சிதம்பரம் - 0664. விடுங்கைக்கு ஒத்த




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

விடுங்கைக்கு ஒத்த (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
இந்த உலகில் வாழும் நாளில் நல்லறிவையும்,
பின்னர் மனம் இறந்த சமாதி நிலையையும்
அடியேனுக்கு அருளத் திருவுள்ளம் பற்றுவாயாக.


தனந்தத் தத்தன தானன தானன
     தனந்தத் தத்தன தானன தானன
          தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான
  
விடுங்கைக் கொத்தக டாவுடை யானிட
     மடங்கிக் கைச்சிறை யானஅ நேகமும்
          விழுங்கப் பட்டற வேயற லோதியர் ...... விழியாலே

விரும்பத் தக்கன போகமு மோகமும்
     விளம்பத் தக்கன ஞானமு மானமும்
          வெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர் .....விடுநாளில்

இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல்
     கிடந்திட் டுத்தம ரானவர் கோவென
          இடங்கட் டிச்சுடு காடுபு காமுன ...... மனதாலே

இறந்திட் டுப்பெற வேகதி யாயினும்
     இருந்திட் டுப்பெற வேமதி யாயினும்
          இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர ...... இசைவாயே

கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன்
     நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய
          குரங்கைச் செற்றும கோததி தூளெழ ...... நிருதேசன்

குலங்கட் பட்டநி சாசரர் கோவென
     இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய
          குமண்டைக் குத்திர ராவண னார்முடி ...... அடியோடே

பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி
     ப்ரியங் கொட் டக்கநன் மாமரு காஇயல்
          ப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரென ...... விருதூதும்

ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணி
     ப்ரபந்தத் துக்கொரு நாதச தாசிவ
          பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே.

பதம் பிரித்தல்
  
விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம்
     அடங்கி, கைச் சிறையான அநேகமும்
          விழுங்கப்பட்டு அறவே, அறல் ஓதியர்...... விழியாலே

விரும்பத் தக்கன போகமும் மோகமும்,
     விளம்பத் தக்கன ஞானமும் மானமும்,
          வெறும் சுத்தச் சலமாய் வெளியாய், உயிர் ......விடுநாளில்

இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல்
     கிடந்திட்டு, தமர் ஆனவர் கோ என,
          இடம் கட்டிச் சுடுகாடு புகாமுனம், ...... மனதாலே

இறந்திட்டுப் பெறவே கதி ஆயினும்,
     இருந்திட்டுப் பெறவே மதி ஆயினும்,
          இரண்டில் தக்கது ஒர் ஊதியம் நீ தர ...... இசைவாயே.

கொடுங்கைப்பட்ட மராமரம் ஏழ்உடன்
     நடுங்க, சுக்ரிவனோடு அமர் ஆடிய
          குரங்கைச் செற்று, மகா உததி தூள்எழ, ...... நிருதேசன்

குலம்கண் பட்ட நிசாசரர் கோ என,
     இலங்கைக்குள் தழலோன் எழ, நீடிய
          குமண்டைக் குத்திர ராவணனார் முடி ...... அடியோடே

பிடுங்கத் தொட்ட, சர அதிபனார் அதி
     ப்ரியம் கொள் தக்க நல் மாமருகா! இயல்
          ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என ...... விருதுஊதும்

ப்ரசண்டச் சொல் சிவ வேத சிகாமணி!
     ப்ரபந்தத்துக்கு ஒரு நாத! சதாசிவ
          பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே.

பதவுரை

         கொடுங்கைப் பட்ட மராமரம் ஏழுடன் நடுங்க --- நீண்ட கிளைகளை உடைய ஏழு மராமரங்களை அவற்றின் உடல்கள் நடுங்கும்படியாக அம்பை விட்டும்,

         சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய குரங்கைச் செற்று --- சுக்ரீவனுடன் போர் புரிந்த குரங்காகிய வாலியை அழித்தும்,

         மகா உததி தூள் எழ --- பெரிய கடல் வற்றி, புழுதி கிளம்பும்படி,

         நிருதேசன் குலம் கண் பட்ட நிசாசரர் கோ என --- அரக்கர் தலைவன் ஆகிய இராவணனுடைய குலத்தைச் சார்ந்த அரக்கர்கள் எல்லாம் கோ என்று அலற,

         இலங்கைக்குள் தழலோன் எழ --- இலங்கை நகருள் தீக் கடவுள் எழுந்து தீப்பற்றி எரியச் செய்ய,

         நீடிய குமண்டைக் குத்திர ராவணனார் முடி அடியோடே பிடுங்க --- செல்வம் மேலீட்டால் செருக்குண்ட, வஞ்சகம் நிறைந்த இராவணனனுடைய தலைகள் பத்தும் அடியோடு அறுபட்டு விழும்படியாக

         தொட்ட சர அதிபனார் அதி ப்ரியம் கொள் தக்க நல் மாமருகா --- செலுத்திய அம்பைக் கொண்ட இராமபிரான் மிக்க அன்பு கொண்ட நல்ல திருமருகரே!

