று நாயனார் அறிவுறுத்தினார் என்று கொள்ளுதல் சிறப்பு.

 

     அறிவு விளக்கமானது, வாழ்வியலுக்கு மட்டுமல்லாது அருளியலுக்கும் துணை புரியும். உலகியல் செல்வத்தை மட்டும் காட்டாது, அருளியல் செல்வத்தின் சிறப்பையும் உணர்த்த, "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்" என்று காட்டி, பொருட்செல்வத்தைப் பற்றிக் கூறும்போது, அது,"பூரியார் கண்ணும் உள" என்று போகின்ற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

 

     எனவே, உலகியல் நிலையில் பார்த்தால், கலைமகள் துணையோடு, அறிவு விளக்கத்தைப் பெற்றால், திருமகள் துணையோடு பொருட்செல்வத்தைப் பெறலாம் என்றும் இரண்டும் ஒருங்கிணைந்து இருந்தால், எண்ணிய செயல்களை இயற்றி, இன்பத்தைப் பெறலாம் என்பதும் தெளிவாகும்.

 

     அருளியல் நிலையில் வைத்துப் பார்த்தால். கலைமகள் துணையோடு, கற்கவேண்டிய நூல்களைக் கற்றுத் தெளிந்தவர்கள் பொருட்செல்வத்தை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள். கிடைத்த பொருளை, பிறர்க்குக் கொடுத்து மகிழ்ந்து, பொருள் பெற்றதன் பயனாக அருளைப் பெறுவார்கள்.  பொருட்செல்வத்தை மட்டுமல்லாது, தாம் பெற்ற கல்விச் செல்வத்தையும் "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும்படி, பிறர்க்கு வழங்கி மகிழ்வார்கள். பொருளை அருளாக மாற்றும் நுண்ணறிவானது, நுண்ணறிவு பயக்கும் நூல்களைப் பயின்றார்க்கே வாய்க்கும். அவர்கள் உலகியல் செல்வத்தை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள்.

 

     அப்பர் பெருமான் தனது உழவாரப் படையை இட்ட இடங்களில் எல்லாம் கிடைத்த பொன்னையும், மணிகளையும் துச்சம் என மதித்து, அப்பால் எறிந்தார். அழிந்து போகின்ற பொருளை மதிக்காமையால், அழியாத செல்வமாகிய இறையருளை அவர் எளிதில் பெற்றார். அவர், "கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர், ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கினர்" ஆக விளங்கினார். "வானேயும் பெறில் வேண்டேன், மண்ணாள்வான் மதித்தும் இரேன்" என்றார் மணிவாசகப் பெருமான். "ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வான் ஆளும் செல்வமும், மண்ணரசும் யான் வேண்டேன்" என்றார் ஆழ்வார். திருமகள் என்னும் "சிவமகாலட்சுமி" துணையால், பொருட்செல்வத்தோடு, அருட்செல்வத்தையும் பெறமுடியும்.

 

     கல்விச் செல்வத்தைப் பெற்று, பொருட்செல்வத்தை இகழ்ந்து போக்கி, அருட்செல்வத்தைப் பெற்ற அடியவர்கள்,

மலைமகள் துணையால், வீரத்தில் சிறந்து விளங்குவார்கள். "நாம் ஆர்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம், ஏமாப்போம், பிணி அறியோம், இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை" என்ற நிலையில் விளங்குவார்கள்.

 

     கலை என்னும் சொல்லுக்கு, நூல், சாத்திரம் என்றும் பொருள் உண்டு. கல்வி ஞானமே உலகியல் நலங்களோடு, அருளியல் நலங்களையும் பெறத் துணை புரிவது என்பதால், கலைமகள் வழிபாடு என்னும் சரசுவதி பூசையைச் செய்து, மறுநாள் குருவைப் பணிந்து, வித்யாரம்பம் செய்து, விஜயதசமி என்று கொண்டாடுகின்றோம்.

