திருப் பழையாறை --- 0885. தோடுற்று

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

தோடுற்றுக் காதளவு (திருப்பழையாறை)

 

முருகா!

தாயினும் சிறந்த உமது கருணையால் மெய்யறிவைப் பெற்று, திருவடியைப் பெறவேணும்.

 

 

தானத்தத் தானன தானன

     தானத்தத் தானன தானன

     தானத்தத் தானன தானன ...... தனதான

 

 

தோடுற்றுக் காதள வோடிய

     வேலுக்குத் தானிக ராயெழு

     சூதத்திற் காமனி ராசத ...... விழியாலே

 

சோடுற்றத் தாமரை மாமுகை

     போலக்கற் பூரம ளாவிய

     தோல்முத்துக் கோடென வீறிய ...... முலைமானார்

 

கூடச்சிக் காயவ ரூழிய

     மேபற்றிக் காதலி னோடிய

     கூளச்சித் தாளனை மூளனை ...... வினையேனைக்

 

கோபித்துத் தாயென நீயொரு

     போதத்தைப் பேசவ தாலருள்

     கோடித்துத் தானடி யேனடி ...... பெறவேணும்

 

வேடிக்கைக் காரவு தாரகு

     ணாபத்மத் தாரணி காரண

     வீரச்சுத் தாமகு டாசமர் ...... அடுதீரா

 

வேலைக்கட் டாணிம காரத

     சூரர்க்குச் சூரனை வேல்விடு

     வேழத்திற் சீரரு ளூறிய ...... இளையோனே

 

ஆடத்தக் காருமை பாதியர்

     வேதப்பொற் கோவண வாடையர்

     ஆலித்துத் தானரு ளூறிய ...... முருகோனே

 

ஆடப்பொற் கோபுர மேவிய

     ஆடிக்கொப் பாமதிள் சூழ்பழை

     யாறைப்பொற் கோயிலின் மேவிய ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

தோடு உற்றுக் காது அளவு ஓடிய

     வேலுக்குத் தான் நிகராய் எழு

     சூதத்தில், காமன் இராசத ...... விழியாலே,

 

சோடு உற்றத் தாமரை மாமுகை

     போலக் கற்பூரம் அளாவிய,

     தோல் முத்துக் கோடு என வீறிய ......முலை மானார்,

 

கூடச் சிக்காய் அவர் ஊழியமே

     பற்றிக் காதலின் ஓடிய

     கூளச் சித்தாளனை, மூளனை, ...... வினையேனை,

 

கோபித்து, தாய் என நீ ஒரு

     போதத்தைப் பேச, அதால் அருள்

     கோடித்துத் தான் அடியேன் அடி ...... பெறவேணும்.

 

வேடிக்கைக் கார! உதார கு-

     ணா! பத்மத் தாரணி காரண!

     வீர! சுத்தா! மகுடா! சமர் ...... அடுதீரா!

 

வேலைக் கட்டாணி! மகா ரத

     சூரர்க்குச் சூரனை வேல்விடு

     வேழத்தில் சீர் அருள் ஊறிய ...... இளையோனே!

 

ஆடத் தக்கார் உமை பாதியர்,

     வேதப்பொன் கோவண ஆடையர்,

     ஆலித்துத் தான் அருள் ஊறிய ...... முருகோனே!

 

ஆடப்பொன் கோபுரம் மேவிய

     ஆடிக்கு ஒப்பா மதிள் சூழ் பழை-

     யாறைப்பொன் கோயிலின் மேவிய ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

 

         வேடிக்கைக் கார --- விநோதமான திருவிளையாடல்களைப் புரிபவரே!

 

     உதாரகுணா --- கொடைப் பண்பில் மேம்பட்டவரே!

 

      பத்மத் தார் அணி காரண ---  தாமரை மலர் மாலையை அணிந்துள்ள மூலப்பொருளே!

 

         வீர --- வீரரே!

 

     சுத்தா --- தூயவரே!

 

     மகுடா --- மகுடம் தரித்தவரே!

 

     சமர் அடு தீரா --- போரில் (மாற்றாரைக்) கொல்லும் தீரம் உள்ளவரே!

