திருச் சக்கரப்பள்ளி --- 0886. திட்டெனப் பல

 

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

திட்டெனப் பல (திருச்சக்கிரப்பள்ளி)

 

முருகா!

விலைமாதர் ஆசை அற அருள்.

 

 

தத்த தத்தன தத்தன தத்தன

     தத்த தத்தன தத்தன தத்தன

     தத்த தத்தன தத்தன தத்தன ...... தனதான

 

 

திட்டெ னப்பல செப்பைய டிப்பன

     பொற்கு டத்தையு டைப்பன வுத்தர

     திக்கி னிற்பெரு வெற்பைவி டுப்பன ...... வதின்மேலே

 

செப்ப வத்திம ருப்பையொ டிப்பன

     புற்பு தத்தையி மைப்பில ழிப்பன

     செய்த்த லைக்கம லத்தைய லைப்பன ...... திறமேய

 

புட்ட னைக்கக னத்தில்வி டுப்பன

     சித்த முற்பொர விட்டுமு றிப்பன

     புட்ப விக்கன்மு டிக்குறி யுய்ப்பன ...... இளநீரைப்

 

புக்கு டைப்பன முத்திரை யிட்டத

     னத்தை விற்பவர் பொய்க்கல விக்குழல்

     புத்தி யுற்றமை யற்றிட எப்பொழு ...... தருள்வாயே

 

துட்ட நிக்ரக சத்தித ரப்ரப

     லப்ர சித்தச மர்த்தத மிழ்த்ரய

     துட்க ரக்கவி தைப்புக லிக்கர ...... செனுநாமச்

 

சொற்க நிற்கசொ லட்சண தட்சண

     குத்த ரத்தில கத்திய னுக்கருள்

     சொற்கு ருத்வம கத்துவ சத்வஷண் ...... முகநாத

 

தட்ட றச்சமை யத்தைவ ளர்ப்பவ

     ளத்தன் முற்புகழ் செப்பவ நுக்ரக

     சத்து வத்தைய ளித்திடு செய்ப்பதி ...... மயிலேறி

 

சட்ப தத்திரள் மொய்த்தம ணப்பொழில்

     மிக்க ரத்நம திற்புடை சுற்றிய

     சக்கி ரப்பளி முக்கணர் பெற்றருள் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

திட்டு எனப் பல செப்பை அடிப்பன,

     பொன் குடத்தை உடைப்பன, உத்தர

     திக்கினில் பெரு வெற்பை விடுப்பன, ...... அதின்மேலே

 

செப்ப, அத்தி மருப்பை ஒடிப்பன,

     புற்புதத்தை இமைப்பில் அழிப்பன,

     செய்த் தலைக் கமலத்தை அலைப்பன, ......திறம் மேய

 

புள் தனைக் ககனத்தில் விடுப்பன,

     சித்தம் முன் பொர விட்டு முறிப்பன,

     புட்ப இக்கன் முடிக் குறி உய்ப்பன, ...... இளநீரைப்

 

புக்கு உடைப்பன, முத்திரை இட்ட,

     தனத்தை விற்பவர், பொய்க் கலவிக்கு உழல்

     புத்தி உற்றமை அற்றிட எப்பொழுது ...... அருள்வாயே?

 

துட்ட நிக்ரக சத்தி தர! ப்ரபல

     ப்ரசித்தல! சமர்த்த! தமிழ் த்ரய

     துட்கரக் கவிதைப் புகலிக்கு அரசு ......எனும் நாமச்

 

சொற்கம் நிற்க சொல் லட்சண தட்சண

     குத்தரத்தில் அகத்தியனுக்கு அருள்

     சொல் குருத்வ மகத்துவ சத்வ சண் ...... முகநாத!

 

தட்டு அறச் சமையத்தை வளர்ப்பவள்

     அத்தன் முன் புகழ் செப்ப, னுக்ரக

     சத்துவத்தை அளித்திடு செய்ப்பதி, ...... மயில்ஏறி

 

சட் பதத் திரள் மொய்த்த மணப்பொழில்

     மிக்க, ரத்ன மதில் புடை சுற்றிய

     சக்கிரப்பளி முக்கணர் பெற்றருள் ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

      துட்ட நிக்ரக சத்திதர --- துட்டர்களை அடக்கும் ஞானசக்தியாகிய வேலைத் தரித்துள்ளவரே!

