பயனை எண்ணித் துணிக கருமம்

 

 

பயனை எண்ணித் துணிக கருமம்

-----

 

     திருக்குறளில் படைச் செருக்கு என்னும் அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "காட்டில் ஓடுகின்ற முயலை எய்த அம்பினை ஏந்துவதைப் பார்க்கிலும், வெளியிலே நின்ற யானையை எறிந்து தப்பிய வேலை ஏந்துதல் இனிது" என்கின்றார் நாயனார்.

 

"கான முயல் எய்த அம்பினில், யானை  

பிழைத்த வேல் ஏந்தல் இனிது".

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.                

 

     அம்பு, தூரத்தில் உள்ள ஒன்றை இலக்காகக் கொண்டு எய்யப் பெறுவது. இதற்கு அத்திரம் என்று பெயர். வேலைக் கையில் வைத்தே குத்தலாம். அல்லது வேலை கைக்கு எட்டிய தூரத்தில் எறியலாம். அதற்கு சத்திரம் என்று பெயர். முயலானது ஆளைக் கண்டால் அஞ்சிக் காட்டுக்குள் ஓடுவது. யானை அஞ்சி ஓடாமல் எதிர்த்து நிற்பது. தூர இருந்து எய்யத்தக்க யானையின் அருகில் சென்று, அதன்மேல் வேலைச் செலுத்துவது படைச் செருக்கு. அணுகித் துன்புறுத்தத் தக்க முயலை அம்பால் எய்வது படை இழிவு. ஆகவே வெற்றி தோல்விகளில் செருக்கு இல்லை. எதிர்க்கப் பெற்ற பொருளின் உயர்வு இழிவுகளில் செருக்கு அமைந்துள்ளது. ஆதலால், "யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது" என்று பாராட்டப் பெறுகிறது. பிறிது மொழிதலாக, முயல் வலிமையற்ற வீரரையும், யானை எதிர்த்துப் போரிடும் வீரரையும் காட்டி நின்றன.

 

     திருக்குறளுக்கு விளக்கமாக வந்த செய்யுள் வடிவிலான நூல்கள் சில உள்ளன என்று முந்திய பதிவுகளில் குறிப்பிட்டு, ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக வெளிவராத அந்த நூல்களை அரிதில் முயன்று தேடித் தொகுத்து வருகின்றேன்.

 

     திருக்குறளை அனுபவித்த பெரியவர்கள், தமது அனுபவத்தைப் பாடலாக வடித்துத் தந்து உள்ளார்கள். பொருட்பாலில் கூறப்பட்டுள்ள இத் திருக்குறளுக்கு, அருள்நோக்கில் விளக்கம் கண்டுள்ள அருமை வியக்கத்தக்கது.

 

     திருக்குறளோடு, அதற்கு விளக்கமாக அமைந்த இந்த நூல்களையும் உணர்ந்து, நாம் அனுபவிப்பது மட்டுமல்ல. மாணவர்களுக்கும் அனுபவிக்கத் தந்தால், திருக்குறளின் கருத்தை எளிதாக விளங்கிக் கொள்ள வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

 

     மேற்குறித்த திருக்குறளுக்கு விளக்கமாக, தரும்புர ஆதீனகர்த்தராக விளங்கிய, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

இறையோடு எதிர்ந்து இறந்தது என்றாலும் என்ன

குறையோ, பிறரை அடும் கூற்று ---  முறையேகாண்,

கான முயல்  எய்த அம்பினில், யானை  

பிழைத்த வேல் ஏந்தல் இனிது.

 

இதன் பொருள் --- 

 

     பிறருடைய உயிரைக் கொல்லுகின்ற கூற்றுவன், மார்க்கண்டேயருடைய ஆவியைக் கவர்ந்து செல்ல எண்ணி வந்து, இலிங்கத்தை இறுகத் தழுவி இருந்த மார்க்கண்டேயரோடு இலிங்கத்தையும் சேர்த்துப் பாசத்தால் இழுக்க முயன்றதை நினைத்து, 'இறையோடு எதிர்ந்து' என்றார்.