 

     வேலைக் கட்டாணி --- தொழிலில் சமர்த்தரே!

 

         மகாரத சூரர்க்கு சூரனை வேல்விடு --- தேரைச் செலுத்துவதில் வல்ல சூரர்களுக்கு எல்லாம் சூரனான சூரபதுமன் மீது வேலை விடுத்தவரே!

 

     வேழத்தில் சீர் அருள் ஊறிய இளையோனே ---  தேவயானையின் மீது சிறந்த திருவருள் ஊறிய இளையபிள்ளையாரே!

 

         ஆடத் தக்கார் --- கூத்தாடுவதில் வல்லவரும்,

 

     உமை பாதியர் --- உமாதேவியைத் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் உடையவரும்,

 

     வேதப் பொன்கோவண ஆடையர் --- வேதத்தையே தனது அழகிய கோவணமாகக் கொண்டவரும் ஆகிய சிவபெருமான்,

 

     ஆலித்துத் தான் அருள் ஊறிய முருகோனே ---திருவுள்ளம் மகிழ்ந்து, திருவருள் புரிந்த முருகப்பெருமானே!

 

         ஆடப் பொன்கோபுரம் மேவிய --- ஆடகப் பொன் போன்ற அழகிய கோபுரம் கொண்டதும்,

 

     ஆடிக்கு ஒப்பா மதிள் சூழ் --- கண்ணாடிக்கு ஒப்பான மதில்களால் சூழப்பட்டு உள்ளதும் ஆகிய

 

     பழையாறைப் பொன் கோயிலின் மேவிய பெருமாளே ---

பழையாறை என்னும் திருத்தலத்தில் விளங்கும் அழகிய திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!      

 

தோடு உற்று --- தோடுகளை அணிந்து,

 

காது அளவு ஓடிய --- காது வரைக்கும் ஓடி,

  

வேலுக்குத் தான் நிகர் ஆய் எழு --- வேலுக்கு ஒப்பாக விளங்குவதும்,

 

      சூதத்தில் --- வஞ்சத்தில் மிகுந்துள்ளதும்,

 

     காமன் இராசத விழியாலே --- மன்மதனின் ஆட்சிக்குணம் படைத்ததும் ஆகிய கண்களும்,

 

         சோடு உற்றத் தாமரை மாமுகை போல --- இரண்டாகப் பொருந்திய தாமரை மொட்டுக்களைப் போன்று,

 

     கற்பூரம் அளாவிய தோல் --- கற்பூரக் கலவை பூசிய தோலும்,

 

     முத்துக் கோடு என வீறிய முலை மானார் --- முத்துமாலையை அணிந்த யானையின் தந்தம் என்று சொல்லும்படியாகக் குத்திட்டு எழுந்த மார்பகங்களும் உடைய விலைமாதர்களின்,

 

         கூடச் சிக்காய் --- கூட்டுறவில் சிக்குப்பட்டு,

 

     அவர் ஊழியமே பற்றி --- அவர்களுக்கு ஏவலைச் செய்து,

 

     காதலின் ஓடிய கூள --- ஆசையுடன் அவர்களிடத்து ஓடிய குப்பையைப் போன்றவனை,

 

     சித்து ஆளனை --- சிறுவேலை செய்யும் பணியாளனை,

 

     மூளனை --- அழகற்ற என்னை,

 

     வினையேனை --- தீவினை நிறைந்த என்னை,

        

     கோபித்து --- என்னைக் கடிந்து கொண்டு,

 

     தாய் என நீ ஒரு போதத்தைப் பேச --- தாய் போல தேவரீர் ஒப்பற்ற மெய்யறிவைப் போதிக்க,

 

     அதால் அருள் கோடித்துத் தான் அடியேன் அடி பெறவேணும் --- அதனால் தேவரீரது திருவருளைப் புகழ்ந்து, அடியேன் உமது திருவடியைப் பெறத் திருவருள் பெறவேணும்.

 

 

பொழிப்புரை

 

 

     விநோதமான திருவிளையாடல்களைப் புரிபவரே!

