"சொன்னத்தைச் சொல்லும்இளங் கிள்ளையென்பார்
தண்டலையார் தொண்டு பேணி
இன்னத்துக் கின்னதென்னும் பகுத்தறிவொன்
றில்லாத ஈனர் எல்லாம்
தன்னொத்துக் கண்டவுடன் காணாமல்
முறைபேசிச் சாடை பேசி
முன்னுக்கொன் றாயிருந்து பின்னுக்கொன்
றாய்நடந்து மொழிவர் தாமே."
இதன் பொருள் ---
இளங்கிள்ளை சொன்னத்தைச் சொல்லும் என்பார் - இளங்கிளி நாம் சொன்னத்தையே சொல்லும் என்று கூறுவார்கள், (அவ்வாறு) தண்டலையார் தொண்டு பேணி இன்னத்துக்கு இன்னது எனும் பகுத்தறிவு ஒன்று இல்லாத ஈனர் எல்லாம் - திருத் தண்டலை இறைவருக்குத் தொண்டு புரிய விரும்பி, இதற்கு இது என்று அறியும் பகுத்தறிவு சிறிதும் பெறாத இழிந்தோர் யாவரும், தன் ஒத்துக் கண்டவுடன் முறை பேசி - தன்னை நேரே பார்த்தவுடன் தகுதிப்படி உரையாடி, காணாமல் சாடை பேசி - காணாதபோது குறிப்பாக இகழ்ந்து கூறி, (இவ்வாறு), முன்னுக்கு ஒன்றாய் இருந்து - எதிரில் ஒருவாறு நடந்து கொண்டும், பின்னுக்கு ஒன்றாய் நடந்து - காணாதபோது ஒருவாறு நடந்து கொண்டும் மொழிவர். (அவ்வாறே முன்னுக்குப் பின் வேறாக) பேசுவதும் செய்வார்கள்.
திருத் தண்டலையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளுக்குத் தொண்டு பேணுவதனால் பகுத்தறிவு பெறலாம். அவ்வாறு செய்யாத ஈனர்கள் யாவரும் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போன்றவர்கள் என்றும், அத்தகையோர் ஒருவரைக் கண்டால் ஒன்றும், காணாதபோது ஒன்றுமாகப் பேசியும் நடந்தும் வருவார்கள் என்று உணர்க. ‘சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை' என்பது பழமொழி, ‘முறைபேசிச் சாடைபேசி' ‘முன்னுக்கு ஒன்றாய் இருந்து பின்னுக்கு ஒன்றாய் நடந்து மொழிவர்' என்பன மரபு மொழிகள்.
No comments:
Post a Comment