திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 63 -- இடுக்கண் அழியாமை
இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "வெள்ளத்தைப் போல வருகின்ற பெரும் துன்பமானது, அறிவு உடைய ஒருவன் உள்ளத்தால் தீருமாறு அழுந்தி நினைக்க அழிந்துவிடும்" என்கின்றார் நாயனார்.
துன்பம் என்பது ஒருவன் தனது மனத்தில் கொள்ளும் நிலையே அல்லாமல் வேறு ஒன்றும் இல்லை. அத் துன்பத்தை ஒருவன் இன்பமாக எண்ணுகின்ற அறிவு உடையவனாக இருப்பானாயின், அந்த அறிவுடைமையானது, எல்லாத் துன்பங்களும் தன்னிடத்தே வராவண்ணம் செய்துவிடும். இவ்வித உபாயமானது, உண்மை அறிவு உள்ளவர்க்கே முடியும்.
இதற்குத் திருக்குறள்...
வெள்ளத்து அனைய இடும்பை, அறிவு உடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
வெள்ளத்து அனைய இடும்பை --- வெள்ளம்போலக் கரையிலவாய இடும்பைகள் எல்லாம்;
அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் --- அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும்.
(இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக் கொள்ள நீங்கும் என்பதூஉம் அறிதல் வேண்டுதலின், 'அறிவுடையான்' என்றும், அவ்வுபாயத்தது எண்மை தோன்ற 'உள்ளத்தின் உள்ள' என்றும் கூறினார். ஊழினான் ஆய இடுக்கணால் அழியாமைக்கு உபாயம் கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்று நிகழ்வை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய, "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
ஆறாறு கட்டாரை ஆறுஅணையா வாறுபெருகு
ஆறுஆறு காட்டநடந்து ஆரூரர் - பேறானார்,
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
இதன் பொருள் ---
தத்துவங்கள் முப்பத்தாறனையும் தலை எடுக்கவொட்டாமல் அடக்கிய பெருமையை உடையவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். சேரமான் பெருமாளும் சுவாமிகளும் திருவையாற்றைத் தரிசிக்க விரும்பிச் சென்றனர். காவிரி வெள்ளம் கரைபுரண்டு சென்றது. காவிரி நீர் விலகி வழிகொடுக்குமாறு, "ஐயாறு உடைய அடிகளோ" எனத் திருப்பதிகம் பாடி விண்ணப்பித்தார் சுவாமிகள். சிவபெருமான் நீரை விலகும்படி பணித்தார். சுவாமிகள் சேரர்பெருமானுடன் ஐயாறப்பரைத் தரிசித்துப் பேரானந்தம் பெற்றார்.
வெள்ளம் போலக் கரை இலவாய இடும்பைகள் எல்லாம் அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றினை நினைக்க, அத்துணையானே கெடும் எனத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்தமை காண்க.
ஆறுஆறு - முப்பத்தாறு. பெருகு ஆறு - நீர் பெருகிய ஆறு. ஆறு காட்ட - வழிகாட்ட. இடும்பை - துன்பம். உள்ள - நினைக்க.
No comments:
Post a Comment