         இயல் ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என --- இந்த உலகத்துக்கு ஒப்பற்ற கவியரசர் என்று

         விருது ஊதும் ப்ரசண்டச் சொல் சிவவேத சிகாமணி --- வெற்றிச் சின்னங்கள் முழங்குகின்ற, பெருமையுடைய சொற்களைக் கொண்ட தேவாரப் பதிகங்களை ஓதியருளிய சிவவேத சிகாமணியாகிய திருஞானசம்பந்த மூர்த்தியே!

      ப்ரபந்தத்துக்கு ஒரு நாத --- நூல் வகைகளுக்கு எல்லாம் ஒப்பற்ற தலைவரே!

     சதா சிவ --- என்றும் மங்களகரமானவரே!

       பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே ---பெரும்பற்றப் புலியூர் என்னும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

       விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம் அடங்கி --- செலுத்தும் சாமர்த்தியத்திற்குத் தக்க எருமைக் கடாவை வாகனமாக உடைய இயமன் வசத்தில் அடங்கி,

         கைச் சிறையான அநேகமும் --- கை வசம் இருந்த செல்வமும் பல பொருள்களும்

         அறல் ஓதியர் விழியாலே அறவே விழுங்கப்பட்டு --- கருமணலைப் போல் நிறம் கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் கண்களால் முற்றிலுமாக கவரப்பட்டு,

         விரும்பத் தக்கன போகமும் மோகமும் --- விரும்பி அடையத் தக்கனவான சுக போகங்களும், ஆசைகளும்,

         விளம்பத் தக்கன ஞானமும் மானமும் --- சொல்லத் தக்கனவான அறிவும், பெருமையும்,

         வெறும் சுத்த சலமாய் வெளியாய் உயிர் விடும் நாளில் --- எல்லாம் பொய்யாகி அகல, உடலை விட்டு ஆவி வெளிப்பட்டுப் போகின்ற அந்த நாளில்,

         இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல் கிடந்திட்டு ---- சுடுகாட்டில் அடுக்கப்படும் விறகு கட்டைகளுக்கு இரையாக அடியேனுடைய உடல் கிடக்கும்போது

         தமர் ஆனவர் கோ என --- சுற்றத்தார்கள் கோ என்று கதற,

         இடம் கட்டி சுடுகாடு புகாமுனம் --- சவத்தைக் கிடத்தும் இடமாகிய பாடையில் கட்டப்பட்டு சுடுகாட்டினை அடைவதற்கு முன்னே,

         மனதாலே இறந்திட்டுப் பெறவே கதி ஆயினும் --- எனது மனமானது சமாதி நிலையை அடைந்து நற்கதியைப் பெறும்படியாவது,

         இருந்திட்டுப் பெறவே மதியாயினும் --- இந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும்போதே நல்ல அறிவைப் பெறும்படியாவது,

         இரண்டில் தக்கதொர் ஊதியம் நீ தர இசைவாயே --- இரண்டில் எனக்குத் தகுந்ததான பயனை அருள்வதற்கு தேவரீரே மனம் இசைந்து அருள்வீராக.


பொழிப்புரை

         நீண்ட கிளைகளை உடைய ஏழு மராமரங்களை அவற்றின் உடல்கள் நடுங்கும்படியாக அம்பை விட்டும், சுக்ரீவனுடன் போர் புரிந்த குரங்காகிய வாலியை அழித்தும், பெரிய கடல் வற்றி, புழுதி கிளம்பும்படி, அரக்கர் தலைவன் ஆகிய இராவணனுடைய குலத்தைச் சார்ந்த அரக்கர்கள் எல்லாம் கோ என்று அலற, இலங்கை நகருள் தீக் கடவுள் எழுந்து தீப்பற்றி எரியச் செய்ய, செல்வம் மேலீட்டால் செருக்குண்ட, வஞ்சகம் நிறைந்த இராவணனனுடைய தலைகள் பத்தும் அடியோடு அறுபட்டு விழும்படியாக செலுத்திய அம்பைக் கொண்ட இராமபிரான் மிக்க அன்பு கொண்ட நல்ல திருமருகரே!

         இந்த உலகத்துக்கு ஒப்பற்ற கவியரசர் என்று வெற்றிச் சின்னங்கள் முழங்குகின்ற, பெருமையுடைய சொற்களைக் கொண்ட தேவாரப் பதிகங்களை ஓதியருளிய சிவவேத சிகாமணியாகிய திருஞானசம்பந்த மூர்த்தியே!

         நூல் வகைகளுக்கு எல்லாம் ஒப்பற்ற தலைவரே!

      என்றும் மங்களகரமானவரே!

