உடல் கூற்று வண்ணம்

 



பட்டினத்தடிகள் பாடியருளிய

"ஊடல் கூற்று வண்ணம்"

-----


அற்புதமான இந்தப் பாடல் வரிகளும் அதன் பொருளும் நிரலாகத் தரப்படுகின்றன.



ஒருமட மாதும் ஒருவனும் ஆகி

     இன்பசுகம் தரும் அன்பு பொருந்தி

          உணர்வு கலங்கி ஒழுகிய விந்து

                    ஊறு சுரோணிதம் மீது கலந்து.....


ஒரு அழகிய பெண்ணும், ஒரு வாலிபனும் தங்கள் திருமணத்தின் பின் கூடி இன்ப சுகத்தை அனுபவிப்பதற்கு உரிய அன்பானது தங்களிடத்திலே பொருந்தி இருந்து, இருவரும் கலந்து உணர்வு கலங்கிய நிலையிலே  ஆணிடம் இருந்து வெளிப்பட்ட விந்துத் துளியானது, பெண்ணின் சுரோணிதத்துடன் கலந்து.....



பனியில் ஓர்பாதி சிறுதுளி, மாது

     பண்டியில் வந்து புகுந்து திரண்டு

          பதும அரும்பு கமடம் இது என்று

               பார்வை மெய் வாய்செவி கால்கைகள் என்ற.....


அந்த விந்துவும் சுரோணிதமும் சேர்ந்து, ஒரு பனித்துளியின் அளவாகிப் பெண்ணினுடைய கருப்பாசயம் என்றும் கரு தங்கும் இடம் என்றும் சொல்லப்படும் கருப்பையில் சென்று சேர்ந்து, அங்கே திரட்சி அடைந்து, தாமரை மொட்டினைப் போல, ஆமை உரு ஆகி, கண், உடல், வாய், காது, கால், கைகள் என்று சொல்லும்படியான.....



உருவமும் ஆகி உயிர்வளர் மாதம்

     ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை

          உதரம் அகன்று புவியில் விழுந்து

               யோகமும் வாரமும் நாளும் அறிந்து.....


உருவத்தினை அடைந்து, உயிர் வளர்தற்கு உரிய பத்து மாதங்களும் நிறைந்து, பெண்ணின் வயிற்றில் இருந்து வெளியில் வந்து பூமியில் விழுந்து, இன்ன யோகம், இன்ன வாரம், இன்ன நாளும் என்று தெரிந்து.....



மகளிர்கள் சேனை தர அணைஆடை

     மண்பட உந்தி உதைந்து கவிழ்ந்து

          மடமயில் கொங்கை அமுதம் அருந்தி,

               ஓர்அறிவு ஈர் அறிவு ஆகி வளர்ந்து.....


பெண்களின் கூட்டமானது, ஆடையால் அமைக்கப்பட்ட ஏணையில் வளர்ந்தும், பூமியில் உதைத்தும், கவிழ்ந்து, மயில்போலும் சாயலை உடைய தன்னுடைய தாயின் மார்பகத்தில் பாலைக் குடித்து, சிறிது சிறிதாக அறிவு வளர வயதை அடைந்து.....



ஒளிநகை ஊறல் இதழ் மடவாரும்

     உவந்து முகந்திட வந்து தவழ்ந்து

          மடியில் இருந்து மழலை மொழிந்து

               வா இரு போ என நாமம் விளம்ப.....


ஒளி பொருந்திய பற்களுடன் ஊறுகின்ற உதட்டினைப் பெண்கள் விரும்பி முத்தம் இட, ஓடித் தவழ்ந்து, தாயின் மடியில் மீது இருந்து, குதலை மொழிகளைப் பேசி, வா, இரு, போ என்று இரண்டொரு சொற்களைப் பயின்று பேச.....



உடைமணி ஆடை அரைவடம் ஆட

     உண்பவர் தின்பவர் தங்களொடு உண்டு

          தெருவில் இருந்து புழுதி அளைந்து

               தேடிய பாலரொடு ஓடிநடந்து,

                   அஞ்சு வயது ஆகி விளையாடியே.....


