நூலறிவும் நுண்ணறிவும்

நூலறிவும், நுண்ணறிவும்

-----


"முற்றும் உணர்ந்தவர் இல்லை, முழுவதுஉம் 

கற்றனம் என்று களியற்க,-சிற்றுளியால் 

கல்லும் தகரும், தகரா, கனங்குழாய்! 

கொல் உலைக் கூடத்தினால்” 


குமரகுருபர அடிகளார் பாடி அருளிய ‘நீதிநெறி விளக்கம்’ என்னும் நூலில் இவ்வாறு ஒரு பாடல் அமைந்து உள்ளது.


இதன் பொருள் --- பளுவான காதணியை உடைய பெண்ணே!, எல்லாவற்றையும் நன்கு கற்று அறிந்தவர் உலகத்தில் ஒருவரும் இல்லை. ஆதலால், நாம் எல்லாவற்றையும் கற்று விட்டோம் என்று செருக்குக் கொள்ளாதே. ஏனென்றால், மிகச் சிறிய உளியினால் மலைகளும் உடையும். ஆனால் கொல்லனுடைய உலைக்களத்தில் உள்ள சம்மட்டியினால் மலைகளும் உடையா.


“பல கற்றோம் யாம் என்று தற்புகழ வேண்டா;

அலா்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்;

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்கு

அச்சாணி அன்னதோர் சொல்.”


என்கிறது ‘அறநெறிச்சாரம்’ என்னும் நூல்.


இதன் பொருள் ---


"நான் பல நூல்களைக் கற்றுவிட்டேன்" என்று செருக்குக்  கொள்ள வேண்டாம். பரந்து விரிந்த கதிர்களை உடைய சூரியனை, கையில் வைத்திருக்கும் சிறிய குடையும் மறைத்துவிடும். அதுபோல, பல நூல்களையும் ஆராய்ந்து அறிந்தவர்கட்கும் தேவையான அச்சாணி போன்ற இன்றியமையாத உறுதிச் சொல், சில நூல்களைக் கற்றவர் இடத்தும் உண்டு.


“கடலே அனையம் யாம் கல்வியால் என்னும்

அடல்ஏறு அனைய செக்கு ஆழ்த்தி – விடலே,

முனிக்கரசு கையால் முகந்து முழங்கும்

பனிக்கடலும் உண்ணப் படும்.”            — நன்னெறி


இதன் பொருள் ---


அலை ஒலிக்கின்ற குளிர்ந்த கடலும் முனிவர்களுக்குத் தலைவராகிய அகத்திய முனிவர் கையால் மொண்டு உண்ணப்பட்டது. ஆதலால், நாம் கல்வியால் பெரிய கடலை ஒத்து உள்ளோம் என்று எண்ணுகிற, வலிமை மிகுந்த ஆண் சிங்கத்தினது செருக்கைப் போலும், செருக்கிலே அமிழ்ந்து விடாது இருக்கவேண்டும்.


முனிவர்களுக்கு அரசர் என்று போற்றப்படுபவர் அகத்தியர். அவர் குள்ளமான உருவம் கொண்டவர். அந்தக் குள்ளமான உருவம் கொண்ட அகத்தியர் பெரிய கடலையே குடித்துவிட்டார் என்னும் புராணக் கருத்து இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாரகன் முதலான அசுரர்கள் கடலில் மறைந்து கொண்டு, அவ்வப்போது தேவர்கள் முதலானவர்களுக்குத் துன்பம் செய்து வந்தனர். அந்தக் தாரகன் முதலான அசுரர்களை வெளியேற்றுவதற்காக அகத்தியர் கடலைக் குடித்தார் என்று மச்சபுராணம் தெரிவிக்கிறது. பெரிய கடலைக் கூட, குள்ளமான உருவம் கொண்ட அகத்தியர் குடித்துவிட்டார். எனவே, கடல் அளவு மிகுதியான கல்வி அறிவு உடையவன் என்று ஆணவம் கொள்ளக்கூடாது.


இவ்வாறே அறவோர் பலரும் அறவுரைகளைத் தத்தம் நூல்களில் காட்டியுள்ளனர். கல்வி, அறிவு, அவற்றின் வழியே பெறும் உணர்வு, இவற்றால் ஆய பயன் அனைத்தும் அளவிடற் கரியன. ஆயினும் உலகில் சிலர், “முந்திரிமேல் காணி மிகினும் கீழ்தன்னை  இந்திரனாப் போற்றி விடும்” என்ற ‘நாலடியார்’ வாக்கின்படி சிறிது கற்று விட்டால் தனக்குத் தானே நிகர் என்று தருக்கி வாழ்பவர் இன்று மட்டுமின்றிப் பழங்காலத்திலேயும் வாழ்ந்திருக்கின்றனர். ஆளவந்தார், மெய்கண்டார் வரலாறுகள் இந்த உண்மையினை உணர்த்துகின்றன. சிறிதளவு கற்று அதனாலேயே அகங்காரம் கொண்டவர் துன்பமே அடைவர் என்பது உலகறிந்த உண்மை. 