 

     ப்ரபல --- புகழ் வாய்ந்தவரே!

 

     ப்ரசித்த --- நன்கு அறியப்பட்டவரே!

 

     சமர்த்த --- வல்லமை கொண்டவரே!

 

     தமிழ் த்ரய துட்கர(ம்) கவிதைப் புகலிக்கு அரசு எனு(ம்) நாம --- முத்தமிழில் முடிப்பதற்கு அருமையான (தேவாரப்) பாடல்களை (திருஞான சம்பந்தராக வந்து) சீகாழிவேந்தர் என்னும் புகழ் பெற்று,

 

     சொற்க(ம்) நிற்க சொல் லட்சண --- (அப்பாடல்களைக் கற்றவர்களுக்கு) வீடுபேறு நிலைக்கும்படி சொன்ன அழகை உடையவரே!

 

      தட்சண குத்தரத்தில் அகத்தியனுக்கு அருள் சொல் குருத்வ(ம்) மகத்துவ --- தென்திசையில் உள்ள பொதிகை மலையில் அகத்திய முனிவருக்கு உபதேசத்தை அருளிய குருநாதன் என்னும் பெருமையை உடையவரே!

 

     சத்வ சண்முகநாத --- சத்துவகுணம் மிக்க அறுமுகப் பரம்பொருளே!

 

      தட்டு அறச் சமையத்தை வளர்ப்பவள் --- குற்றமற்ற (சைவ) சமயத்தை வளர்ப்பவளாகிய உமாதேவியார்,

 

     அத்தன் முன் --- சிவபெருமான் ஆகியோர் முன்பு

 

     புகழ் செப்ப அனுக்ரக சத்துவத்தை அளித்திடு செய்ப்பதி மயில் ஏறி --- திருப்புகழைப் பாடும்படியான திருவருள் வல்லபத்தை அடியனுக்கு அருளிய, வயலூரில் மயில் வாகனனாய் விளங்குபவரே!

 

      சட் பதத் திரள் மொய்த்த மணப் பொழில் மிக்க --- ஆறு கால்களை உடைய வணிடனங்கள் மொய்க்கின்ற மணம் வீசும் சோலைகள் மிகுந்துள்ளதும்,

 

     ரத்ன மதில் புடை சுற்றிய --- இரத்தின மயமான மதில்களால் சூழப்பெற்றுள்ளதும் ஆகிய

 

 

     சக்கிரப்ப(ள்)ளி முக்கணர் பெற்று அருள் பெருமாளே --- திருச்சக்கிரப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் முக்கண்ணராகிய சிவபெருமான் அருளிய பெருமையில் மிக்கவரே!

 

         திட்டு எனப் பல செப்பை அடிப்பன --- (பெண்களின் மார்பகங்களுக்குச் செப்புக் குடத்தை உவமை கூறப் புகுந்தால்) திட் திட் என்று செப்புக் குடத்தை உடைக்கும்படிச் செய்வனவாக அவை உள்ளன.

 

      பொன் குடத்தை உடைப்பன --- (பொற்குடத்தை உவமை கூறலாம் என்றால்) பொன்னாலாகிய குடத்தை உடைபடும்படி செய்வன.

 

     உத்தர திக்கினில் பெரு வெற்பை விடுப்பன --- வடதிசையில் உள்ள மேருமலையை உவமை கூறலாம் என்றால்) வடக்கு திசையில் பெருத்த மேரு மலையும் தள்ளி விடப்பட்டது.

 

      அதின் மேலே செப்ப --- அதற்கு மேலும் சொல்லப் புகுந்தால்,

 

     அத்தி மருப்பை ஒடிப்பன --- யானையின் தந்தங்களை ஒடிப்பனவாக உள்ளன.

 

     புற்பதத்தை இமைப்பில் அழிப்பன --- (அழகான) நீர்க்குமிழிக்கு ஒப்பிடலாம் எனில், நீர்க்குமிழியையும் அழிப்பனவாக உள்ளன.

 

     செய்த் தலைக் கமலத்தை அலைப்பன --- வயல்களில் உள்ள தாமரை மொட்டை (உவமை கூறலாம் என்றால்) தாமரை மொட்டை நீரில் அலையச் செய்வன.

