தீய வழிகளில் பொருள் சேர்த்துக் காப்பது கூடாது

 

 

 

தீய வழிகளில் பொருள் சேர்த்துக் காப்பது கூடாது

--- 

     மனிதன் தீய வழிகளில் சென்று பொருளைத் தேடுதல் பாவம். அத்தகைய உள்ளம் கொண்டோரித்தில் இறையருள் சேராது. இறைவன் அவர்களை விரும்பமாட்டான். 

     தீய வழிகளில் சென்று பொருளைத் தேடிச் சேர்த்து வைக்க எண்ணாதவர்கள் வாழ்கின்ற இடம் தேடி இறைவன் எழுந்தருள்வான் என்பதைத் திருஞானசம்பந்தப் பெருமான் தமது தேவாரப் பாடல்கள் வாயிலாக அறிவுறுத்தி உள்ளார். அருணகிரிநாதரும், "மாசு இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடி, அங்ஙனே நின்று வாழும் மயில் வீரனே" என்று முருகப் பெருமானைத் தமது திருப்புகழில் வைத்துப் போற்றி உள்ளார். இறைவன் தேடி வந்து ஆள்வான் என்பதை, "தேடி நீ ஆண்டாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே" என்று காட்டினார் மணிவாசகப்  பெருமான்.

 

     திருஞானசம்பந்தப் பெருமான் பாடியருளிய இரு தேவாரப் பாடல்களைப் பார்ப்போம்....

 

"நிலம் நீரோடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று ஐந்து

புலநீர்மை கண்டார் பொக்கம் செய்யார் போற்று ஓவார்

சலநீதர் அல்லாதார் தக்கோர் வாழும் தலைச்சங்கை

நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே".

 

இதன் பொருள் ---

     நிலம், நீர், ஆகாயம், அனல், காற்று ஆகிய ஐம்பூதங்களின் வடிவாய் நின்று, ஐம்புலன்களை வென்று நிற்பவரே! பொய்யிலாரது வழிபாட்டை ஏற்பவரே! நீர், வஞ்சகமும் இழிசெயல்களும் இல்லாத தக்கோர் வாழும் தலைச்சங்கை என்னும் திருத்தலத்தில் உள்ள அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டுள்ளீர்.

     பொக்கம் --- பொய்ம்மை. சலம் --- வஞ்சகம், பொய்ம்மை. தீச் செயல். சல நீதர் --- பொய்ம்மையையே, வஞ்சகத்தையே தமது ஒழுக்கமாகக் கொண்டவர்.

 

"நிலத்தவர் வானம் ஆள்பவர், கீழோர்,

         துயர்கெட நெடிய மாற்கு அருளால்,

அலைத்த வல்அசுரர் ஆசற ஆழி

         அளித்தவன் உறைவிடம் வினவில்

சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத்

         தன்மையார் நன்மையால் மிக்க

உலப்புஇல் பல்புகழார் ஓமமாம் புலியூர்

         உடையவர் வடதளி அதுவே".  

 

இதன் பொருள் ---

 

      மண்ணுலகத்தவர்கள், வானுலகை ஆள்பவர்கள், பாதாள உலகத்தினர் ஆகியோரது துன்பம் கெடக் கொடிய அசுரர்கள் புரியும் தீமைகளை அழிக்குமாறு, நெடிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்த சிவபெருமான் இனிதாக வீற்றிருந்தருளும் இடம், தீய செயல்களால் பொருள் சேர்த்தலைச் செய்யாத நல்லொழுக்க சீலர்களும், பெரும்புகழ் மிக்க செயல் செய்யும் சான்றோர்களும் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரிலுள்ள உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும். 

      "சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யார்" என்று இந்தத் தேவாரப் பாட்டில் குறித்தது, திருவள்ளுவப் பெருமான் அருளிய திருக்குறளுக்கு ஒப்பாக உள்ளது.

      "தீய செயல்களால் பொருளைத் தேடிப் பாதுகாத்து வைப்பது என்பது, பச்சை மண்ணால் ஆன பாத்திரத்தில் நீரைப் பெய்து வைப்பதற்கு ஒப்பாகும்" என்கின்றார் நாயனார்.

     பச்சை மண்ணால் ஆன பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்தால், நீரும் வீணாகும். பாத்திரமும் கரைந்து அழிந்து போகும். அதுபோல, தீய செயல்களால் வந்த பொருளைப் பாதுகாத்தலும் முடியாது. பழியும் வந்து சேரும். "உள்ளதும் போனதே நொள்ளைக் கண்ணா" என்னும் முதுமொழிக்கு ஏற்பதாக இது அமையும்.

 

சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல், பசுமண்

கலத்துள் நீர் பெய்து இரீஇ அற்று.  --- திருக்குறள்.

 

     இதற்கு மேலும் விளக்கமா, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான, "இன்னிலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...     

 

"கழிவிரக்கங் கொள்ளார் கதழ்வாளார் வேர்த்துப்

பழிமுறுகக் கோடார் பயன்பேர்த்-தழிமுதலை

யில்லங்கொண் டாக்காரிடும்பைத் தளைதணப்பர்

நல்லறனை நாளணிகொள் வார்".  

 

இதன் பொருள் ---

 

     கழிவு இரக்கம் கொள்ளார் --- தம்மிடமிருந்து நீங்கிய பொருள்களைக் குறித்து வருந்தாதவரும், கதழ்வு ஆளார் ---சினத்தை மேற்கொள்ளாதவரும், வேர்த்து பழி முறுகக் கோடார் --- வெகுண்டு பழி மிகுதியாகும்படி அதற்குரிய செயல்களைச் செய்யாதவரும், பயன் பேர்த்து அழி முதலை இல்லம் கொண்டு ஆக்கார் --- அறப் பயனை நீக்கிக் கெடுக்கும் முதற்பொருளைத் தமது மனையில் கொண்டுபோய்ச் சேர்த்துச் செல்வத்தைப் பெருக்காதவரும் (ஆகிய அறிஞர்) இடும்பைத் தளை தணப்பர் --- துன்பமாகிய கட்டினை அறுப்பார், நல் அறனை நாள் அணிகொள்வார் --- நன்மையைத் தரும் அறத்தை நாள்தோறும் தமக்கு அணியும் அணியாகக் கொள்வார்.

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...