அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
விடமளவி அரிபரவு (பொது)
முருகா!
எந்த நிலையிலும் தேவரீரது திருவடிகளை அடியேன் மறவேன்.
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ...... தனதான
விடமளவி யரிபரவு விழிகுவிய மொழிபதற
விதறிவளை கலகலென ...... அநுராகம்
விளையம்ருக மதமகுள முலைபுளக மெழநுதலில்
வியர்வுவர அணிசிதற ...... மதுமாலை
அடரளக மவிழஅணி துகிலகல அமுதுபொதி
யிதழ்பருகி யுருகியரி ...... வையரோடே
அமளிமிசை யமளிபட விரகசல தியில்முழுகி
யவசமுறு கினுமடிகள் ...... மறவேனே
உடலுமுய லகன்முதுகு நெறுநெறென எழுதிமிர
வுரகர்பில முடியவொரு ...... பதமோடி
உருவமுது ககனமுக டிடியமதி முடிபெயர
வுயரவகி லபுவனம ...... திரவீசிக்
கடககர தலமிலக நடனமிடு மிறைவர்மகிழ்
கருதரிய விதமொடழ ...... குடனாடுங்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
விடம் அளவி அரி பரவு விழி குவிய, மொழி பதற,
விதறி வளை கலகல என, ...... அநுராகம்
விளைய, ம்ருகமத மகுள முலை புளகம் எழ,நுதலில்
வியர்வு வர, அணிசிதற, ...... மதுமாலை
அடர் அளகம் அவிழ, அணி துகில் அகல, அமுதுபொதி
இதழ்பருகி, உருகி, அரி ...... வையரோடே,
அமளிமிசை அமளிபட, விரக சலதியில் முழுகி
அவசம் உறுகினும் அடிகள் ...... மறவேனே.
உடலும் முயலகன் முதுகு நெறுநெறு என, எழு திமிர
உரகர் பிலம் முடிய, ஒரு ...... பதம் ஓடி,
உருவ, முது ககன முகடு இடிய, மதி முடிபெயர,
உயர, அகிலபுவனம் ...... அதிரவீசி,
கடக கர தலம் இலக நடனம் இடும் இறைவர்மகிழ்
கருதஅரிய விதமொடு அழகு ...... உடன் ஆடும்,
கலப கக மயில் கடவி, நிருதர் கஜ ரத துரக
கடகமுடன் அமர்பொருத ...... பெருமாளே.
பதவுரை
உடலு(ம்) முயலகன் முதுகு நெறுநெறு என --- சினத்து வந்த முயலகனின் முதுகு நெறுநெறு என முறிய,
எழு திமிர(ம்) உரகர் பில(ம்) முடிய ஒரு பதம் ஓடி உருவ --- இருள் பரந்த நகர் உலகம் அளவும் ஒப்பற்ற அடி ஓடி உருவும்படியாகவும்,
முது ககன முகடு இடிய --- பழமையான வானத்தின் உச்சி இடியும்படியாகவும்,
மதி முடி பெயர உயர --- சந்திரனின் முடி பெயரும்படியாகவும் எழுந்து,
அகில புவனம் அதிர --- அகில உலகங்களும் அதிரும்படியாகவும்,
கடக கர தலம் இலக வீசி --- கங்கணம் அணிந்த திருக்கரங்களை விளங்க வீசி,
நடனம் இடும் இறைவர் மகிழ் --- ஆனந்தத் திருநடனம் புரிகின்ற அம்பலவாணப் பெருமான் திருவுள்ளம் மகிழும்படியாக,
கருத அரிய விதமோடு அழகுடன் ஆடும் கலப கக மயில் கடவி -- எண்ணுதற்கரிய வகையில் அழகாக ஆடுகின்ற தோகைப் பட்சியாகிய மயிலை நடத்தி,
நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே ---அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படையுடன் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே!