 

     எனவே, நவராத்திரி வழிபாடு உலகியல் நலங்களோடு, அருளியல் நலங்களையும் பெறுவதற்கு அமைந்தது என்பதை அறிதல் வேண்டும்.

 

     சிவராத்திரி, நவராத்திரி என்று இரவு வழிபாடுகளாக அமைந்தது பற்றிச் சிந்திப்போம்.

 

     இறைவன் இல்லாத இடம் எதுவும் இல்லை. பார்க்குமிடம் எங்கும் நீக்கமற்ற நிறைகின்ற பரிபூரணப் பொருள் அவன். அவன் எங்கும் இருக்கிறான் என்ற எண்ணம் நமக்கு இருப்பதில்லை. அந்த எண்ணம் இருந்தால் நாம் தவறு செய்வோமா? தீமை செய்வோமா?

 

"எங்குள் உளன்ஒருவன் காணுங்கொல் என்று அஞ்சி

அங்கம் குலைவது அறிவு"          

 

என்றார் குமர குருபர அடிகள்.

 

     இந்த எண்ணம் எழவொட்டாதபாடி ஆன்மாவினது அறிவைத் தடுத்து நிற்பதாகிய பொருள் ஒன்று உண்டு. அதுவே ஆணவமலம் எனப்படுகிறது. (மலம் என்றால் அழுக்கு, களையக் கூடியது, கழுவக் கூடியது என்று பொருள்) எல்லா உயிர்களும் முதலிலிருந்தே ஆணவ மலத்தை உடையனவாக உள்ளன. ஆணவம் நீரை மூடும் பாசி போலவும், கண்ணை மறைக்கும் இருள் போலவும், உயிர்களின் அறிவை மறைத்து நிற்கும். கடவுளுக்கு அடுத்தபடியாகப் பெரும் பொருளாய் நிற்கும் உயிரைத் தனது சத்தியால் சிறுமைப் படுத்தி நிற்பது ஆணவ மலமே. உயிர் அடையும் எல்லாப் பெருங்கேட்டிற்கும் இது மூலம். எனவே, இது மூலமலம் எனப்படும். உயிர் என்று உண்டோ அன்றே அதனோடு இயற்கையாய்க் கலந்து நிற்பதால், இது "சகசமலம்" எனப்படும். கண்ணை மறைக்கும் புற இருள் போல, இது உயிரினது அறிவை மறைக்கும் அக இருள் ஆகும். அது பற்றி இருள் மலம் எனப்படும்.

 

         ஆணவ மலமாகிய இருளை நீக்கும் விளக்குப் போன்றது மாயை. மாயையே உயிருக்கு உடம்பாகவும் உடம்பில் உள்ள கருவிகளாகவும் அமைந்து. ஆணவ இருளைச் சிறிது நீக்கி அறிவை விளக்குகிறது. மாயையின் சேர்க்கையால் ஆணவத்தின் வலி சிறிது குன்றிய போது ஆன்மா நுண்ணறிவைப் பெறாது, பருமையான அறிவையே பெறுகிறது. அகநோக்கு இன்றிப் புறநோக்கையே உடையதாகிறது. அதாவது உள் நோக்கித் தன்னையும் தன்னுள்ளே இருக்கும் தலைவனாகிய இறைவனையும் உணரமாட்டாமல், புறத்தே உள்ள உலகப் பொருள்களையே நோக்கி நிற்கிறது.

 

     இந்நிலையில் ஆணவ மலம் திரிபுணர்வைத் தருகிறது. திரிபுணர்வு எனினும், விபரீத அறிவு எனினும், மயக்கவுணர்வு எனினும் ஒன்றே. இத் திரிபுணர்வால் ஆன்மா தன்னையே எல்லாவற்றிற்கும் வினைமுதலாகக் கருதி, நான் நான் என்று முனைத்து எழுகிறது. அம் முனைப்போடு செய்யும் செயலே வினை அல்லது கன்மம் எனப்படும்.