 

     கொடைப் பண்பில் மேம்பட்டவரே!

 

     தாமரை மலர் மாலையை அணிந்துள்ள மூலப்பொருளே!

 

      வீரரே!

 

     தூயவரே!

 

     மகுடம் தரித்தவரே!

 

     போரில் (மாற்றாரைக்) கொல்லும் தீரம் உள்ளவரே!

 

     தொழிலில் சமர்த்தரே!

 

         தேரைச் செலுத்துவதில் வல்ல சூரர்களுக்கு எல்லாம் சூரனான சூரபதுமன் மீது வேலை விடுத்தவரே!

 

     தேவயானையின் மீது சிறந்த திருவருள் ஊறிய இளையபிள்ளையாரே!

 

     கூத்தாடுவதில் வல்லவரும், உமாதேவியைத் தனது திருமேனியின் ஒரு பாகத்தில் உடையவரும், வேதத்தையே தனது அழகிய கோவணமாகக் கொண்டவரும் ஆகிய சிவபெருமான், திருவுள்ளம் மகிழ்ந்து, திருவருள் புரிந்த முருகப்பெருமானே!

 

         ஆடகப் பொன் போன்ற அழகிய கோபுரம் கொண்டதும், கண்ணாடிக்கு ஒப்பான மதில்களால் சூழப்பட்டு உள்ளதும் ஆகிய பழையாறை என்னும் திருத்தலத்தில் விளங்கும் அழகிய திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!      

 

தோடுகளை அணிந்து, காது வரைக்கும் ஓடி, வேலுக்கு ஒப்பாக விளங்குவதும்,  வஞ்சத்தில் மிகுந்துள்ளதும், மன்மதனின் ஆட்சிக்குணம் படைத்ததும் ஆகிய கண்களும்,  இரண்டாகப் பொருந்திய தாமரை மொட்டுக்களைப் போன்று, கற்பூரக் கலவை பூசிய தோலும்,  முத்துமாலையை அணிந்த யானையின் தந்தம் என்று சொல்லும்படியாகக் குத்திட்டு எழுந்த மார்பகங்களும் உடைய விலைமாதர்களின், கூட்டுறவில் சிக்குப்பட்டு,

அவர்களுக்கு ஏவலைச் செய்து, ஆசையுடன் அவர்களிடத்து ஓடிய குப்பையைப் போன்றவனை, சிறுவேலை செய்யும் பணியாளனை, அழகற்ற என்னை, தீவினை நிறைந்த என்னை, என்னைக் கடிந்து கொண்டு, தாய் போல தேவரீர் ஒப்பற்ற மெய்யறிவைப் போதிக்க வேணும். அதனால் தேவரீரது திருவருளைப் புகழ்ந்து, அடியேன் உமது திருவடியைப் பெறத் திருவருள் பெறவேணும்.

 

 

விரிவுரை

 

     இத் திருப்புகழில் அடிகளார் விலைமாதர்களின் கண்களையும், மார்பகங்களையும் குறித்த, அவற்றால் ஈர்க்கப்பட்டு, அவருக்கே அடிமைப்பட்டுக் கிடந்து அழியும் நிலையை மாற்றி, தாயினும் சாலப் பரிந்து வந்து ஆட்கொண்டு அருள் புரிய வேண்டும் என்று வேண்டி உள்ளார்.

 

காமன் இராசத விழியாலே ---

 

     எல்லோருக்கும் அவன் காமன் (COMMON) என்பதால், காமன் என்பார் வாரியார் சுவாமிகள். அவனது தொழில் எல்லா உயிர்களுக்கும் காம உணர்வைத் தூண்டுவதாகும்.

 

 

சித்து ஆளனை ---

 

     சித்தாள் --- சிறுவேலை செய்யும் பணியாளன்.

 

     இட்டவேலையைச் செய்வதற்கு உரியவன். இங்கே விலைமாதர் இட்ட தொழிலைச் செய்பவர்.

 

மூளனை ---

 

மூளி --- உறுப்புக் குறைவு. அழகற்றது.