விடம் அளவி -- விடம் தோய்ந்ததாய்,
அரி பரவு விழி குவிய --- வரிகள் படர்ந்துள்ள கண்கள் குவியும்படியாகவும்,
மொழி பதற விதறி --- வார்த்தைகள் பதறி நடுக்கம் கொள்ளவும்,
வளை கல கல என --- கைவளைகள் கலகல என்று ஒலிக்கவும்,
அநுராகம் விளைய --- காமப் பற்று உண்டாக,
ம்ருகமத முகுள முலை புளகம் எழ --- கத்தூரி மணம் கமழுகின்ற அரும்பு போன்ற முலைகளில் புளகாங்கிதம் உண்டாக,
நுதலில் வியர்வு வர --- நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்ப,
அணி சிதற --- அணிகலன்கள் சிதற,
மது மாலை அடர் அளகம் அவிழ --- தேன் நிறைந்த மலர்கள் நெருங்கி உள்ள கூந்தல் அவிழ,
அணி துகில் அகல --- அணிந்துள்ள ஆடை அகலவும்,
அமுது பொதி இதழ் பருகி உருகி --- அமுதம் பொதிந்து உள்ள வாயூறலைப் பருகிற, அதனால் உள்ளம் உருகி,
அரிவையரோடே அமளி மிசை அமளி பட --- விலைமாதருடன் படுக்கையில் ஆரவாரம் மிகவும்,
விரக சலதியில் முழுகி --- காமக் கடலில் முழுகி,
அவசம் உறுகினும் --- என்வசம் இழந்து இருந்தாலும்,
அடிகள் மறவேனே --- தேவரீரது திருவடிகளை அடியேன் மறவேன்.
பொழிப்புரை
சினத்து வந்த முயலகனின் முதுகு நெறுநெறு என முறிய, இருள் பரந்த நகர் உலகம் அளவும் ஒப்பற்ற அடி ஓடி உருவும்படியாகவும், பழமையான வானத்தின் உச்சி இடியும்படியாகவும், சந்திரனின் முடி பெயரும்படியாகவும் எழுந்து, அகில உலகங்களும் அதிரும்படியாகவும், கங்கணம் அணிந்த திருக்கரங்களை விளங்க வீசி, ஆனந்தத் திருநடனம் புரிகின்ற அம்பலவாணப் பெருமான் திருவுள்ளம் மகிழும்படியாக, எண்ணுதற்கரிய வகையில் அழகாக ஆடுகின்ற தோகைப் பட்சியாகிய மயிலை நடத்தி, அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படையுடன் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே!
விடம் தோய்ந்ததாய், வரிகள் படர்ந்துள்ள கண்கள் குவியும்படியாகவும், வார்த்தைகள் பதறி நடுக்கம் கொள்ளவும், கைவளைகள் கலகல என்று ஒலிக்கவும், காமப் பற்று உண்டாக, கத்தூரி மணம் கமழுகின்ற அரும்பு போன்ற முலைகளில் புளகாங்கிதம் உண்டாக, நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்ப, அணிகலன்கள் சிதற, தேன் நிறைந்த மலர்கள் நெருங்கி உள்ள கூந்தல் அவிழ, அணிந்துள்ள ஆடை அகலவும், அமுதம் பொதிந்து உள்ள வாயூறலைப் பருகிற, அதனால் உள்ளம் உருகி, விலைமாதருடன் படுக்கையில் ஆரவாரம் மிகவும், காமக் கடலில் முழுகி, என்வசம் இழந்து இருந்தாலும், தேவரீரது திருவடிகளை அடியேன் மறவேன்.
விரிவுரை
இப் பாடலின் முற்பகுதியில், காம உணர்வு மீதூற, சிற்றின்பத்தில் திளைத்து இருக்கும் காலத்தும் முருகப் பெருமானுடைய திருவடிகளை மறவேன் என்கிறார். இக் கருத்தையே கந்தர் அலங்காரப் பாடல் ஒன்றிலும் அடிகளார் காட்டி உள்ளார்.
