88. பனையின் கீழ் இருந்து பால் குடித்தல்

“காலம்அறி தண்டலையார் வளநாட்டிற்

     கொலைகளவு கள்ளே காமம்

சாலவரும் குருநிந்தை செய்பவர்பால்

     மேவிஅறந் தனைச்செய் தற்கும்

சீலமுடை யோர் நினையார்! பனையடியி

     லேயிருந்து தெளிந்த ஆவின்

பாலினையே குடித்தாலும் கள்ளென்பார்!

     தள்ளென்பார்! பள்ளென் பாரே.”


இதன் பொருள் ---


    காலம் அறி தண்டலையார் வளநாட்டில் - காலம் அறிந்த திருத்தண்டலை இறைவரின் வளநாட்டிலே, கொலை களவு கள்ளே காமம் சாலவரும் குருநிந்தை செய்பவர் பால் - கொலையும் களவும் கள்குடியும் காமமும் நிறைய வரும் குருநிந்தையும் செய்பவரிடம், மேவி அறந்தனைச் செய்தற்கும் - சென்று அறத்தைக் கூறுவதற்கும்,  சீலம் உடையோர்  நினையார் - ஒழுக்கம் உள்ளோர் எண்ணமாட்டார்;  பனை அடியிலேயிருந்து - பனையின் நிழலிலே தங்கி,  தெளிந்த ஆவின் பாலினையே குடித்தாலும் - தெளிவான பசுவின் பாலையே குடித்தாலும், கள் என்பார் தள் என்பார் பள் என்பார் - (அப் பாலைக்) கள் என்றே கூறிக், ‘குடித்தவனை நீக்குக! அவன் பள்ளன் என்றும் கூறி விடுவர்.


      ஒழுக்கம் கெட்டவருக்கு அறநெறிகளைக் கூறச் சென்று, அவர்களுடன் பழகினால், சென்றவர்க்கும் ஒழுக்கம் கெட்டவர் என்ற பேரே வரும் என்பது கருத்து. ‘பனையடியிலிருந்து பாலைக் குடித்தாலும் கள் குடித்தான் என்பர்' என்பது பழமொழி. 


No comments:

28. நிலையில் தாழாமை

“தலைமயிரும், கூர்உகிரும், வெண்பல்லும் தம்தம் நிலையுடைய மானவரும் நிற்கும் - நிலைதவறாத் தானத்தில் பூச்சியமே சாரும்; நிலைதவறும் தானத்தில் பூச்ச...