"தம்தாரம் அன்றியே பரதார மேல்நினைவு
தனைவைத்த காமுகர்க்குத்
தயையில்லை நிசமில்லை வெட்கமிலை சமரினில்
தைரியம் சற்றுமில்லை
அம்தாரம்இல்லைதொடர் முறையில்லை நிலையில்லை
அறிவில்லை மரபுமில்லை
அறம்இல்லை நிதியில்லை இரவினில் தனிவழிக்
கச்சமோ மனதில்இல்லை
நந்தாத சனம்இல்லை இனம் இல்லை எவருக்கும்
நட்பில்லை கனதையில்லை
நயம்இல்லை இளமைதனில் வலிமையிலை முத்திபெறும்
ஞானம்இலை என்பர்கண்டாய்
மந்தார பரிமள சுகந்தாதி புனையுமணி
மார்பனே அருளாளனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே."
இதன் பொருள் ---
மந்தாரம் பரிமள சுகந்தம் ஆதி புனையும் அணிமார்பனே - மந்தாரப் பூவையும் வாசனை வீசுகின்ற கலவைச் சந்தனம் முதலியவற்றையும் அணியாகக் கொள்கின்ற அழகிய மார்பை உடையவனே!, அருள் ஆளனே! - அருளை உடையவனே!
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
தம் தாரம் அன்றியே பரதாரம் மேல் நினைவுதனை வைத்த காமுகர்க்கு - தம் மனைவியே அல்லாமல் பிறர் மனைவிமேல் நினைவாய் இருக்கின்ற காமிகளுக்கு, தயை இல்லை - இரக்கம் இல்லை; நிசம் இல்லை - உண்மை இல்லை; வெட்கம் இலை - நாணம் இல்லை; சமரினில் தைரியம் சற்றும் இல்லை - போரிலே அஞ்சாமை சிறிதும் இல்லை; அம் தாரம் இல்லை - அழகிய தன் மனைவி இல்லை ; தொடர்முறை இல்லை - மற்றவர்களோடு சம்பந்தம் இல்லை; நிலை இல்லை - உறுதி இல்லை; அறிவு இல்லை - அறிவும் இல்லை; மரபும் இல்லை - மரபுநெறியும் இல்லை; அறம் இல்லை - ஒழுக்கம் இல்லை; நிதி இல்லை - செல்வம் இல்லை; இரவினில் தனிவழிக்கு அச்சமோ மனதில் இல்லை - இரவினிலே தனிவழியே செல்வதற்கு மனதில் அச்சம் இல்லை; நந்தாத சனம் இல்லை - கெடாத மக்களுறவு இல்லை; இனம் இல்லை - உறவு இல்லை; எவருக்கும் நட்பு இல்லை - யாரிடத்திலும் நட்பு இல்லை; கனதை இல்லை - மதிப்பு இல்லை; நயம் இல்லை - வாழ்க்கையில் இனிமை இல்லை; இளமை தனில் வலிமை இலை - இளமையில் வலிவு இல்லை; முத்திபெறும் ஞானமிலை - வீட்டை அடையும் அறிவு இல்லை; என்பர் - என்று பெரியோர் கூறுவார்கள்.
பிறர் மனைவியை விரும்பிய காமுகர்கட்கு இவைகள் எல்லாம் இல்லை என்று கூறுவார்கள் என்று இந்நூலின் ஆசிரியர் அறிவுறுத்துகின்றார். "பிறர்மனை நயவாமை" என்று திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறள் அதிகாரத்தினை ஓதி உணர்க.
No comments:
Post a Comment