 

      திறம் ஏய புள் தனைக் ககனத்தில் விடுப்பன --- வல்லமை பொருந்திய சக்கரவாகப் பறவைக்கு ஒப்பிடலாம் எனில், அதை வானில் பறந்துபோகும்படி செய்வதாய் உள்ளன.

 

     சித்தம் முன் பொரவிட்டு முறிப்பன --- ஆடவரின் உள்ளத்தைப் போரிட்டு அழிப்பனவாக உள்ளன.

 

     புட்ப இக்கன் முடிக் குறி உய்ப்பன --- மலர்க்கணைகளையும், கரும்பு வில்லையும் கொண்ட மன்மதனின் மணிமுடிக்கு உவமிக்கலாம் எனில், அதையும் குறி வைத்து அகற்றுவனவாய் உள்ளன.

 

      இளநீரைப் புக்கு உடைப்பன --- இளநீரை உவமிக்கலாம் எனில், இளநீரை உடைப்பதாக உள்ளன.

 

     முத்திரை இட்ட தனத்தை விற்பவர் --- இப்படி எல்லாம் எதுவும் உவமிக்க முடியாது எனும்படி முத்திரை இட்டு விளங்கும் மார்பகங்களை விற்கின்ற விலைமாதர்களின்.

 

     பொய்க் கலவிக்கு உழல் புத்தி உற்றமை அற்றிட --- பொய்யான புணர்ச்சி இன்பத்தை நாடி உழல்கின்றபடி எனக்குப் பொருந்தி உள்ள அறிவு அற்றுப் போகும்படி,

 

     எப்பொழுது அருள்வாயே ---  தேவரீர் எப்போது அருள் புரிவீர்.

 

 

பொழிப்புரை

 

     துட்டர்களை அடக்கும் ஞானசக்தியாகிய வேலைத் தரித்துள்ளவரே!

 

     கழ் வாய்ந்தவரே!

 

     நன்கு அறியப்பட்டவரே!

 

     வல்லமை கொண்டவரே!

 

     முத்தமிழில் முடிப்பதற்கு அருமையான (தேவாரப்) பாடல்களை (திருஞான சம்பந்தராக வந்து) சீகாழிவேந்தர் என்னும் புகழ் பெற்று, (அப்பாடல்களைக் கற்றவர்களுக்கு) வீடுபேறு நிலைக்கும்படி சொன்ன அழகை உடையவரே!

 

         தென்திசையில் உள்ள பொதிகை மலையில் அகத்திய முனிவருக்கு உபதேசத்தை அருளிய குருநாதன் என்னும் பெருமையை உடையவரே!

 

     சத்துவகுணம் மிக்க அறுமுகப் பரம்பொருளே!

 

         குற்றமற்ற (சைவ) சமயத்தை வளர்ப்பவளாகிய உமாதேவியார், சிவபெருமான் ஆகியோர் முன்பு திருப்புகழைப் பாடும்படியான திருவருள் வல்லபத்தை அடியனுக்கு அருளிய, வயலூரில் மயில் வாகனனாய் விளங்குபவரே!

 

         ஆறு கால்களை உடைய வண்டினங்கள் மொய்க்கின்ற மணம் வீசும் சோலைகள் மிகுந்துள்ளதும், இரத்தின மயமான மதில்களால் சூழப்பெற்றுள்ளதும் ஆகிய திருச்சக்கிரப்பள்ளி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் முக்கண்ணராகிய சிவபெருமான் அருளிய பெருமையில் மிக்கவரே!

 

