“பற்று என்னும் பாசத் தளையும், பலவழியும்
பற்று அறாது ஓடும் அவாத் தேரும், - தெற்றெனப்
பொய்த்துரை என்னும் பகை இருளும், இம்மூன்றும்
வித்து அற வீடும் பிறப்பு.” -- திரிகடுகம்.
பற்று என்று சொல்லப்படுகின்ற கயிற்று விலங்கும், பல பொருள்களிலும் பிடிப்பு நீங்காமல் ஓடுகின்ற அவா என்னும் தேரும், தெளிவாகப் பிறருக்குப் பொய்யாக ஒழுகுதல் என்று சொல்லப்படும் அறிவுக்குப் பகையாகிய அஞ்ஞான இருளும் ஆகிய இம் மூன்றும் தனக்குக் காரணமாகிய அவிச்சை கெட்டால் பிறப்பு இல்லாது ஆகும்.
ஒன்றின்மேல் பற்று இருந்தால் அதை ஒழித்து வேறு எங்கும் மனம் செல்லாது. எனவே, பாசத்தைத் தளை என்றார். ஆசை மேலே மேலே ஓடிக்கொண்டிருத்தலால் அவாவைத் தேர் என்றார். "எல்லா விளக்கும் விளக்கு அல்ல, சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" எனத் திருவள்ளுவ நாயனார் அருளி இருக்கிறார். எனவே, பொய்யாமை விளக்கு என்பதால், பொய்யுரை இருள் எனப்பட்டது. பற்று - அகப்பற்று புறப்பற்று என்று இருவகைப்படும். நான் என்னும் உணர்ச்சி அகப்பற்று. எனது என்னும் உணர்ச்சி புறப்பற்று. வித்து - விதை, முளை. "அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும், தவாஅப் பிறப்பு ஈனும் வித்து" என்றார் திருவள்ளுவ நாயனார். இதற்கு உடம்பு நீங்கிப்போங் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும், அக் கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ் வுயிரை அவ்வவா அக் கதிக்கண் கொண்டு செல்லுமாதலால், அதனைப் பிறப்பீனும் வித்து என்று பரிமேலழகர் உரை காட்டி இருப்பது அறிக.
No comments:
Post a Comment