 

தாய் என நீ ஒரு போதத்தைப் பேச ---

 

போதம் --- அறிவு. மெய்யறிவு. உண்மை அறிவு.

 

வேலைக் கட்டாணி ---

 

கட்டாணி --- வல்லவன், பலசாலி.

 

மகாரத சூரர்க்கு சூரனை வேல்விடு ---

 

     மகாரத சூரன் --- அதிரதர். மகாரதர் சமரதர், அர்த்தரதர், எனத் தேர் வீரர் நால்வகைப் படுவர் அதிரதர்.  

 

     இவர் ஒரு தேரில் நின்று தேர், குதிரை, சாரதிகளுக்கு அழிவு வராமல் காத்துப் பல ஆயிரம் தேரோடு எதிர்த்து வேறு துணை இல்லாமலே போர் செய்து வெல்லும் வல்லமை உடையார். மகாரதர் பதினாயிரம் தேர் வீரரொடு பொருபவர் சமரதர். ஒரு தேர் வீரனொடு தாமும் ஒருவராய்த் தோலாமல் போர் புரிய வல்லவர் அர்த்தரதர் போர் புரிந்து பின்னடையும் தேர் வீரர்.  இவர் இருவர் சேர்ந்தால் ஒரு சமரதனுக்கு ஒப்பாவர்.

 

"மற்றைநாள் வசுதேவன் மாமகன் மண்டலீகரும் மன்னரும்

செற்று நீடுஅவை புக்கிருந்த சிவேதனோடு இவைசெப்பினான்

இற்றை நாள் அதிரதர், மகாரதர், சமரதாதியர் அவரொடும்

கொற்ற வஞ்சி மிலைச்சி ஏகுக, குருநிலத்திடை என்னவே".  --- வில்லிபாரதம்.


                                        

வேதப் பொன்கோவண ஆடையர் ---

 

     வேதத்தையே தனது அழகிய கோவணமாகக் கொண்டவர் சிவபெருமான்.

 

என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தான்ஈசன்

துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ

மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்

தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ. --- திருவாசகம்.

 

முஞ்சி நாண்உற முடிந்தது சாத்திய அரையில்

தஞ்ச மாமறைக் கோவண ஆடையின் அசைவும்

வஞ்ச வல்வினைக் கறுப்புஅறு மனத்துஅடி யார்கள்

நெஞ்சில் நீங்கிடா அடிமலர் நீள்நிலம் பொலிய.  --- பெரியபுராணம்.

 

மறையே நமது பீடிகையாம்,

         மறையே நமது பாதுகையாம்,

மறையே நமது வாகனமாம்,

         மறையே நமது நூபுரமாம்,

மறையே நமது கோவணமாம்,

         மறைய நமது விழியாகும்,

மறையே நமது மொழியாகும்,

         மறையே நமது வடிவாகும்.  --- திருவிளையாடல்புராணம்.

 

ஆடப் பொன்கோபுரம் மேவிய ---

 

     ஆடகம் என்னும் சொல், ஆடம் என்று இடைக் குறைந்து நின்றது.  

 

ஆடிக்கு ஒப்பா மதிள் சூழ் பழையாறைப் பொன் கோயிலின் மேவிய பெருமாளே ---

 

     திருப்பழையாறை என்பது, சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம். கும்பகோணம் - ஆவூர் பாதையில் முழையூர் சென்று அவ்வழியாக இத்தலத்தை அடையலாம்.

 

          இவ்வூரின் தெற்கிலும் வடக்கிலும் முடிகொண்டான் ஆறும், திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால் அதன் கரையிலுள்ள ஊர் பழையாறை எனப்பட்டது; அதன் வடகரையில் உள்ள ஊர் பழையாறை வடதளி எனப்பட்டது.

 

 

இறைவர் : தருமபுரீசுவரர் (இவர் வடதளி - மாடக்கோயில் இறைவர்), 

                 சோமேசர் (இவர் பழையாறை இறைவர்)

 

இறைவியார் : விமலநாயகி (இவர் வடதளி - மாடக் கோயில் இறைவியார்),  

                                           சோமகலாம்பிகை  (இவர் பழையாறை இறைவியார்)

தல மரம் : நெல்லி.

