பொது --- 1105. நடையுடையிலே அருக்கி

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

நடை உடையிலே (பொது)


முருகா! 

விலைமாதர் வசமாகி அழியாது இருக்க அருள்


தனதனன தானதத்த தனதனன தானதத்த

     தனதனன தானதத்த ...... தனதான


நடையுடையி லேயருக்கி நெடியதெரு வீதியிற்குள்

     நயனமத னால்மருட்டி ...... வருவாரை


நணுகிமய லேவிளைத்து முலையைவிலை கூறிவிற்று

     லளிதமுட னேபசப்பி ...... யுறவாடி


வடிவதிக வீடுபுக்கு மலரணையின் மீதிருத்தி

     மதனனுடை யாகமத்தி ...... னடைவாக


மருவியுள மேயுருக்கி நிதியமுள தேபறிக்கும்

     வனிதையர்க ளாசைபற்றி ...... யுழல்வேனோ


இடையர்மனை தோறுநித்த முறிதயிர்நெய் பால்குடிக்க

     இருகையுற வேபிடித்து ...... உரலோடே


இறுகிடஅ சோதைகட்ட அழுதிடுகொ பாலக்ருஷ்ண

     னியல்மருக னேகுறத்தி ...... மணவாளா


அடலெழுது மேடுமெத்த வருபுனலி லேறவிட்டு

     அரியதமிழ் வாதுவெற்றி ...... கொளும்வேலா


அவுணர்குலம் வேரறுத்து அபயமென வோலமிட்ட

     அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே.


                              பதம் பிரித்தல்


நடை உடையிலே அருக்கி, நெடிய தெரு வீதியிற்குள்

     நயனம் அதனால் மருட்டி, ...... வருவாரை


நணுகி, மயலே விளைத்து, முலையை விலை கூறி விற்று,

     லளிதம் உடனே பசப்பி, ...... உறவாடி,


வடிவு அதிக வீடுபுக்கு, மலர் அணையின் மீது இருத்தி,

     மதனன் உடை ஆகமத்தின் ...... அடைவாக


மருவி, உளமே உருக்கி, நிதியம் உளதே பறிக்கும்,

     வனிதையர்கள் ஆசை பற்றி ...... உழல்வேனோ?


இடையர் மனை தோறும் நித்தம் உறி தயிர் நெய் பால் குடிக்க

     இருகை உறவே பிடித்து, ...... உரலோடே


இறுகிட அசோதை கட்ட, அழுதிடு கொபாலக்ருஷ்ணன்

     இயல் மருகனே! குறத்தி ...... மணவாளா!


அடல் எழுதும் ஏடு மெத்த வருபுனலில் ஏறவிட்டு

     அரியதமிழ் வாது வெற்றி ...... கொளும்வேலா!


அவுணர்குலம் வேர் அறுத்து, அபயம் என ஓலம் இட்ட

     அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே.


பதவுரை


இடையர் மனை தோறு நித்தம் --- இடையர்களின் வீடுகளில் நாள்தோறும் சென்று,

உறி தயிர் நெய் பால் குடிக்க ---உறியிலே உள்ள தயிர் நெய் பால் இவைற்றைக் குடிக்கவும்,

இரு கை உறவே பிடித்து --- இரண்டு கைகளையும் பிடித்து,

உரலோடே இறுகிட அசோதை கட்ட அழுதிடு --- யசோதையானவள் உரலோடு இறுகக் கட்டவும் அழுதிட்ட, 

கொ)பால க்ருஷ்ணன் இயல் மருகனே --- கோபாலகிருட்டிணரின் அன்புக்கு உரிய திருமருகரே!

குறத்தி மணவாளா --- குறமகளாகிய வள்ளிநாயகியின் மணவாளரே!

அடல் எழுதும் ஏடு மெத்த வருபுனலில் ஏற விட்டு --- வல்லமை பொருந்திய மந்திர மொழியால் எழுதப்பட்ட ஏடானது, மிகுந்து ஓடுகின்ற வைகையாற்று வெள்ளத்தில் எதிர் செல்லுமாறு விடுத்து,

அரிய தமிழ் வாது வெற்றி கொளும் வேலா --- அருமை வாழ்ந்த தமிழ்ப் பாசுரத்தால் (சமணரை) வாதத்தில் (திருஞானசம்பந்தராக வந்து) வெற்றி கொண்ட வேலாயுதரே!