"கண்டு உண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக் கள்ளை
மொண்டு உண்டு அயர்கினும் வேல்மறவேன், முதுகூளித் திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டு டுண்டு
டிண்டிண்டு எனக் கொட்டி ஆட வெம்சூர்க் கொன்ற ராவுத்தனே" --- கந்தர் அலங்காரம்.
இதன் பொருள் ---
முதிர்ந்த பேய்க்கூட்டங்கள், டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டு டுண்டு டிண்டிண்டு என்னும் ஒலிக்குறிப்புடன் பறையை அடித்துக் கொண்டு கூத்தாட, கொடிய சூரபதுமனைக் கொன்று அருளிய வீரம் மிக்கவரே! கற்கண்டை ஒத்த சொற்களை உடையவரும், மென்மை உடையவரும் ஆகிய பெண்களது காமப் புணர்ச்சி என்னும் மதுவை நிரம்பவும் மொண்டு மொண்டு குடித்து, அதனால் அறிவு மயங்கி இருந்தாலும், தேவரீருடைய வேற்படையை அடியேன் மறக்கமாட்டேன்.
கள்ளானது அறிவை மயக்கி, தீய செயல்களை அஞ்சாது செய்ய வைத்து நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும். அதுபோலவே, காம உணர்வும் அறிவை மயக்கி, பல கொடுமைகளைச் செய்ய வைத்து, பழியையும் பாவத்தையும் உண்டாக்கி, நரகத்தில் கொண்டு போய்த் தள்ளும். கள்ளை உண்டவரைப் போலவே, காமத்தில் முழுகியவர்களும் பழி பாவங்களுக்கு அச்சம் கொள்ளமாட்டார். கள்ளுக்கும் காமத்திற்கும் உள்ள வேறுபாடு குறித்து, திருவள்ளுவ நாயனார் கூறுமாறு காண்க.
"உள்ளக் களித்தலும், காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல், காமத்திற்கு உண்டு". --- திருக்குறள்.
கள்ளானது குடித்தால்தான் களிப்பைத் தரும். கள்ளைக் கண்ட அளவில் மகிழ்ச்சி உண்டாகாது. ஆனால், காமமானது நினைத்தாலே களிப்பைத் தரும். கண்டாலே மகிழ்வைத் தரும்.
காம உணர்வுக்கு ஆட்பட்ட ஒருவன் கொலை செய்யத் தயங்கமாட்டான். பொய் சொல்ல நாணம் கொள்ளமாட்டான். மானம் போவதைப் பற்றிக் கவலை கொள்ளமாட்டான். திருட்டுத் தொழிலைச் செய்யவும் முனைவான். பழி, பாவம் என்பதை எல்லாம் கருதமாட்டான். அப்படிப்பட்டவன் வேறு என்னதான் செய்யமாட்டான்? என்கிறார் குமரகுருபர அடிகள்.
"கொலை அஞ்சார், பொய்ந் நாணார், மானமும் ஓம்பார்,
களவு ஒன்றோ? ஏனையவும் செய்வார், - பழியோடு
பாவம் இஃது என்னார், பிறிதுமற்று என்செய்யார்
காமம் கதுவப்பட் டார்". --- நீதிநெறி விளக்கம்.
ஆராய்ந்து அறிந்தால், தீமைகள் என்று எவை எவை உள்ளனவோ, அவை அனைத்தையும் தருவதும், உயிருக்கு உள்ள சிறப்பையும் கெடுப்பதும், குற்றமற்ற செல்வத்தையும் கெடுப்பதும், நல்ல உணர்வுகைள அழிப்பதும், உயிர்களைப் பாதுகாவலாக உள்ள நல்ல நெறியில் செல்லவிடாமல் தடுத்து, நரகத் துன்பத்தில் செலுத்தவதும் ஆகிய காமத்தை விட வேறு ஒரு பகை இந்த உலகத்தில் உள்ளதா? இல்லை என்கின்றது கந்தபுராணம்.
"தீமை உள்ளன யாவையும் தந்திடும், சிறப்பும்
தோம்இல் செல்வமும் கெடுக்கும், நல் உணர்வினைத் தொலைக்கும்,
ஏம நன்னெறி தடுத்து இருள் உய்த்திடும், இதனால்
காமம் அன்றியே ஒருபகை உண்டுகொல் கருதில். --- கந்தபுராணம்.