 

     மார்க்கண்டேயரைப் பிடிக்க வந்தான் இயமன். அது முடியவில்லை. என்றாலும், மார்க்கண்டேயரை அவர் தழுவி இருந்த இலிங்கத் திருமேனியோடு சேர்த்துத் தனது பாசத்தை வீசியதால், இயமன் சிவபெருமானால் உதைபட்டான். யாருக்கும் கிடைக்கப் பெறாத திருவடி தரிசனத்தை எமன் கண்டான். இதனால் இயமன் எதிர்த்து வந்ததிலும் குறை இல்லை.

 

     இந்த நிகழ்வைப் பின்வரும் பாடல்கள் நயம்பட விளக்குவதைக் காண்க.

 

மேலும் அறிந்திலன் நான்முகன் மேற்சென்று, கீழ்இடந்து

மாலும் அறிந்திலன் மால்உற்ற தே,வழி பாடுசெய்யும்

பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக்

காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழல்அடியே.   --- அப்பர் தேவாரம்.

 

இதன் பொருள் ---

 

     பிரமன் மேலே அன்ன வடிவில் சென்று சிவபெருமானுடைய முடியை அறிந்தான் அல்லன். கீழே தோண்டிச் சென்று திருமால் மனக்கலக்கம் உற்றானே அன்றிப் பெருமானுடைய திருவடிகளைக் கண்டான் அல்லன். சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த இளையவனான மார்க்கண்டேயன்பால் சென்று அவன் மீது பாசக்கயிற்றை வீசி எறிந்து, செயற்படாமல் மடங்கிய மனத்தை உடைய கூற்றுவன் பிரமனாலும் திருமாலாலும் அறிய முடியாத சிவபெருமானுடைய கழல்களை அணிந்த திருவடிகளை அறியும் வாய்ப்பினைப் பெற்றான். அத்திருவடிகள் வாழ்க.

 

     குமரகுருபர அடிகள், திருவாரூர் மும்மணிக் கோவையில், இந்த நிகழ்வைச் சுவைபடப் பாடியுள்ளதைக் காண்க.

 

 

"நவமணி குயின்ற நாஞ்சில்சூழ் கிடக்கும்

உவளகம் கண்ணுற்று, வாக்கடல் இஃது எனப்

பருகுவான் அமைந்த கருவிமா மழையும்

செங்கண்மால் களிறும் சென்றன படிய,

வெங்கண்வாள் உழவர் வேற்றுமை தெரியார்

வல்விலங்கு இடுதலின், வல்விலங்கு இதுவெனச்

செல்விலங்கு இட எதிர் சென்றனர் பற்றக்

காக பந்தரில் கைந் நிமிர்த்து எழுந்து

பாகொடும் உலாவிப் படர்தரு தோற்றம்

நெடுவேல் வழுதி நிகளம் பூட்டிக்

கொடுபோது அந்தக் கொண்டலை நிகர்க்கும்

சீர்கெழு கமலைத் திருநகர் புரக்கும்

கார்திரண்டு அன்ன கறைமிடற்று அண்ணல்,

மூவர் என்று எண்ண நின் முதல்தொழில் பூண்டும்

ஏவலில் செய்தும் என்று எண்ணார் ஆகி,    

அடங்கா அகந்தைக்கு அறிவெலாம் வழங்கி,

உடம்பு வேறாய் உயிர்ப்பொறை சுமந்து,

நாளும் நாளும் நேடினர் திரிந்தும்

காணாது ஒழிந்ததை நிற்க, நாணாது

யாவரும் இறைஞ்ச இறுமாப்பு எய்துபு  

தேவர் என்று இருக்கும் சிலர், பிறர் தவத்தினும்

மிகப்பெருந் தொண்டரொடு இகலி, மற்று உன்னொடும்

பகைத்திறம் பூண்ட பதகனே எனினும்

நின் திருப் பாதம் நேர்வரக் கண்டு

பொன்றினன் ஏனும், புகழ்பெற்று இருத்தலின்,

இமையா முக்கண் எந்தாய்க்கு

நமனார் செய்த நற்றவம் பெரிதே".