அவுணர் குலம் வேர் அறுத்து --- அரக்கர் குலத்தை வேரோடு அறுத்து அழித்து,

அபயம் என ஓலம் இட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே. --- அடைக்கலம் என்று ஓலம் இட்ட தேவர்களைச் சிறையினின்றும் மீட்டுவித்த பெருமையில் மிக்கவரே!

நடை உடையிலே அருக்கி --- நடையாலும், அணிந்துள்ள உடையாலும் தமது அழகின் அருமையை வெளிப்படுத்தி,

நெடிய தெரு வீதியிற்குள் வருவாரை நயனம் அதனால் மருட்டி ---  நீண்ட தெருவில் வருகின்ற ஆடவர்களைத் தமது கண்களால் மயக்கி,

நணுகி --- அவர்களை அணுகி,

மயலே விளைத்து --- காம மயக்கத்தை உண்டாக்கி,

முலையை விலை கூறி விற்று ---- தமது முலைகளுக்கு உரிய விலையினைப் பேசி,

லளிதம் உடனே பசப்பி உறவாடி ---  இச்சையோடு இன்முகம் காட்டி ஏய்த்து அவர்களோடு உறவாடி,

வடிவு அதிக வீடு புக்கு --- அழகு மிக்க வீட்டினில் கொண்டு வந்து,

மலர் அணையின் மீது இருத்தி ---  மலர்ப் படுக்கையில் இருக்கச் செய்து,

மதனன் உடை ஆகமத்தின் அடைவாக மருவி --- மன்மதனுடைய காம சாத்திரத்தின்படிக்குக் கலந்து,

உ(ள்)ளமே உருக்கி --- காமுகர்களின் உள்ளத்தை உருகச் செய்து,

நிதியம் உளதே பறிக்கும் வனிதையர்கள் ஆசை பற்றி உழல்வேனோ --- உள்ள பொருளைப் பறிக்கும் விலைமாதர்களின் மீது ஆசை வைத்து அடியேன் திரியலாமோ?

பொழிப்புரை

இடையர்களின் வீடுகளில் நாள்தோறும் சென்று, உறியிலே உள்ள தயிர் நெய் பால் இவைற்றைக் குடிக்கவும், இரண்டு கைகளையும் பிடித்து, யசோதையானவள் உரலோடு இறுகக் கட்டவும் அழுதிட்ட கோபாலகிருட்டிணரின் அன்புக்கு உரிய திருமருகரே!

குறமகளாகிய வள்ளிநாயகியின் மணவாளரே!

வல்லமை பொருந்திய மந்திர மொழியால் எழுதப்பட்ட ஏடானது, மிகுந்து ஓடுகின்ற வைகையாற்று வெள்ளத்தில் எதிர் செல்லுமாறு விடுத்து, அருமை வாழ்ந்த தமிழ்ப் பாசுரத்தால் (சமணரை) வாதத்தில் (திருஞானசம்பந்தராக வந்து) வெற்றி கொண்ட வேலாயுதரே!

அரக்கர் குலத்தை வேரோடு அறுத்து அழித்து, அடைக்கலம் என்று ஓலம் இட்ட தேவர்களைச் சிறையினின்றும் மீட்டுவித்த பெருமையில் மிக்கவரே!

நடக்கின்ற நடையாலும், அணிந்துள்ள உடையாலும் தமது அழகின் அருமையை வெளிப்படுத்தி, நீண்ட தெருவில் வருகின்ற ஆடவர்களைத் தமது கண்களால் மயக்கி, அவர்களை அணுகி, காம மயக்கத்தை உண்டாக்கி, தமது முலைகளுக்கு உரிய விலையினைப் பேசி, இச்சையோடு இன்முகம் காட்டி ஏய்த்து, உறவாடி, அழகு மிக்க வீட்டினில் கொண்டு வந்து, மலர்ப் படுக்கையில் இருக்கச் செய்து, மன்மதனுடைய காம சாத்திரத்தின்படிக்குக் கலந்து, காமுகர்களின் உள்ளத்தை உருகச் செய்து, உள்ள பொருளைப் பறிக்கும் விலைமாதர்களின் மீது ஆசை வைத்து அடியேன் திரியலாமோ?

