86. பெண் என்றால் பேயும் இரங்கும்


உரங்காணும் பெண்ஆசை கொடிதாகும்!

     பெண்புத்தி உதவா தாகும்!

திரங்காணும் பெண்வார்த்தை தீதாகும்!

     பெண்சென்மம் சென்மம் ஆமோ?

வரங்காணும் தண்டலைநீள் நெறியாரே!

     பெண்ணிடத்தின் மயக்கத் தாலே

இரங்காத பேருமுண்டோ? பெண்என்ற

     வுடன்பேயும் இரங்குந் தானே.


இதன் பொருள் ---


    வரம் காணும் தண்டலைநீள் நெறியாரே - நலம் பொருந்திய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளே!

     பெண்ணிடத்தில் மயக்கத்தாலே இரங்காத பேரும் உண்டோ - பெண்ணிடம் உண்டாகும் தடுமாற்றத்தினால் (பெண்ணைக் கண்டவுடன்) இரக்கம் காட்டாதவரும் உளரோ?, பெண் என்றவுடன் பேயும் இரங்கும் – பெண் என்றாலே பேயும் இரங்கும் (என்பார்கள்.) (எனினும்), உரம் காணும் பெண் ஆசை கொடிது ஆகும் - விரைவு படுத்தும் பெண் ஆசை கொடியது ஆகும்; பெண்புத்தி உதவாது ஆகும் - பெண்ணின் அறிவுரை பயன் தராது ஆகும்; (ஆகையால்), திரம் காணும் பெண் வார்த்தை தீது ஆகும் – நட்மை தருவது போலக் காணப்படும் பெண்மொழி கொடியதாகும், பெண்சென்மம் சென்மம் ஆமோ - பெண்பிறப்பு இன்பந்தரும் பிறப்பு என்று சொல்ல முடியுமோ?

      வரம் – நன்மை, விருப்பம், மேன்மை. பொருட்பெண்டிர் ஆசையினால் மேல் விளைவு கருதாது தவறான வழியிலே செல்வதுபற்றிக் கொடியது என்றார். ஔவையார் அருளியது போல காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவுபட்ட இன்பத்தைக் குறை கூறியதாகக் கொள்ளுதல் கூடாது. ஔவையார் குறித்தது குலமகளிரை. பெண்புத்தி உதவாது என்றும், பெண்வார்த்தை தீது என்று கூறியதும் பெண்தரும் இன்பம் ஒன்றையே பெரிது எனக் கருதி அவர் சொல்லில் மயங்குதல் கூடாது என்பது குற்றித்ததே. அவ்வாறு கொள்ளாவிட்டால், அது குலமகளிரை இழிவுபடுத்தியது ஆகிவிடும். உலகிலே பெண் பிறப்பே பல்வகைத் துன்பத்தினும் ஈடுபடுவதால் ‘பெண் சென்மம் சென்மம் ஆமோ' என்றார். ‘பெண் என்றவுடன் பேயும் இரங்கும்' என்பது பழமொழி.

அறத்துப்பாலில், இல்வாழ்க்கைத் துணநலம் என்று மகளிரைச் சிறப்பித்த திருவள்ளுவ நாயனார், பொதுமகளிரை, வரைவில் மகளிர் என்று பொருட்பாலில் குறிப்பிட்டது கருத்தில் கொள்ளத் தக்கது. எவர் சிற்றின்பத்ததின் பொருட்டு, தமது மனைவி மீது பெருவிருப்பத்தைக் கொண்டு, அவள் ஏவியபடி நடக்கின்றாரோ, அவர் இம்மை, மறுமை, அம்மையாகிய வீடுபேறு ஆகிய மூன்றையும் அடைவதற்குத் துணையாக இருக்கும் அறத்தினை அடையமாட்டார். அதுவும் அல்லாமல், அறம், இன்பம் ஆகிய இரண்டினையும் அடைவிக்கும் பொருளைச் செய்தலை மேற்கொண்டவர்கள், பொருளைச் செய்வதற்கு, பெண்வழி நிற்றல் என்பது இடையூறாய் உள்ளதால், பொருளையும் அடையமாட்டார் என்பதைப் பெண்வழிச் சேறல் என்றும் குறிப்பிட்டார் திருவள்ளுவ நாயனார் என்பதை அறிக.

தசரதர் தன் மனைவியருள் ஒருவர் ஆகிய கைகேயி மீது வைத்த அதீத ஆசையால் விளைந்த விளைவுகளை எண்ணிப் பார்க்க. பெண்வழிசை சேறலால் விளைந்த கொடுமைகளை இது விளக்கும்.


No comments:

வெஞ்சொல்லும் பொய்ம்மையும் வேண்டா

வெஞ்சொல்லும் பொய்மையும் வேண்டா -----      மனிதன் மனிதனாக வாழ அறநூல்கள் வழிகாட்டுகின்றன. சமயத் தலைவர்களும் தத்தம் கடவுளரைப் பாடுகையில், செம்ம...