எட்டி பழுத்து என்ன? ஈயாதார் வாழ்ந்து என்ன?

 

 

எட்டி பழுத்து என்ன?

ஈயாதார் வாழ்ந்து என்ன?

------

 

     திருக்குறளில்,  "நன்றி இல் செல்வம்" என்று ஓர் அதிகாரம் உள்ளது. இதன் பொருள், "நன்முறையில் வராததும், நன்முறையில் செலவிடப்படாததும் ஆகிய செல்வம்" என்பதாகும்.

 

     நல்லவழியில் பொருளை ஈட்டினாலும், இல்லாதவர்க்கு அது உதவப்படாதபோது, அதுவும் "நன்றி இல் செல்வம்" ஆகும்.

 

     பிறரால் விரும்பப்படாதவனுடைய செல்வமானது, ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்திருத்தலைப் போன்றது என்று பின்வரும் திருக்குறள் கூறுகின்றது.

    

"நச்சப் படாதவன் செல்வம், நடுவூருள்

நச்சு மரம் பழுத்து அற்று"  

 

     இரக்கம் முதலிய நற்குணங்கள் அமையப் பெற்ற ஒருவனிடம் செல்வம் திரண்டு இருந்தால், அது பழங்களைத் தருகின்ற பயனுள்ள மரமானது ஊரின் நடுவில் இருப்பதைப் போன்றது என்று, வேறு ஓர் திருக்குறளில் காட்டினார் திருவள்ளுவர்.

 

"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்து அற்றால், செல்வம்

நயன் உடையான்கண் படின்"

 

என்பது "ஒப்புரவு அறிதல்" என்னும் அதிகாரத்தில் வரும் திருக்குறள். 

 

     பயன்மரம், நச்சுமரம் என்று இருவகை மரங்களைக் குறித்துப் பாடியுள்ளார் திருவள்ளுவர்.   

 

     செல்வத்தை அறவழியில் பிறர்க்குக் கொடுத்து உதவுபவன் செல்வமானது உள்ளூரிலே பழுக்கின்ற வாழை, மா, பலா ஆகிய பயன்தரும் மரங்களுக்கு ஒப்பாகும்.

 

     செல்வத்தை அறவழியில் யாருக்கும் கொடுக்காமல் இருப்பவன் செல்வமானது,  ஊரின் நடுவிலே நச்சுமரம் (எட்டிமரம்) பழுத்ததற்கு ஒப்பாகும்.

 

     மரங்கள் தரும் காய்களும் கனிகளும் உணவாகப் பயன்படுகின்றன. சில காய்கள் பிஞ்சு நிலையிலேயே பயன் தருகின்றன. வாழைப் பிஞ்சு கசக்கும். ஆனாலும் அதனையும் கறியாகச் சமைத்து உண்பர். "கைச்சாலும் சிறுகதலி, இலை வேம்பும் கறி கொள்வார்" என்று திருவிசைப்பாவில் சொல்லப்பட்டு உள்ளது.

 

     எட்டிக் காய் மிகவும் கசக்கும் என்பதால் அதனை யாரும் விரும்புவது இல்லை. எட்டி பழுத்தாலும் கூட அதனை யாரும் விரும்புவது இல்லை.

 

     பிறருக்குக் கொடுத்து உதவாமல், தானும் அனுபவிக்காமல், வட்டிக்கு விட்டுப் பெருக்கி வைத்து, பயனில்லாமல் வாழ்ந்து கழிகின்ற மனிதர் இருந்தாலும் பயனில்லை. அவர் இறந்தாலும் ஒன்றும் நட்டமில்லை.

 

     பின்வரும் இரண்டு பாடல்களைக் காண்போம்...

 

"எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன,

ஒட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம்,

வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்

பட்டிப் பதகர் பயன் அறியாரே. 

 

என்பது நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார் அருளிய திருமந்திரப் பாடல்...

 

இதன் பொருள் ---

 

     எட்டி மரங்கள் பழுத்துப் பெரும் பெரும் பழங்கள் வீழ்ந்தன. ஆனால், அது பயன்படாமையினால் ஒருவராலும் தொடப்படுவதில்லை. அதுபோல், நல்லறம் செய்யாதார் செல்வமும் ஒருவர்க்கும் பயன்படுவதில்லை. பொன்னாசையினால் கடும் வட்டி வாங்கி மிகுபொருள் ஈட்டியதோடு அமையாது, வஞ்சனையால் பிறர் பொருளைக் கவரும் பாதகர்கள், தாம் செய்ய வேண்டிய அறத்தினையும் உணரமாட்டார். தவிர்க்கப்பட வேண்டிய பாவத்தையும் உணரமாட்டார்.

