மாயாபுரி - 0665. சிகரம் அருந்த
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சிகரம் அருந்த (மாயாபுரி)
 
முருகா!
உன்னை நினைந்து உய்ய அருள்

தனன தனந்த தானன ...... தனதான
     தனன தனந்த தானன ...... தனதான


சிகர மருந்த வாழ்வது ...... சிவஞானம்
     சிதறி யலைந்து போவது ...... செயலாசை

மகர நெருங்க வீழ்வது ...... மகமாய
     மருவி நினைந்தி டாவருள் ...... புரிவாயே

அகர நெருங்கி னாமய ...... முறவாகி
     அவச மொடுங்கை யாறொடு ...... முனமேகிக்

ககன மிசைந்த சூரியர் ...... புகமாயை
     கருணை பொழிந்து மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


'சி'கரம் அருந்த வாழ்வது ...... சிவஞானம்,
     சிதறி அலைந்து போவது ...... செயல் ஆசை,

மகர நெருங்க வீழ்வது ...... மகமாய,
     மருவி நினைந்திடா அருள் ...... புரிவாயே.

அகர நெருங்கின் ஆமயம் ...... உற ஆகி,
     அவசமொடும் கையாறொடும் ...... முனம் ஏகிக்

ககனம் மிசைந்த சூரியர் ...... புக, மாயை,
     கருணை பொழிந்து மேவிய ...... பெருமாளே.


பதவுரை

         அகரம் நெருங்கின் ஆமயம் உறவாகி --- வீதிகளுக்கு மிக அருகே வந்தால் துன்பம் ஏற்பட்டு,

         அவசமொடும் கையாறொடும் முனம் ஏகி ---  மயக்கத்துடனும், தன்செயல் அற்றும் முன்பு சூரன் அரசாண்ட காலத்தில் அவதியுற்றுச் சென்று,

         ககனம் இசைந்த சூரியர் --- ஆகாயத்தில் இருந்த பன்னிரண்டு சூரியர்களும்

         புக கருணை பொழிந்து --- தேவரீரிடம் தஞ்சம் புகுந்த அவர்களுக்குக் கருணை பொழிந்து

         மாயை மேவிய பெருமாளே --- மாயாபுரி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம் --- நமசிவாய என்ற திருவைந்தெழுத்தில் உள்ள 'சி'கரம் ஆகிய எழுத்தை உச்சரிப்பதால் உண்டாகக் கூடியது சிவஞானம் ஆகும்.

         சிதறி அலைந்து போவது செயலாசை --- அந்த உச்சரிப்பால் அலைந்து அழிந்து போவன மனம், வாக்கு, காயம் இவற்றின் செயலும் ஆசைகளும் ஆகும்

         மகர நெருங்க வீழ்வது மகமாய ---  மகரம் என்னும் எழுத்தை நெருங்க உச்சரிக்கும்போது வந்து சேர்வது மகாமாயை.

         மருவி நினைந்திடா அருள் புரிவாயே --- தேவரீரின் திருவருளை விரும்பி, தேவரீரையே தியானித்து உய்ய அருள் புரிவீராக.

பொழிப்புரை


         வீதிகளுக்கு மிக அருகே வந்தால் துன்பம் ஏற்பட்டு, மயக்கத்துடனும், தன்செயல் அற்றும் முன்பு சூரன் அரசாண்ட காலத்தில் அவதியுற்றுச் சென்று, ஆகாயத்தில் இருந்த பன்னிரண்டு சூரியர்களும் தேவரீரிடம் தஞ்சம் புக, அவர்களுக்குக் கருணை பொழிந்து மாயாபுரி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         நமசிவாய என்ற திருவைந்தெழுத்தில் உள்ள 'சி'கரம் ஆகிய எழுத்தை உச்சரிப்பதால் உண்டாகக் கூடியது சிவஞானம் ஆகும்.

         அந்த உச்சரிப்பால் அலைந்து அழிந்து போவன மனம், வாக்கு, காயம் இவற்றின் செயல்களும் ஆசைகளும் ஆகும். மகரம் என்னும் எழுத்தை நெருங்க உச்சரிக்கும்போது வந்து சேர்வது மகாமாயை. தேவரீரின் திருவருளை விரும்பி, தேவரீரையே தியானித்து உய்ய அருள் புரிவீராக.