உடுக்கத் தகுந்த அணிகலன்கள், துணிகள், அரைஞாண் அசைய, உணவு உண்பவருடனும், சிற்றுண்டிகளைத் தின்பவருடனும் இருந்து உண்டு, தெருவில் சென்று, புழுதி படியுமாறு, நாடி வரும் மற்றப் பிள்ளைகளுடன் ஓடி நடந்து, ஐந்து வயது ஆகும் வரை இவ்வாறு விளையாடி இருந்து.....



உயர்தரு ஞான குரு உபதேசம்

     முத்தமிழின் கலையும் கரை கண்டு

          வளர்பிறை என்று பலரும் விளம்ப

               வாழ் பதினாறு பிராயமும் வந்து.....


உயர்வைத் தருகின்ற ஞானாசிரியரிடம் மந்திர உபதேசமும், இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழை அளவில்லாமல் கற்றுத் தேர்ந்து, வளர்கின்ற சந்திரன் என்று பலரும் சொல்லும்படியாக, வாழத் தகுந்த பதினாறு வயதினை அடைந்து.....



மயிர்முடி கோதி அறுபத நீல

     வண்டு இமிர் தண்தொடை கொண்டை புனைந்து

          மணிபொன் இலங்கு பணிகள் அணிந்து

               மாகதர் போகதர் கூடி வணங்க.....


தலை மயிரை வாரி முடித்து, ஆறுகால்களுடன் கூடிய நீல வண்டுகள் தங்கி இசை முரல்கின்ற குளிர்ச்சி பொருந்திய மாலைகளைத் தலையில் தரித்து, இரத்தினங்களை இழைத்து பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்து, மாகதர், போகதர் என்று சொல்லப்படும் பாடகர்கள் சேர்ந்து வணங்கவும்.....



மதன சொரூபன் இவன்என, மோக

     மங்கையர் கண்டு மருண்டு திரண்டு

          வரிவிழி கொண்டு சுழிய எறிந்து

               மாமயில் போல்அவர் போவது கண்டு.....


மன்மதனை ஒத்த வடிவை உடையவன் இவன் என்று, மோக உணர்வு உள்ள பெண்கள் பார்த்து மயக்க உணர்வோடு கூடி, செவ்வரி படர்ந்த கண்களைச் சுழற்றி மருட்டவும், அழகிய மயில் போன்ற சாயலுடன் அவர்கள் நடப்பதைப் பார்த்து.....



மனது பொறாது அவர் பிறகு ஓடி

     மங்கல செங்கலசம் திகழ் கொங்கை

          மருவ மயங்கி இதழ் அமுது உண்டு

               தேடிய மாமுதல் சேர வழங்கி.....


மனமானது தாளாமல், அவர் பின்னே சென்று, மங்கலமாகிய அழகிய கலசத்தை நிகர்த்த அவர் மார்பகங்களை அணைக்க, திகைத்து, அவர் தரும் இதழ் அமுது என்று சொல்லப்படும் அதர பானத்தை உண்டு, தான் ஈட்டிய பெரிய செல்வம் முழுதையும் அவருக்குக் கொடுத்து.....



ஒருமுதல் ஆகி முது பொருளாய்

இருந்த தனங்களும் வம்பில் இழந்து,

          மதன சுகந்த விதனம் இதுஎன்று

                வாலிப கோலமும் வேறுபிரிந்து.....


ஒரு முதல் பொருளாகவும், மிகுந்தும் இருந்த செல்வம் அனைத்தையும் வீணாகச் செலவழித்து, மதனலீலை விதனத்திற்கே ஏது என்று தெளிந்து, வாலிபப் பருவமும் வேறுபட்டு.....



வளமையும் மாறி இளமையும் மாறி

      வன்பல் விழுந்து, இரு கண்கள் இருண்டு,

          வயது முதிர்ந்து, நரைதிரை வந்து,

                வாத விரோத குரோதம் அடைந்து

                    செங்கையில் ஓர் தடியும் ஆகியே.....


