குரங்காடுதுறை --- 0889. குறித்த நெஞ்சாசை

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

குறித்த நெஞ்சாசை (குரங்காடுதுறை)

 

முருகா!

விலைமாதரைக் கொண்டாடுகின்ற மயக்கத்தை

அடியேன் ஒழிக்க அருள்வாய்

 

 

தனத்தனந் தான தனதன

     தனத்தனந் தான தனதன

     தனத்தனந் தான தனதன ...... தனதான

 

 

குறித்தநெஞ் சாசை விரகிகள்

     நவிற்றுசங் கீத மிடறிகள்

     குதித்தரங் கேறு நடனிகள் ...... எவரோடுங்

 

குறைப்படுங் காதல் குனகிகள்

     அரைப்பணங் கூறு விலையினர்

     கொலைக்கொடும் பார்வை நயனிகள் ...... நகரேகை

 

பொறித்தசிங் கார முலையினர்

     வடுப்படுங் கோவை யிதழிகள்

     பொருட்டினந் தேடு கபடிகள் ...... தவர்சோரப்

 

புரித்திடும் பாவ சொருபிகள்

     உருக்குசம் போக சரசிகள்

     புணர்ச்சிகொண் டாடு மருளது ...... தவிர்வேனோ

 

நெறித்திருண் டாறு பதமலர்

     மணத்தபைங் கோதை வகைவகை

     நெகிழ்க்குமஞ் சோதி வனசரி ...... மணவாளா

 

நெருக்குமிந்த் ராதி யமரர்கள்

     வளப்பெருஞ் சேனை யுடையவர்

     நினைக்குமென் போலு மடியவர் ...... பெருவாழ்வே

 

செறித்தமந் தாரை மகிழ்புனை

     மிகுத்ததண் சோலை வகைவகை

     தியக்கியம் பேறு நதியது ...... பலவாறுந்

 

திரைக்கரங் கோலி நவமணி

     கொழித்திடுஞ் சாரல் வயலணி

     திருக்குரங் காடு துறையுறை ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

குறித்த நெஞ்சு ஆசை விரகிகள்,

     நவிற்று சங்கீத மிடறிகள்,

     குதித்து அரங்கேறு நடனிகள், ...... எவரோடும்

 

குறைப்படும் காதல் குனகிகள்,

     அரைப் பணம் கூறு விலையினர்,

     கொலைக் கொடும் பார்வை நயனிகள், ...... நகரேகை

 

பொறித்த சிங்கார முலையினர்,

     வடுப்படும் கோவை இதழிகள்,

     பொருள் தினம் தேடு கபடிகள், ...... தவர்சோரப்

 

புரித்திடும் பாவ சொருபிகள்,

     உருக்கு சம்போக சரசிகள்,

     புணர்ச்சி கொண்டு, ஆடும் மருள்அது ...... தவிர்வேனோ?

 

நெறித்து இருண்டு ஆறுபதம் மலர்

     மணத்த பைங் கோதை வகைவகை

     நெகிழ்க்கும் மஞ்சு ஓதி வனசரி ...... மணவாளா!

 

நெருக்கும் இந்த்ராதி அமரர்கள்,

     வளப்பெரும் சேனை உடையவர்,

     நினைக்கும் என் போலும் அடியவர் ...... பெருவாழ்வே!

 

செறித்த மந்தாரை, மகிழ், புனை,

     மிகுத்த தண் சோலை வகைவகை

     தியக்கி அம்பு ஏறு நதியது ...... பலவாறும்

 

திரைக்கரம் கோலி, நவமணி

     கொழித்திடும் சாரல் வயல்அணி,

     திருக்குரங் காடு துறைஉறை ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

     நெறித்து இருண்டு --- சுருண்டு, கரிய நிறம் கொண்டு,

 

     ஆறுபதம் --- ஆறு கால்களைக் கொண்ட வண்டுகள் மொய்க்கும்

 

     மலர் மணத்த பைங்கோதை வகைவகை --- மலர்களின் நறுமணத்தைக் கொண்டுள்ள விதவிதமான மாலைகள்

 

     நெகிழ்க்கும் --- தவழ்கின்,

 

     மஞ்சு ஓதி --- கரிய மேகம் போன்ற கூந்தலை உடைய

 

     வனசரி மணவாளா --- வனத்திலே வாழ்ந்திருந்த வேடர் மகளாகிய வள்ளிநாயகியின் மணவாளரே!