தீர்த்தம்      : சோம தீர்த்தம்.

 

 

          சோழமன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கியத் தலம். பல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை. பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர் இரண்டாவது தலைநகரமாயிற்று. சோழர் அரண்மனை இருந்த இடம் "சோழ மாளிகை" என்னும் தனி ஊராக உள்ளது.

 

          தேவார காலத்தில் 1. முழையூர், 2. பட்டீச்சரம், 3. சத்திமுற்றம், 4. சோழமாளிகை ஆகிய நான்கு ஊர்களும் சோழர்களின் நாற்படைகளாக விளங்கியுள்ளன.

 

          இவ்வூர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் - பழையாறை நகர் என்றும், 8 - ஆம் நூற்றாண்டில் - நந்திபுரம் என்றும், 9, 10 - ஆம் நூற்றாண்டில் - முடிகொண்ட சோழபுரம் என்றும், 12 - ஆம் நூற்றாண்டில் இராசபுரம் என்றும் வழங்கப்பெற்றுள்ளது.

 

          பழையாறை நான்கு சிறு பிரிவுகளாகும் - 1. வடதளி:- (தாராசுரத்திலிருந்து 5 கி. மீ. தொலைவு, அப்பர் பெருமான் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை.) 2. மேற்றளி, 3. கீழ்த்தளி (பழையாறை), 4. தென்தளி என்பன அந்நான்காகும்.

 

          திருஞானசம்பந்தப் பெருமான் "அப்பரே!" என்று திருவாய் மொழிந்த திருநாவுக்கரசரின் தேவாரப்பாடல் பெற்றத் திருத்தலம்.

 

          சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணா நோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட பெருமான் வீற்றிருக்கும் (வடதளி) தலம்.

 

மங்கையர்க்கரசியார் அவதரித்த திருத்தலம்.

 

          மங்கையர்க்கரசி நாயனாரின் திருவுருவச் சிலை இத்திருக்கோயில் உள்பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது.

 

          அவதாரத் தலம்   : பழையாறை (கீழப் பழையாறை).

          வழிபாடு             : குரு வழிபாடு.

          முத்தித் தலம்      : மதுரை

          குருபூசை நாள்    : சித்திரை - ரோகிணி.

 

          மங்கையர்க்கரசியார் --- இவர் மணிமுடிச் சோழனின் மகள் என்பர். இவன் பழையாறையைத் தலைநகராகக் கொண்டவன். இவனே அப்பர் பொருட்டுச் சிவலிங்கத்தை வெளிப்படுத்தியவனாக இருக்க வேண்டும். திருப்பனந்தாளில் சாய்ந்த சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றவனும் இவனே ஆகும் (திரு. K.M. வேங்கடராமையா அவர்களின் ஆய்வுக் குறிப்பு - பெரிய புராணம் - பட்டுசாமி ஓதுவார் பதிப்பு.)

 

அமர்நீதி நாயனார் அவதரித்த திருப்பதி.

 

          அவதாரத் தலம்   : பழையாறை (கீழப் பழையாறை).

          வழிபாடு          : சங்கம வழிபாடு.

          முத்தித் தலம்     : நல்லூர்.

          குருபூசை நாள்    : ஆனி - பூரம்.

 

அமர்நீதி நாயனார் வரலாறு

 

         சோழ நாட்டிலே, பழையாறை என்னும் பழம்பதியிலே, வணிகர் குலத்தின் தோன்றியவர் அமர்நீதியார். அளவில்லாச் செல்வம் அவருக்கு உண்டு. அச் செல்வத்தை, அடியவர்களுக்குத் திருவமுது செய்வித்தல், அவர்களுக்குக் கோவணம், கீள், கந்தை, உதை அளித்தல் முதலிய திருத்தொண்டுகளுக்குப் பயன்படுத்தி வந்தார்.