ஓர் ஊரே தீப்பற்றிக் கொண்டது என்றால், அதில் இருந்து தப்பித் கொள்ள அருகில் உள்ள நீர்நிலைக்குச் சென்று அதனுள் அழுந்தித் தன்னை ஒருவன் காத்துக் கொள்ளலாம். ஆனால், நீருக்குள் அமிழ்ந்தாலும், காமத் தீயானது சுடும். மலையின் மேல் ஏறி, அங்குள்ள ஒரு குகையில் போய் ஒளிந்து கொண்டாலும், காமத் தீயானது அடங்காமல் சுடும் என்கின்றது நாலடியார்.
"ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உ(ய்)யல் ஆகும்; - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமே, குன்று ஏறி
ஒளிப்பினும் காமம் சுடும்". --- நாலடியார்.
காமமே கொலைகளுக்கு எல்லாம் காரணமாய் உள்ளது; கண்ணோட்டம் இல்லாத காமமே களவு அனைத்திற்கும் காரணமாகும். கூற்றவனும் அஞ்சுதற்குரிய காமமே கள்ளினை நுகர்வதற்கும் காரணமாகும். ஆதலினாலே, காமம் ஒன்றே அவை அனைத்தாலும் நேரும் நரக பூமியைக் காணியாட்சியாகக் கொடுக்க வல்லது என்கின்றது "திருவிளையாடல் புராணம்"
"காமமே கொலை கட்கு எல்லாம் காரணம்; கண் ஓடாத
காமமே களவுக்கு எல்லாம் காரணம்; கூற்றம் அஞ்சும்
காமமே கள் உண்டற்கும் காரணம்; ஆதலாலே
காமமே நரக பூமி காணியாக் கொடுப்பது என்றான்". --- திருவிளையாடல் புராணம்.
இத்தகு கொடிய காமமானது இறையடியார்களை ஒன்றும் செய்யாது. எனவே, இறையருளை நாடி உய்தி பெறவேண்டும். முருகப் பெருமானுடைய திருக்கரத்தில் உள்ள ஞானசத்தி ஆகிய ஒளிமயமான வேலைத் தியானம் செய்ய வேண்டும். அதை எந்தச் சமயத்திலும் மறவாமல் இருக்கவேண்டும். ஞானத்திற்கு மாறுபாடான காம நுகர்ச்சியில் ஈடுபடும்போதும் அதை மறவாமல் நினைத்தால் நல்ல இன்பத்தைப் பெறலாம். பேரின்பத்தை அடையலாம் என்பதே அருணகிரிநாதர் அருளிச் செய்த உபதேசம் ஆகும்.
விடம் அளவி ---
அளவி - கலத்தல், தோய்தல்.
மொழி பதற விதறி ---
விதறுதல் - நடுங்குதல், பதறுதல்
ம்ருகமத முகுள முலை புளகம் எழ ---
மிருகமதம் - கத்தூரி என்னும் மணப் பொருள்.
முகுளம் - அரும்பு.
விரக சலதியில் முழுகி ---
சலதி - கடல். விரக சலதி - காமக் கடல். "காமக் கடல் மன்னும் உண்டே" என்பது திருக்குறள். காம உணர்வு எப்போதும் அளவின்றி இருக்கும்.
அவசம் உறுகினும் ---
அ+வசம் = அவசம். தன்வசம் இழந்த நிலை.
உடலு(ம்) முயலகன் முதுகு நெறுநெறு என ---
உடலுதல் - சினத்தல், மாறுபடுதல்.
எழு திமிர(ம்) உரகர் பில(ம்) முடிய ஒரு பதம் ஓடி உருவ ---
திமிரம் - இருள். உரகர் பிலம் - நாகர் உலகம்.