 

      நெருக்கும் இந்த்ராதி அமரர்கள் --- கூட்டமாக உள்ள இந்திரன் முதலான தேவர்களுக்கும்,

 

     வளப் பெரும் சேனை உடையவர் --- வளப்பம் கொண்ட சேனையை உடையவர்களாகிய அரசர்களுக்கும்,

 

     நினைக்கும் என் போலும் அடியவர் --- நினைத்துத் துதிக்கும் என்னைப் போன்ற அடியவர்களுக்கும்

 

     பெருவாழ்வே --- பெருஞ்செல்வமாக விளங்குபவரே!

 

      செறித்த மந்தாரை --- நெருங்கி மலர்ந்துள்ள மந்தாரை மலர்,

 

     மகிழ் --- மகிழ மலர்,

 

     புனை --- புன்னை மலர்,

 

     மிகுத்த தண்சோலை வகைவகை தியக்கி --- நிறைந்துள்ள குளிர்ந்த சோலைகள் பலவற்றையும் கலக்கி,

 

     அம்பு ஏறு நதி அது --- நீர் நிறைந்து வருகின்ற ஆறானது,

 

     பலவாறும் திரைக் கரம் கோலி --- பல துறைகளிலும் அலைகளாகிய கைகளை வளைத்து,

 

      நவமணி கொழித்திடும் சாரல் வயல் --- நவமணிகளைக் கொழித்துத் தள்ளுகின்ற பக்கங்களையும் வயல்களையும்,

 

     அணி திருக்குரங்காடுதுறை உறை பெருமாளே --- சூழ்ந்துள்ள திருக்குரங்காடுதுறை என்ற திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

      குறித்த நெஞ்சு ஆசை விரகிகள் --- நெஞ்சில் பொருள் ஆசை பற்றியே விரகம் கொண்டவர்கள்,

 

     நவிற்று சங்கீத மிடறிகள் --- இசை பொருந்திய குரலை உடையவர்கள்,

 

     குதித்து அரங்கு ஏறு நடனிகள் --- மேடையில் குதித்து நடனமிடுபவர்கள்,

 

     எவரோடும் குறைப்படும் காதல் குனகிகள் --- யாருடனும் தமது குறைகளைச் சொல்லியே பரிதாபப் பட வைத்து, காதல் உணர்வைக் காட்டிக் கொஞ்சிப் பேசுபவர்கள்,

 

      அரைப்பணம் கூறு விலையினர் --- அரையில் உள்ள பெண்குறிக்கு விலை பேசுபவர்கள்,

 

     கொலைக் கொடும் பார்வை நயனிகள் --- கண்டாரைக் கொல்லும் பார்வையை உடையவர்கள்,

 

     நகரேகை பொறித்த சிங்கார முலையினர் --- நகக் குறி பதியப் பெற்ற அழகிய முலைகளை உடையவர்கள்,

 

     வடுப்படும் கோவை இதழிகள் --- தழும்புள்ள கோவைப் பழம் போன்று சிவந்த வாய் இதழை உடையவர்கள்

 

     பொருள் தினம் தேடும் கபடிகள் --- பொருளையே தினந்தோறும் தேடுகின்ற வஞ்சக மனத்தினர்.

 

     தவர் சோரப் புரித்திடும் பாவசொருபிகள் --- தவத்தினரும் உள்ளம் சோரும்படியான செயல்களைப் புரிந்திடும் பாவமே வடிவானவர்கள்.

 

     உருக்கு சம்போக சரசிகள் --- உடலையும் உள்ளத்தையும் உருக்கும்படி புணர்ச்சி லீலைகளைப் புரிபவர்கள்,

 

     புணர்ச்சி கொண்டாடு மருள் அது தவிர்வேனோ --- இப்படிப்பட்டவர்களின் சேர்க்கையைக் கொண்டு மகிழும் மயக்கத்தை அடியேன் ஒழிக்க மாட்டேனோ?