 

         திருநல்லூர் என்னும் திருத்தலத்திலே நடைபெறும் திருவிழாவைக் காணச் செல்வது வழக்கம். அவ்விடத்தில் அடியவர்களுக்கு அமுது செய்விக்குப் பொருட்டு நாயனார் திருமடம் ஒன்றினைச் சமைத்தார். நாயனார் சுற்றத்தவர்களுடன் அத் திருமடத்தில் தங்கித் தம் தொண்டுகளை ஆற்றி வரலானார்.

 

         நாயனாருக்கு அருள் சுரக்க வேண்டி, சிவபெருமான் ஒரு வேதியராய் பிரமசாரி வடிவம் தாங்கி, இரண்டு கோவணமும், திருநீற்றுப் பையும், தருப்பையும் கட்டப்பட்ட ஒரு தண்டினை ஏந்தித் திருமடம் நோக்கி வந்தார். அமர்நீதி நாயனார் அவரை முறைப்படி வணங்கினார். வேதியர் நாயனாரை நோக்கி, "உமது திருத்தொண்டைக் கேள்வியுற்று உம்மைக் காண வந்தோம்" என்றார். அது கேட்ட நாயனார், "இங்கே அந்தணர்கள் அமுது செய்ய அந்தணர்களால் சமைக்கப் பெற்ற அமுதும் உண்டு" என்று வணங்கினார். பிரமசாரியார், "காவிரியில் நீராடி வருவோம். ஒருவேளை மழை வரினும் வரும். இந்த உலர்ந்த கோவணத்தை வைத்திருந்து கொடும்" என்று, தண்டில் உள்ள ஒரு கோவணத்தை அவிழ்த்து, "இதன் பெருமையை உமக்குச் சொல்ல வேண்டுவது இல்லை. இதனை இகழாமல் வைத்துக் கொடும்" என்று அதனை நாயனாரிடம் அளித்துச் சென்றார்.  நாயனார், அக் கோவணத்தை ஒரு தனி இடத்தில் சேமித்து வைத்தார்.

 

         திருவருளால் அக் கோவணம் மறைந்தது.  வேதியர் நீராடி மழையில் நனைந்து வந்தார். திருமடத்தில் திருவமுதும் சித்தமாய் இருந்தது. வேதியராக வந்த சிவபெருமான், 'தொண்டர் அன்பு என்னும் தூய நீர் ஆடுதல் வேண்டி', நாயனாரைப் பார்த்து, "ஈரத்தை மாற்றல் வேண்டும். தண்டில் உள்ள கோவணமும் ஈரமாய் இருக்கிறது. ஆதலால், உம்மிடம் அளித்த கோவணத்தைக் கொண்டு வாரும்" என்றார். நாயனார் கோவணத்தைக் கொண்டுவரச் சென்றார். கோவணத்தைக் கண்டாரில்லை. பாவம். தேடுகிறார். திகைக்கிறார். ஓடுகிறார். அலைகிறார். "துன்பம் வந்ததே" என்று அலமருகிறார்.  நிற்கமாட்டாதவராய் வேறொரு கோவணத்தைக் கொண்டு வந்து, "அடிகள் அளித்த கோவணம் கெட்டு விட்டது. தேடித் தேடிப் பார்த்தேன். அதை எங்கும் கண்டேனில்லை. வேறொரு கோவணம் கொண்டு வந்தேன். இது கிழிக்கப்பட்டது அல்ல. புதிதாக நெய்யப்பட்டது. இதனை ஏற்று, என் பிழையைப் பொறுத்தருளும்" என்று வேண்டினார். "இன்று கொடுத்த கோவணம். அது எப்படிக் கெடும். அதனைக் கவர்ந்து வேறு கோவணம் கொடுக்கவா துணிந்தீர். அடியார்களுக்கு நல்ல கோவணம் கொடுப்பதாகச் சொன்னது, என்னுடைய கோவணத்தைக் கவருவதற்கே போலும். உமது வாணிபம் நன்றாய் உள்ளது" என்று கூறினார். நாயனார் நடுநடுங்கி, ஐயரைப் பணிந்து, "இப் பிழையைத் தெரிந்து செய்தேனில்லை. இக் கோவணம் அன்றி நல்ல பட்டாடைகளையும், மணிகளையும் கொடுக்கிறேன். ஏற்று அருளல் வேண்டும்" என்று வேண்டினார்.  அடிகள் சினம் தணிந்து, "எமக்கு ஒன்றும் வேண்டாம். எமது கோவணத்துக்கு ஒத்த எடை உள்ள கோவணம் ஒன்று கொடுத்தால் போதும்" என்றார். நாயனார், "எதன் எடைக்கு ஒத்து இருத்தல் வேண்டும்" என்றார். வேதியர், "இக் கோவண எடைக்கு" என்று தண்டில் கட்டி உள்ள கோவணத்தை அவிழ்த்துக் காட்டினார். 

