திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 63 -- இடுக்கண் அழியாமை
இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "பாரம் சுமக்கையில் அழுந்திய இடம் எல்லாம் தளர்ச்சி அடையாமல் முன்னேறிச் செல்லும் எருதைப் போன்றவன் பெற்ற துன்பமானது துன்பப்படும்” என்கிறார் நாயனார்.
வண்டியில் பூட்டப்பட்ட எருதுகள், வண்டியை இழுக்கும் காலத்து, சேற்று நிலம், மணல் நிலம் வந்துவிடுமாயின், பக்கங்களில் உராய்ந்தும், நிலத்தில் மூக்கை ஊன்றியும், கால்களை மடக்கித் தவழ்ந்தும், மிக வருத்தத்துடன் எப்படி வண்டியை இருத்துச் செல்லுகின்றனவோ, அதுபோல உடல் வருத்தம் பாராது, எவ்வித துன்பம் வருகின்றதோ, அதற்குத் தக்க அளவாக முயலுவானானல், அவன் எதிர்ப்பட்ட துன்பமானது துன்பப்பட்டுப் போகும்.
இதற்குத் திருக்குறள்...
மடுத்தவாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண், இடர்ப்பாடு உடைத்து.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் --- விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும், சகடம் ஈர்க்கும் பகடு போல வினையை எடுத்துக் கொண்டு உய்க்க வல்லானை;
உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து --- வந்துற்ற இடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து.
('மடுத்தவாய் எல்லாம்' என்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்று நிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. 'பகடு மருங்கு ஒற்றியும் மூக்கு ஊன்றியும் தாள் தவழ்ந்தும்' (சீவக.முத்தி,186) அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய் வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார் 'பகடு அன்னான்' என்றார்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் குங்குலியக் கலய நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
தலைஅன்பி னால்வளைந்தார் தம்மைநிமிர்த் திட்டான்
கலையன்பின் காண்இடுக்கம் காணான் - மலைவுஇல்
மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
இதன் பொருள் ---
சோழ நாட்டிலே விளங்கும் திருப்பனந்தாள் என்பது ஒரு சிவத்தலம். அது "தாடகையீச்சரம்" என்று திருப்பதிகத்தில் பேசப்படும். ஒரு திருவிளையாட்டின் நிமித்தம் தாடகை என்னும் பெண்ணுக்குச் சிவலிங்கப் பெருமான் திருமேனி சாய்ந்து அருளினர். அதனை முன்போல நிமிர்க்கும் பொருட்டு அரசன் பல முயற்சிகள் செய்தும் பலிக்கவில்லை. அதனால் வருந்திய மன்னன் வருத்ததினை நீக்கும்பொருட்டுத் தமது கழுத்திலே கயிறு பூட்டி, அன்பு மேலீட்டால் இழுத்துச் சிவலிங்கத்தை நிமிர்த்திய கலய நாயனார், குங்குலிய தூபப் பணிக்கு முட்டுப்பாடு வர, தனது மனைவியார் தந்த மங்கலியத்தையும் விற்றுக் குங்குலியப் பணியை மாறாமல் செய்து, இம்மையில் குறைவற்ற செல்வமும் பெற்றார். பிறவித் துன்பமும் நீங்கினார். குங்குலியக் கலயர் என்ற பெயரையும் பெற்றார்.
இதனை, விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும் சகடம் ஈர்க்கும் பகடுபோல வினையை எடுத்துக்கொண்டு உய்க்க வல்லானை வந்து உற்ற உடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து எனத் திருவள்ளுவ நாயனார் கூறினர். தன் மெய்வருத்தம் நோக்காது முயன்று செய்வோர் இன்புறுவர் என்றபடி. இடுக்கம், இடுக்கண் - துன்பம்.
முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவுமதி கண்டு,
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த
சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
தொழுதனம் அல்லமோ, பலவே கானல்
கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரன் உடை நோன் பகட்டு அன்ன எங்கோன்
வலன் இரங்கு முரசின் வாய்வாள் வளவன்
வெயின்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே. --- புறநானூறு.
