இயல்பாக இருப்பதே நன்மை

 

இயல்பாக இருப்பதே நன்மை

-----

 

     கோழியாக இருந்தால் முட்டை இட்டுத்தான் ஆகவேண்டும். சேவலாக இருந்தால் கூவ வேண்டும். ஒன்றின் வேலையை இன்னொன்று செய்யமுடியாது. செய்ய முயல்வதும் பயனற்றதாக முடியும்.

 

     பெரியவர் ஒருவரைப் பார்த்து, சிறியவரும் அவர்போல ஆகவேண்டும் என்றால் அவருக்கு உரிய நிலையில் நிற்கவேண்டும். கல்வி அறிவில்லாத ஒருவன், கவி பாட முற்பட்டால், அது கவியாக இருக்காது. உண்மை வேறு, போலி வேறு. பண்புகளால்தான் ஒருவருக்கு உயர்வு உண்டாகும். உருவத்தால் உயர்வு உண்டாகாது. காக்கை கருநிறமாக இருந்தாலும், வானத்தில் பறந்தாலும், அது கருடன் ஆகாது. உயரத்தில் பறக்கின்றது என்பதற்காக ஊர்க்குருவி பருந்தாக மாட்டாது.

 

     காகம் ஒன்று, அன்னப் பறவையைப் பார்த்து, தானும் அதுபோல ஒயிலாக நடக்கப் பழகி, அது வராமல், தனக்கு இயல்பாக இருந்து நடையையும் இழந்துவிட்டது. அதுபோல, அவரவர் அவரவரது அறிவு, நினைவு, பெருமைக்கு ஏற்றபடி ஒழுகுதல் வேண்டும். சிறியவர் பெரியவரைப் போல நடந்தால், உள்ளதையும் இழக்க நேரிடும் என்னும் பொருளில், "தண்டலையார் சதகம்" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

"பன்னகவே ணிப்பரமர் தண்டலையார்

     நாட்டில்உள பலரும் கேளீர்!

தன்னறிவு தன்னினைவு தன்மகிமைக்கு

     ஏற்றநடை தகுமே அல்லால்,

சின்னவரும் பெரியவர் போலே நடந்தால்

     உள்ளது போம்! சிறிய காகம்

அன்னநடை நடக்கப்போய்த் தன்நடையும்

     கெட்டவகை ஆகும் தானே".

 

இதன் பொருள் ---

 

     பன்னக வேணிப் பரமர் தண்டலையார் நாட்டில் உள பலரும் கேளீர் --- பாம்பினை அணிந்த திருச்சடைப் பெருமானும், திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் கோழில் கொண்டு எழுந்தருளி உள்ள இறைவரின்  நாட்டில் வாழும் யாவரும் கேளுங்கள்.  தன் அறிவு தன் நினைவு தன் மகிமைக்கு ஏற்ற நடை தகுமே அல்லால் --- தன் அறிவுக்கும் தன்  சிந்தனைக்கும் தன் பெருமைக்கும் தக்க ஒழுக்கம் ஏற்குமே அன்றி, சின்னவரும் பெரியவர் போலே நடந்தால் உள்ளது போம் --- எளியவரும் ஆற்றல் உடைய பெரியோர் போல நடந்தால் உள்ளதும் போய் விடும், (அது மேலும்), சிறிய காகம் அன்ன நடை நடக்கப் போய்த் தன் நடையும் கெட்டவகை ஆகும்

--- இழிந்த காகமானது உயர்ந்த அன்னத்தைப் போல  நடக்கத் தொடங்கித் தன் நடையையும் இழந்தவாறு முடியும்.

 

     விரலுக்குத் தக்க வீக்கம்' எனவும் அன்னநடை

நடக்கப் போய்த் தன் நடையும் கெட்டது' என்று முதுமொழிகள் வழக்கில் உள்ளன.

 

 

"கான மயில் ஆடக்கண்டு இருந்த வான் கோழி,

தானும் அதுவாகப் பாவித்து, --- தானும் தன்

பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே,

கல்லாதான் கற்ற கவி".

 

ஔவையார் பாடி அருளிய "மூதுரை" என்னும் நூலில் ஒரு பாடல் இது.

 

இதன் பொருள்---

 

     ஆழ்ந்து முறைப்படிக் கற்கவேண்டிய நூல்களைக் கற்று உணராமல், கற்றோர் சொல்லும் சொற்களைக் கேட்டு, கல்லாத ஒருவன் சொல்லும் கவியானது, காட்டிலுள்ள மயில் தன் தோகையை விரித்து ஆடுவதைப் பார்த்த வான்கோழி,  தன்னையும் மயிலாகவே நினைத்துக்கொண்டு தனது அழகில்லாத சிறகை விரித்து ஆடியதைப் போன்றதாகும்.

 

     மயிலும் வான்கோழியும் உருவத்தால் ஒரோவழி ஒத்து இருப்பது போல் தோன்றும். மயிலுக்கு அழகான வண்ணங்கள் பொருந்திய தோகை உண்டு. அது தனது கலாபம் எனப்படும் தோகையை விரித்து ஆடினால் மிக அழகாக இருக்கும். காண்போர்க்கு இன்பம் உண்டாகும்.

 

     வான்கோழிக்கு அழகான தோகை இல்லை. அழகற்ற சிறகு மட்டுமே உண்டு. நாமும் ஆடிப் பார்க்கலாமே என்று, தன்னையும் ஒரு மயிலாக எண்ணி, வான்கோழி தனது அழகற்ற சிறகை விரித்து ஆடினால் அழகாக இருக்காது. யாரும் அதை ரசிக்க மாட்டார்கள்.

 

     கற்றவர் சொல்லும் சொல், நூற்பொருள் விளங்குமாறு இருக்கும். கேட்போர்க்கு இன்பம் தரும். அல்லாதார் சொல்வது அவ்வாறு இருக்காது.

 

காளமேகப் புலவர் பாடல் ஒன்று உண்டு. அது,

 

"வாழ்த்து திருநாகை வாகுஆன தேவடியாள்,

பாழ்த்த குரல் எடுத்துப் பாடினாள்--நேற்றுக்

கழுதை கெட்ட வண்ணான் கண்டேன் கண்டேன் என்று,

பழுதை எடுத்து ஓடிவந்தான் பார்"

 

என்பதாகும்.

 

இதன் பொருள்---

 

     எல்லாராலும் வாழ்த்தப் பெறுகின்ற, திரு நாகைக் காரோணம் என்னும் நாகப்பட்டினத்தில் இருந்த அழகு மிக்க தேவதாசி ஒருத்தி, தனது பாழான குரலை எடுத்துப் பாடினாள். அந்தக் குரலைக் கேட்டதுமே, நேற்று தனது கழுதையை இழந்து தேடிக் கொண்டிருந்த வண்ணான் ஒருவன், அவள் குரல் கழுதையின் குரலைப் போல் இருக்கவே, கழுதையைக் கண்டுபிடித்து விட்டேன், கண்டு பிடித்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டே , அதைக் கட்டுவதற்கு ஒரு கயிற்றை கையில் எடுத்துக் கொண்டு ஓடிவந்தான் பார்.

 

     பாடுவதற்கு உடல் அழகு போதாது. குரல் அழகு வேண்டும். பாடத் தகுந்தவர் பாடவேண்டும். ஆடத் தகுந்தவர் ஆடவேண்டும்.

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...