 

இதன் பொருள் ---

 

     நவமணிகள் பதிக்கப்பெற்ற மதிலைச் சூழ்ந்து இருந்த அகழியைக் கண்டு, நீர் நிறைந்த கடல் என்று கருதி, கரிய மேகமானது அந்த நீரை முகக்கச் சென்றது. சிவந்த கண்களை உடைய ஒரு யானையும் அந்த நீரைப் பருகச் சென்றது. கடுமையான கண்களை உடைய வீரர் சென்று யானைக்கும் மேகத்திற்கும் வேற்றுமை தெரியாமல் விலங்கு பூட்டச் சென்றனர். வலிய மிருகமாகிய யானை இது என்று அறிந்து, மேகமானது விலகி, காகங்கள் படர்ந்து வரும் வானப் பரப்பைக் கடந்து, அழகாக வானத்தில் செல்லுகின்றது. அந்த மேகத்தை உக்கிரகுமார பாண்டியர் விலங்கிட்டுக் கொண்டு வந்தார். அப்படிப்பட்ட மழைமேகங்களை ஒக்கும் கண்டத்தை உடையவரும், கமலைத் திருநகர் என்னும் திருவாரூரை ஆட்சி புரிபவரும் ஆகிய தியாகேசப் பெருமானே! உன்னோடு சேர்த்து மும்மூர்த்திகள் என்று எண்ணும்படியாக, உனது தொழிலாகிய சங்காரத்திற்கு, முற்பட்டதான படைப்புத் தொழிலையும், காத்தல் தொழிலையும், உனது ஏவலின்படியே செய்து வருவதாக எண்ணாமல், அறிவின்றி பெருத்த அகங்காரத்தை அடைந்து, அன்னமும், பன்றியுமாகிய வேறு வேறு உருவை எடுத்து, அந்த உடம்புகளைச் சுமந்து, பல பிறவிகளை எடுத்து, உமது திருமுடியையும் திருவடியையும் தேடினர். பிரமன் திருமால் என்னும் இவர் நாணமில்லாது எல்லோரும் தம்மைக் கடவுளர் என்று வணங்குதலினால் உன்னை ஒத்தவர்கள் என்று தம்மை எண்ணிக் கொண்டு இறுமாப்பை அடைந்து இருக்கின்றனர். உன்னைக் காணும்பொருட்டு, தவத்தைப் புரிந்து கொண்டு இருந்த பெருந்தொண்டராகிய மார்க்கண்டேயரோடு மாறுகொண்டு, உன்னோடும் பகைத்திறம் பூண்டு அவரது உயிரைக் கவர வந்த பாதகன் இயமன். அவன் பெருந்தண்டனையாகவாவது உனது திருவடியைக் கண்டு அழிந்தவன். என்றாலும் அவன் புகழோடு விளங்குவதால், இமையாத முக்கண்களை உடைய உனது திருவடியைக் காணவும், அத் திருவடியால் உதைபடவும் அவன் செய்த தவம் பெரியதுதான்.

 

 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சென்னையில் ஒரு பகுதியாக இன்று கொளத்தூர் என வழங்கும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள சோமேசரைப் பாட்டுடைத் தலைவராக வைத்து, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

                                                     

மன்மதன் நின்னோடு எதிர்த்து வீறுஅழிந்து மாண்டாலும்,

துன்னு புகழே பெற்றான், சோமேசா! - புல்நெருங்குங்

கான முயல்எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

 

இதன் பொருள்---

 

         சோமேசா! புல் நெருங்கும் --- புல் அடர்ந்த, கான முயல் எய்த அம்பினில் --- கான முயல் எய்த அம்பை ஏந்தலினும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது --- வெள்ளிடை நின்ற யானையை எறிந்து பிழைத்த வேலை ஏந்தல் நன்று.

