மடத்திலே புகுந்து விட்ட நாய்

 

 

மடத்திலே புகுந்து விட்ட நாய்

---

 

     சிலர் அருமையாக வீடுகட்டி, வர்ணம் பூசி, தூண்களுக்குக் கூட உரைபோட்டு அழகு படுத்துவர். இந்த வீடு நமக்கே சொந்தம் என்று எண்ணி இறுமாந்திருப்பர். அதற்கு வரியும் செலுத்துவார்கள். ஆனால் அந்த வீட்டில் வாழும் பல்லி, எட்டுக்கால் பூச்சி கரப்பான் பூச்சி முதலியவை இந்த வீடு நமக்குத் தான் சொந்தம் என்று கருதிக் கொண்டிருக்கின்றன. இவன் அந்த பிராணிகள் மீது வழக்குத் தொடர முடியுமா? அதுபோல், இந்த உடம்பு நமக்கே சொந்தம் என்று நாம் கருதுகின்றோம். இந்த உடம்பில் வாழும் எண்ணற்ற புழுக்கள் தமக்குச் சொந்தம் என்று மகிழ்ந்திருக்கின்றன. அன்றியும் இவ் உடம்பை நெருப்பு தனக்குச் சொந்தம் என்று எண்ணியிருக்கின்றது. மயானத்தில் உள்ள பூமி இவ்வுடல் தனக்கே சொந்தம் என்று எண்ணுகின்றது. பருந்துகள் தமக்கு உரியதென்று உன்னி இருக்கின்றன. நரிகள் நமக்குச் சொந்தம் என்று நினைக்கின்றன. நாய் நமக்கே இது உரியது என்று எண்ணுகின்றது. இத்தனை பேர் தத்தமக்குச் சொந்தம் என்று எண்ணுகின்ற உடம்பை நாம் எழுந்தவுடன் இறைவன் திருநாமத்தைக் கூறாமலும், பல் தேய்க்காமலும் கூட, உண்டு உடுத்து வளர்க்கின்றோம்.

 

"எரி எனக்கு என்னும், புழுவோ எனக்கு என்னும்,

     இந்த மண்ணும்

சரி எனக்கு என்னும், பருந்தோ எனக்கு என்னும்,

     தான் புசிக்க

நரி எனக்கு என்னும், புன்நாய் எனக்கு எனும்,

     இந்நாறு உடலைப்

பிரியமுடன் வளர்த்தேன், இதனால் என்ன

     பேறு எனக்கே".  

                                   

என்கின்றார் பட்டினத்து அடிகள்.

"காட்டிலே இயல் நாட்டிலே பயில்
     வீட்டிலே உல ...... கங்கள் ஏசக்
காக்கை நாய்நரி பேய்க் குழாம் உண
     யாக்கை மாய்வது ...... ஒழிந்திடாதோ?"      

 

என்று இரங்குகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     இந்த உடம்பு அழிந்து போகக் கூடியது. உயிரானது, அது எடுத்த உடம்போடு விதித்த நாள் வரையில் மட்டுமே ஒட்டி இருக்கும்.

 

"மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்

தலைமிசைக் கொண்ட குடையர் --- நிலமிசைத்

துஞ்சினார் என்று எடுத்துத் தூற்றப்பட்டடார் அல்லால்,

எஞ்சினார் இவ்வுலகத்து இல்".           

 

என்கின்றது நாலடியார்.

 

     யானையின் மீது அமர்ந்து, மலைமேல் தோன்றும் முழுநிலவைப் போன்ற வெண்கொற்றக் குடை பிடித்துச் சென்ற பேரரசர்கள் எல்லாமும் எப்படியும் ஒரு நாள் இறந்து போயினர் என்று தான் சொல்லப்படுகின்றதே ஒழிய, மரணத்தை வென்று யாரும் இந்த உலகில் நின்று நிலைத்தது இல்லை. எல்லோரும் ஒரு நாள் இறக்க நேரும். அப்போது இந்த உடலும் அழிந்து போகும்.