 

         நாயனார் விரைந்து ஒரு துலையை நாட்டினார். வேதியர் தமது கோவணத்தை ஒரு தட்டில் இட்டார். நாயனாரும் தாம் கொண்டு வந்த கோவணத்தை வேறு ஒரு தட்டில் இட்டார்.  நிறை ஒத்து வரவில்லை. நாயனார், வேதியரின் ஆணை பெற்று, தம்மிடத்திலே உள்ள கோவணங்களையும், பட்டாடைகளையும் ஒவ்வொன்றாகவும், பொதிப் பொதியாகவும் இட்டுப் பார்த்தார்.  தட்டு நேர் நிற்கவில்லை. தம்மிடமுள்ள பொன், வெள்ளி முதலான பிற பொருள்களையெல்லாம் கொண்டு வந்து தட்டில் சேர்த்தார். தட்டு நேர் நிற்கவில்லை. அதைக் கண்ட நாயனார், "அடிகளே!  என்னிடத்து உள்ள எல்லாவற்றையும் கொண்டு வந்து வைத்து விட்டேன். இனி, நானும், என் மனைவியும், புதல்வனும் தான் எஞ்சி உள்ளோம். திருவுள்ளம் இருந்தால் நாங்களும் தட்டிலே ஏறுகிறோம்" என்றார். வேதியரும் இசைந்தார்.  அமர்நீதியார் பெரிதும் மகிழ்ந்து, மனைவியுடனும், மைந்தனுடனும் துலையை வலம் வந்து, "இதுகாறும் நாங்கள் நிகழ்த்தி வந்த திருத்தொண்டில் தவறு ஏதும் இல்லையென்றால், நாங்கள் ஏறினதும் இந்தத் துலை நேர் நிற்பதாக" என்று சொல்லி, திருவைந்தெழுத்து ஓதித் தட்டில் ஏறினார். தட்டுகள் நேர் நின்றன. அதைக் கண்ட மண்ணவர் வாழ்த்தினர். விண்ணவர் மலர் மாரி சொரிந்தனர். 

 

     வேதியராக வந்த சிவபெருமான் மழவிடைமேல் அம்மையுடன் தோன்றினார். தட்டிலே நின்ற நாயனாரும், அவர்தம் மனைவியாரும், புதல்வனும் ஆண்டவன் திருக்கோலத்தைக் கண்டு போற்றினர். சிவபெருமான் மூவருக்கும் தம்மைத் தொழுதுகொண்டு இருக்கும் வான்பதம் அருளினார்.  திருவருளால் துலையே விமானமாகி மேலே சென்றது. நாயனார், தம் மனைவியுடனும், மைந்தருடனும் சிவலோகம் சேர்ந்தார்.

 

          இங்குள்ள (சோம தீர்த்தம்) தீர்த்தக் குளத்துநீர் சித்தபிரமை முதலியவைகளைப் போக்கவல்லது என்று நம்பப்படுகிறது. இராசராச சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் அவனுடைய இயற்பெயரால் அருண்மொழித் தேவேச்சரம் என்றழைக்கப்படுகிறது. குந்தவைப் பிராட்டி இவ்வூரில்தான் இராசேந்திரனை வளர்த்தாள். 

 

கருத்துரை

 

முருகா! தாயினும் சிறந்த உமது கருணையால் மெய்யறிவைப் பெற்று, திருவடியைப் பெறவேணும்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...