அழகு கெட்டு, இளமையும் கெட்டு, வலிமையான பற்களும் விழுந்து, இரண்டு கண்களும் பார்வை குன்றி, முதுமையானது வந்து, தலைமுடி நரைத்து, தோல் திரைந்து, வாத நோய் வந்து, யாருடனும் விரோதிக்கின்ற கோப குணமும் வந்து, அழகாக விளங்கிய கையில் இப்போது ஒரு தடியை ஊன்றிய நிலையிலே.....



வருவது போவதும் ஒருமுது கூனும்

மந்தி எனும்படி குந்தி நடந்து

மதியும் மறிந்து செவிதிமிர் வந்து

வாய்அறியாமல் விடாமல் மொழிந்து.....


ஒரு முதுகு கூனுடன், வருவதும் போவதும் ஆகி, குரங்கினைப் போல குந்தித் குந்தி நடந்து, அறிவானது கெட்டுப் போய், காது செவிடு பட்டு,  இதைத் தான் சொல்வது என்று அறியாமல் எந்நேரமும் வளவள என்று பேசி.....



துயில் வரும் நேரம் இருமல் பொறாது

தொண்டையும் நெஞ்சம் உலர்ந்து வறண்டு

துகிலும் இழந்து சுணையும் அழிந்து

தோகாயர் பாலர்கல் கோரணி கொண்டு.....


உறக்கம் வருகின்ற நேரத்தில் வரும் இருமலைச் சகிக்க முடியாமல், தொண்டை உலர்ந்து வறண்டு, இடுப்பில் உள்ள துணியும் நழுவ. சொரணை இல்லாமல் பெண்களும் பிள்ளைகளும் முணுமுணுக்கும் படியாக.....



கலியுகம் மீதில் இவர் மரியாதை

கண்டிடும் என்பவர் சஞ்சலம் மிஞ்ச

கலகல என்று மலசலம் வந்து

கால் வழி மேல் வழி சார நடந்து.....


இந்த கலியுகத்திலே இவனுடைய நிலையைப் பாருங்கள் என்று சொல்பவர்களுக்குத் துன்பம் மிகுமாறு, கலகல என்று மலமும், சிறுநீரும் பெருகி, கால் வழியாகவும், உடம்பு வழியாகவும் பொருந்த வழிய நடந்து.....



தெளிவும் இராமல் உரை தடுமாறி,

சிந்தையும் நெஞ்சம் உலைந்து மருண்டு,

திடமும் உலைந்து, மிகவும் அலைந்து,

தேறி நல் ஆதரவு ஏது என நொந்து.....


மனத் தெளிவு இல்லாமல், வார்த்தைகளும் குளறி, மனமும், நினைவும் மிகவும் அலைந்து, தேக திடமானது மாறி, மிகப் பாடுபட்டு, நல்ல ஆதரவு ஏதும் இல்லாமல் போனதே என வருந்தி.....


மறையவன் வேதன் எழுதிய வாறு

வந்தது கண்டமும் என்று தெளிந்து

இனி என்ன கண்டம், இனி என தொந்தம்

மேதினி வாழ்வு நிலாது இனி நின்ற.....


வேதங்களுக்கு உரியவனான பிரமன் தலையில் எழுதிய விதி நெருங்கி விட்டது, இனி மரண கண்டமானது வந்தது என்று தெரிந்து, வேறு கண்டம் ஏது, இனி இந்த உலக வாழ்வில் என்ன சம்பந்தம் உள்ளது, இனி உலக வாழ்வு ஏது, நில்லாது,. மிஞ்சி நின்ற....



கடன்முறை பேசும் எனஉரை நாவும்

உறங்கி விழுந்து கை கொண்டு மொழிந்து

கடை வழி கஞ்சி ஒழுகிட வந்து

பூதமும் நாலு சுவாசமும் நின்று

நெஞ்சு தடுமாறி வரும் நேரமே.....


இனி அவரவர் செய்ய வேண்டிய கடன் முறைகளைப் பற்றி ஏதாவது எற்பாட்டினைச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்த நாக்கானது குளறி இழுத்துக் கொள்ள, கைகளினால் ஜாடை காட்டவும், கஞ்சியானது பக்கங்களில் ஒழுகிவிழவும், பஞ்ச பூதங்களும், பிராண வாயவும் தடைப்பட்டு, நெஞ்சமானது தடுமாறி வருகின்ற காலத்தில்.....