         பெண்களின் மார்பகங்களுக்குச் செப்புக் குடத்தை உவமை கூறப் புகுந்தால், திட் திட் என்று செப்புக் குடத்தை உடைக்கும்படிச் செய்வனவாக அவை உள்ளன. பொற்குடத்தை உவமை கூறலாம் என்றால், பொன்னாலாகிய குடத்தை உடைபடும்படி செய்வன. வடதிசையில் உள்ள மேருமலையை உவமை கூறலாம் என்றால்) வடக்கு திசையில் பெருத்த மேரு மலையும் தள்ளி விடப்பட்டது. அதற்கு மேலும் சொல்லப் புகுந்தால், யானையின் தந்தங்களை ஒடிப்பனவாக உள்ளன. அழகான நீர்க்குமிழிக்கு ஒப்பிடலாம் எனில், நீர்க்குமிழியையும் அழிப்பனவாக உள்ளன. வயல்களில் உள்ள தாமரை மொட்டை உவமை கூறலாம் என்றால், தாமரை மொட்டை நீரில் அலையச் செய்வன. வல்லமை பொருந்திய சக்கரவாகப் பறவைக்கு ஒப்பிடலாம் எனில், அதை வானில் பறந்துபோகும்படி செய்வதாய் உள்ளன. ஆடவரின் உள்ளத்தைப் போரிட்டு அழிப்பனவாக உள்ளன. மலர்க்கணைகளையும், கரும்பு வில்லையும் கொண்ட மன்மதனின் மணிமுடிக்கு உவமிக்கலாம் எனில், அதையும் குறி வைத்து அகற்றுவனவாய் உள்ளன. இளநீரை உவமிக்கலாம் எனில், இளநீரை உடைப்பதாக உள்ளன. இப்படி எல்லாம் எதுவும் உவமிக்க முடியாது எனும்படி முத்திரை பெற்று விளங்கும் மார்பகங்களை விற்கின்ற விலைமாதர்களின். பொய்யான புணர்ச்சி இன்பத்தை நாடி உழல்கின்றபடி எனக்குப் பொருந்தி உள்ள அறிவு அற்றுப் போகும்படி, தேவரீர் எப்போது அடியேனுக்கு அருள் புரிவீர்.

 

 

விரிவுரை

 

     இத் திருப்புகழின் முற்பகுதியில் அடிகளார், பெண்களின் மார்பகத்தைப் பற்றிப் பலபடக் கூறி, அதனால் உண்டாகும் மயக்கில் இருந்து விடுபட, அருள் புரியுமாறு முருகப் பெருமானை வேண்டுகின்றார்.

 

     இவ்வைறே, "கமலமொட்டை" எனத் தொடங்கும் திருவண்ணாமலைத் திருப்புகழிலும், "குடத்தைத் தகர்த்து" எனத் தொடங்கும் திருக்கற்குடித் திருப்புகழிலும் அடிகளார் அருளி உள்ளதைக் காண்க.

 

     செப்புக்குடம் கொல்லன் உலைக்களத்தில் அடிபடும், உடைத்தால் உடைபடும். ஆனால், மார்பகங்கள் அவ்வாறு அடிபடாமலும், உடையாமலும் அழகுற விளங்குகின்றன. பெண்களின் மார்பகத்துக்குத் தோற்றுப் போய், பொன்மேரு மலையானது வடக்கே தவம் கிடக்குன்றது. யானையின் தந்தம் ஒடிந்து போகும். பெண்களிர் மார்பகம் அவ்வாறு ஒடிந்து போகாது. ஆடவரின் உள்ளத்தை ஒடிக்கும். நீர்க்குமிழி ஒரு நொடியில் அழிவுறும். மார்பகம் குமிழி போல் இருக்கும், ஆனால் அழியாது. தாமரை. மொட்டானது, தடாகத்தில் அலையில் அலைச்சல் உறும். மார்பகமானது அவ்வாறு அசையாது. சக்கரவாகப் பறவையானது, பெண்களின் மார்பகத்துக்குத் தோற்றுப் போய் வானில் பறந்து உயர ஓடிப்போம். மன்மதனுடைய முடி எரிபட்டு விழும். இளநீர் உடைபட்டுப் போகும். இங்ஙனம் எல்லாப் பொருள்களும், கொங்கைகளுக்குத் தோற்றுப் போயின.

 

 

முத்திரை இட்ட தனத்தை விற்பவர், பொய்க் கலவிக்கு உழல் புத்தி உற்றமை அற்றிட ---

 

     இவ்வாறான சிறப்புப் பெற்ற கொங்கைகளைப் பொருளுக்கு விற்பவர் விலைமாதர்கள். அவர்தம் இன்பத்தை நாடிச் செல்வோர், தாம் அரும்பாடு பட்டு ஈட்டிய பொருளை, அவர் தரும் சிற்றின்பத்துக்காக இழப்பர். விலைமாதருடைய முயக்கம் பொய்ம்முயக்கம் ஆகும். அது இருட்டு அறையில் தமக்குச் சம்பந்தம் இல்லாத பிணத்தைத் தழுவியது போன்றது என்பதை....

