திருவொற்றியூர்

 

"சுடப்படுவார் அறியார், புரமூன்றையும் சுட்டபிரான்

திடப்படு மாமதில் தென்ஒற்றியூரன் தெருப் பரப்பில்

நடப்பவர் பொன்பதம் நம்தலை மேல்பட, நன்குஉருண்டு

கிடப்பது காண் மனமே, விதி ஏட்டைக் கிழிப்பதுவே."


பொழிப்புரை --- மனமே1வ முப்புரங்களையும் எரித்த சிவபெருமான், உறுதி வாய்ந்த பெரிய மதில் சூழ்ந்த அழகு மிக்க திருவொற்றியூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளவன். அந்தத் திருவொற்றியூரின் தெருக்களில் நடக்கின்றவர்களுடைய திருவடிகள் நமது தலைமீது பொருந்தும்படி நன்றாய் உருண்டு கிடப்பது தான், பிரமனது ஏட்டைக் கிழிக்கின்ற வழியாகும். இந்த உண்மையை, இறந்தபிறகு தன்னைச் சுடுகின்ற சுற்றத்தோடு பொருந்தி உலக மயலிலே உழலும் அஞ்ஞானிகள் அறியமாட்டார்கள்.


விளக்கம் ---  இறந்த பிறகு உறவினராலே தூலதேகத்தை சுடப்படுவோராகிய அஞ்ஞானிகளுக்கு உண்மை விளங்காது என்பார் "சுடப்படுவார் அறியார்" என்றார். முப்புரங்களை எரித்த பிரான் என்பது, முப்புரமாவது மும்மல காரியம் என்பதனால் விளங்கும்.  மும்மலங்களைச் சுட்டான் என்பார் "புரமூன்றையும் சுட்டபிரான்" என்றார். பிறவியை ஒழித்துக் கொள்ள வேறு ஓர் உபாயம் எதையும் முயலவேண்டாம் என்பார், திருவொற்றியூர்த் தெருக்களில் நடப்பவருடைய திருவடிகள் தலைமீது பொருந்த இருந்தாலே போதும் என்பார், "தெருப் பரப்பில் நடப்பவர் பொன்பதம் நம்தலை மேல்பட, நன்கு உருண்டு கிடப்பது காண் மனமே, விதி ஏட்டைக் கிழிப்பதுவே" என்றார்.  உருண்டு கிடத்தல் என்பது அங்கப் பிரதட்சிணம் என்று வடமொழியில் சொல்லப்படும். விதி என்பது பிரமனுக்கு உரிய பெயர்களில் ஒன்று.  அவன் எழுதி வைத்த ஏட்டின்படியே பிறவியும், வாழ்வும் மற்ற நிலைகளும் வாய்க்கும். அவன் எழுதுவது நின்றால் பிறவி இல்லை.  அதனால், பிரமன் எழுதுகின்ற ஏட்டைக் கிழித்துவிட்டால், அவனுக்கு எழுத எடு இருக்காது.


No comments:

Post a Comment

54. இரப்போர்க்கு வெண்சோறு பஞ்சமில்லை.

  “கரப்பார்க்கு நல்லகதி வருவதில்லை;     செங்கோலிற் கடல்சூழ் வையம் புரப்பார்க்கு முடிவிலே சுவர்க்கமல்லால்,     நரகமில்லை; பொய்யி தன்றால்; உரப...