 

     இருங்கனி --- பெரும்பழம். ஒட்டிய --- தானே நேர்ந்த. மண்ணின் முகந்திடும் --- எட்டிப் பழம்போல் பயனின்றிக் கெடும். பட்டி --- வஞ்சனை. பதகர் --- பாதகர்.

 

     எட்டி மரம் பழுத்தாலும் பயனில்லை. ஈயாதவர் வாழ்ந்தாலும் பயனில்லை என்னும் பொருளில் "தண்டலையார் சதகம்" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

 

"கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்

     கனிகள் உபகாரம் ஆகும்;

சிட்டரும் அவ்வணம் தேடும் பொருளைஎல்லாம்

     இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்;

மட்டுஉலவும் சடையாரே! தண்டலையா

     ரே! சொன்னேன்! வனங்கள் தோறும்

எட்டிமரம் பழுத்தாலும், ஈயாதார்

     வாழ்ந்தாலும் என் உண்டாமே?"

                              

 

இதன் பொருள் ---

 

     மட்டு உலவும் சடையாரே --- மணம் கமழும் திருச்சடையை உடையவரே! தண்டலையாரே --- திருத்தண்டலை என்னும் திருத்தலத்திலே எழுந்தருளி உள்ள இறைவரே! வனங்கள் தோறும் எட்டி மரம் பழுத்தாலும் --- காடுகள் எங்கிலும் எட்டி மரம் பழுத்து விளங்கினாலும், என் உண்டாம் --- அதனால் என்ன பயன் உண்டாகும்?

ஈயாதார்  வாழ்ந்தாலும் --- பிறருக்குக் கொடுத்து உதவும் பண்பு இல்லாதவர் வாழ்வதனாலும், என் உண்டாம் --- அதனால் என்ன பயன் உண்டாகும்?  கட்டு மாங்கனி  வாழைக்கனி பலவின் கனிகள் உபகாரம் ஆகும் --- பழுப்பதற்காகக் கட்டி வைக்கப்படுகின்ற மா, வாழை,  பலா ஆகிய இவற்றின் பழங்கள் எல்லோருக்கும் பயன்படும்;  அவ்வணம் --- அது போலவே, சிட்டரும் தேடும் பொருளை எல்லாம் இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் --- அறிவில் சிறந்த நல்லோர் தாம் சேர்க்கும் பொருள் முழுவதையும், இல்லை என்று வருபவருக்கே அளித்துச் சிறப்புடன் வாழ்வார்கள்.

 

     செல்வச் செழிப்பில் இருந்தும் பிறருக்குக் கொடுத்து உதவாத பேதைகள் ஏழைகளாகவே கருதப்படுவார்கள். வறுமை உற்ற காலத்திலும், பிறரிடம் சென்று யாசிக்காத பெருமக்களே உண்மையில் செல்வர்கள்.

 

     என்னதான் படித்தாலும், படித்ததாகக் காட்டிக் கொள்வார்களே அல்லமால், கற்ற கல்வியின் பயனைப் பெறமாட்டார்கள். இவர்கள் கீழ்மக்கள். நுண்ணறிவு வாய்க்கப்பெற்ற மேன்மக்கள், ஆழ்ந்து படிக்கவில்லை என்றாலும், அறிவு நிரம்பியவர்களாகவே இருப்பார்கள். அதன் பயனாகப் பிறருக்குப் பயன்பட வாழ்வார்கள்.

 

     எனவே, கல்வி கற்றதன் பயன் நுண்ணறிவு விளங்குதல். செல்வம் படைத்ததன் பயன் பிறருக்குக் கொடுத்து உதவுதல்.

 

     இதனை விளக்கும் நாலடியார் பாடல் ஒன்று...

 

ஓதியும் ஓதார் உணர்வு இலார், ஓதாதும்

ஓதி அனையார் உணர்வு உடையார்;- தூய்தாக

நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்

நல்கூர்ந்தார் ஈயார் எனின்.                    


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...