 

         மாயை உடம்பாயும் உலகப் பொருள்களாயும் நின்று உயிரைக் கவர்ந்து மயக்குகிறது. கன்மம் அவ்வுலகப் பொருள்களை உயிரோடு கூட்டி இன்பத் துன்பங்களைத் தந்து மயக்குகிறது. ஆணவம் யான் எனது என்னும் பற்றினை உண்டாக்கி உலக நுகர்ச்சியில் ஈடுபடுத்தி மயக்குகிறது. இவ்வாறு இவை மூன்றும் உயிரறிவை உலகத்தோடு பிணிக்கின்றன. இது பற்றியே இவை பாசம் (கட்டு) என்றும், தளை என்றும் கூறப்படுகின்றன. இம் மூன்றனுள் ஆணவம் என்பது உயிருக்குப் பகையாகிய கட்டு, மாயையும் கன்மமும் அப்படியல்ல. அவை ஆணவமாகிய கட்டினை நீக்கி உதவ வந்த கட்டுக்கள்.

 

     அவிழ்க்க முடியாத ஒரு கட்டினை அவிழ்ப்பதற்கு ஒரு வழி உண்டு. அதனோடு வேறு சில கட்டுக்களை இட்டு இறுக்கினால் அம் முதல் கட்டு நெகிழ்ந்துவிடும். அதுபோல, உயிரைப் பிணித்துள்ள ஆணவமலமாகிய வலிய கட்டினை நெகிழ்விப்பதற்காகவே இறைவன் மாயை, கன்மங்கள் என்று வேறு இரண்டு கட்டுக்களை உயிரோடு சேர்ப்பிக்கின்றான்.

 

     ஆக, உயிருக்கு உள்ள மலங்கள் ஆணவம், மாயை, கன்மம் ஆகும்.

 

     இந்த மும்மலங்களும் பொருந்தி உள்ள நிலையில், உயிர்கள் படுகின்ற அவத்தைகள்,  கேவலம், சகலம், சுத்தம் என்று மூவகைப்படும்.

 

கேவலம் --- அறிவு விளங்காமல், செயலற்று இருக்கும் நிலை. இரவு நிலை. மறந்துபோகும் நிலை.

 

சகலம் --- உடம்போடு கூடி உலகில் செயல்படும் நிலை. பகல் நிலை. நினைப்பு உள்ள நிலை.

 

சுத்தம் --- மும்மலங்களும் அற்று, உலகப் பற்றுக்கள் அனைத்தும் அற்று, பரம்பொருளின் திருவடிக் கீழ் இருக்கும் பேரானந்த நிலை. இரவு பகல் அற்ற நிலை. நினைப்பு மறப்பு அற்ற நிலை. (கருதா, மறவா நெறி காண என்றார் அருணை அடிகள்.)

 

     ஆணவமலம் அறிவை மறைக்கும் என்றும், இருள்மலம் என்றும் பார்த்தோம். ஆணவத்தை இருள் என்பது மரபு. இருளானது தனது இருக்கையைக் காட்டும். ஆணவமானது தனது இருப்பைக் காட்டாது. எனவே, ஆணவத்தை வல்லிருள் என்பர் பெரியோர்.

 

     அறிவு விளக்கம் பெறாது, செயல் ஏதும் இல்லாமல் இருக்கின்ற நிலை இரவைக் குறிக்கும். மின்சாரம் இல்லாத நேரத்தில், இருள் வந்து சூழும். அந்த நேரத்தில் நமது அறிவு, செயல் ஏதும் இல்லாமல் போகும். விளக்கொளி வந்த பிறகு செயல்படுவோம். மேலும், உறக்கத்தில், நமது அறிவு செயல்படுவதில்லை. எனவே, இரவு என்பது ஆணவத்தோடு அழுந்தி செயலற்று இருக்கும் நிலையைக் குறிக்கும்.