         பெரும்பற்றப் புலியூர் என்னும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         செலுத்தும் சாமர்த்தியத்திற்குத் தக்க எருமைக் கடாவை வாகனமாக உடைய இயமன் வசத்தில் அடங்கி, கை வசத்திலிருந்த செல்வமும் பல பொருள்களும், கருமணலைப் போல் நிறம் கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் கண்களால் முற்றிலுமாக கவரப்பட்டு, விரும்பி அடையத் தக்கனவான சுக போகங்களும், ஆசைகளும், சொல்லத் தக்கனவான அறிவும், பெருமையும், எல்லாம் பொய்யாகி அகல, உடலை விட்டு ஆவி வெளிப்பட்டுப் போகின்ற அந்த நாளில், சுடுகாட்டில் அடுக்கப்படும் விறகு கட்டைகளுக்கு இரையாக அடியேனுடைய உடல் கிடக்கும்போது சுற்றத்தார்கள் கோ என்று கதற, சவத்தைக் கிடத்தும் இடமாகிய பாடையில் கட்டப்பட்டு சுடுகாட்டினை அடைவதற்கு முன்னே, எனது மனமானது சமாதி நிலையை அடைந்து நற்கதியைப் பெறும்படியாவது, இந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும்போதே நல்ல அறிவைப் பெறும்படியாவது, இரண்டில் எனக்குத் தகுந்ததான பயனை அருள்வதற்கு தேவரீரே மனம் இசைந்து அருள்வீராக.

      
விரிவுரை

கைச் சிறையான அநேகமும் அறல் ஓதியர் விழியாலே அறவே விழுங்கப்பட்டு ---

கை வசத்திலிருந்த செல்வமும் பல பொருள்களும் கருமணலைப் போல் நிறம் கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் கண்களால் முற்றிலுமாக கவரப்பட்ட நிலையை அடிகாளர் அறிவுறுத்துகின்றார்.

சத்தியம் தவறாது இருப்பவர் இடத்தினில்
     சார்ந்து திருமாதுஇருக்கும்;
சந்ததம் திருமாது இருக்கும் இடந்தனில்
     தனது பாக்கியம் இருக்கும்;

மெய்த்துவரு பாக்கியம் இருக்கும் இடந்தனில்
     விண்டுவின் களை இருக்கும்;
விண்டுவின் களைபூண்டு இருக்கும் இடந்தனில்
     மிக்கான தயையிருக்கும்;

பத்தியுடன் இனியதயை உள்ளவர் இடந்தனில்
     பகர்தருமம் மிகஇருக்கும்;
பகர்தருமம் உள்ளவர் இடந்தனில் சத்துரு
     பலாயனத் திறல்இருக்கும்;

வைத்திசை மிகுந்ததிறல் உள்ளவர் இடத்தில்வெகு
     மன்னுயிர் சிறக்கும் அன்றோ?
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

சீலமும் சத்தியமும் ஒன்றே. சீலம் உள்ள இடத்தில் சத்தியம் இருக்கும். சத்தியம் உள்ள இடத்தில் சீலம் இருக்கும். சீலம் உள்ள இடத்தில் தருமம் இருக்கும். தருமம் இருக்குமிடத்தில் சத்தியம் இருக்கும். சத்தியம் இருக்குமிடத்தில் ஒழுக்கம் இருக்கும். ஒழுக்கம் இருக்குமிடத்தில் பலம் இருக்கும். பலமுள்ள இடத்தில் லட்சுமியிருப்பாள். சீலம் இல்லையானால் இத்தனையும் இருக்கமாட்டா. ஆகவே சீலத்தை யாவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்திரன் சீலத்தை பெற விரும்பினான். பிரமதேவரிடம் சென்று சீலத்தை அருள வேண்டும் என்று கேட்டான். பிரமதேவர் “இந்திரனே! சீலம் மிகவும் உயர்ந்தது. அது பிரகலாதரிடம் தங்கி இருக்கின்றது. அவரிடம் சென்று பெறக் கடவாய்” என்றார்.

இந்திரன் பிரகலாதரிடம் வந்து, பலகாலம் பணிவிடை புரிந்தான். அவன் பணிவிடையால் மனம் மகிழ்ந்த பிரகலாதர், ”இந்திரனே! உனக்கு என்ன வேண்டும் கேள். தருகிறேன்” என்றார். இந்திரன் அவரைப் பணிந்து “ஞானசீலரே! தங்களிடம் சீலம் என்ற ஒன்றை யாசிக்கிறேன்” என்றான்.

பிரகலாதர் உடனே “நல்லது, சீலத்தைத் தந்தேன்” என்றார். பிரகலாதரிடம் இருந்து ஓர் ஒளி உருவம் புறப்பட்டு இந்திரன் மேனியில் அடங்கியது. அந்த ஒளியுருவத்தைப் பிரகலாதர் பார்த்து, “நீ யார்?” என்று கேட்டார், “நான் சீலம்” என்று கூறியது அது. பின்னர் பிரகலாதர் உடம்பிலிருந்து மற்றொரு உருவம் புறப்பட்டது. “நீ யார்?” என்றார். நான் தருமத்தின் அதி தேவதை; சீலமில்லாத இடத்தில் இருக்கமாட்டேன்” என்று கூறி, அவ்வொளியுருவம் இந்திரன்பால் சென்று மறைந்தது.

அடுத்து ஒரு ஒளியுருவம் அவர் மேனியிலிருந்து புறப்பட்டது. “நீ யார்?” என்று வினவினார். “நான் சத்தியம் தருமம் இல்லாத இடத்தில் என்னால் இருக்கமுடியாது’ என்று கூறி இந்திரன் மேனியில் அடங்கியது. அதற்குப்பின் பிரகலாதரிடமிருந்து மற்றோர் ஒளியுருவம் புறப்பட்டது. “நீ யார்?” என்று அவர் கேட்டார். “நான் ஒழுக்கம்; சத்தியத்தை விட்டு நான் பிரிந்திருக்க மாட்டேன்” என்று கூறி மறைந்தது.