 

"பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணந்தழீஇ அற்று"

 

என்று அறுவுறுத்தினார் திருவள்ளுவ நாயனார்.

 

இதன் பொருள் ---

 

     பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான தழுவுதல், இருட்டு அறையில், தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.

 

 

துட்ட நிக்ரக சத்திதர ---

 

நிக்கிரகம் --- அழித்தல், அடக்குதல், தண்டித்தல்.

 

 

தமிழ் த்ரய துட்கர(ம்) கவிதைப் புகலிக்கு அரசு எனு(ம்) நாம ---

 

த்ரயம் --- மூன்று. முத்தமிழைக் குறிக்கும்.

 

துட்கரம் --- அரிதில் முயன்று முடித்தல்.

 

புகலி --- திருப்புகலி.  சீகாழிக்கு உரிய பன்னிரு திருப்பெயர்களில் ஒன்று.

 

புகலிக்கு அரசு --- திருஞானசம்பந்தப் பெருமான்.

 

 

தட்சண குத்தரத்தில் அகத்தியனுக்கு அருள் சொல் குருத்வ மகத்துவ ---

 

குதரம் --- மலை.  குத்தரம் என்று ஒற்று மிக்கு வந்தது.

 

பருவத வேந்தளாகிய இமவானுக்கு, அவன் செய்த தவத்தின் காரணமாகத் திருமகளாகத் தோன்றி வளர்ந்த உமாதேவியாரைச் சிவபெருமான் திருமணம் செய்து கொள்ளும்  பொருட்டு, இமயமலையில் எழுந்தருளிய போது திருக்கல்யாணத்தைச் சேவிக்கும் பொருட்டு, எப் புவனத்திலுமுள்ள யாவரும் வந்து கூடினமையால் இமயமலை நடுங்கியது. அதனால் பூமியின் வடபால் தாழ, தென்பால் மிக உயர்ந்தது. உடனே தேவர்கள் முதல் அனைவரும் ஏங்கி, `என் செய்வது’ என்று துன்புற்று “சிவா சிவா” என்று ஓலமிட்டார்கள். சிவபெருமான் அது கண்டு திருமுறுவல் செய்து, அவர்களது குறையை நீக்கத் திருவுளங்கொண்டு, அகத்திய முனிவரை நோக்கி “முனிவனே! இங்கே யாவரும் வந்து கூடினமையால், வடபால் தாழத் தென்பால் உயர்ந்துவிட்டது. இதனால், உயிர்கள் மிகவும் வருந்துகின்றன. ஆதலால் நீ இம் மலையினின்று நீங்கித் தென்னாட்டில் சென்று பொதியை மலையின்மேல் இருப்பாயாக. உன்னைத் தவிர இதனைச் செய்ய வல்லவர் வேறு யாருமில்லை. நீ ஒருவன் பொதியமலை சென்று சேர்ந்தால் பூமி சமனாகும்!” என்று பணித்தருளினார். அது கேட்ட அகத்திய முனிவர் அச்சமுற்று, “பரம கருணாநிதியாகிய பரமபதியே! அடியேன் யாது குற்றம் செய்தேன்? தேவரீரது திருமணக் கோலத்தைக் காணவொட்டாமல் கொடியேனை விலக்குகின்றீர்; எந்தையே! திருமாலிருக்க, திசைமுகன் முதலிய தேவர்களிருக்க, எளியேனை விலக்குவது யாது காரணம்? என்று பணிந்து உரைத்தார். சிவபெருமான், “மாதவ! உனக்கு ஒப்பான முனிவர்கள் உலகத்தில் உண்டோ? இல்லை; பிரமனும் மாலனும் உனக்கு நிகராகார். ஆதலால் நினைந்தவை யாவையும், நீ தவறின்றி முடிக்கவல்லை. இவ்வரிய செய்கை மற்றைத் தேவர்களாலேனும் முனிவர்களாலேனும் முடியுமா? யாவரினும் மேலாகிய உன்னாலே மாத்திரம் முடியும்; செல்லக் கடவாய்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

 

     அகத்திய முனிவர், “எமது பரமபிதாவே! தங்களுடைய திருமணக் கோலத்தை வணங்காது பிரிவாற்றாமையால் என் மனம் மிகக் கவல்கின்றது” என்ன, கயிலாயபதி, “குறுமுனிவ! நீ கவலாது பொதியமலை செல்லுதி. நாம் அங்கு வந்து நமது கல்யாணக் கோலத்தைக் காட்டுவோம்; நீ மகிழ்ந்து தரிசிக்கக் கடவை. நீ நம்மைத் தியானித்துக் கொண்டு அங்கு சில நாள் தங்கியிருந்து, பின்பு முன்போல் நமது பக்கத்தில் வருவாயாக” என்று அருளிச்செய்தார்.