விரிவுரை

சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம் ---

அருந்துதல் - உச்சரித்தல். வாழ்வது - உண்டாவது,

நமசிவாய என்ற திருவைந்தெழுத்தில் உள்ள 'சி'கரம் ஆகிய எழுத்தை உச்சரிப்பதால் உண்டாகக் கூடியது சிவஞானம் ஆகும்.

திருவைந்தெழுத்து, பஞ்சாட்சரம் என்று வடமொழியில் வழங்கப் பெறும்.

"நமசிவய" என்பது தூல ஐந்தெழுத்து ஆகும்.

"சிவயநம" என்பது சூக்கும ஐந்தெழுத்து ஆகும்.

"சிவயவசி" என்பது அதிசூக்கும ஐந்தெழுத்து ஆகும்.

"சிவ" என்பது காரண ஐந்தெழுத்து ஆகும்.

"சி" என்பது மகாகாரண ஐந்தெழுத்து ஆகும். இதனை "மகாமனு" என்றும் கூறுவர். சித்தர்கள் மொழியில் இது "நாயோட்டு மந்திரம்" எனப்படும்.

சூக்கும ஐந்தெழுத்துக் கணிப்பினால் உள்ளம் உலகியலின் நீங்கி, சிவன்பால் செல்லும். அதனால், ஆன்மா தான் சிவனுக்கு ஆளாகி, வினையாகிய தீங்கில் இருந்து விடுபடும்.

அதிசூக்கு ஐந்தெழுத்துக் கணிப்பினால், ஆன்மா, பாசஞானத்தில் இருந்து விடுபடும்.

காரண ஐந்தெழுத்துக் கணிப்பினால், ஆன்மா, ஆன்மபோதம் என்னும் பசுஞானம் நீங்கி, சிவபோதம் பெற்றுப் பிறப்பாகிய தீங்கில் இருந்து விடுபடும். இது முத்திநிலையாகிய பாசநீக்கம் ஆகும்.

மகாகாரண ஐந்தெழுத்துக் கணிப்பினால், ஆன்மா, சிவானந்தத்தில் மூழ்கி இருக்கும். இதுவே வீடுபேறு என்னும் சிவப்பேறு ஆகும்.

இதன் விரிவை, பின்வரும் "உண்மை விளக்க"ப் பாடல்கள் வழி அறியலாம்.

சிவன், அருள், ஆவி, திரோதம், மலம் ஐந்தும்
அவன் எழுத்து அஞ்சின் அடைவு ஆம், --- இவன் நின்று
நம் முதலா ஓதில் அருள் நாடாது, நாடும் அருள்
சிம் முதலா ஓது நீ சென்று.     --- உண்மை விளக்கம்.

சிவன், திருவருள், உயிர், மறைத்தல் சத்தி என்னும் திரோதானம், மூலமலம் ஆகிய   ஐந்தும், சிவனது பெருநிலையை நினைப்பிக்கும் "நமசிவாய" என்னும் ஐந்தெழுத்தின் பொருள் ஆகும்.

சாதகன் உலகியலில் நின்று, "ந"காரத்தை முதலாக வைத்து ஓதும் முறையை மேற்கொண்டால் அவனது உணர்வில் திருவருள் வெளிப்படாது. எனவே, திருவருளைத் தலைப்பட விரும்புவோர் உலகியலின் நீங்கிச் சென்று, வீட்டு நெறியில் உணர்வை முழுவதையும் ஈடுபடுத்தி நின்று, "சி"காரத்தை முதலாக வைத்து ஓததல் வேண்டும். அப்போது திருவருள், பாசமாம் பற்றை அறுத்து, உணர்வில் வெளிப்பட்டுத் தோன்றும். "ந"காரம் முதலாக வைத்து ஓதுவார்க்கு உலகப் பயன் கிடைக்கும். உலகப் பயனில் நாட்டமின்றிப் பிறவி நீக்கத்தை வேண்டுவோர் "சி"காரம் முதலாக ஓதுதல் வேண்டும்.

அண்ணல் முதலா அழகுஆர் எழுத்து ஐந்தும்
எண்ணில், இராப்பகல் அற்ற இன்பத்தே --- நண்ணி,
அருளானது சிவத்தே ஆக்கும், அணுவை
இருளானது தீர இன்று.              --- உண்மை விளக்கம்.