அடுத்து ஒரு ஒளியுருவம் புறப்பட்டது. கண் கூசும் படியான அதனைப் பார்த்து பிரகலாதர், “நீ யார்?” என்றார். “நான் பலம்; ஒழுக்கமில்லாத இடத்தில் பலமாகிய நான் இருக்க மாட்டேன்” என்றது.

பின்னர், ஓர் அழகிய பெண் உருவம் ஒளிமயமாகப் புறப்பட்டது. “அம்மா! நீயார்?” என்று கேட்டார் “நான் மகாலட்சுமி; பலமில்லாத இடத்தில் நான் இருப்பதில்லை” என்று கூறி மறைந்தது.

ஆகவே, லட்சுமியுள்ள இடத்தில் வலிமையும், வலிமையுள்ள இடத்தில் ஒழுக்கமும், ஒழுக்கமுள்ள இடத்தில் சத்தியமும், சத்தியமுள்ள இடத்தில் தருமமும், தருமமுள்ள இடத்தில் சீலமும் இருக்கும். இத்தனைக்கும் சீலமே ஆணிவேர்.

மேலேகூறிய நலன்களில் அன்பு வைக்காமல், காமத்தின் மீதும், குரோதத்தின் மீதும், ஐம்பூத பரிணாமங்களின் மீதும், மிக்க ஆசை வைத்து வாழ்வது கூடாது.

உடம்பையே பெரிதாக நிலைத்திருக்கும் என்று எண்ணி, அதை வளர்க்கவும் அழகு படுத்தவும் பொருள்களைத் தேடி, உடல் வளத்தால் காமம் மீதூரப்பட்டு, உடல் அழகைக் காட்டி மயக்கும் விலைமாதர் பின் சென்று, நறுமலர் சூடி விளையாடி, மேல் கரம் மேவ விட்டு, முலை தொட்டு வாழ்ந்து, அவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம், இதுவை கைகண்ட பலன் என்று வாழ்ந்து அருமையாக ஈட்டிய பொருளை எல்லாம் இழந்த நிலையை ஆடவர் அடைவர்.

செம்மையில் அறம் செய்யாதார் திரவியம் இப்படித்தான் சிதறும் என்று விவேக சிந்தாமணி கூறுகின்றது.

அன்னையே அனைய தோழி! அறந்தனை வளர்க்கும் மாதே!
உன்னையோர் உண்மை கேட்பேன், உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்,
என்னையே புணருவோர்கள் எனக்கும் ஓர் இன்பம் நல்கி,
பொன்னையும் கொடுத்து, பாதப் போதினில் வீழ்வது ஏனோ?

பொம்எனப் பணைத்து விம்மிப் போர்மதன் மயங்கி வீழும்
கொம்மைசேர் முலையினாளே! கூறுவேன் ஒன்று, கேண்மோ,
செம்மையில் அறம் செய்யாதார் திரவியம் சிதற வேண்டி,
நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தவாறே!

இதனை, இரத்தினச் சுருக்கமாக, இரண்டு வகையான மனத்தை உடைய விலைமாதரும், கள்ளும், சூதாட்டமும் ஆகியவை திருமகளால் புறக்கணிக்கப்பட்டாருடைய தொடர்புகள் என்றார் திருவள்ளுவ நாயனார்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
   
விரும்பத் தக்கன போகமும் மோகமும், விளம்பத் தக்கன ஞானமும் மானமும், வெறும் சுத்த சலமாய் வெளியாய் ---

சலம் - பொய். நிலையில்லாதது

கொலை அஞ்சார், பொய்ந் நாணார், மானமும் ஓம்பார்,
களவு ஒன்றோ? ஏனையவும் செய்வார், - பழியோடு
பாவம் இஃது என்னார், பிறிது மற்று என் செய்யார்?
காமம் கதுவபட் டார்.                            

என்றது நீதிநெறி விளக்கம்.

காமவெறி கொண்டவர்கள்கொலை செய்ய அஞ்சமாட்டார்கள். பொய் சொல்ல நாணமாட்டாரகள். மானத்தைக் காத்துக் கொள்ள மாட்டார்கள். திருட்டுத் தொழில் மட்டுமல்ல, மற்ற இழி தொழில்களையும் செய்யத் தலைப்படுவார்கள். பழிக்கும் பாவத்துக்கும் இடமான செயல் ஆயிற்றே என்று தெரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்களின் எண்ணத்திற்குத் தடையாக எது வந்தாலும், அதை நீக்குவதற்கு, தகாத செயல்கள் செய்யவும் தயங்கமாட்டார்கள் என்கிறது இந்தப் பாடல்.

அவ்வாறு காமம் மீதூரப்பட்டால், அறிவு, பொருள், கல்வி ஆகியவை யாவும் அழிவுறும் என்கின்றார்

நண்டுசிப்பி வேய்கதலி நாசம் உறும் காலத்தில்
கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல், - ஒண்தொடீ
போதம் தனம் கல்வி பொன்றவரும் காலம், அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.             ---  நல்வழி.

