"திருமகள் கடாட்சம்உண் டானால் எவர்க்கும்
சிறப்புண்டு; கனதையுண்டு;
சென்றவழி யெல்லாம் பெரும்பாதை ஆய்விடும்;
செல்லாத வார்த்தைசெல்லும்;
பொருளொடு துரும்புமரி யாதைஆம்; செல்வமோ
புகல்பெருக் காறுபோல் ஆம்;
புவியின்முன் கண்டுமதி யாதபேர் பழகினவர்
போலவே நேசம்ஆவார்;
பெருமையொடு சாதியில் உயர்ச்சிதரும்; அனுதினம்
பேரும்ப்ர திட்டையுண்டாம்;
பிரியமொடு பகையாளி கூடவுற வாகுவான்;
பேச்சினிற் பிழைவராது;
வருமென நினைத்தபொருள் கைகூடி வரும்;அதிக
வல்லமைகள் மிகவும்உண்டாம்;
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!"
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
எவர்க்கும் திருமகள் கடாட்சம் உண்டானால் சிறப்பு உண்டு - யாவருக்கும் திருமகளின் திருவருள் ஏற்பட்டால் சிறப்பு உண்டு;
கனதை உண்டு - பெருமை உண்டு;
சென்ற வழி எல்லாம் பெரும்பாதை ஆய்விடும் - போன வழி யாவும் எவரும் பின்பற்றும் பெரிய நெறியாகி விடும்;
செல்லாத வார்த்தை செல்லும் - ஏற்றுக் கொள்ளத் தகாத சொற்களாக இருந்தாலும் (பிறரால்) ஏற்றுக் கொள்ளப்படும்;
பொருள் ஒரு துரும்பு - எப்பொருளும் எளிதில் கிடைக்கும்;
மரியாதை ஆம் - பிறர் போற்றுஞ் சிறப்பு உண்டாகும்;
செல்வமோ புகல் பெருக்கு ஆறுபோல் ஆம் - செல்வமும் (பிறர்) புகழ்ந்து கூறும் (அளவில்) வெள்ளம் மிகுந்த ஆற்றைப் போல (வடியாது) பெருகும்;
புவியில் முன்கண்டு மதியாத பேர் பழகினவர் போலவே நேசம் ஆவர் - உலகில் முன்பு தாம் வறுமை உற்று இருந்தபோது பார்த்து மதிப்புக் கொடாதவர்கள் எல்லோரும் (இப்போது) பழகியவர்போல நட்புக் கொள்வர்;
சாதியில் பெருமையொடு உயர்ச்சி தரும் - சாதியிலும் மேன்மையும் உயர்வும் உண்டாகும்;
அனுதினமும் பேரும் பிரதிட்டை உண்டாம் - எந்நாளும் புகழும் வரவேற்பும் கிடைக்கும்;
பகையாளி. கூட பிரியமொடு உறவு ஆகுவான் - பகைவனும் அன்போடு நட்புக் கொண்டாடுவான்;
பேச்சினில் பிழை வராது - பேசும் போது பிழையில்லாத பேச்சு வரும்;
வரும் என நினைத்த பொருள் கைகூடி வரும் - வரவேண்டும் என்று எண்ணிய பொருள் தவறாமல் கிடைக்கும்;
அதிக வல்லமைகள் மிகவும் உண்டாம் - எடுத்த தொழிலை முடிக்கும் பேராற்றல் மிகுதியாக உண்டாகும்.
No comments:
Post a Comment