மெய்யுணர்ந்தோர் விரும்பும் தன்மை உடைய திருவெழுத்து ஐந்தையும், அண்ணலாகிய சிவபரம்பொருளைக் குறிக்கும் "சி"காரம் முதலாக வைத்து எண்ணி வந்தால், அந்நிலையில் வெளிப்பட்டுத் தோன்றும் திருவருளானது, உயிரை கேவலம் ஆகிய இரவும், சகலம் ஆகிய பகலும் நீங்கிய, இன்ப ஒளி தோன்றும் அருள் நிலையில் நண்ண வைத்து, அப்பொழுது ஆணவ மலத்தின் வாசனை அறவே கழிய, முடிந்த நிலையாகிய சிவானந்தத்தை அநுபவிக்கச் செய்யும்.

அறியாமையைக் கேவலம் என்றும், அறிவு நிலையைச் சகலம் என்றும் நூல்கள் குறிப்பிடும். அறியாமையாகிய கேவலத்தை இரவு என்று குறியீட்டினாலும், அறிவு நிலையாகிய சகலத்தைப் பகல் என்ற குறியீட்டினாலும் உணர்த்தும். புறவுலகில் இரவும் பகலும் மாறி மாறி வருவதைப் போல உயிருணர்வில் கேவலமும் சகலமும் ஆகிய அறியாமையும் அறிவும் ஆகிய இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன. உயிருக்கு அமைந்த சார்புகள் இரண்டு. ஒன்று, அசத்தாகிய கருவி கரணங்களின் சார்பு. மற்றொன்று, சத்தாகிய திருவருட் சார்பு. அசத்தாகிய ஐம்பொறி முதலிய கருவிகளின் சார்பு இடையில் வந்தது. ஆகவே அது உயிருக்குச் செயற்கையான சார்பாகும். திருவருட் சார்பே என்றும் உள்ள இயற்கையான சார்பாகும்.

செயற்கையாகிய கருவிகளின் சார்பு நீங்கினால் அப்பொழுதே உயிர் திருவருட் சார்பைப் பெற்றுவிடும். மனம் முதலிய கருவிகள் நம்மோடு எப்போதும் உடனாகவே நிற்கின்றனவே; அவற்றை விட்டு நீங்குவது என்பது, இங்கே, அறிவால் நீங்குதல் ஆகும். அதாவது, கருவி கரணங்கள் நமக்கு வேறானவை எனத் தெளிய உணர்ந்து, அவற்றினிடத்துப் பற்றுச் செய்யாது, அவற்றின் வசப்படாது நிற்றலாகும். கருவிகள் நீங்க நீங்க உயிர் உறக்கம் பேருறக்கம் முதலிய நிலைகளை அடைவது இதைத்தானே காட்டுகிறது. அங்ஙனமாக, உயிர் கருவிகளை நீங்கினால் திருவருட் சார்பைப் பெறும்.
        
கருவிகள் சோர்வுற்றுச் செயற்படாமல் மடங்கித் தாமாகவே நீங்கும் பொழுதுதான் உயிருக்கு அறியாமை உண்டாகும். அவ்வாறின்றிக் கருவிகள் நன்கு செயற்படும் பொழுது, அவை நாமல்ல,  நமக்கு வேறானவை என்று கண்டு நீங்கினால், அவற்றின் வசப்படாது நின்றால் உயிர் திருவருளைச் சேர்ந்து விடும். இங்ஙனம் கருவிகளையும், அவற்றால் வரும் புலன் உணர்வுகளையும் நீங்கி, உயிர் திருவருளைச் சேர்ந்து நிற்றலையே இரவு பகல் அற்ற இடத்தில் இருப்பதாக நூல்கள் கூறும். திருவருட் சார்பு இரவு பகலற்ற இடமாகும்.

உயிர் திருவருள் ஒளியில் நிற்கும் பொழுது அறியாமையாகிய கேவலம் எப்படித் தலைகாட்டாது. ஆகவே அது இரவு என்பது நீங்கிய இடம் ஆகிறது. அதுகாலை கருவிகள் செயற்பட்டுச் சிற்றறிவைத் தருமாயினும் திருவருளால் வியாபக அறிவு விளங்கிய பிற்பாடு அச்சிற்றறிவு என்ன பயனைச் செய்யும். எல்லாவற்றையும் விளங்கக் காட்டும் சூரியவொளி வந்த பின்னர் எரிகின்ற விளக்கின் சுடர் போன்றது அச் சிற்றறிவு. உயிர் பேரறிவாகிய திருவருள் ஒளியில் நிற்கும் பொழுது சிற்றறிவாகிய சகலம் எப்படித் தலைகாட்டாது. ஆகவே அது பகல் என்பது நீங்கிய இடமாகிறது. இவ்வாறு திருவருள் ஞானத்தால் உயிர்க்கு அறியாமையும், சிற்றறிவும் நீங்கி விடுதலால் திருவருட் சார்பு இரவு பகலற்ற இடம் எனக் கூறப்படுகிறது.