 

 

பொழிப்புரை

 

 

         சுருண்டு, கரிய நிறம் கொண்டு, ஆறு கால்களைக் கொண்ட வண்டுகள் மொய்க்கும் மலர்களின் நறுமணத்தைக் கொண்டுள்ள விதவிதமான மாலைகள் தவழ்கின், கரிய மேகம் போன்ற கூந்தலை உடைய வனத்திலே வாழுகின்ற வேடர் மகளாகிய வள்ளிநாயகியின் மணவாளரே!

 

         கூட்டமாக உள்ள இந்திரன் முதலான தேவர்களுக்கும், வளப்பம் கொண்ட சேனையை உடையவர்களாகிய அரசர்களுக்கும், நினைத்துத் துதிக்கும் என்னைப் போன்ற அடியவர்களுக்கும் பெருஞ் செல்வமாக விளங்குபவரே!

 

         நெருங்கி மலர்ந்துள்ள மந்தாரை மலர், மகிழ மலர், புன்னை மலர், நிறைந்துள்ள குளிர்ந்த சோலைகள் பலவற்றையும் கலக்கி, நீர் நிறைந்து வருவதுமான ஆறு, பல துறைகளிலும் அலைகளாகிய கைகளை வளைத்து, நவமணிகளைக் கொழித்துத் தள்ளுகின்ற பக்கங்களையும் வயல்களையும், சூழ்ந்துள்ள திருக்குரங்காடுதுறை என்ற திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே! 

 

         குறித்த நெஞ்சநெஞ்சில் பொருள் ஆசை பற்றியே விரகம் கொண்டவர்கள், இசை பொருந்திய குரலை உடையவர்கள், மேடையில் குதித்து நடனமிடுபவர்கள், யாருடனும் தமது குறைகளைச் சொல்லியே பரிதாபப் பட வைத்து, காதல் உணர்வைக் காட்டிக் கொஞ்சிப் பேசுபவர்கள், அரையில் உள்ள பெண்குறிக்கு விலை பேசுபவர்கள், கண்டாரைக் கொல்லும் பார்வையை உடையவர்கள், நகக் குறி பதியப் பெற்ற அழகிய முலைகளை உடையவர்கள், தழும்புள்ள கோவைப் பழம் போன்று சிவந்த வாய் இதழை உடையவர்கள், பொருளையே தினந்தோறும் தேடுகின்ற வஞ்சக மனத்தினர்.

தவத்தினரும் உள்ளம் சோரும்படியான செயல்களைப் புரிந்திடும் பாவமே வடிவானவர்கள். உடலையும் உள்ளத்தையும் உருக்கும்படி புணர்ச்சி லீலைகளைப் புரிபவர்கள், இப்படிப்பட்டவர்களின் சேர்க்கையைக் கொண்டு மகிழும் மயக்கத்தை அடியேன் ஒழிக்க மாட்டேனோ?

 

விரிவுரை

 

குறித்த நெஞ்சு ஆசை விரகிகள் ---

 

நெஞ்சில் பொருள் ஆசை பற்றியே விரகம் கொண்டவர்கள். "பொருட்பெண்டிர்" என்றார் திருவள்ளுவ நாயனார். அவர் அன்பையும் அருளையும் கருதுவது போல் பாசாங்கு செய்வர். பொருள் பறிப்பதிலேயே குறியாக இருப்பவர்.

 

நவிற்று சங்கீத மிடறிகள் ---

 

சங்கீதம் --- இன்னிசை.  சம் --- நல்ல, இனிய. கீதம் --- இசை.

 

இனிய குரலைக் காட்டிப் பேசி மயக்குபவர்கள்.

 

எவரோடும் குறைப்படும் காதல் குனகிகள் ---

 

யார் வந்தாலும், அன்பு இல்லாமலேயே தழுவுவர். அவரிடத்தில் தமக்கு உள்ள குறைகளைச் சொல்லி அழுது, காதல் வார்தைகளைப் பேசியே கொஞ்சிக் கொஞ்சிப் பேசிப் பணத்தைப் பறிப்பார்கள்.