 

     பகல் பொழுதில், நமது அறிவு செயல்படுகின்றது. நமது அறிவு மட்டும்தான் செயல்படுகின்றது. இதனால், இதுவா? அதுவா? என்னும் தடுமாற்றம் உண்டாகின்றது. இந்த மயக்கத்தை விளைப்பது மாயை ஆகும். தடுமாற்றம் வந்து தேடிய பிறகு, அறிவு விளக்கத்தைத் தருவதும் மாயைதான்.

 

     அறிவும், அறியாமையும் அற்று, நினைப்பு மறப்பு அற்று, இன்ப துன்பம் அற்று, போக்கு வரவு அற்று இருக்கும் பேரானந்த நிலை, இரவு பகல் அற்ற நிலையாகும்.

 

     எனவே, உயிரை மூடியுள்ள ஆணவம் என்னும் அறியாமை, அவிச்சை, அகங்காரம் நம்மோடு நீங்காது இருக்கும் நிலையில், மெய்யறிவைப் பெற மேற்கொள்ளும் வழிபாடு இரவு வழிபாடு ஆகும். சிவராத்திரி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி என்ற வழிபாட்டு முறைகள் உருவான விதம் இதுதான். சிவராத்திரி என்றால் இரவு முழுதும் கண் உறங்காமல் இருப்பது அல்ல.  

 

     உயிருக்கு வெம்மையைத் தருகின்ற இரவு நிலை நீங்கி, அருள் ஒளி விளங்கவேண்டும் என்பதைக் காட்டுவதே விளக்கு ஏற்றுவது.

 

"வெம்மல இரவு அது விடி தருணம்தனில்

செம்மையில் உதித்து, உளம் திகழ்ந்த செஞ்சுடரே"

 

"அருள் ஒளி விளங்கிட ஆணவம் எனும் ஒர்

இருள் அற என் உளத்து ஏற்றிய விளக்கே"

 

என்றார் வள்ளல்பெருமான்.

 

"இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே

இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே

இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே"

 

என்றார் திருமூல நாயனார்.

 

"இராப் பகல் அற்ற இடத்தே யான் இருந்தே துதிக்க,

குராப்புனை தண்டை அம்தாள் அருளாய்"

 

என்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     இரவு பகல் அற்ற நிலைதான் உயர்ந்த நிலை. நினைப்பும் மறப்பும் மாறி மாறி நமக்கு வந்துகொண்டே இருக்கின்றன. அதனாலேயே எல்லாத் துன்பங்களும் வந்து சேருகின்றன. நினைப்பு, மறப்பு நீங்கிய நிர்விகற்ப நிலையில் இருந்தபடி இருந்து, கட்டு அற்ற பூரண நிலையை அடைந்து, குறையாத இன்ப நிலையை அடையவேண்டும்.

 

     இரவு பகல் அற்ற நிலை வேண்டுமானால், இரவு என்னும் அறியாமை நிலை நீங்கவேண்டும். பகல் என்னும் தற்போத (அறிவு) நிலையும் நீங்கவேண்டும்.

 

     குறியாது குறித்துத் துதிக்கின்ற சுத்தநிலை வாய்க்கும் போது, அறிவு அற்று, அறியாமையும் அற்றுப் போகும். அதுவே, மெய்யுணர்வு பெற்ற நிலை.

 

"குறியைக் குறியாது குறித்து அறியும்

நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்,

செறிவு அற்று, உலகோடு, உரை, சிந்தையும் அற்று,

அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே"

 

என்பது கந்தர் அனுபூதி.

 

ஆக, ஆன்மாவானது, தனக்கு இயல்பாக உள்ள கேவலநிலையில் இருந்து, சகல நிலைக்கு வந்து, அதையும் ஒழித்து, சுத்த நிலையில் இறைவனோடு கலத்தல் வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...