"வாரியா ழத்தையும், புனலெறியும் அலைகளையும்,
மானிடர்கள் சனனத்தையும்,
மன்னவர்கள் நினைவையும், புருடர்யோ கங்களையும்,
வானின்உயர் நீளத்தையும்,
பாரில்எழு மணலையும், பலபிரா ணிகளையும்,
படியாண்ட மன்ன வரையும்
பருப்பதத் தின்நிறையும், ஈசுரச் செயலையும்,
பனிமாரி பொழி துளியையும்,
சீரிய தமிழ்ப்புலவர் வாக்கிலெழு கவியையும்,
சித்தர்தம துள்ளத்தையும்,
தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வள வெனும்படி
தெரிந்தள விடக்கூடுமோ?
வாரிச மடந்தைகுடி கொண்டநெடு மாலுக்கு
மருகனென வந்தமுருகா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!"
இதன் பொருள் ---
வாரிச மடந்தை குடிகொண்ட நெடுமாலுக்கு மருகன் என வந்த முருகா - தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் வாழும் மார்பனான திருமாலுக்கு மருகன் என்ற முறையிலே வந்த முருகப் பெருமானே! (வாரிசம் - தாமரை)
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
வாரி ஆழத்தையும் புனல் எறியும் அலைகளையும் - கடலின் ஆழத்தையும் அது வீசும் அலைகளையும்,
மானிடர்கள் சனனத்தையும் - மக்களின் பிறப்பையும், ("எழுகடல் மணலை அளவிடின் அதிகம், எனது இடர்ப் பிறவி அவதாரம்" என்பது அருணகிரிநாதர் திருப்புகழ். கடற்கரை மணலை அளவிட முடியாது. ஒருக்கால் அளிவிட்டுக் கூளக் கூடுமானால், அந்த எண்ணிக்கையை விடவும் அதிகம்ர மானிடப் பிறவியின் எண்ணிக்கை)
மன்னவர்கள் நினைவையும் - அரசர்கள் எண்ணத்தையும்,
புருஷர் யோகங்களையும் - ஆடவர்களுக்கு வரும் சிறப்பையும்,
வானின் உயர் நீளத்தையும் - வானத்தின் உயரத்தையும் நீளத்தையும்,
பாரில் எழு மணலையும் - உலகில் தோன்றும் மணலையும்,
பல பிராணிகளையும் - பலவகையான உயிர்களையும்,
உயிர்களின் தோற்றத்தை அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்ற நால்வகையாகப் பகுத்து உள்ளனர் பெரியோர்.
அண்டசம் - முட்டையில் தோன்றுவன. (அண்டம் - முட்டை, சம் - பிறந்தது) அவை பறவை, பல்லி, பாம்பு, மீன், தவளை முதலியன.
சுவேதசம் - வேர்வையில் தோன்றுவன. (சுவேதம் - வியர்வை) அவை பேன், கிருமி, புழு, விட்டில் முதலியன. உற்பிச்சம் - வித்து. வேர், கிழங்கு முதலியவற்றை மேல் பிளந்து தோன்றுவன (உத்பித் - மேல்பிளந்து) அவை மரம், செடி, கொடி, புல், பூண்டு முதலியன.
சராயுசம், கருப்பையிலே தோன்றுவன (சராயு - கருப்பாசயப்பை) இவை தேவர், மனிதர், நாற்கால் விலங்குகள் முதலியன.
இவற்றுள் பிறப்பு நிலை ஏழுவகையாகச் சொல்லப்பட்டு உள்ளது. - தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற எழுவகைப் பிறப்பு. இவற்றுள் முதல் ஆறும் இயங்கியல்பொருள். (இயங்குதிணை, சங்கமம், சரம்) எனவும், இறுதியில் நின்ற ஒன்று நிலையியல் பொருள் (நிலைத்திணைப் பொருள், தாவரம், அசரம்) எனவும் பெயர் பெறும்.
இவற்றிற்கு 84 இலட்சம் யோனி போதங்கள். "உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம் நிரைசேரப் படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கங்கே நின்றான்" என்பது திருஞானசம்பந்தப் பெருமானார் திருவீழிமிழலைத் தேவாரத்தின் மூலம் நமக்கு அறிவுறுத்துவது.
யோனி - கருவேறுபாடுகள்.
தேவர் - 14 இலட்சம்,
மக்கள் - 9 இலட்சம்,
விலங்கு - 10 இலட்சம்,
பறவை - 10 இலட்சம்,
ஊர்வன - 11 இலட்சம்,
நீர்வாழ்வன – 10 இலட்சம்,
தாவரம் - 20 இலட்சம்,
ஆக, 84 இலட்சம் பேதம் ஆகும், இதனை,
ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம்
நீர்பறவை நாற்கால் ஒர் பப்பத்தாம் - சீரிய
பந்தமாம் தேவர் பதினால் அயன்படைத்த
அந்தமில் தாவரம் நால்ஐந்து.
என்னும் பழம் பாடலால் அறியலாம்.
படி ஆண்ட மன்னவரையும் - உலகினை ஆண்ட அரசர்களையும்,
பருப்பதத்தின் நிறையும் - மலையின் நிறையையும்,
ஈசுரச் செயலையும் - இறைவன் அருள் விளங்கும் நிலையையும்,,
பனிமாரி பொழி துளியையும் - பனித் துளிகளையும், மழைத் துளிகளையும்,
சீரிய தமிழ்ப் புலவர் வாக்கில் எழு கவியையும் - சிறந்த தமிழ்ப் புலவருடைய நாவிலிருநது விளையும் பாடல்களின் சிறப்பையும்;
சித்தர் தமது உள்ளத்தையும் - சித்தருடைய நினைவின் உறுதியையும்,
தெரிவையர்கள் சிந்தையையும் - பெண்களின் உள்ளத்தையும்,
இவ்வளவு எனும்படி தெரிந்து அளவிடக் கூடுமோ - இவ்வளவு என்று கூறும் முறையிலே ஆராய்ந்து அறுதியிட்டுக் கூற முடியுமோ? (முடியாது).
இங்குக் கூறப்பட்டவை அளவிட்டுரைக்க முடியாதவை.
No comments:
Post a Comment