 

         மன்மதன் --- காமவேள், நின்னோடு எதிர்த்து --- அறிவானந்த வடிவமாயுள்ள தேவரீரோடு எதிர்த்து, வீறு அழிந்து மாண்டாலும் --- பெருமை கெட்டுப் பொடியானாலும், துன்னு புகழே பெற்றான் --- மிக்க புகழையே அடைந்தான் ஆகலான் என்றவாறு.

 

         இந்திரன் மகன் சயந்தனைச் சூரபத்மன் மகன் பானுகோபன் சிறையிட, இந்திரன் சிவபெருமானை நோக்கித் தவம் கிடந்து, அவர் பிரத்தியட்சமான போது, "கருணைக் கடலே! சூரபத்மன் முதலியவர்களால் யாங்கள் படும் துன்பம் பெரிதாகலின் அவர்களை ஒழித்தருளல் வேண்டும்" என, பெருமான், "எம்மிடம் ஒரு புதல்வன் தோன்றி அவர்களை அழிப்பான்" என்று மறைந்தருளிய பின், சனகாதியர்களுக்குத் தத்துவஞானத்தை அறிவுறுத்த வேண்டி ஒரு கணப்போது ஞானமுத்திரை தாங்கி மோன நிலையில் அமர்ந்தருளினார். இந்திரன் பிரமனிடம் சென்று நிகழ்ந்தன கூறிப் பெருமானது மோன நிலையைப் பிரித்தாலன்றி உய்தியில்லை என்று கூறப் பிரமன் மன்மதனை அழைத்து அவனுடைய பாணங்களால் பெருமானது மோன நிலையைக் குலைக்க வேண்டினன். அவன் அதற்கு ஒருப்படானாக, அதுகண்டு பிரமன், "சபிப்பேன்" எனக் கோபிக்க, வேறு செய்வதொன்று அறியாது, மன்மதன் அப் பிரமன் சாபத்தால் இறத்தலைவிட, சிவபெருமான் கோபத்தால் இறப்பதே தகுதி என்று எண்ணித் திருக்கயிலை சென்று, பிரமன் ஏவியவாறே செய்ய, சிவபெருமான் தமது மோன நிலை நீங்கி, நெற்றி விழியைச் சிறிது திறக்க மன்மதன் சாம்பலாகி மாண்டான்.

                                   

     பின்வரும் பாடல், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதும்  காண்க.

இசையும் எனினும் இசையாது எனினும்

வசைதீர எண்ணுவர் சான்றோர்; - விசையின்

நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ,

அரிமாப் பிழைப்பெய்த கோல்?           --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     இசையும் எனினும் இசையாது எனினும் வரை தீர எண்ணுவர் சான்றோர் --- ஒரு செயல் கைகூடும் என்றாலும், கை கூடாது என்றாலும் அதன் மூலம் பழி வராமல் இருந்தால் போதும் என்று பழித்தல் இல்லாத வகையில் அரிய காரியங்களையே மேன்மக்கள் எண்ணிச் செய்வர்; விசையின் நரிமா உளம் கிழித்த அம்பினின் தீதோ அரிமாப் பிழைப்பு எய்த கோல் --- விரைவோடு செல்லும் நரி என்னும் விலங்கின் நெஞ்சைக் கிழித்து வீழ்த்துவதை வி, சிங்கத்தை நோக்கி எய்த அம்பானது, அது சிங்கத்தை அடித்து வீழ்த்தவில்லை என்றாலும், தீயது அல்ல. உயர்வானதே.

 

         அரிய காரியங்களையே எண்ணிச் செய்வது மேன்மக்கள் இயல்பு.

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...