நண்டும், சிப்பியும், மூங்கிலும், வாழையும் அழிவு அடையும் காலத்திலே, முறையே தாம் கொண்ட குஞ்சும், முத்தும், அரிசியும், குலையும் ஆகியவற்றை ஈனும். அதுபோல,
அறிவும், செல்வமும், கல்வியும் அழிந்து போகும் காலம் வரும்போது, பிற மகளிர் மேல் ஆசையை வைப்பார்கள் ஆடவர்கள்.

மருவஇனிய சுற்றமும், வான்பொருளும், நல்ல
உருவும், உயர்குலமும் எல்லாம், - திருமடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும், அவள்பிரிந்து
போம்போது அவளொடு போம்.                --- மூதுரை.

தழுவிய இனிய உறவும், மேலான பொருளும், நல்ல அழகும், உயர்வாகிய குலமும் என்னும் இவையெல்லாம், சீதேவி வந்து கூடும் பொழுது, அவளுடனே வந்து கூடும். அவள் நீங்கிப் போகும் பொழுது, அவளுடனே நீங்கிப் போகும்.

ஆகவே, விரும்பத் தக்கன போகமும் மோகமும், விளம்பத் தக்கன ஞானமும் மானமும் நிலைபெறாமல் நீங்கிவிடும் என்கின்றார் அடிகளார்.

உயிர் விடும் நாளில்....... இடம் கட்டி சுடுகாடு புகாமுனம் ---

வாழ்நாள் முடிவு வருகின்ற காலத்தில் உயிரானது, எல்லாம் இழந்த நிலையில், பெற்றார்கள் சுற்றி அழ, உற்றார்கள் மெத்த அழ, காலன் கைப்பட்டு, உடலை விட்டு நீங்கும்.  உயிர் நீங்கிய உடலை, முருட்டு மெத்தையில் கிடத்துவதற்காக, பாடையில் கட்டி எடுத்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் சுமந்து செல்வார்கள்.

அந்த நிலை வரும் முன்னர் உயிரானது தான் பெறவேண்டிய கதியைப் பெறவேண்டும்.

மனதாலே இறந்திட்டுப் பெறவே கதி ஆயினும்,  
இருந்திட்டுப் பெறவே மதியாயினும் ---

உடலோடு வாழுகின்ற காலத்தில், நல்லறிவைப் பெறவேண்டும். நல்லறிவு பெற்றதின் பலனாக மன அடக்கத்தை அடைய வேண்டும்.

இரண்டில் தக்கதொர் ஊதியம் நீ தர இசைவாயே --- 

இரண்டில் எனக்குத் தகுந்ததான பயனை அருள்வதற்கு தேவரீரே மனம் இசைந்து அருள்வீராக என்று அடிகளார் வேண்டுகின்றார்.

தாயுமானார் வேண்டுவதை இங்கே காண்போம்.

வாதனைப் பழக்கத்தோடு மனம், அந்த மனத்தால்
ஓத வந்திடும் உரை, உரைப்படி தொழில் உளவாம்,
ஏதம் அம் மனம் யாயை என்றிடில், கண்ட எல்லாம்
ஆதரம் செயாப் பொய் அதற்கு ஐயம் உண்டாமோ.

ஐய, வாதனைப் பழக்கமே மனம் நினைவது தான்,
வையம் மீதினில் பரம்பரை யாதினும் மருவும்
மெய்யில் நின்று, ளிர் பெரியவர் சார்புற்று விளங்கி,
பொய்அது என்பதை ஒருவி, மெய் உணருதல் போதம்.

குலம் இலான்,குணங் குறிஇலான், குறைவு இலான், கொடிதாம்
புலம் இலான், தனக்கு என்ன ஒர் பற்று இலான், பொருந்தும்
இலம் இலான், மைந்தர் மனைவி இல்லான் எவன், அவன் சஞ்-
சலம் இலான், முத்தி தரும் பரசிவன் எனத் தகுமே.

கடத்தை மண் எனல் உடைந்த போதோ? இந்தக் கருமச்
சடத்தைப் பொய் எனல் இறந்த போதோ,?சொலத் தருமம்,
விடத்தை நல் அமிர்தா உண்டு பொன்பொது வெளிக்கே
நடத்தைக் காட்டி, எவ் உயிரையும் நடப்பிக்கும் நலத்தோய்.
  
நான் எனவும் நீ எனவும் இருதன்மை
     நாடாமல், நடுவே சும்மா
தான் அமரும் நிலை இதுவே சத்தியம், சத் -
     தியம் என நீ தமியனேற்கு
மோனகுரு ஆகியும் கை கட்டினையே,
     திரும்பவும் நான் முளைத்துத் தோன்றி
மானத மார்க்கம் புரிந்து இங்கு அலைந்தேனே,
     பரந்தேனே, வஞ்ச னேனே.

தன்மயம், சுபாவம், சுத்தம், தன்னருள் வடிவம், சாந்தம்,
மின்மய மான அண்ட வெளி உருவான பூர்த்தி,
என்மயம் எனக்குக் காட்டாது, னை அபகரிக்க வந்த
சின்மயம் அகண்டா காரம், தட்சிண ஆதிக்க மூர்த்தம்.