உலக வாழ்வில் உள்ள போதே திருவருளில் அழுந்தி நிற்கும் நிலை துரிய அருள்நிலை எனப்படும். இந்நிலை முதல்வனது அருளைச் சேர்ந்த நிலையே தவிர, முதல்வனைச் சேர்ந்த நிலையாகாது. இதற்கு ஓர் உவமை கூறுவோம். கண் விளக்கொளியோடு கூடி அதனால் தன்னிடத்துள்ள இருள் நீங்கப் பெறுகிறது. அந்நிலையில் கண் விளக்கொளியைக் கண்டதேயன்றி விளக்கொளிக்கு முதலாய் உள்ள விளக்கைக் கண்டது ஆகாது. கண் முதலிற் கண்ட விளக்கொளி வழியாகப் பின்னர் விளக்கை நோக்கிக் காணும் போதே அது விளக்கைக் கண்ட காட்சியாகிறது. அதுபோல, உயிர் திருவருளோடு கூடிய நிலையில் அது திருவருளைக் கண்ட காட்சியே தவிரத் திருவருளுக்கு முதலாகிய சிவத்தைக் கண்ட காட்சியாகாது. உயிர் முதலிற் கண்ட திருவருள் வழியாகப் பின்னர் சிவத்தை நோக்கிக் காணும் போதே அது சிவத்தைக் கண்ட காட்சியாகிறது. கண் விளக்கொளியைச் சேர்ந்து அதனால் தன்னிடத்துள்ள இருளை நீக்கிக் கொள்வது போல உயிர் திருவருளைச் சேர்ந்து தன்னிடத்துள்ள ஆணவ மலமாகிய இருள் நீங்கப் பெறுகிறது. இதனையே, இருளானது தீர இன்று என்று குறிப்பிட்டது இவ்வுண்மை விளக்கச் செய்யுள்.

மேற்கூறிய கண் உவமையில், கண் பெறும் ஒளி விளக்கமும், இருள் நீக்கமும் உடன் நிகழ்ச்சியாய் ஒருங்கு நிகழ்கின்றன. ஆயின் அவற்றோடு விளக்கினது காட்சியும் உடன் நிகழவில்லை என்பதை உணரவேண்டும். அதுபோல, உயிரிடத்து அருள் விளக்கமும் ஆணவ மலமாகிய இருள் நீக்கமும் உடன் நிகழுமே அன்றி, பேரின்பமாகிய ஆனந்த விளக்கம் உண்டாகாது. ஆனந்த விளக்கம் அருளின் வழியே அவ்வருளுக்கு முதலாய் உள்ள சிவத்தை அணைதலினாலேயே உண்டாகும். முன்னர் நிகழும் அருள் விளக்கத்தில் தோன்றுவது சுகப் பிரபை எனப்படும் இன்பத் தோற்றமே அன்றிப் பரம சுகம் எனப்படும் பேரின்பம் அன்று.

ஆதி மலம் இரண்டும் ஆதியா ஓதினால்
சேதியா மும்மலமும் தீர்வுஆகா  போதம்
மதிப்புஅரிதாம் இன்பத்தே வாழலாம் மாறி
விதிப்படி ஓதுஅஞ்சு எழுத்துமே.     --- உண்மை விளக்கம்.

திரோதான சத்தியைக் குறிக்கும் "ந"காரமும், மலத்தைக் குறிக்கும் "ம"காரமும் ஆகிய இரண்டு எழுத்துக்களையும் முதலில் வைத்து உச்சரித்தால், எளிதில் அறுத்து எறிய முடியாத மும்மலங்களும் அதனால் நீங்க மாட்டா. எனவே, திருவைந்தெழுத்தை "சி"காரம் முதலாக மாற்றி, பாசத்தை விட்டுப் பதியிலே சேர்தலாகிய பொருளைத் தரும் முறையிலே முத்தி பஞ்சாக்கரமாகக் கொண்டு உச்சரித்தல் வேண்டும். அங்ஙனம் உச்சரித்தால், சீவபோதம் அல்லது ஆன்ம அறிவு எனப்படும் சுட்டறிவினால் அளந்து அறிதற்கு அரியதாகிய பேரின்ப வீட்டில் நிலைத்து வாழும் பெருவாழ்வைப் பெறலாம்.