குடை மங்கலம். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
கடல் நடுவே உள்ள படகில் ஏற்றி வைத்த விளக்கைப் போல, செவ்வாய் மீன் (திருவாதிரை நட்சத்திரம்) மின்னுகின்ற வானத்தின் உச்சியிலே தோன்றுகின்ற முழுநிலவை, காட்டு மயில்கள் கண்டு, களித்து ஆடுவதைப் போல, காட்டு வழியே வந்துகொண்டிருந்து நானும், வளையல்களை அணிந்த விறலியும் கண்டு பலமுறை தொழுதோம். கடற்கரைக் கழிமுகத்தில் விளைந்து உப்பை முகந்து கொண்டு, மலைநாடு நோக்கிச் செல்லும் ஆரக்கால் உடைய வண்டி, பள்ளத்தில் அழுந்திக் கொள்ளாதவாறு இழுத்துச் செல்லும் வலிமை மிக்க, பாரம் பொறுக்கும் எருதினை ஒத்தவன் என் தலைவன் சோழன் திருமாவளவன். வெற்றி முழங்கும் முரசினையும், வீரம் விளைக்கத் தவறாத வாளினையும் உடைய எமது சோழ வளவன், வெயில் மறைக்க எடுத்த பகைவர் கண்டு அஞ்சும், புகழ்மாலை மூண்ட, வெண்கொள்ளக் குடை போல இருந்தது என்று எண்ணி, முழு நிலவைத் தொழுத எங்களுக்கு இன்று அவன் குடையினையே கண்டு தொழுவதற்குச் சொல்லவும் வேண்டுமோ? (வேண்டாம் என்றபடி).
உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடைமல்கு குளவியொடு கமழுஞ் சாரல்
மறப்புலி உடலின் மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ? ஞாயிறு சினவின்
அச்சொடு தாக்கிப் பார் உற்று இயங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொலிய
அரிமணன் ஞெமரக் கல்பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
எழுமரங் கடுக்குந் தாள்தோய் தடக்கை
வழுவில் வன்கை மழவர் பெரும!
இருநில மண்கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ நீகளம் புகினே. --- புறநானூறு.
ஔவையார் அதியமான் பேராற்றலை வியந்து பாடியது.
முரிந்த வளையலை ஒப்ப மலர்ந்த வெண்காந்தள் பூவும், இலையோடு மலர்ந்த மலைமல்லிகை மலர்களும் கலந்து மணம் கமழும் மலைச் சரிவில், வலிமை மிக்க புலி ஒன்று சீறி எழுந்தால், அதை எதிர்த்து நிற்கும் வலிமை உடைய மான் கூட்டம் எங்காவது உள்ளதா? சூரியன் சுடர் பரப்பி எழுந்துவிட்டால், மேகம் மறைத்து இருக்கும் வானத்திலும், திசைமுகத்திலும், இருட்டு என்பது இருக்குமா? பாரம் மிகுதியால் அச்சு முறிய ஏற்றிய பண்டங்கள் நிறைந்து வழியச் செல்லும் வண்டியின் பாரத்தைச் சுமக்கும், நிர் ஓடிக் கழிந்த வரிமணல் பரக்கவும், காலின் கீழ்ப்படும் கற்கள் தூளாகவும் நடக்க வல்ல, வலிமை மிக்க மாட்டிற்குச் செல்ல முடியாத வழியும் உண்டா? அதைப்போல, கணை மரத்தைப் போன்ற வலிமை மிக்க, வெற்றி கொள்ளத் தவறாத தோள்களை உடைய விரர்களுக்குத் தலைவனே! நீ போர் செய்யப் புறப்பட்டால், உன்னை எதிர்க்க வல்ல வீரர்களும் இந்த மண்ணில் இருக்கின்றனரா?
போர் என்று வந்தால் உண்டாகும் தீமைகள் எண்ணித் தயங்கிய அதியமானுக்கு, "நீ போர் செய்யவேண்டாம். போர்க்களத்தில் உன்னைக் கண்டாலே போதும், பகைவர்கள் பயந்து ஓடி விடுவார்கள்" என்னும் கருத்து அமைய, ஔவையார் பாடிய பாடல் இது.