சிற்ற ரும்பன சிற்றறி வாளனே! தெளிந்தால்
மற்று அரும்பு என மலர் எனப் பேரறிவு ஆகி,
கற்று அரும்பிய கேள்வியால் மதித்திட, கதிச்சீர்
முற்று அரும்பிய மௌனியாய்ப் பரத்திடை முளைப்பான்.

மயக்கு சிந்தனை, தெளிவு என, இருநெறி வகுப்பால்
நயக்கும் ஒன்றன்பால் ஒன்று இலை எனல்நல வழக்கே,
இயக்கம் உற்றிடும் மயக்கத்தில் தெளிவுறல் இனிதாம்,
பயக்க வல்லதோர் தெளிவு உடையவர்க்கு எய்தல் பண்போ?.

அருள்வடிவு ஏழும் மூர்த்தம்,
     அவைகள் சோபானம் என்றே
சுருதி சொல்லிய ஆற்றாலே,
     தொழும் தெய்வம் எல்லாம் ஒன்றே,
மருள் எனக்கு இல்லை, முன்பின்
     வருநெறிக்கு இவ் வழக்குத்
தெருளின் முன்னிலை ஆம் உன்னைச்
     சேர்ந்து யான் தெளிகின்றேனே.

எத்தனைப் பிறப்போ? எத்தனை இறப்போ?
     எளியேனேற்கு இதுவரை அமைத்தது,
அத்தனை எல்லாம் அறிந்த நீ அறிவை,
     அறிவிலி அறிகிலேன், அந்தோ!
சித்தமும் வாக்கும் தேகமும் நினவே
     சென்மமும் இனி எனால் ஆற்றா,
வைத்திடு இங்கு என்னை நின்னடிக் குடியா,
     மறைமுடி இருந்த வான் பொருளே.

வான்பொருள் ஆகி எங்கும் நீ இருப்ப,
    வந்து எனைக் கொடுத்து, நீ ஆகாது,
ஏன்பொருள் போலக் கிடக்கின்றேன், முன்னை
    இருவினை வாதனை அன்றோ?
தீன்பொருள் ஆன அமிர்தமே! நின்னைச்
    சிந்தையில் பாவனை செய்யும்
நான்பொருள் ஆனேன், நல்லநல் அரசே!
    நான் இறந்து இருப்பது நாட்டம்.

நாட்டம் மூன்று உடைய செந்நிற மணியே!
    நடுவுறு நாயக விளக்கே!
கோட்டம்இல் குணத்தோர்க்கு எளிய நிர்க்குணமே!
    கோது இலா அமிர்தமே! நின்னை
வாட்டம் இல் நெஞ்சம் கிண்ணமாச் சேர்த்து
    வாய்மடுத்து அருந்தினன், ஆங்கே
பாட்டுஅளி நறவம் உண்டு அயர்ந்தது போல்
    பற்று அயர்ந்து இருப்பது எந்நாளோ.

 என்னுடை உயிரே! என் உளத்து அறிவே!
    என்னுடை அன்பு எனும் நெறியாய்!
கன்னல் முக்கனி தேன் கண்டு, மிர்து என்னக்
    கலந்து, னை மேவிடக் கருணை
மன்னிய உறவே! உன்னை நான் பிரியா
    வண்ணம் என் மனம் எனும் கருவி
தன்னது வழி அற்று என் உழைக் கிடப்பத்
    தண் அருள் வரம்அது வேண்டும்.

கொடுங்கைப் பட்ட மராமரம் ஏழுடன் நடுங்க, சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய குரங்கைச் செற்று ---

பாதலம் வரை வேர் பாய்ந்து, மீதலம் வரை ஓங்கி உயர்ந்து, ஏழு கோணங்களில் நின்ற வயிரம் பெற்ற மரங்கள். இந்த ஆச்சா மரங்களை அவற்றின் உடல் நடுங்கும்படியாக ஒரே பாணத்தால் பிளந்து அழித்தார் இராமபிரான்.

நிகர் ஒன்றுமில் வலிய திறன் வாலி ---

சமான மில்லாத பேராற்றல் படைத்தவன் வாலி. கடல் கடைந்த அவ்வலிய வாலியின் உடல் கடைந்தது ராமருடைய கணை.

மகா உததி தூள் எழ ---

தென் கடற்கரையில் இராமர் தர்ப்ப சயனத்தில் படுத்துக் கடலில் அணைக் கட்டிக் கடக்கும் பொருட்டு வருணனை வழி வேண்டினார். ஏழுநாள் இவ்வாறு வருணனை வேண்டியும் அவன் வராமையால் சினந்து அக்கினிக் கணையை விடுத்து கடலை நடுங்க வைத்தார்.

நிருதேசன் குலம் கண் பட்ட நிசாசரர் கோ என, இலங்கைக்குள் தழலோன் எழ ---

அரக்கர் குலத் தலைவன் ஆகிய இராவணனுடைய குலத்தையும் அவனைச் சார்ந்த அரக்கருகள் அனைவரையும் சார்ந்த கோ என்று அலறும்படியா, இலங்கை நகருள் தீக் கடவுள் எழுந்து தீப்பற்றி எரியச் செய்தார் அநுமன்.

இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கு அருள்
     இல் எங்கணும் இலங்கு என ...... முறை ஓதி,

இடுங்கனல், குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட,
     எழுந்தருள் முகுந்தன்நன் ...... மருகோனே!
                                                    --- (தலங்களில் வரும்கன) திருப்புகழ்.

நீடிய குமண்டைக் குத்திர ராவணனார் முடி அடியோடே பிடுங்கத் தொட்ட சர அதிபனார் அதி ப்ரியம் கொள் தக்க நல் மாமருகா ---

செல்வம் மேலீட்டால் செருக்கும், வஞ்சமும் கொண்டிருந்து இராவணனனுடைய தலைகள் பத்தும் அடியோடு அறுபட்டு விழும்படியாகச் செலுத்திய அம்பைக் கொண்ட இராமபிரான் மிக்க அன்பு கொண்ட நல்ல திருமருகரே!

பத்துத்தலை தத்தக் கணை-தொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருது, ஒரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ......   இரவுஆகப்

பத்தற்கு இரதத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகு பொருள்
          பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ...... ஒருநாளே..
                                                                  --- (முத்தைத்தரு) திருப்புகழ்.
        
வடிவுடைய மானும், இகல் கரனும், திகழ்
     எழுவகை மராமரமும், நிகர் ஒன்றும்இல்
     வலிய திறல் வாலி உரமும், நெடுங்கடல் .... அவைஏழும்
  
மற நிருதர் சேனை முழுதும் இலங்கைமன்
     வகை இரவி போலும் மணியும், அலங்க்ருத
     மணிமவுலி ஆன ஒருபதும், விஞ்சு இரு ...... பதுதோளும்

அடைவலமும் மாள விடு சர அம்புஉடை
     தசரத குமார, ரகுகுல புங்கவன்,
     அருள்புனை முராரி மருக!.....                  --- (விடமும் வடிவேலும்) திருப்புகழ்.

எனது மொழி வழுவாமல் நீ ஏகு கான் மீதில்,
     என விரகு குலையாத மாதாவும் நேர் ஓத,
          இசையும் மொழி தவறாமலே ஏகி, மாமாதும், ...... இளையோனும்,

இனிமையொடு வரும் மாய மாரீச மான் ஆவி
     குலையவரு கர தூஷணா வீரர் போர்மாள,
          இறுகி நெடு மரம் ஏழு தூளாகவே, வாலி ......  உயிர்சீறி,

அநுமனொடு கவி கூட வாராக நீர் ஆழி
     அடைசெய்து, அணை தனில் ஏறி, மாபாவி ஊர்மேவி,
          அவுணர்கிளை கெடநூறி, ஆலால மாகோப ...... நிருதஈசன்

அருணமணி திகழ்பார வீராகரா மோலி
     ஒருபதும் ஒர் கணை வீழவே மோது போராளி,
          அடல்மருக! குமரேச! மேலாய வானோர்கள் ...... பெருமாளே.
                                                                     --- (குனகிஒரு) திருப்புகழ்.


இயல் ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என விருது ஊதும் ப்ரசண்டச் சொல் சிவவேத சிகாமணி ---

திருஞானசம்பந்தப் பெருமானை, சிவவேத சிகாமணி என்கின்றார் அடிகளார்.

பூவுலகிற்கு திருஞானசம்பந்தப் பெருமானே தலைவர். அவரை ஒப்பாரும் மிக்காரும் இல்லை. பெருந்தலைவர் என்பதற்கு அடையாளம் சிவிகை, சின்னம், விருது இவைகள் இருத்தல் வேண்டும். ஏனைய தலைவர்கள் இவைகளைத் தாமே தயார் செய்து கொள்வார்கள். நம் திருஞானசம்பந்தத் தலைவருக்குச் சிவபெருமானே சிவிகை, சின்னம், முதலியவைகளைத் தந்தருளினார்.

திருஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துச் சிவிகை அருளியது

பாலறாவாயராகிய நம் திருஞானசம்பந்தப் பெருமானார் திருப்பெண்ணாகடத் திருத்தூங்கானை மாடம் என்னும் திருத்தலத்தைத் தொழுது, திருவரத்துறை என்னும் அரும்பதியை வணங்க விரும்பிச் செல்லும்போது, இதற்கு முன்பு எல்லாம் தமது திருத் தாதையரது தோளின் மேல் அமர்ந்தருளும் நியமம் ஒழிந்து, தமது பாதபங்கயம் சிவந்து வருந்த, மெல்ல மெல்ல நடந்து சென்று மாறன்பாடி என்னுந் திருத்தலத்தை அடையும்போது அப்பரம குருமூர்த்தியின் திருவடித் தளர்வினைக் கண்டு வருந்தினான் போல் சூரியன் மேற்கடலில் வீழ்ந்தனன்.

