பிற்பகலில் சமைக்கும் பேதை

 

 

 

பிற்பகலில் சமைக்கும் பேதை

-----

 

     பகலில் உண்பதற்கு வேண்டிய உணவை முற்பகலிலேயே சமைக்க முற்பட வேண்டும். முற்பகல் காலத்தை வீணான செயல்களில் கழித்து விட்டு, பகல் நேரத்தில் உண்ண உணவுக்கு வழியில்லாமல், உடம்பு இளைத்த பிறகு, பிற்பகலில் அடுப்பினை மூட்டி, உணவைச் சமைத்து, நேரமில்லாத நேரத்தில் உண்பதால் உடல் நலம் விளங்காது. முற்பகலில் சமைக்காததும் குற்றம். பிற்பகலில் சமைப்பதும் குற்றம்.

 

     அதுபோ, இளமைக் காலத்திலேயே நல்ல நெறியில் நின்று, இறைவனை வழிபட்டுப் பெறவேண்டிய பயனைப் பெறாது, பயனில்லாத செயல்களில் வாழ்நாளைக் கழித்து, மனம் போன போக்கில் வாழ்ந்தால், முதுமை வந்து சேர்ந்த போது, உடலில் பலவேறு நோய்களும் வந்து ஒட்டிக் கொள்ளும். அப்போது, காலத்தை வீணாகப் போக்கிவிட்டதை நினைந்து உள்ளம் வருந்தும். கண்ணிருந்தும் குருடாய் இருந்து விட்டேன். காலமெல்லாம் வீணே கழித்து விட்டேன் என்று தன்னைத் தானே நொந்துகொண்டு, அப்போதுதான், இறைவனை நினைக்கத் தோன்றும். நோய்களுக்குப் பதில் சொல்லவே நேரம் போதாத நிலையில், இறைவனை மனதார நினைக்க முடியாது. இளமைக் காலத்தை வீணாய்க் கழித்த அறிவில்லாத செயல்களுக்கு முதுமையில் வருந்த நேரும்.

 

     அஞ்சிலே வளையாதது ஐம்பதில் வளையுமா? இளமையில் கற்கின்ற கல்விதான் அறிவை வளர்க்கும் என்பதால், "இளமையில் கல்" என்றார் ஔவையார். "பருவத்தே பயிர் செய்" என்றும் சொல்லப்பட்டுள்ளது.

 

     தும்மல், இருமல் போன்ற நோய்கள் வந்து தொற்றிக் கொள்ளும். இப்போதுதான், கொரோனா காலமாயிற்றே. தும்மல், இருமல் வந்தாலே, அதுதானோ என்று அச்சம் வேறு வந்து தொற்றிக் கொள்ளும். இளமை கழிந்து, முதுமை நெருங்க நெருங்க தொண்டையில் கபம் கட்டும். அதன் காரணமாக இருமல் வந்துகொண்டே இருக்கும். இருமல் எப்போது அதிகமாகும் என்றால், இரவில் உறங்கச் சென்ற பிறகுதான். "உறக்கம் வரும் அளவில் எலும்பு குலுக்கிவிடும் இருமல் தொடங்கி, உரத்த கனகுரலும் நெறிந்து" என்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     இளமைக் காலத்தை எல்லாம் புறச்சமயமாகிய சமணத்தில் போக்கி விட்டு, எண்பத்தொன்றாம் வயதில் இறைவனை நினைக்க நேர்ந்ததை எண்ணி, பிற்பகலில் உணவு சமைக்கும் பேதையைப் போல் தான் இருந்து விட்டதாக அப்பர் பெருமான் பாடிய பாடலைப் பார்ப்போம்...

 

 

"முன்பெலாம் இளைய காலம்

     மூர்த்தியை நினையாது ஓடிக்

கண்கண இருமி நாளும்

     கருத்து அழிந்து அருத்தம் இன்றிப்

பின்பகல் உணங்கல் அட்டும்

     பேதைமார் போன்றேன், ள்ளம்

அன்பனாய் வாழ மாட்டேன்

     அதிகைவீ ரட்ட னீரே".

 

இதன் பொருள் ---

 

     திரு அதிகையில் உள்ள வீரட்டானம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள பெருமானே! நான் உள்ளத்திலே உமக்கு அன்பனாய் வாழமாட்டாதவனாய், அடியேனுடைய இளமைக் காலமெல்லாம் உம் திருவடிவைத் தியானம் செய்யாமல் அலைந்து, மூப்பு நிலையில் கணீர் கணீர் என்ற ஓசை உண்டாகுமாறு இருமிக் கொண்டு, சிவ சிந்தனையே இல்லாது, பயனுடைய செயல்கள் செய்யாமல், உணவு வேளைக்கு உதவுமாறு முற்பகலில் சோறு வடிக்காமல், காலம் கடத்தி, அகாலமான பிற்பகலில் உண்பற்கு இதம் இல்லாதவற்றை உலையிலிட்டு சமைக்கின்ற அறிவற்ற இல்லக் கிகத்தியர் போல் நான் ஆனேன். நான் இப்போதும் உளமார்ந்த மெய்யன்பினால் வாழவில்லை.

 

     உணங்கல் என்னும் சொல்லுக்கு உணவு என்றும், வற்றல் என்றும் பொருள் உண்டு. வற்றல் என்று பொருள் கொள்வோமானால், வற்றல் இடுவதற்குக் காய்ச்சிய கூழை, தாய்மார்கள், வெய்யில் கரகர என்று வருவதற்கு முன் சென்று, காலையிலையே இட்டு வருவார்கள். நண்பகலுக்குள் நன்றாகக் காய்ந்து விடும். இதுதான் அறிவுடைய செயல். இதை விடுத்து, காலைப் பொழுதையும், முற்பகல் பொழுதையும் வீணாக்கிவிட்டு, பிற்பகலில், வற்றல் இட முற்படுவது அறிவீனமான செயல் ஆகும்.

 

 

 

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...