“எண் எழுத்து இகழேல்” என்பதும், "எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்" என்பதும் ஔவையார் அருள்வாக்கு. “எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ் இரண்டும், கண் என்ப வாழும் உயிர்க்கு” என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு. உலகத்து மக்கள் அறிவு பெறவேண்டி, எண் என்று சொல்லுவனவும், எழுத்து என்று சொல்லுவனவும் ஆகிய நூல்களைப் பயிலவேண்டியது இன்றியமையாதது ஆகின்றது. கல்வியாகிய கண் மேலும் விளக்கம் பெறுவது, கற்றதனால் பெற்ற அறிவால். நுண்ணறிவு வாய்க்கப் பெற்றவர்க்கு நூல் வேண்டியது இல்லை. “நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந்தோர்க்கே” என்பது அப்பர் அருள் வாக்கு. ஒருவனுக்கு வறுமை என்று சொல்லப்படுவது எது என்றால், “நுண்ணுர்வு இன்மையே” என்கிறாது நாலடியார். “நுண்ணுர்வு இன்மை வறுமை, அது உடைமை பண்ணப் பணைத்த பெரும் செல்வம்” என்பது நாலடியார்.


நீர் வேண்டும் என்று கிணறு எடுக்கத் தொடங்கினால், நீர் வெளிப்படும் அளவும் தோண்டுதல் வேண்டும். தோண்டத் தோண்ட மென்மேலும் மிகுதியாக நீர் ஊற்றெடுக்கும். அதுபோல, சிறிதளவு கற்று, அது போதும் என்று விட்டுவிடாமல், மேலும் மேலும் கற்றுத் தெளிதல் வேண்டும் அறிவுக்கு எல்லை இல்லை. அதுபோல, நீரால் சூழப்பட்டுள்ள உலகத்தில் நீருக்கும் குறைவில்லை. கிணறு தோண்டினால், நாளும் எடுக்க எடுக்க நீர் குறையாது மிகும். நாளும் கற்கக் கற்க அறிவு மிகுந்து கொண்டே செல்லும். 


“தொட்டனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு.”

 என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

  

         கற்பதனால் உண்டாகும் நூலறிவு, நுண்ணிய அறிவாக விளங்கவேண்டும். நுண்ணிய அறிவு என்பது, ஒருவன் கற்கின்ற நூல்களின் தன்மையைப் பொறுத்தது. நுண்ணறிவை விளக்கும் நூல்களும் உண்டு. பொழுதுபோக்குவதற்கான நூல்களும் உண்டு. அறிவு விளங்குகின்ற நூல்களைக் கற்பது, மணல்கேணியைத் தோண்டுவது போல. சிறு முயற்சி செய்து, மணல்கேணியைத் தோண்டத் தோண்ட நீர் சுரக்கும். தோண்டுகின்ற அளவுக்கு நீர் சுரக்கும். 

 

         அறிவு மேலும் மேலும் நுணுகியதாக மாற, நூல்களைக் கற்றுக் கொண்டே இருக்கவேண்டும். கற்கின்ற நூல் அளவு என்பதைக் கொண்டு, எவ்வளவு நூல்களைப் படிக்கின்றோமோ அவ்வளவுக்கு நுண்ணறிவு மிகும் என்று கொள்ளுதல் கூடாது. கற்கின்ற ஒரு நூலாக இருந்தாலும், எந்த அளவுக்கு அதன் நுண்பொருளை உணர்ந்து கற்கின்றோமோ, அந்த அளவுக்கு அறிவு மிகும். "நூலின் அளவே நுண்ணறிவு" என்று ஔவையார் கூறுகின்றார்.

 

“நீர் அளவே ஆகுமாம் நீராம்பல்,தான்கற்ற

நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு --- மேலைத்

தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்,

குலத்து அளவே ஆகும் குணம்.”      ---  மூதுரை.

 

இதன் பொருள் ---

 

         நீர் ஆம்பல் நீர் அளவே ஆகும் - நீரிலுள்ள அல்லியானது நீரினது உயரத்தின் அளவாகவே இருக்கும்; (அதுபோல) நுண் அறிவு தான் கற்ற நூல் அளவே ஆகும் - கூரிய அறிவானது தான் படித்த நூல்களின் அளவாகவே இருக்கும்; தான் பெற்ற செல்வம் மேலை தவத்து அளவே ஆகும் - தான் அடைந்த செல்வமானது முற்பிறப்பில் செய்த தவத்தின் அளவாகவே இருக்கும்; குணம் குலத்து அளவே ஆகும் - குணமானது (தான் பிறந்த) குடியின் அளவாகவே இருக்கும்.