திருவைந்தெழுத்தில் "ந"கார, "ம"காரங்கள் ஆகிய பாச எழுத்துக்கள் முன்நிற்க ஓதிவந்தால், பாச நிலை நீங்காது. முற்பட்டு நிற்பது தலைமைப் பொருளாகும். அதன்பின் நிற்பது அடிமைப் பொருளாகும். அம்முறையில் பாசங்களே முற்பட்டு நிற்க, உயிர் அவற்றின் பின் நின்றால் உயிர் பாசங்களுக்கு அடிமைப்பட்டதாய் அவற்றினின்றும் மீள இயலாது. ஆதலால், பாசங்களின் வழிப்பட்ட இந்நிலை மாற வேண்டும். அது பற்றியே மாறி விதிப்படி ஓது அஞ்செழுத்துமே எனப்பட்டது.

சிகாரத்தை முதலாகக் கொண்டு ஓதிவரின், சிவமும் அருளும் முன் நிற்க, உயிர் அவற்றின் பின் நிற்பதாய் அமையும். இங்ஙனம் சிவமும் அருளும் தலைமைப் பொருளாய் முன் நிற்க, உயிர் அவற்றிற்கு அடிமைப்பட்டு அவற்றின் வழி நின்று பாசங்கள் நீங்கப் பெறும்.  

மும்மலங்களை ஞான ஆசிரியர் தீர்த்து வைத்த பிறகு ஆன்மா ஐம்பூதங்களால் ஆகிய உடல் கருவி முதலியவற்றோடு இவ்வுலகில் வாழும் அளவும் அம்மலங்களின் முன்னைத் தொடர்பால் பெருங்காயம் வைத்த சொம்பில் அதை எடுத்த பிறகும் அந்த மணம் நீங்காதது போல வினை சாருவதுண்டு. அந்தச் சார்பின் விளைவுகள் ஆன்மாவைத் தாக்காது இருக்கும் பொருட்டுத் தோற்றமும் முடிவும் அற்ற திருவைந்தெழுத்தை ஆசிரியர் அருளியவாறே கணித்து வருபவர்க்கு மலங்களால் வரும்வாதனை தாக்காது. ஞான நிட்டையில் நின்று மாறுபடுவதும் இல்லை.

திருவைந்தெழுத்தின் பெருமை திருமுறைகளிலும் அருள் நூல்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. உடலோடு வாழ்வார்க்கு ஞான நிட்டை கூடிய போதும் யாக்கையுடன் உள்ள தொடர்பும் உலகத்துடன் உள்ள தொடர்பும் முற்றிலும் அற்றுப்போவதில்லை. பெருங்காயம் வைத்திருந்த பாண்டத்தில் வைத்த எடை குறையாது எடுத்துவிட்ட பின்னரும் அதன் மணம் நீங்குவதில்லை. அது போன்றதே உலகியல் தொடர்பும். இங்கு என்பது பெருங்காயத்தைக் குறிக்கும்.

மந்திரங்கள் தம்மை உச்சரிப்பாரைக் காப்பன. எல்லா மந்திரங்களுக்கும் மேலான திருவைந்தெழுத்து, கணிப்பாரைக் காத்து உய்விப்பது எனவே தான் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் நமசிவாயப் பதிகம் ஒன்றும் பஞ்சாக்கரப் பதிகம் ஒன்றும் இயற்றி அருளினார். திருநாவுக்கரசு நாயனாரும். சுந்தரமூர்த்தி நாயனாரும், நமச்சிவாயத் திருப்பதிகங்கள் அருளினார்கள். வந்தவாறு உரை செய் என்ற பகுதியால், ஆசிரியர் உபதேசித்த முறையிலே திருவைந்தெழுத்தைக் கணிக்க வேண்டும் என்பதைக் கூறினார்.

சிதறி அலைந்து போவது செயலாசை ---

அந்த உச்சரிப்பால் அலைந்து அழிந்து போவன மனம், வாக்கு, காயம் இவற்றின் செயலும் ஆசைகளும் ஆகும். பற்றுக்கள் அறும். ஆன்மா தன் செயல் அற்று, சிவத்திலே முழ்கி இருக்கும். "சேவடி சேறல் செயல் அறல் தானே" என்பார் திருமூலர்.

