பட்டினத்தார் தாயாருக்குச் செய்த
தகனக் கிரியை
----
இளமை முதலே இவர் வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படுகின்றது. வானுலக தேவர்களில் ஒருவரான குபேரன்தான் இப்பூவுலகில் பட்டினத்து அடிகளாக அவதரித்தார் என்று திருவெண்காட்டுப் புராணம் கூறும். இவரது பெற்றோர்கள் சிவநேசன், ஞானகலாம்பை ஆவர். இவர்களின் தவப்பயனாய்ப் பிறந்தவரே பட்டினத்து அடிகளார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் திருவெண்காடர்.
கப்பல் வணிகம் மூலம் பெரும் பொருள் ஈட்டிய சிவநேசர் காலமாக உரிய வயதில் ஞானகலாம்பை, சிதம்பரச் செட்டியார் சிவகாமியம்மையின் புதல்வியான சிவகலை என்பவரை திருவெண்காடருக்கு மணமுடித்தார். இல்லற வாழ்க்கை இனிதே நடந்தாலும் குழந்தையில்லா ஏக்கம் திருவெண்காடரை வாட்டியது. இறைவனிடம் முறையிட்டார். இறைவன் தாமே குழந்தை வடிவாய் சிவசருமர் என்ற சிவபக்தர் மூலம் திருவெண்காடரைச் சேர்ந்தார். அன்பு மகனை "மருதபிரான்" என்று பெயரிட்டு வளர்த்தார்.
குழந்தை பெரியவனானதும் வியாபாரம் செய்ய அனுப்பினார். திரைகடலோடித் திரவியம் தேடிச் சென்ற மருதவாணன் கப்பல் நிறையத் தவிடு மூட்டையும் வறட்டிகளையும் ஏற்றிக்கொண்டு திரும்பி வந்தான். மருதவாணனுக்குப் பித்துப் பிடித்து விட்டதோ என்று அஞ்சிய அவர் வீட்டினுள்ளே சிறை வைத்தார். வறட்டிகளை வெளியே எறியற, வரட்டிக்குள் வைரக்கற்கள் சிதறின. தவிடெல்லாம் தங்கமாக மின்ன, திகைத்துப் போன திருவெண்காடர் தம் மகனைப் பாராட்டத் தேடுகையில், அவரோ, தம் அன்னையாரிடம் சிறு பேழையைக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்து விட்டு மறைந்து விட்டிருந்தார்.
மைந்தன் கொடுத்துவிட்டுச் சென்றிருந்த பேழையில் காதற்ற ஊசியும், ஓர் ஓலைச் சீட்டும் இருந்தது. அதில் ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்று எழுதப்பட்டிருந்தது. வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து கொண்ட திருவெண்காடர் தமது மைந்தனாக இதுநாள் வரை இருந்தது திருவிடைமருதூர்ப் பெருமானே என்பதை உணர்ந்து மனம் வருந்தித் துறவறம் பூண்டார்.
இந்தத் துறவுநிலை வருவதற்கு முன், தன் மனம் இருந்த நிலையை பொருளாசை, பெண்ணாசை, வித்தையாசை என்று மனம் ஆசையின் வாய்ப்பட்டு அலைக்கழிப்புற்ற நிலையை அழகிய கண்ணிகளாகப் பாடுகின்றார்.
“அறியாமை யாம் மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா
பிறியா வினைப் பயனால் பித்துப் பிடித்தனடா”
“மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா”
“மண்ணாசைப் பட்டேனை மன்ணுண்டு போட்டதடா”
“பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே”
“மக்கள் சுற்றத்து ஆசை மறக்கேனே என்குதே;
திக்கு அரசு ஆம் ஆசையது தீரேனே என்குதே”
“வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே;
சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே”
“மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே
சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே”
“கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே
செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே”
இதுமட்டுமா, இந்த ஆசையைத் தூண்டும் ஐந்து புலனும் அவருக்கு அடங்கா நிலையையும் தெரிவிக்கின்றார்.
“ஐந்து புலனும் அடங்கேனே என்குதே;
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே”
"காமக் குரோதம் கடக்கேனே என்குதே
நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே
அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே"
என்று அழுகிறார்.