 

         இதற்குத் தான் "தொட்டனைத்து ஊறும் மணல் கேணி" என்னும் உதாரணத்தைக் காட்டினார் திருவள்ளுவ நாயனார். பத்தடி தோண்டும்போது, கிடைக்கும் நீரை விட, ஐம்பது அடி தோண்டும்போது இன்னும் மேலே கிடைக்கும். தோண்டத் தோண்டத் தண்ணீரானது அளவில் பெருகிக் கொண்டே இருக்கும்.

 

         தோண்டத் தோண்ட என்னும்போது, முயற்சி செய்யச் செய்ய என்பது விளங்கும். முயற்சி செய்யச் செய்யத் தண்ணீர் ஊறும். இந்த முயற்சியானது ஒருவனது ஐந்து வயதில் இருக்கலாம். சாகப் போகின்ற வயதிலும் இருக்கலாம். கற்பதற்கு வயது ஒரு பொருட்டு அல்ல.

 

         சரி, மணல்கேணியை ஏன் சொன்னார்? பாறையைக் குடைந்தால் கூடத் தண்ணீர் ஊறுகின்றதே. மணல் கேணி என்றால், சிறுமுயற்சியும் பெரும்பலன் தரும். பாறையைத் தோண்ட வேண்டுமானால் பெருமுயற்சி வேண்டும். பெருமுயற்சி செய்தாலும், மணல்கேணியில் ஊறுவது போலத் தண்ணீர் ஊறாது.

 

        கற்றல் என்று சொன்ன உடனே, நூல்களைப் படித்தால் போதும் என்று எண்ணிவிடக் கூடாது. படிக்காத மேதைகள் உண்டு என்பதை மறக்கலாகாது. தமிழ் நாட்டிலே அவதரித்த இராமலிங்கர் பள்ளிக்குச் சென்று படிக்கவில்லை. வடநாட்டில் இராமகிருஷ்ணர் படித்தவர் இல்லை. ஆனால், அவர்களுக்கு உள்ள அறிவு, மெத்தப் படித்தவர்கள் பலருக்கும் இல்லை.

 

         இதற்கும் மணல்கேணிதான் உதாரணம். பாறையில் கிடைக்கின்ற நீரை விட, மிகச் சுலபமாக, மணல்கேணியில் கிடைக்கின்றது, என்றால், புரிந்து கொள்ளமுடியாதவை எல்லாம் எளிதில் புரிகின்றது என்றால், அதற்குக் காரணம், "திருவருள்" என்று சொல்லலாம். திருவருளைப் பெறுவதிலும் முயற்சி தேவை. அது தானாக வந்துவிடாது.

 

         திருவருளைப் பெறச் சிறுச் சிறிதே முயன்று வந்தால் போதும். அது பெரும்பலனைத் தந்தே தீரும். அது, ஓதாது உணருகின்ற பெருநிலையில் கொண்டு சேர்த்து விடும்."ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து, எனக்கே ஆதாரம் ஆகிய அருட்பெருஞ்சோதி" என்றார் வள்ளல்பெருமான். ஓதாது உணர்ந்தவர் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

         “அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்” என்பது பழமொழி. ஒரு நூலைப் படித்தாலும் உணர்வோடு படிக்கவேண்டும். உணர்ந்து ஓதவேண்டும். சொல்லை மட்டும் உணர்ந்தால் போதாது. சொல்லின் பொருளையும், சொல்லானது உணர்த்தி நின்ற பொருளையும் உணர்ந்து ஓதவேண்டும். "சொல்லும் பொருளும் இறந்த சுடர்" என்றார் மணிவாசகப் பெருமான். "சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் கண்டாய்" என்றார் அப்பர் பெருமான்.

 

         புத்தகத்தைப் படிப்பவர்கள் எல்லோருக்கும் அறிவு ஊறுவது இல்லை. "உணர்தல்" வேண்டும். அந்த உணர்வு திருவருள் வழியாகக் கிடைக்க வேண்டும். 






No comments:

நூலறிவும் நுண்ணறிவும்

நூலறிவும், நுண்ணறிவும் ----- "முற்றும் உணர்ந்தவர் இல்லை, முழுவதுஉம்  கற்றனம் என்று களியற்க,-சிற்றுளியால்  கல்லும் தகரும், தகரா, கனங்குழ...