மகர நெருங்க வீழ்வது மகமாய ---  

இங்கே "வீழ்வது" என்னும் சொல், "வந்து சேர்வது" என்று பொருள்படும்.

"ம"கரம் என்னும் எழுத்தை நெருங்க உச்சரிக்கும்போது வந்து சேர்வது மகாமாயை. மலம் உயிரை விட்டு நீங்காது.

மூலமலமாகிய ஆணவ இருளை நீக்கும் விளக்குப் போன்றது மாயை. மாயையே உயிருக்கு உடம்பாகவம் உடம்பில் உள்ள கருவிகளாகவும் அமைந்து. ஆணவ இருளைச் சிறிது நீக்கி அறிவை விளக்குகிறது.

"அருள்ஒளி விளங்கி, ஆணவம் எனும் ஓர்
இருள் அற, என் உள்ளத்து ஏற்றிய விளக்கே"  --- திருவருட்பா.

"என்னுள் மதிவிளக்கை ஏற்றி, அருள்மனையில், ஞானவாழ்வு அடையச் செயல் வேண்டும் வள்ளலே"                                                --- திருவருட்பா.

"ஆணவமாம் இருட்டு அறையில் கிடந்த சிறியேனை
அணிமாயை விளக்கு அறையில் அமர்த்தி, அறிவுஅளித்து,
நீள் நவமாம் தத்துவப் பொன் மேடைமிசை ஏற்றி,
நிறைந்த அருள் அமுது அளித்து, நித்தம் உற வளர்த்து,
மாண்உற எல்லா நலமும் கொடுத்து, உலகு அறிய
மணி முடியும் சூட்டிய என் வாழ்முதலாம் பதியே!
ஏண்உறு சிற்சபையின் இடத்தும் பொற்சபையின் இடத்தும்
இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே."    --- திருவருட்பா.

மாயையின் சேர்க்கையால் ஆணவத்தின் சத்தி சிறிது மடங்கிய போது ஆன்மா நுண்ணறிவைப் பெறாது பருமையான அறிவையே பெறுகிறது. அகநோக்கு இன்றிப் புறநோக்கையே உடையதாகிறது. அதாவது உள் நோக்கித் தன்னையும் தன்னுள்ளே இருக்கும் தலைவனாகிய இறைவனையும் உணரமாட்டாமல், புறத்தே உள்ள உலகப் பொருள்களையே நோக்கி நிற்கிறது.

இந்நிலையில் ஆணவ மலம் திரிபு உணர்வைத் தருகிறது. திரிபுணர்வு எனினும், விபரீத அறிவு எனினும், மயக்க உணர்வு எனினும் ஒன்றே.  இத்திரிபுணர்வால் ஆன்மா தன்னையே எல்லாவற்றிற்கும் வினைமுதலாகக் கருதி, நான் நான் என்று முனைத்து எழுகிறது. அம் முனைப்போடு செய்யும் செயலே வினை அல்லது கன்மம் எனப்படும்.

மாயை உடம்பாயும் உலகப் பொருள்களாயும் நின்று உயிரைக் கவர்ந்து மயக்குகிறது. கன்மம் அவ்வுலகப் பொருள்களை உயிரோடு கூட்டி இன்பத் துன்பங்களைத் தந்து மயக்குகிறது. ஆணவம் நான் எனது என்னும் பற்றினை உண்டாக்கி உலக நுகர்ச்சியில் ஈடுபடுத்தி மயக்குகிறது. இவ்வாறு இவை மூன்றும் உயிர் அறிவை உலகத்தோடு பிணிக்கின்றன. இது பற்றியே இவை பாசம் (கட்டு) என்றும், தளை என்றும் கூறப்படுகின்றன.

ஆணவம் என்பது உயிருக்குப் பகையாகிய கட்டு, மாயையும் கன்மமும் அப்படியல்ல. அவை ஆணவமாகிய கட்டினை நீக்கி உதவ வந்த கட்டுக்கள், இதனைப் பின்வரும் எடுத்துக் காட்டினால் விளங்கிக் கொள்ளலாம். அவிழ்க்க முடியாத ஒரு கட்டினை அவிழ்க்க, அதனோடு வேறு சில கட்டுக்களை இட்டு இறுக்கினால் அந்த முதல் கட்டு நெகிழ்ந்துவிடும். அதுபோல, உயிரைப் பிணித்துள்ள ஆணவ மலமாகிய வலிய கட்டினை நெகிழ்விப்பதற்காகவே இறைவன் மாயை, கன்மங்கள் என்று வேறு இரண்டு கட்டுக்களை உயிரோடு சேர்ப்பிக்கின்றான். எனவே ஆணவம் உயிருக்கு முன்கட்டும், மாயை கன்மங்கள் பின்கட்டும் ஆகின்றன.