உடலு(ம்) முயலகன் முதுகு நெறுநெறு என ..... நடனம் இடும் இறைவர் ---
தாருகவனத்து முனிவர்கள் பூர்வ மீமாம்சக் கொள்கை உடையவர்கள். கர்மாவே பயனைத் தரும். பயனைத் தரத் தனியே கடவுள் வேண்டியதில்லை என்று கூறும் கொள்கைநினை உடையவர்களாய் இருந்தார்கள்.
“விரதமே பரம் ஆக வேதியரும்
சரதம் ஆகவே சாத்திரங் காட்டினர்” --- திருவாசகம்.
தாருகா வனத்தில் வசித்து வந்த முனிவர்களுக்கு, கடவுளை விடவும் தாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் வந்து விட்டது. தவத்தில் தாங்களே சிறந்தவர்கள் என்றும், தங்கள் மனைவியாகிய பத்தினி பெண்களின் கற்பே உயர்ந்ததென்றும் அவர்கள் கர்வம் கொண்டிருந்தனர். அந்த கர்வத்தின் காரணமாக, அவர்கள் கடவுளை நினைக்க மறந்து போனார்கள்; மதிக்க மறந்து போனார்கள்.
முனிவர்களின் கர்வத்தை அகற்ற எண்ணினார் சிவபெருமான். எனவே, அவர் திருமாலை மோகினி அவதாரம் எடுக்கச் செய்து, முனிவர்கள் தவம் செய்யும் தாருகா வனத்திற்கு அனுப்பி வைத்தார். அதேபோல் சிவபெருமானும் பிச்சாடனர் வடிவம் கொண்டு, முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார்.
மோகினி வடிவம் கொண்ட திருமால், தாருகா வனத்து முனிவர்கள் தவம் செய்யும் இடத்திற்கு சென்று முனிவர்களின் தவத்தையும், அவர்களின் உயர்வையும் கெடுத்தார். மோகினியின் அழகில் மயங்கிய முனிவர்கள் தன்னிலை மறந்தனர். இதே வண்ணம் முனிவர்களின் குடில்களுக்குச் சென்ற பிச்சாடனர், அங்குள்ள பெண்களிடம் யாசகம் கேட்டு நின்றார். இசை பாடி பிச்சை எடுக்கச் சென்ற சிவனது அழகைக் கண்டு முனிபத்தினிகள் அவர் மீது மோகம் கொள்ள, தமது நாணம், கைவளை, மேகலை மூன்றையும் இழந்தனர். அவரது அழகில் மயங்கிய முனிவர்களின் மனைவிகள், சிவபெருமானின் பின்னாலேயே செல்லத் தொடங்கினார்கள். தாங்கள் வந்த வேலை முடிந்ததும், சிவபெருமானும், திருமாலும் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில் மயக்கம் தெளிந்த முனிவர்கள், தங்கள் மனைவிமார் அந்தணர் ஒருவரைப் பார்த்து மனம் மயங்கியதை எண்ணி கடும் கோபம் கொண்டனர். நடந்த செயல்கள் அனைத்துக்கும் சிவபெருமானே காரணம் என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
சிவபெருமானைக் கொல்லும் பொருட்டு அபிசார வேள்வி செய்த புலி, மான், பாம்புகள், துடி, முயலகன், பூதங்கள் இவைகளை ஒன்றன்பின் ஒன்றாக ஏவினார்கள்.
சிவபெருமான், புலியை உரித்து தோலை உடுத்திக்கொண்டார். மழுவையும் மானையும் கரத்தில் தரித்துக் கொண்டார். பூதங்களைச் சேனையாகவும், முயலகனை மிதித்தும், பாம்புகளை அணிகலமாகவும் கொண்டு அருள் புரிந்தார். கயமுகாசுரனை வதைத்துத் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார்.
அம்பலவாணப் பெருமான் தனது வலது திருவடியால் முயலகனை மிதித்தவாறு ஆனந்தத் திருநடனம் புரிகிறார்.
கருத்துரை
முருகா! எந்த நிலையிலும் தேவரீரது திருவடிகளை அடியேன் மறவேன்.
No comments:
Post a Comment