விரிவுரை

இப் பாடலின் முற்பகுதியில் அடிகளார் விலைமாதர்களின் சாகசத்தை எடுத்துக் கூறி, அவர்கள் வலையில் விழுந்து அலைந்து திரிதல் கூடாது என்று அறிவுறுத்தினார்.

இடையர் மனை தோறு நித்தம்..... உரலோடே இறுகிட அசோதை கட்ட அழுதிடு கொ)பால க்ருஷ்ணன் இயல் மருகனே --- 

திருமால் துவாபர யுக முடிவில் தேவகி வயிற்றில் திருவவதாரம் புரிந்து ஆயர்பாடியில் யசோதை மகனாக வளர்ந்தார். முற்பிறப்பில் தாருக வனத்து முனிவர்களாகவும், தண்டக வனத்தில் முனிவர்களாகவும், இருந்து தவஞ் செய்தவர்கள் கோபிகைகள். ஆதலால், அவர்கள் உள்ளங்கவர் கள்வனாக கண்ணபிரான் சென்று, அவர்கள் உள்ளத்தையும் தயிரையும் ஒருங்கே களவு செய்தருளினார்.

        கண்ணபிரானுக்கு யசோதை, பாலும் தயிரும் வெண்ணெயும் ஊட்டினாள். அவர் அதனை உண்டு அமையாது, ஒளிந்து போய் பானையில் உள்ள பால் தயிர் வெண்ணெயை வாரி வாரி உண்டும், அடுத்த மனைகளில் உள்ளதனைக் களவு செய்து உண்டும், உறியில் உள்ளதனை உரல்மீது ஏறிப் பானைகளை உடைத்து உண்டும் உவந்தார். அதுகண்ட யசோதை சீற்றமுற்று, தாம்புக்கயிறு ஒன்றெடுத்து உரலிலே கட்டும் பொருட்டு, ஓடித் தேடிப் பிடித்து வாசுதேவர் இடையில் சுற்றினாள். இரண்டு விரற்கிடை குறைந்தது. பெரிய அக் கயிற்றுக்கு அடங்காத மகனுடைய இடையைக் கண்டு அவள் தியங்கினாள்.  வேறு பல கயிறுகளை எடுத்து, ஒன்றுடன் ஒன்றை முடிந்து சுற்றினாள். எத்துணைக் கயிறுகளை முடிந்தும் இரண்டு விரற்கிடை குறைவாகவே இருந்தது. 'அந்தோ! இது என்ன அதிசயம்! இத்தனைக் கயிறுகளாலும் இவனைக் கட்ட முடியவில்லையே' என்று வருந்தினாள். தாயாருடைய வருத்தத்தை அகற்றி மகிழ்விக்கவும் மருதமரங்களாக நின்ற கந்தருவர்களின் சாபத்தை மாற்றவும் திருவுள்ளங் கொண்டு, இடையைச் சுருக்கினார். பந்தபாசக் கட்டை அவிழ்க்கின்ற அவரை யசோதை உரலுடன் கட்டிவிட்டுச் சென்றாள். அவர் உரலுடன் சிறிது நேரம் அழுது, மெல்லத் தவழ்ந்து, வாயிலில் நின்ற மருதமரங்களுக்கு இடையே சென்றார்.

உள்ளமாகிய பாலில் தீய நினைவுகளாகிய நீர் வற்ற ஞானமாகிய நெருப்பை மூட்டிக் காய்ச்சி, பக்குவமாகிய இளஞ்சூட்டில் ஐந்தெழுத்தாகிய உறை விட்டு, உறுதியாக உறியில் வைத்து, அசையாமல் நிருவிகற்ப சமாதியில் நிலைத்து நின்று, அன்பு என்ற மமதையிட்டு அறிவு என்ற கயிற்றைக் கொண்டு கடைந்தால், இறையருளாகிய வெண்ணெய் வெளிப்படும்.

கண்ணபிரான் செய்த திருவிளையாடலை, பெரியாழ்வார் எடுத்து இனிது கூறுகின்றார்

"ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு,

பேர்த்து அவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு,

வேய்த் தடந்தோளினார் வெண்ணெய் கோள் மாட்டாது, அங்கு

ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும்,

அடியுண்டு அழுதானால் இன்று முற்றும்." --- பெரியாழ்வார்.