வெம்பந்தம் நீக்கும் நம் சம்பந்தப் பிள்ளையார் அன்றிரவு அப்பதியில் திருவஞ்செழுத்தை ஓதித் தங்கினார். திருவரத்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், திருஞானசம்பந்தப் பெருமானுடைய திருவடியின் வருத்தத்தைப் பொறாதவராய், ஏறுதற்கு முத்துச் சிவிகையும், மணிக்குடையும், கூறி ஊதக் குலவு பொற்சின்னங்களும் அமைத்துக் கொடுக்கத் திருவுளம் கொண்டு, அவ்வூர் வாழும் மேலோர் கனவில் தோன்றி,

ஞானசம்பந்தன் நம்பால் அணைகின்றான். அவனுக்குத் தருமாறு முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் முத்துச் சின்னங்களும் நம் திருக்கோயிலில் வைத்திருக்கின்றோம். நீங்கள் அவைகளை அவன்பால் கொண்டு கொடுங்கள்” என்று பணித்தருளினார்.

ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்,
மான முத்தின் சிவிகை மணிக்குடை
ஆள சின்னம் நம்பால் கொண்டு, அருங்கலைக்
கோன், அவன்பால் அணைந்து கொடும் என.   --- பெரியபுராணம்.

அவர்கள் ஆலமுண்ட அண்ணலின் திருவருளையும் திருஞானசம்பந்தருடைய பெருமையையும் உன்னி உள்ளத்தில் உவகையும் வியப்பும் எய்தி, நீராடி விடியற்காலை திருக்கோயிலின் திருக்கதவம் திறந்து பார்க்க, அவைகள் அவ்வாறிருக்கக் கண்டு மிகவும் விம்மிதமுற்று, அவைகளை எடுத்துக் கொண்டு, திருஞானசம்பந்தப் பெருமானை எதிர்கொண்டு சென்றனர்.

சிவபெருமான் திருஞானசம்பந்தர் கனவிலும் சென்று, “குழந்தாய்! முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் முத்துச் சின்னங்களும் உனக்குத் தந்தனம். அவைகளைக் கொண்டு நம் பதிகள் தோறும் வருக” என்று கட்டளை இட்டருளினார்.

இத்தலை இவர் இன்னணம் ஏகினார்,
அத்தலைச் சண்பை நாதர்க்கும் அவ்விரா
முத்தநல் சிவிகை முதலு ஆயின
உய்த்து அளிக்கும் படிமுன் உணர்த்துவார்.

அள்ளல் நீர்வயல் சூழும் அரத்துறை
வள்ளலார், "நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை
கொள்ளல் ஆகும், கொண்டு உய்த்தல் செய்வாய்"என
உள்ளவாறுஅருள் செய்ய உணர்ந்தபின்.   --- பெரியபுராணம்.

திருஞானசம்பந்த அடிகள் கண் துயிலுணர்ந்து, எந்தையாரது எளிவந்த வான் கருணையை உன்னி, உள்ளம் உவந்து, நீராடி திருவரத்துறைக்கு வருவாராயினார்.

அவ்வூர் வாசிகள் எதிர்கொண்டு திருவடியில் வீழ்ந்து பணிந்து பாம்பணிந்த பரமனது கட்டளையை விண்ணப்பித்தனர். திருஞானசம்பந்த மூர்த்தி அவைகள் இறைவன் திருவருள் மயமாதலால் சோதி முத்தின் சிவிகையை வலம் வந்து நிலமுறப் பணிந்து, அச் சிவிகையின் ஒளி வெண்ணீறு போன்று விளங்கலால் அதனையும் துதித்து, அச் சிவிகை திருவருள் வடிவாதலின் திருவஞ்செழுத்தை ஓதி எல்லா உலகமும் ஈடேற அதன் மீது எழுந்தருளினார்.

சோதி முத்தின் சிவிகை சூழ்வந்து, பார்
மீது தாழ்ந்து, வெண்ணீற்று ஒளி போற்ற நின்று,
ஆதியார் அருள் ஆதலின், அஞ்செழுத்து
ஓதி, ஏறினார், உய்ய உலகு எலாம்.      --- பெரியபுராணம்.

முத்துச் சின்னங்கள் முழங்கின; அடியவர் அரகர முழக்கஞ் செய்தனர். முத்துக் குடைகள் நிழற்றின. வேதங்கள் முழங்கின. புங்கவர் பூமழை பொழிந்தனர்.

பல்குவெண் கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப்
புல்கு நீற்றுஒளி யுடன்பொலி புகலி காவலனார்
அல்கு வெள்வளை அலைத்து எழு மணிநிரைத் தரங்கம்
மல்கு பாற்கடல் வளர்மதி உதித்தென வந்தார்.    --- பெரியபுராணம்.

இதுவேயுமன்றி, அரசன் எதையும் தனது ஆணையால் நடாத்துவான் “இது என் ஆணை” என்று கட்டளையிடுவான்; அதேபோல் நம் அருட்பெருந்தலைவரும் “ஆணை நமதே” என்று கூறுமாறு காண்க.

நடுஇருள்ஆடும் எந்தை நனி பள்ளிஉள்க
   வினை கெடுதல் ஆணை நமதே”        --- (திருநனிபள்ளி) தேவாரம்.

ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
   அரசாள்வர் ஆணை நமதே”              --- (கோளாறு திருப்பதிகம்) தேவாரம்.

கருத்துரை

முருகா! இந்த உலகில் வாழும் நாளில் நல்லறிவையும், பின்னர் மனம் இறந்த சமாதி நிலையையும் அடியேனுக்கு அருளத் திருவுள்ளம் பற்றுவாயாக.



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...