திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 63 -- இடுக்கண் அழியாமை
அதாவது, ஒரு தொழிலை முயல்பவன், ஊழ்வினை காரணமாகவாவது, பொருள் இன்மை காரணமாகவாவது, உடம்பு வருத்தம் காரணமாகாவது இன்னல் நேர்ந்த போது, உள்ளத் தளர்ச்சி அடையாமையைக் குறித்தது.
இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "ஒருவனுக்குத் துன்பமானது தொழிலால் தனக்கு வரும்போது, அதற்கு உள்ளம் தளராமல், மேலும் கிளர்ச்சி கொள்ளவேண்டும். அதனை எதிர்த்துக் கடப்பது அந்தக் கிளர்ச்சியைப் போன்று வேறு இல்லை" என்கின்றார் நாயனார்.
ஒருவன் எடுத்துக் கொண்ட தொழில் முடியும்போது அவனுக்கு மகிழ்ச்சி உண்டாகும். அந்த மகிழ்ச்சியையே தனக்குத் துன்பம் வந்தகாலத்தும் கொள்வானானால், எடுத்த தொழிலை விடாது முடிக்கும் வல்லமை உண்டாகும்.
இதற்குத் திருக்குறள் --
இடுக்கண் வரும்கால் நகுக, அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
இடுக்கண் வருங்கால் நகுக --- ஒருவன் வினையால் தனக்கு இடுக்கண் வருமிடத்து, அதற்கு அழியாது உளமகிழ்க;
அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் --- அவ்விடுக்கணை மேன்மேல் அடர வல்லது அம் மகிழ்ச்சி போல்வது பிறிதில்லையாகலான்.
(வினை இனிது முடிந்துழி நிகழற்பாலதாய மகிழ்ச்சியை, அதற்கு இடையே இடுக்கண் வருவழிச் செய்யவே, அவன் அழிவின்றி, மன எழுச்சியான், 'அதனைத் தள்ளி அக்குறை முடிக்கும் ஆற்றலுடையனாம்' ஆகலின், 'அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்' என்றார்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முடிவர் பாடியருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....
நக்கர் சிறிது நகைத்தலும், முப்புரமும்
அக்கணமே வெந்து விழும், ஆதலால் --- மிக்க
இடுக்கண் வரும்கால் நகுக, அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்.
இதன் பொருள் ---
நக்கர் - நிர்வாணர். சிவபிரான் என்றபடி. சிவபெருமான் முப்புரங்களை எரித்தமை, சிரித்தும், விழித்தும், அம்பு எய்தும் எரித்தார் என்று மூன்று விதமாக வழங்கும். துன்பம் வருங்காலத்தும் பொறுமையுடன் இருக்கவேண்டும்.
பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை காண்க...
தூயசொல் ஆட்டும், துணிவு அறிவும், துன்பங்கள்
தோயக் கலங்காத் துணைவலியும், --- பூயல்
படுக்குந் திருவத்த னாரே பறிப்பர்
அடுக்கு மடிச்சேரா வாறு. --- இன்னிலை.
இதன் பொருள் ---
தூய சொல் ஆட்டும் - தூய்மையான சொற்களைப் பேசுவதும்; துணிவு அறிவும் - (அறிஞர் உண்டு என்று ஆய்ந்து) துணிந்த பொருளை அறிவதும், துன்பங்கள் தோய கலங்கா துணை வலியும் - கவலைகள் வந்து பொருந்தியபோது மனம் கலங்காத உள்ள வலிமை பெற்றிருப்பதும், பூயல் படுக்கும் திருவத்தனாரே - (ஆகிய இவற்றை) பொருந்தச் சேர்க்கும் செல்வத்தினை உடையவரே, அடுக்கும் மடி சேராவாறு பறிப்பர் - அடுக்கி வருகின்ற பிறவியில் சேராதவாறு அதனைக் களைவர்.
தூயசொல் பேசுதலும், செம்பொருள் துணிவும், துன்பத்திற்குக் கலங்காத மனவலிமையும் உடையவன் பிறவியை நீக்குவான்.
தூயசொல் என்பது பொய், புறங்கூறல், கடுஞ்சொல், பயனில்சொல் என்ற நான்கினையும் நீக்கிப் பேசும் சொல்லை உணர்த்தியது. வாய்மையும் இன்சொல்லும் எனக் கொள்க. துணிவு அறிவு என்பது துணிவினை அறியும் அறிவு எனப் பொருள்படும். கடவுள் உண்டு, இம்மை, மறுமை, நல்வினை, தீவினை, முத்தி, நரகம் இவையுண்டு என்று சான்றோர் துணிந்தவற்றைத் தானும் அறிந்து கொள்ளல். "உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து அலகையா வைக்கப்படும்" என்று திருவள்ளுவ நாயனார் கூறியபடி உலகத்தார் உண்டு என்பதை இல்லை என்பவன் மனிதன் அல்லன். அவன் ஒரு பேய்; ஆதலால், அறிஞர் உண்டு என்பதை உண்டு என்று துணிபவனே மக்களில் ஒருவனாக மதிக்கப்படுவான். "இடுக்கண் வருங்கால் நகுக, அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்" என்று திருவள்ளுவ நாயனார் கூறியவாறு மனமகிழ்வுடன் நகை முகங்கொண்டு துன்பத்தைப் போக்க வேண்டுமேயன்றிக் கலங்குதல் கூடாது. கலங்குவோன் தான் செய்யும் வினையைக் காலமறிந்து செய்யாமல் கைவிடுவான். அதனால் கலங்காத அறிவும் வேண்டும் என்பது கருத்து. இம்மூன்றும் உடையவன் எவனோ அவன் பிறவியைக் களைந்து முத்தியடைவன் என்பது சொல்லப்பட்டது.
No comments:
Post a Comment