அடல் எழுதும் ஏடு மெத்த வருபுனலில் ஏற விட்டு, அரிய தமிழ் வாது வெற்றி கொளும் வேலா --- 

        மதுரையம்பதியில் திருஞானசம்பந்தப் பெருமான் செய்த அற்புத நிகழ்வை அடிகளார் பாடுகின்றார். "பெம்மான் முருகன் பிறவானு இறவான்" என்பது கந்தர் அனுபூதி. பிறவா யாக்கைப் பெரியோன் ஆகிய முருகப் பெருமான் திருஞானசம்பந்தராக வந்து, ஒரு தாய் வயிற்றில் கருவாக இருந்து அவதாரம் புரிந்தார் என்று கொள்ளுவது கூடாது. முருக சாரூபம் பெற்ற அபர சுப்ரமண்ய மூர்த்திகளுள் ஒருவர் சீகாழியிலே கவுணியர் குடியில் திருஞானசம்பந்தராக அவதரித்தருளினார் என்ற கொள்ளுவதே பொருத்தமாக அமையும்.

மதுரையம்பதிக்குத் திருஞானசம்பந்தர் வருகையும், அடியார்கள் முழக்கமும் சமணர்களுக்குப் பொறாமையை ஊட்டியது. அவர்களுக்குப் பல துர் நிமித்தங்களும், தீய கனவுகளும் தோன்றின. எல்லோரும் ஓரிடத்தல் கூடி பாண்டிய மன்னனைக் காணச் சென்றார்கள். மன்னனிடம், "உமது மதுராபுரியில் இன்று சைவ வேதியர்கள் மேவினார்கள். நாங்கள் கண்டு முட்டு" என்றார்கள். மதி இல்லாத மன்னவனும், "கேட்டு முட்டு" என்றான். "இதற்கு என்ன செய்வது என்று அவர்களையே கேட்டான். மதிகெட்ட மன்னனின் கீழ் வாழும் மதிகெட்ட சமணர்களும், "மந்திரத்தால் தீயிட்டால், அவன் தானே ஓடிவிடுவான்" என்றார்கள். மன்னனும் உடன்பட்டான்.

சமணர்கள், பிள்ளையார் எழுந்தருளி இருந்த மடத்தில் தீயை மூட்ட மந்திரத்தை செபித்தார்கள். பலிக்கவில்லை. திரும்பிப் போனால் மன்னன் மதிக்கமாட்டான் என்று எண்ணி, கையிலே தீக்கோலைக் கொண்டு மடத்திற்குத் தீயை மூட்டினார்கள். மன்னன் அரசாட்சி வழுவியதால் வந்த தீது இது என்று உணர்ந்த திருஞானசம்பந்தப் பெருமானார், தம்மை மதுரையம்பதிக்கு வரவழைத்த மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணைப் பாதுகாக்கவும், குலச்சிறை நாயனாரின் அன்பை நினைந்தும், மன்னவன் தனது தவறை உணர்ந்து மீண்டும் சிவநெறியை அடையவேண்டும் என்பதை உணர்ந்தும், "அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே" என்று திருப்பதிகம் பாடி வேண்டினார். 

சமணர்கள் மடத்தில் இட்ட தீயானது, மெதுவாகச் சென்று, பாண்டியன் உடம்பில் வெப்பு நோயாகப் பற்றியது. இதைக் கேட்ட சமணர்கள் மன்னனை அடைந்து, தமது கையில் உள்ள மயிற்பீலியால் மன்னனின் உடலைத் தடவி, குண்டிகை நீரை மந்திரித்துத் தெளித்தார்கள். அந்த நீர் நெருப்பில் சொரிந்த நெய்யைப் போல, வெப்பு நோய் பின்னும் மிகுவதற்கே ஏதுவானது. 

பாண்டி மாதேவியாரும், குலச்சிறையாரும் மன்னனை வணங்கி, "சமணர்கள் இட்ட தீயே வெப்பு நோயாகி உம்மை வருத்துகின்றது. உடல் மாசும், உள்ளத்தில் மாசும் உடைய இவர்களால் இதைத் தீர்க்க முடியாது. இறைவன் திருவருளைப் பெற்ற திருஞானசம்பந்தப் பெருமான் வந்து பார்த்து அருளினாலே இந்த நோய் மட்டும் அல்லாது பிறவி நோயும் அகன்று விடும்" என்றார்கள்.