மாயை கண்ணுக்குப் புலப்படாத நுண்மை உடைய அருவப் பொருள் ஆகும். மாயையிலிருந்து தான் எல்லாக் காரியப் பொருள்களும் தோன்றுகின்றன. காரியம் காரணத்தை விடப் பருமையாக இருக்கும். பருமை தூலம் எனப்படும். எனவே மாயையிலிருந்து படிமுறையில் தோன்றும் காரியப் பொருள்கள் ஒன்றைவிட ஒன்று தூலமாக இருக்கும். இறுதியில் தோன்றும் காரியங்கள் முந்திய எல்லாவற்றையும் விடத் தூலமாக இருக்கும். மாயையிலிருந்து இறுதியாகத் தோன்றுகின்ற தூலமான காரியங்களில் ஒன்றாக இருப்பது ஆகாயம். முன்னே தோன்றிய காரியங்களைப் பார்க்கத் தூலமான அந்த ஆகாயமே நமக்குப் புலப்படாத அருவமாக இருக்கிறது. அவ்வாறாயின் அதற்கு முன்னே தோன்றிய காரியங்கள் அதைவிட எவ்வளவு நுண்ணியவாக இருக்கும். அக்காரியங்கள் அனைத்திற்கும் மூலமாக இருக்கும் மாயை என்பது எத்துணை எத்துணை நுண்ணியதாக இருக்கும். இத்தகைய மாயை சுத்தமாய் உள்ள பகுதி என்றும், அசுத்தமாய் உள்ள பகுதி என்றும் இரு பகுதியாய் நிற்கும். சுத்தப் பகுதி என்பது ஆணவ மலத்தோடு கலவாதது. அசுத்தப் பகுதி ஆணவ மலத்தோடு கலந்தது எனவே மாயை ஒன்றே இங்ஙனம் சுத்தமும் அசுத்தமும் பற்றிச் சுத்தப் பகுதி சுத்த மாயை எனவும், அசுத்தப் பகுதி அசுத்த மாயை எனவும் இரண்டாக வைத்துக் கூறப்படும். குன்றிமணி ஒன்றே சிவந்ததும் கரியதும் ஆகிய இரு பகுதிப்பட்டதாய் விளங்குதலை இதற்கு உவமை கூறுவர் இன்னொரு உவமையும் கூறலாம். பூமியைச் சூழ்ந்து காற்று மண்டலம் உள்ளது. காற்று மண்டலத்தின் மேற்பகுதி மாசு கலவாமல் தூயதாய் விளங்குவது. கீழே உள்ள பகுதி தூசு, புகை முதலிய மாசுகள் கலந்து விளங்குவது. இக்காற்று மண்டலம் போன்றது மாயை எனலாம். காற்று மண்டலத்தின் தூய பகுதி மேலாய் விரிந்து விளங்க, மாசு படிந்த பகுதி அதற்குள்ளே நிற்கிறது. அதுபோலச் சுத்த மாயை மேலாய் விரிந்து நிற்க, அசுத்த மாயை அதனுள்ளே அடங்கி நிற்கும். சுத்த மாயை வியாபகமும், அசுத்த மாயை அதில் வியாப்பியமும் ஆகும். வியாபகம் என்பதற்கு விரிவு என்பது பொருள். வியாப்பியம் என்பதற்கு உள்ளடங்கி நிற்றல் என்பது பொருள்.

மாமாயை, குடிலை, விந்து என்பன சுத்தமாயையைக் குறிக்கும் வேறு பெயர்கள்.

மோகினி என்பது அசுத்த மாயையின் மறுபெயர். ஆணவத்தோடு கலவாமையால் சுத்த மாயை மயக்கத்தைச் செய்யாது. அசுத்த மாயை ஆணவத்தின் சார்பினால் மயக்கத்தைச் செய்யும். அது பற்றியே அது மோகினி எனப்பட்டது. மோகினி மயக்குவது. மேலும் மாயை என்றாலே அது அசுத்த மாயையைத்தான் குறிக்கும்.
  