 

     அகத்திய முனிவர் அதற்கியைந்து, அரனாரை வணங்கி விடைபெற்று, பெருமூச்செறிந்து அரிதில் நீங்கி, தென்திசையை நோக்கிச் சென்று பொதிய மலையை யடைந்து, சிவமூர்த்தியைத் தியானித்துக் கொண்டு அப்பொதிய மலையில் எழுந்தருளியிருந்தார். பூமியும் சமமாயிற்று. ஆன்மாக்கள் துன்பம் நீங்கி இன்பமுற்றன.

 

     அகத்தியருக்கு முருகப்பெருமான் இனிய தமிழ் மொழியையும், அதன் இலக்கணத்தையும் உபதேசித்தருளினார். இதனால் தமிழ்மொழி ஏனைய மொழிகளினும் உயர்ந்த மொழி என்பதும், அதன் ஆசிரியர் முருகப்பெருமானே என்பதும், அதனை உலகிற்கு உபகரித்த சந்தனாசாரியார் அகத்தியர் என்பதும் நன்கு புலனாகின்றன.

 

"குடமுனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த

     குமர! குறத்தி நம்பு ...... பெருமாளே"     --- திருப்புகழ்.

 

சிவனை நிகர் பொதியவரை முநிவன் அக மகிழ,இரு

     செவிகுளிர, இனியதமிழ் ...... பகர்வோனே! --- திருப்புகழ்.

 

 

சட் பதத் திரள் மொய்த்த மணப் பொழில் மிக்க   ரத்ன மதில் புடை சுற்றிய சக்கிரப்ப(ள்)ளி முக்கணர் பெற்று அருள் பெருமாளே ---

 

சட்பதம் --- ஆறு கால்கள்.

 

     ஆறுகால்களை உடைய வண்டுகளின் கூட்டம் மொய்க்கின்ற நறுமணமிக்க சேலைகளால் சூழப்பட்டுள்ளது திருச்சக்கரப்பள்ளி என்னும் திருத்தலம். சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

 

         தஞ்சாவூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் உள்ளது. தஞ்சாவூர் - கும்பகோணம் சாலைத் தடத்தில் உள்ள அய்யம்பேட்டை என்ற ஊரில் நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே சற்று உள்ளடங்கி கோயில் உள்ளது. சாலையில் திருக்கோயிலின் பெயர்ப் பலகை உள்ளது.

 

         அய்யம்பேட்டை என்ற பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இவ்வூரைத் தஞ்சாவூர் அய்யம்பேட்டை என்று கூறுகின்றனர். ஊர்ப் பெயர் அய்யம்பேட்டை. கோயிலிருக்கும் பகுதி சக்கரப்பள்ளி என்று வழங்குகிறது.

 

இறைவர்              : சக்கரவாகேசுவரர்.

இறைவியார்          : தேவநாயகி

தல மரம்              : வில்வம்

தீர்த்தம்               : காவிரி.

 

திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது. திருச்சக்கரப்பள்ளி பாடல் பெற்ற திருத்தலத்தை முதலாவதாகக் கொண்ட சப்தமங்கைத் தலங்களுள் இது முதலாவது தலம்.

 

     சக்கரமங்கை, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழும் பிராமி, மகேஸ்சுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, சாமுண்டி முதலிய சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தமங்கைத் தலங்கள் ஆகும்.

 

     திருமால் சிவபெருமானை வழிபட்டுச் சக்கராயுதம் பெற்றதால் இத்திருத்தலம் திருசக்கரப்பள்ளி என்று பெயர் பெற்றது என்கின்றனர். சக்கரவாளப் பறவை வழிபட்டதால் இறைவன் சக்ரவாகேசுவரர் எனப் பெயர் பெற்றார்.

    

     முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மயில் முருகப்பெருமானின் முன்புறம் உள்ளது.

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் ஆசை அற அருள்.

 

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...