 

பலரை நட்புக் கொள்பவர் ஆதலின், மாதத்திற்கு ஒருமுறை வருமாறு அவரவர்கட்கு ஒவ்வொரு நாளாக முறை வைப்பர்.  அவ் அறிவிலிகள், அவள் தம்மையே மிகவும் காதலிப்பதாக எண்ணி மகிழ்வர். வேசையர் உறவால் தவம், பொருள், புகழ், உடல்நலம், நற்கதி முதலியன நீங்கும். ஆனால், பின்கண்ட ஏழு தன்மைகள் கிடைக்கும்.

 

மனைவியர் விரோதம் ஒன்று, மாதவர் பகை இரண்டு,

தனமது விரயம் மூன்று, சகலரும் நகைத்தல் நான்கு,

தினம்தினம் லஜ்ஜை ஐந்து, தேகத்தில் பிணியும் ஆறு,

வினையுறு நரகம் ஏழு, வேசையை விரும்புவோர்க்கே.

 

நிறுக்குஞ் சூதன மெய்த்தன முண்டைகள்

     கருப்பஞ் சாறொடி அரைத்துஉள உண்டைகள்

     நிழற்கண் காண உணக்கி மணம்பல ...... தடவாமேல்

 

நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம்

     ஒளித்து அன்பாக அளித்தபின், ங்குஎனை

     நினைக்கின் றீர்இலை, மெச்சல் இதஞ்சொலி .....எனவோதி

 

உறக்கண்டு ஆசை வலைக்குள் அழுந்திட

     விடுக்கும் பாவிகள், பொட்டிகள், சிந்தனை

     உருக்கும் தூவைகள்......               ---  திருப்புகழ்.

 

அரைப்பணம் கூறு விலையினர் ---

 

தமது அரையில் உள்ள பெண்குறிக்கு விலை பேசுபவர்கள். இதனால் இவர்கள் விலைமாதர் எனப்பட்டனர்.

 

கொலைக் கொடும் பார்வை நயனிகள் ---

 

கண்டாரைக் கொல்லும் விடத் தன்மை கொண்ட பார்வையை உடையவர்கள்.

 

விடமானது உண்டாரை மட்டுமே கொல்லும். விலைமாதரின் பார்வை கண்டாரையும் கொல்லும்.

 

பொருள் தினம் தேடும் கபடிகள் ---

 

நாளும் பொருள் கருதியே உழலுகின்ற வஞ்சமனம் படைத்தவர்.

 

தவர் சோரப் புரித்திடும் பாவசொருபிகள் ---

 

"துறவினர் சோரச் சோர நகைத்து, பொருள்கவர் மாதர்" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். "விழையும் மனிதரையும், முநிவரையும், அவர் உயிர் துணிய வெட்டிப் பிளந்து, உளம் பிட்டுப் பறிந்திடும் செங்கண்வேலும்" என்றும் பிறிதொரு திருப்புகழில் அடிகளார் கூறி அருளினார்.

 

 

துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறு, பொதுமகளிர் நகைத்து, தமது கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர். பொதுமகளிர் மீது வரும் ஆசையால் மனிதரும், முற்றத் துறந்த முனிவரும் கூட, மோகத் தீயினால் வெதும்பி, தமது உயிரையும் விடுவதற்குத் துணிந்து நிற்பர். அத்துணை அளவுக்கு அவருடைய உள்ளத்தில் ஆசைக் கனலை அம்மகளிர் மூட்டி விடுவர். திலோத்தமை மூட்டிய ஆசைக் கனலால் ஊசலாடிய சுந்தோபசுந்தர்கள் மாண்டதுவே போதுமான சான்று.

 

 

"கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்பு உடன் கிரி ஊடுருவத்

தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே! துறந்தோர் உளத்தை

வளைத்துப் பிடித்து, பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு

இளைத்து, தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே?"                                                                                           ---  கந்தர் அலங்காரம்.

 

வனசரி மணவாளா ---

 

வனம் --- தினைப்புனம்.

சரித்தல் --- வசித்தல்,சஞ்சரித்தல்.

 

வனசரி --- வள்ளிநாயகி.