இவ்விரண்டு மாயைகளோடு பிரகிருதி மாயை என்பதையும் சேர்த்து மும் மாயைகள் என வழங்குவர். பிரகிருதி மாயை என்பது தனித்த ஒரு மாயை அல்ல. அது அசுத்த மாயையில் இருந்து தோன்றிய காரியமே ஆகும். அசுத்த மாயை மயக்கத்தைச் செய்யும். அம் மயக்கம் சிறிதே ஆகும். அசுத்த மாயையின் காரியமாகிய பிரகிருதி மாயையோ பெருமயக்கத்தைத் தருவதாகும். அசுத்த மாயை சுத்த மாயையின் உள்ளடங்கி நிற்பது. அவ்வாறே பிரகிருதி மாயை அசுத்த மாயையின் உள்ளாக அடங்கி நிற்பதாகும். எனவே சுத்தம், அசுத்தம், பிரகிருதி ஆகிய மும் மாயைகளையும் முறையே மேலாய் நிற்பது, அதன் உள்ளே நிற்பது. அதற்கும் உள்ளே நிற்பது என உணர்ந்து கொள்ளவேண்டும். நம்முடைய உலகம் தோன்றுவது பிரகிருதி மாயையிலிருந்துதான்.
  
பிரகிருதி மாயை முக்குண வடிவாய் இருக்கும். சாத்துவிகம், இராசதம், தாமதம் என்பன அம்முக்குணங்கள். மணத்தினைத் தன்னுள்ளே நுட்பமாய் அடக்கி நிற்கும் அரும்புநிலை போலப் பிரகிருதி மாயை அம்முக்குணங்களையும் சூக்குமமாய் உள்ளடக்கி நிற்கும். எனவே முக்குணங்களும் வெளிப்படாது சூக்குமமாய் அடங்கி நிற்கும் நிலையே பிரகிருதி மாயை எனலாம். பிரகிருதி என்ற சொல்லுக்குக் காரணம் என்பது பொருள். மேற்கூறிய முக்குணங்களுக்குக் காரணமாதல் பற்றிப் பிரகிருதி எனப்பட்டது. தமிழில் அது மூலப்பகுதி எனப்படும்.

மருவி நினைந்திடா அருள் புரிவாயே ---

"நினைந்திட" என்னும் சொல் பாடல் சந்தத்தை நோக்கி, "நினைந்திடா" என்று நீண்டது.

"நினைந்திட அருள் புரிவாயே" என்று கொள்ளவேண்டும்.

அகரம் நெருங்கின் ஆமயம் உற ஆகி ---

ஆமயம் - துன்பம். உற - உறுதல், வந்து அடைதல்.

தனது தலைநகரம் ஆகிய வீரமகேந்திரபுரத்தின் வீதிகளின் வழியாகச் செல்லும்போது, சூரியன் தனது வெம்மையான கிரணங்களை ஒடுக்கிக் கொண்டு, குளிர்ந்த ஒளியைப் பரப்பிச்செல்ல வேண்டும் என்பது சூரபதுமன் ஆணை. இவ்வாறு சூரியனைச் சூரபதுமன் துன்புறுத்தினான். ஒருவரை அவரது இயல்பில் செயல்பட விடாமல் தடுப்பது துன்பத்தைத் தருவது.

அறத்தினை விடுத்த தீயோன், அருக்கனை நோக்கி, "நம் ஊர்ப்
புறத்தினில் அரணம் மீதாய்ப் போகுதல் அரிது, கீழ்மேல்
நிறுத்திய சிகரி ஊடு நெறிக்கொடு புக்கு, வான்போய்
எறித்தனை திரிதி, நாளும் இளங் கதிர் நடாத்தி" என்றான்.     --- கந்த புராணம்

ககனம் இசைந்த சூரியர் அவசமொடும் கையாறொடும் முனம் ஏகி புக ---  

சூரபதுமனுடைய ஆணாயால், வானுலகத்தில் இருந்த பன்னிரு சூரியர்களும் தமது நிலை அழிந்து, தம்முடைய செயல் அற்ற நிலையில் துன்பம் அடைந்து, முருகப் பெருமாளைப் புகலாக அடைந்தார்கள்.  
  
கருணை பொழிந்து ---

தன்னிடம் தஞ்சம் புகுந்த அவர்களுக்கு எம்பெருமான்  கருணை புரிந்தார்.

கருத்துரை

முருகா! தேவரீரையே நினைந்து திருவருள் பெற அருள்வாய்.
No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...