வளர் பிறை போல எயிறும் உரோமமும்

சடையும் சிறு குஞ்சியும் விஞ்ச

மனதும் இருண்ட வடிவும் இலங்க

மாலை போல் யம தூதர்கள் வந்து.....


வளருகின்ற வளைந்த சந்திரனைப் போலப் பற்களும், தலைமுடியும், சடையும், சிறு குடுமியும் காண, கடினமான மனமும், கறுத்த உருவமும்

விளங்க, பெரிய மலையினைப் போல யமதூதர்கள் நெருங்கி வந்து.....



வலைகொடு வீசி உயிர்கொடு போக

மைந்தரும் வந்து குனிந்து அழ நொந்து

மடியில் விழுந்து மனைவி புலம்ப

மாழ்கினரே இவர் காலம் அறிந்து.....


பாசவலையை வீசி உயிரைக் கொண்டு போகவும், பிள்ளைகளும் வந்து குனிந்து பார்த்து அழுது நோகவும், மடிமேல் விழுந்து மனைவியானவள் புலம்பும்படியாக, இவர் இறந்து பட்டாரே இந்தக் காலத்தில் என்று தெரிந்து.....



பழையவர் காணும் எனும் அயலார்கள்

பஞ்சு பறந்திட நின்றவர் பந்தர்

இடும் என வந்து பறை இட முந்தவே

பிணம் வேக விசாரியும் என்று.....


வயது முதிர்ந்தவர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் பஞ்சினைப் போலப் பறந்து ஓட,  இருந்தவர் இனி பந்தல் முதலியவற்றைச் செய்ய, பறை முழக்கம் கொட்டவும், பிணத்தினைக் கொண்டுபோய்ச் சுடுவதற்கு ஆவன செய்வீர் என்று.....



பலரையும் ஏவி முதியவர் தாமும்

இருந்த சவம் கழுவும் சிலர் என்று

பணிதுகில் தொங்கல் களபம் அணிந்து

பாவகமே செய்து நாறும் உடம்பை.....


பலரையும் அனுப்பிக் கேட்டு, சில பெரியவர்கள் பிணத்தினைக் கழுவுவீர்கள் என்று சொல்லவும், அணிகலன்கள், ஆடை, மாலை, வாசனைப் பொருட்கள் ஆகியவற்றைத் தரித்து, நாறுகின்ற இந்த உடம்பை.....



வரிசை கெடாமல் எடும்என ஓடி

வந்து இள மைந்தர் குனிந்து சுமந்து

கடுகி நடந்து சுடலை அடைந்து

மானிட வாழ்வு என வாழ்வு என நொந்து.....


அலங்காரம் குலையாமல்படிக்கு, எல்லோரும் ஓடி வந்து எடுங்கள் என்று சொல்லவும், பிள்ளைகள் பாடையைக் குனிந்து தாங்கி, வேகமாகச் சென்று சுடுகாட்டினை அடைந்து, மனித வாழ்வு இவ்வளவு தானோ என்று வருந்தி.....



விறகுஇட மூடி அழல்கொடு போட

வெந்து விழுந்து முறிந்து நிணங்கள்

உருகி எலும்பு கருகி அடங்கி

ஓர் பிடி நீறும் இலாத உடம்பை

நம்பும் அடியேனை இனி ஆளுமே.....


விறகை அடுக்கி மறைத்து, நெருப்பினை மூட்டி விடவும், உடம்பானது வெந்து விழுந்து நொறுங்கி, கொழுப்பானது உருகி, எலும்பும் கறுத்து, தீயும் அடங்கி, இறுதியில் ஒரு பிடி சாம்பலும் ஆகத் தேறாத இந்த உடம்பை நிலை என எண்ணுகின்ற அடியேனை இனி ஆட்கொள்ள வேண்டும்.









No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 7

  "அன்ன விசாரம் அதுவே விசாரம், அது ஒழிந்தால், சொன்ன விசாரம் தொலையா விசாரம், நல் தோகையரைப் பன்ன விசாரம் பலகால் விசாரம், இப் பாவி நெஞ்சுக...