"யசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்
இயற்றிநல் லேர்பெ றுவதும்,
இராச்யபா ரஞ்செய்து முடிமன்னர் வெற்றிகொண்
டென்றும்நல் லேர்பெ றுவதும்,
வசனாதி தப்பாது தனதா னியந் தேடி
வசியர்நல் லேர்பெ றுவதும்,
மற்றுமுள பேரெலாம் மிடியென்றி டாததிக
வளமைபெற் றேர்பெ றுவதும்,
திசைதோறும் உள்ளபல தேவா லயம்பூசை
செய்யுநல் லேர்பெ றுவதும்,
சீர்கொண்ட பைங்குவளை மாலைபுனை வேளாளர்
செய்யும்மே ழிப்பெ ருமைகாண்,
அசையாது வெள்ளிமலை தனில்மேவி வாழ்கின்ற
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!"
இதன் பொருள் ---
வெள்ளிமலை தனில் அசையாது மேவி வாழ்கின்ற அண்ணலே - வெள்ளிமலை என்னும் திருக்கயிலையில் எப்போதும் பொருந்தி வீற்றிருக்கும் பெரியோனே!
அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
வேதியர் யசனம் ஆதி கருமமும் தப்பாமல் இயற்றி, நல் ஏர் பெறுவதும் - மறையவர் வேள்வி முதலிய தொழில்களைத் தவறாமல் செய்து பேரழகு பெறுவதும், முடிமன்னர் என்றும் வெற்றி கொண்டு இராச்சிய பாரம் செய்து நல் ஏர் பெறுவதும் - முடியரசர் எப்போதும் பகைவரை வென்றிகொண்டு, ஆட்சி புரிந்து சிறப்பு அடைவதும், வசியர் வசனம் ஆதி தப்பாது தனதானியம் தேடி நல் ஏர் பெறுவதும் - வணிகர் சொல் முதலிய பிறழாமல் பொன்னும் தானியமும் ஈட்டிச் சிறப்புப் பெறுவதும், மற்றும் உள பேரெலாம் மிடி என்றிடாது அதிக வளமை பெற்று ஏர் பெறுவதும் - மேலும் உள்ள யாவரும் வறுமை என்று கூறாமல் மிக்க வளம் பெற்று சிறப்பு உறுவதும், திசைதோறும் உள்ள பல தேவாலயம் பூசை செய்யும் நல் ஏர் பெறுவதும் - எல்லாத் திக்கினும் இருக்கும் பல திருக்கோயில்களும் வழிபாடு பெற்று சிறப்புப் பெறுவதும், சீர் கொண்ட பைங்குவளை மாலை புனை வேளாளர் செய்யும் மேழிப் பெருமை - புகழ் பெற்ற பசிய குவளைமலர் மாலை அணிந்த வேளாளர் புரியும் உழவின் பெருமையாகும்.
யசனம் - வேள்வி. வைசியர் என்பது வசியர் எனச் செய்யுள் விகாரம் பெற்றது.
No comments:
Post a Comment