 

 

நெருக்கும் இந்த்ராதி அமரர்கள், வளப் பெரும் சேனை உடையவர், நினைக்கும் என் போலும் அடியவர், பெருவாழ்வே ---

 

வானுலகை ஆளும் தேவர்களுக்கும், மண்ணுலகை ஆளும் மன்னவர்க்கும் அல்லாது, மனம் உருகி நினைக்கின்ற அடியவர்களுக்கும் பேரானந்தப் பெருவாழ்வை அருளுபவர் முருகப் பெருமான்.

 

செறித்த மந்தாரை --- நெருங்கி மலர்ந்துள்ள மந்தாரை மலர்,

 

மகிழ் --- மகிழ மலர்,

 

புனை --- புன்னை மலர். புன்னை என்பது புனை எனக் குறுகி வந்தது.

 

அம்பு ஏறு நதி அது ---

 

அம்பு --- நீர்.  

 

பலவாறும் திரைக் கரம் கோலி ---

 

பல துறைகளிலும் சென்று தனது அலைகளாகிய கரங்களால் வளைத்து.

 

அணி திருக்குரங்காடுதுறை ---

 

     வடகுரங்காடுதுறை, தென்குரங்காடுதுறை என இரு திருத்தலங்கள் உள்ளன.

 

வடகுரங்காடுதுறை

 

     கும்பகோணத்துக்கு அடுத்த ஐயம்பேட்டை புகைவண்டி நிலையத்தில் இருந்து நாலு கல் தொலையில் உள்ளது. வழியில் திருச்சக்கரப்பள்ளி என்னும் திருத்தலம் உள்ளது. ஆடுதுறைபெருமாள் கோயில் என்று வழங்கப்படுகின்றது. சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

 

         கும்பகோணம் - திருவையாறு சாலையில் சென்றால் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் ஆகிய ஊர்களைத் தாண்டிய பின்னர், உள்ளிக்கடை எனும் ஊர் வரும். அதற்கடுத்து உள்ளது ஆடுதுறை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் உள்ளது.

 

இறைவர்     : தயாநிதீசுவரர், குலைவணங்கீசர் வாலிநாதர், சிட்டிலிங்க நாதர்.

இறைவியார் : ஜடாமகுடேசுவரி, அழகுசடைமுடியம்மை.

தல மரம் : தென்னை.

 

     திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது.

 

 

தென்குரங்காடுதுறை

 

     தென்குரங்காடுதுறை என்பது ஆடுதுறை புகைவண்டி நிலையம் இப்பெயராலேயே உள்ளது. திருவிடைமருதூருக்குக் கிழக்கே இரண்டு கல் தொலையில் உள்ளது. ஆடுதுறை என்று வழங்கப்படுகின்றது. சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

 

         கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் ஆடுதுறை என்று வழங்கப்படும் இடத்தில் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள இரயில் நிலையம் ஆடுதுறை. இது கும்பகோணம் - மயிலாடுதுறை இரயில் மார்க்கத்தில் இருக்கிறது.

 

         மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கும்பகோணம் சாலையில் சிறிது தொலைவு சென்றால் சாலையோரத்தில் உள்ள குளத்தையொட்டி இடப்புறமாகத் திரும்பிச் செல்லும் சாலையில் சென்று வலப்பக்க வீதியில் திரும்பினால் ஆலயம் உள்ளது. ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கி.மி. தொலைவு.

 

இறைவர்     : ஆபத்சகாயேசுவரர்

இறைவியார் : பவளக்கொடியம்மை,                            

தல மரம் : வெள்வாழை

தீர்த்தம்      : சகாய தீர்த்தம், சூரிய தீர்த்தம்.

 

திருஞானசம்பந்தரும், அப்பரும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்றது.

 

கருத்துரை

 

முருகா! விலைமாதரைக் கொண்டாடுகின்ற மயக்கத்தை அடியேன் ஒழிக்க அருள்வாய்

 

 


No comments:

Post a Comment

திருவொற்றியூர்

  "ஐயும் தொடர்ந்து, விழியும் செருகி, அறிவு அழிந்து, மெய்யும் பொய்யாகி விடுகின்ற போது ஒன்று வேண்டுவன் யான், செய்யும் திருவொற்றியூர் உடைய...