திருஞானசம்பந்தர் என்னும் நாம மந்திரம் செவியில் நுழைந்த உடனே, சிறிது அயர்வு நீங்கப் பெற்ற மன்னன், "சமணர்களின் தீச் செயலே இந்த நோய்க்கு மூலம் போலும்" என்று எண்ணி, "திருஞானசம்பந்தரை அழைத்து வாருங்கள். எனது நோயைத் தீர்ப்பவர் பக்கம் நான் சேர்வேன்" என்றான்.

மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் வேண்ட, திருஞானசம்பந்தர் மன்னனின் திருமாளிகைக்கு எழுந்தருளினார். மன்னன் தனது முடியின் பக்கத்தில் பொன்னால் ஆன ஆசனத்தை இடுமாறு பணிக்க, அந்த ஆசனத்தில் எழுந்தருளினார் சுவாமிகள். சமணர்கள் வெகுண்டனர். "நீங்கள் இருவரும் உங்கள் தெய்வ வலிமையால் எனது நோயைத் தீருங்கள். தீர்த்தவர் வென்றவர் ஆவர்" என்றான். சமணர்கள் "எங்கள் தெய்வ வல்லமையால் இடப்பக்கத்து நோயைத் தீர்ப்போம்" என்று அருக நாமத்தை முழக்கி, மயில் பீலியால் உடம்பைத் தடவினார்கள். பீலி வெந்தது. மன்னனைப் பற்றிய வெப்பு நோய் மேலும் முறுகியது. ஆற்ற முடியாதவனாய் மன்னன் திருஞானசம்பந்தரைப் பார்த்தான். 

ஆலவாய்ச் சொக்கனை நினைந்து, "மந்திரமாவது நீறு" என்னும் திருப்பதிகத்தைப் பாடி, திருஞானசம்பந்தப் பெருமான் பாண்டியனின் வலப்பக்கத்தில் தடவினார். வலப்பக்கம் நோய் நீங்கிக் குளிர்ந்தது. தனது உடம்பிலேயே, ஒரு பக்கம் நரகத் துன்பத்தையும், ஒரு பக்கம் வீட்டின்பத்தையும் அனுபவித்தான் மன்னன். "அடிகளே! எனது இடப்பக்க நோயையும் தீர்த்து அருள் செய்யும்" என வேண்டினான். பெருமான் அப் பக்கத்தையும் தமது திருக்கைகளால் திருநீறு கொண்டு தடவ, வெப்பு நோய் முழுதும் நீங்கியது. 

மங்கையர்க்கரசியாரும் குலச்சிறை நாயனாரும், பிள்ளையார் திருவடிகளில் விழுந்து வணங்கி, "நாங்கள் பெருமை உற்றோம். பெறுதற்கு அரிய பேற்றைப் பெற்றோம். மன்னனும் பிறவா மேன்மை உற்றார்" என்றனர். "ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்" என்று மன்னனும் பெருமானாருடைய திருப்பாதங்களில் பணிந்தான்.

"மீனவன் தன்மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற,

ஆன பேரின்பம் எய்தி, உச்சிமேல் அங்கை கூப்பி,

மானம் ஒன்று இல்லார் முன்பு வன்பிணி நீக்க வந்த

ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்" என்றான்.   ---  பெரியபுராணம்.

பின்னர், அனல் வாதம் தொடங்கியது. பாண்டியன் முன்னிலையில் எரி வளர்க்கப்பட்டது. திருஞானசம்பந்தர் தான் பாடிய திருமுறைகளை எடுத்தார். கயிற்றை அவிழ்த்தார். ஏடுகளில் கயிறு சாத்தினார். "போகம் ஆர்த்த பூண்முலையாள்" என்னும் திருநள்ளாற்றுத் திருப்பதிகம் கிடைத்தது. அத் திருப்பதிக ஏட்டினைப் பெருமான் தமது திருக்கரத்திலே தாங்கி, அதற்கு ஆக்கம் தேடத் "தளரிள வளரொளி" என்னும் திருப்பதிகத்தைப் பாடி நெருப்பில் இட்டார். அந்த ஏடு நெருப்பில் வேகாது, பழுது நீங்கி, முன்னினும் பச்சையாய் விளங்கியது. அந்த ஏட்டினைத் தமது திருக்கைகளால் நெருப்பில் இருந்து எடுத்து, அவைக்குக் காட்டி, பழையபடி அதைத் திருமுறையிலே சேர்த்தார். மன்னனும் மற்றையோரும் வியந்தனர்.

