செங்கோல் அரசனே தெய்வம்.





38. செங்கோலரசனே தெய்வம்

நாற்கவியும் புகழவரும் தண்டலையார்
    வளநாட்டில் நல்ல நீதி
மார்க்கமுடன் நடந்து, செங்கோல் வழுவாமற்
    புவியாளும் வண்மை செய்த
தீர்க்கமுள்ள அரசனையே தெய்வம் என்பார்;
    கொடுங்கோன்மை செலுத்தி நின்ற
மூர்க்கமுள்ள அரசனும்தன் மந்திரியும்
   ஆழ்நரகில் மூழ்கு வாரே!

     இதன் பொருள் ---

     நால் கவியும் புகழவரும் தண்டலையார் வளநாட்டில் --- ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளைப் பாடுகின்ற புலவர்களும் புகழுமாறு சிறப்புப் பெற்ற திருத்தண்டலை இறைவரின் செழிப்பான நாட்டில்,

     நல்ல நீதி மார்க்கமுடன் நடந்து --- நல்ல அறநெறியில் ஒழுகி,

     செங்கோல் வழுவாமல் புவி ஆளும் வண்மை செய்த --- நடுநிலை தவறாத அரசாட்சியில் தவறாமல் உலகத்தை ஆளும் கொடைப் பண்பு கொண்ட,

     தீர்க்கம் உள்ள அரசனையே தெய்வம் என்பார் --- துணிவுடைய மன்னனையே கடவுள் என்று கூறுவார்கள்,

     கொடுங்கோன்மை செலுத்தி நின்ற --- தவறான ஆட்சி
நடத்துகின்ற,

     மூர்க்கம் உள்ள அரனும் தன் மந்திரியும் --- கொடிய அரசனும் அவனுடைய அமைச்சனும்,

     ஆழ்நரகில் மூழ்குவார் --- ஆழமான நரகத்திலே அழுந்துவார்கள்.

       விளக்கம் --- நாற்கவி : ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம். ‘அரசனையே தெய்வம்' என்றார் இறை என்ற சொல் அரசனையும், தெய்வத்தையும் குறிக்கும் என்பதால், "முறை செய்து காப்பாற்றும் மட்டவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்" என்றார் திருவள்ளவ நாயனார்.
 
செங்கோல் அரசர், கொடுங்கோல் அரசர் இயல்புகளைப் பின்வரும் பாடல்களால் அறியலாம்.

கண்ணில் சொலிச் செவியின் நோக்கும் இறைமாட்சி
புண்ணியத்தின் பாலதே ஆயினும் - தண்அளியால்
மன்பதை ஒம்பாதார்க்கு என்ஆம், வயப்படை மற்று 
என்பயக்கும் ஆண்அல் லவர்க்கு.    --- நீதிநெறி விளக்கம்.

கண் பார்வையினால் தனது கருத்தை அறிவித்து, நேரில் பார்த்ததுபோல் காதுகளால் அறியும்தன்மை உடைய அரசனின் ஆட்சி முறையானது புண்ணியமானது. இருந்தாலும் கருணையால் உலகத்தைக் காத்துக் கொள்ள இயலாத, அரசனுக்குத் திறமைகள் இருந்தும் பயனில்லை. வெற்றி தரும் ஆயுதங்கள் இருந்தாலும், ஆண்மை இல்லாத பேடிக்கு அவைகளால் பயனில்லை என்பது போல, கருணை இல்லாத அரசனுக்குத் திறமை இருந்தும் பயனில்லை.

குடிகொன்று இறைகொள்ளும் கோமகற்குக் கற்றா
மடிகொன்று பால்கொளல் மாண்பே - குடிஓம்பிக்
கொள்ளுமா கொள்வோற்கு காண்டுமே மாநிதியம்
வெள்ளத்தின் மேலும் பல.           --- நீதிநெறி விளக்கம்.

கன்றின் தாயாகிய பசுவின் மடியை அறுத்தப் பால் கறக்க நினைப்பதைப் போ, குடிமக்களை துன்புறுத்தி வரி வாங்குபவன் கொடுங்கோல் அரசன் ஆவான். குடிமக்களைப் பாதுகாத்து, மக்கள் தங்களால் இயன்ற அளவில் கொடுக்கும் வரியை வாங்கும் அரசனுக்குப் பெருவெள்ளம்போல் செல்வம் சேரும்.
  
இன்று கொளற்பால நாளைக் கொளப்பொறான்
நின்று குறைஇரப்ப நேர்படான் - சென்றுஒருவன்
ஆவன கூறின் எயிறுஅலைப்பான் ஆறுஅலைக்கும்
வேடுஅலன் வேந்தும் அலன்.    ---  நீதிநெறி விளக்கம்.

இன்று பெற வேண்டிய வரியை நாளை வாங்கிக் கொள்ளும் பொறுமை இல்லாதவனும், ஒருவர் தன்னுடைய நிலைமையைச் சொல்லும்போது, அதை நின்று கேட்கின்ற பொறுமை இல்லாதவனும், உதவி கேட்டு வந்தவனைக் கண்டு சினந்து பல்லைக் கடிக்கும் பொறுமை இல்லாதவனும், அரசன் ஆகமாட்டான். அவனை வழிப்பறி செய்யும் கள்ளன் என்றும் சொல்ல முடியாது.

முடிப்ப முடித்து, பின் பூசுவ பூசி,
உடுப்ப உடுத்து, உண்ப உண்ணா, - இடித்து இடித்துக்
கட்டுரை கூறில் செவிக்கொளா கண்விழியா
நெட்டு உயிர்ப்போடு உற்ற பிணம்.    --- நீதிநெறி விளக்கம்.

சூடத்தக்க மலர்களைச் சூடி, பூசத்தக்க மணப்பொருள்களைப் பூசி, அணியத்தக்க ஆடை அணிகளை அணிந்து, உண்ணத்தக்க உணவுகளை உண்டு ஒரு அரசன் வாழ்ந்து, அமைச்சர்கள் இடித்து இடித்து அறிவுரை கூறியும் அவனது காதுகளில் விழவில்லை. அப்படிப்பட்ட அரசனை, கண் விழித்தபடி, பகாற்றை உள்ளே இழுத்து வெளியே விடும் பிணம் என்றுதான் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...