 

     இந்த உடம்பு மட்டுமல்ல. உடம்பை எடுத்து வந்த பிறகு அனுபவிக்கின்ற சுகங்கள் அத்தனையுமே ஒரு நாள் நமது என்று இல்லாமல் போகும்.

 

     பாடுபட்டுச் சேர்த்த செல்வத்தை, பொருளை நமது என்று இருப்போம். ஒரு நாள் நமது இல்லை என்று ஆகின்றபோது வருந்துவோம். பிறர் வருந்தவும் விட்டுச் செல்வோம். பொன்னும் பொருளும், இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்க மட்டும்மல்ல. அதை, புண்ணியமாக மாற்றி, இனிவரும் பிறவிகளிலும் நலத்தைத் தேடிக்கொள்ளவேண்டும் என்பதை அறியாத மாந்தர்கள் "எனது எனது" என்று இருந்து ஒருநாள் ஏமாந்து போவார்கள்.

 

     பொன்னும் பொருளும் மட்டுமே அல்ல. பெற்ற பட்டமும் பதவியும் கூட அப்படித்தான்.பதவி என்பது தகுதி கருதியே வாய்க்கின்றது. அதில் இருந்து மேலும் மேன்மை பெறத் தகுதி உள்ளவராக வளரவேண்டும் என்கின்ற அறிவு இல்லாதவர்கள், கிடைத்த பதவியைக் கொண்டு, அது என்னவோ, எப்போதும் நிலைத்திருக்கும் என்று எண்ணி, பிறர்க்கு நலம் புரிந்து பயனுற வாழாமல் இருந்து விட்டு, அதை இழந்த பின்னர் வருந்துவதைக் காணலாம். பிறர் இகழ்வதையும் காணலாம்.

 

         பொன் பொருள், பட்டம் பதவி என்பவை எல்லாம் இந்த உடம்பைத் தழுவி உண்டானவை. இந்த உடம்பு நாமாகப் பெற்றது அல்ல. இறைவன் தந்தது. அது விதித்த காலம் முடிந்தவுடன் கொடுத்தவனாலேயே எடுத்துக் கொள்ளப்படும். அது போலவே, உடம்பினால் பெற்ற செல்வங்கள் அத்தனையும்.

 

     உயிருக்கு உள்ள அதிசூக்கும சரீரம் ஆனது, முதலில் சூக்கும சரீரத்தைப் பற்றி, பின்பு அவ்விரண்டும் கூடித் தூல சரீரத்தைப் பற்றுதலினால், உயிர் அதிசூக்குமம், சூக்குமம், தூலம் ஆகிய மூன்று சரீரத்தோடும் பொருந்தித் தனது செயலைச் செய்து வரும். இந்த நிலையைப் பலர் அறியாது, "உடம்பு தான் உயிர்" என மயங்குகின்றனர். உடம்போடு உயிருக்குள்ள தொடர்பு, வினை காரணமாகச் சிறிது கால அளவினதே ஆகும். இந்த உண்மையை அறியாதவர்கள், தூய திருமடங்களின் உள்ளே எவ்வாறோ புகுந்துவிட்ட நாய் "இந்த இடம் நமக்கு நிலையல்ல" என்பதை உணராமல், நிலைத்த ஒன்றுபோல நினைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள உணவைத் தனக்கே உரியனவாக எண்ணிக் களிப்பது போல, களித்து இருக்கின்றார்கள் என்று திருமூல நாயனார், திருந்திரம் என்னும் நூலில் இந்த உண்மையை உணர வைத்துள்ளார்.

 

"உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி

உடம்பு இடை நின்ற உயிரை அறியார்,

உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார்

மடம்புகு நாய்போல் மயங்குகின்றாரே".  

 

என்பது திருமந்திரம்.

 

 

 

 


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...