சமணர்கள் தங்கள் ஏட்டை இட்டனர். அது தீய்ந்து கருகியது. மன்னன் தண்ணீரைக் கொண்டு தீயை அவிக்கச் செய்தான். சமணர்கள் தமது ஏட்டைத் தடவிப் பார்த்து, கரியையும் சாம்பலையுமே கண்டார்கள். மன்னன் அவர்களைப் பார்த்துச் சிரித்து, "இன்னும் நன்றாக அரித்துப் பாருங்கள். பொய்யை மெய்யாக்கப் புகுந்தவர்களே! போங்கள். போங்கள். முன்னும் தோற்றீர்கள். இப்பொழுதும் தோற்றீர்கள்" என்றான். "இன்னும் ஒருமுறை முயல்வோம்" என்றனர் சமணர்கள். "வாதில் தோற்றவர்களை என்ன செய்வது என்பதை முடிவு செய்து, மேல் வாதம் புரியவேண்டும்" என்றார் குலச்சிறை நாயனார். சமணர்கள், கோபத்தால் வாய் சோர்ந்து, "நாங்கள் வாதில் தோற்றோமாயின், மன்னவன் எங்களைக் கழுவில் ஏற்றுவானாக" என்றனர். மன்னன் சமணர்களைப் பார்த்து, "கோபமும் பொறாமையும் உங்களை இவ்வாறு கூறச் செய்தன" என்றான்.

எல்லோரும் வைகை ஆற்றங்கரையை அடைந்தார்கள். சமணர்கள் அத்தி நாத்தி என்று எழுதிய ஏட்டை ஆற்று வெள்ளத்தில் விட்டார்கள். அந்த ஏடு கடலை நோக்கி ஓடியது. திருஞானசம்பந்தர், வாழ்க அந்தணர் எனத் தொடங்கும் திருப்பாசுரத்தை ஏட்டிலே வரைந்து, அதை வைகையிலே இட்டார். அந்த ஏடு நீரைக் கிழித்துக் கொண்டு மேல் ஏறிச் சென்றது. திருப்பாசுரத்தில் வேந்தனும் ஓங்குக என்று அருளப்பட்டதால், மன்னன் கூன் நிமிரப் பெற்றான். ஏட்டை நிறுத்தப் பிள்ளையார், "வன்னியும் மத்தமும்" என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். திரு ஏடகம் என்னும் இடத்திலே ஏடு நீரில் நின்றது. குலச்சிறை நாயனார் காற்றினும் கடிது சென்று, ஏட்டினை நீரிலே நின்ற ஏட்டினை எடுத்து வந்து எல்லோருக்கும் காட்டினார்.  

சமணர்கள் எண்ணாயிரவரும் கழுவில் ஏறினார்கள். திருஞானசம்பந்தர் பாண்டியனுக்குத் திருநீறு கொடுத்தார். அதை அன்போடு வாங்கித் தரித்துக் கொண்டான் பாண்டியன். மன்னன் நீறு அணிந்தான் என்று, மற்று அவன் மதுரை வாழ்வார் துன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்துகொண்டார். இந்த நிகழ்வினை அடிகளார், "சிவமாய்த் தேன் அமுது ஊறும் திருவாக்கால், ஒளி சேர்வெண் திருநீற்றால் அமராடும் சிறியோனே" என்று பாடிப் பரவினார். ஆயுதங்கள் ஏதும் இல்லாமல், திருஞானசம்பந்தப் பெருமான் தமது திருவாக்கில் பிறந்த தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டும், திருநீற்றைக் கொண்டுமே சமணர்களோடு வாது புரிந்து வென்றார். 


கருத்துரை


முருகா! விலைமாதர் வசமாகி அழியாது இருக்க அருள்


No comments:

Post a Comment

பொது --- 1105. நடையுடையிலே அருக்கி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் நடை உடையிலே (பொது) முருகா!  விலைமாதர் வசமாகி அழியாது இருக்க அருள் தனதனன தானதத்த தனதனன தானதத்த      தனதனன...