நேற்றிருந்தோர் இன்று இல்லை. கண்ணுக்கு எதிரே உடல்களெல்லாம் கட்டையில் வேகக் கண்டும் இந்த உடலை நித்தியமானது என்று எண்ணி, நிரந்தரமாக இருப்போம் என்று எண்ணி, ஆங்காரம் கொள்ளுகிறதே, நீர்க்குமிழி போன்ற இவ்வாழ்க்கை ஒரு பெருங்காற்றுக்குத் தங்காதே. பெண்ணாசை மனதை அணு அணுவாய்ச் சித்திரவதை செய்கிறதே. அரும்பு விழியழகும், குதம்பை முலையழகும் உரகப்படத்து அல்குல் அழகும், ‘ஆவி உண்பேன்’ என்று என்னை அலைக்கழிக்கின்றதே’.
கன்னி வனநாதா ! கன்னி வனநாதா !
புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ?
சீரியாய்க் கீடமாய்க் கெட்ட நாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ?
பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ?
அன்னை வயிற்றில் அழிந்த நாள் போதாதோ?
மன்னவனாய் வாழ்ந்து மரித்த நாள்போதாதோ?
காமன் கணையால் கடைபட்டல் போதாதோ?
“பிறப்பைத் தவிர்த்தையிலை புண்ணாக் கொண்டையிலை
இறப்பைத் தவிர்த்தையிலை; என்னென்று கேட்டையிலை”
என்று கூறி 'கன்னி வனநாதா என்னை உன்னோடு அழைத்துக்கொள்' என்று கெஞ்சுகின்றார்.
இன்னும் அவரது அருட்புலம்பலைக் கேட்கும் ஆசைப்பேறும், முதல்வன் முறையீட்டைத் தொடர்ந்து அருட்புலம்பலும் தொடர்கின்றது.
குருவாகி வந்தானோ? குலம் அறுக்க வந்தானோ?
உருவாகி வந்தானோ? உரு அழிக்க வந்தானோ”
“முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி
தன்னை யறியவே தான் ஒருத்தி யானேண்டி”
“சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நான் அறியேன்
மாணிக்கத்துள் ஒளிபோல் மருவி இருந்தாண்டி”
"உள்ளுண்வாய் நின்றவர்தம் உணர்வுக்கு உணர்வாண்டி
உடலும் உயிரும்போல் உள்கலந்து நின்றாண்டி"
அந்த இறைவன்
"ஓசை ஒடுங்கும் இடம் ஓங்காரத்து உள்ஒளி காண்
பேசாமல் இருக்கும் பிரமம் இது என்றாண்டி”
என்று தாம் அறிந்தவற்றை கூறிப் புலம்புகின்றார்.
காவிரிப்பூம்பட்டினத்துப் பெருஞ்செல்வந்தராய் வாழ்ந்த சிறப்பு நோக்கி இவரை எல்லோரும் பட்டினத்தார் என்றே அழைத்தனர்.
இவரது பாடல்களில் பெரும்பாலும் திருவாசக மணமும் நிறைந்து காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக,
“புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ?
கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ?
என்ற பட்டினத்து அடிகளாரின் வரிகள், மாணிக்கவாசகரின்,
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்ல ஆ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்”
என்ற சிவபுராண வரிகளை நினைவூட்டுகின்றன.
இன்னும் சில பாடல்கள் இராமலிங்க அடிகளாரின் பாடல்களை மனத்தினில் நிழலாட வைக்கின்றன.
“தன்னை அறிந்தேன்டி! தனிக்குமரி ஆனேன்டி
தன்னம் தனியே தனி இருக்கும் பக்குவமோ?
என்ற வரிகள் இராமலிங்கரின் ‘தனித்திருக்க மாட்டேனடி’ என்ற பாடலை நினைவுறுத்துகின்றன.
மொத்தத்தில் இறைவனை எண்ணி மனம் உருக வைப்பதில் மாணிக்கவாசகரும், இராமலிங்க அடிகளாரும் கலந்த கலவை இந்தப் பட்டினத்தார் எனலாம். அப்படி இறைவனைப் பாடி உருகுகின்ற திருவாசகத்திலும், அருட்பாவிலும் நனைந்த ஈர விழிகள் இந்தப் பட்டினத்தார் பாடல்களிலும் கசிவை ஏற்படுத்துகின்றன.
இப்படித் துறவியாய்த் திரிந்த காலத்து, அன்னை இறந்த துயர் கேட்டு, அங்கே சென்று பச்சை வாழைமட்டை மீது அன்னையின் உடலைக் கிடத்தித் திருப்பதிகம் பாடித் தீயெழுப்பித் தம் அன்னையாருக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியை செய்து முடித்தார். இவ்வளவு நாட்கள் அவ்வூரில் சுற்றித் திரிந்தது இதற்காகத் தானே.
பட்டினத்து அடிகளார் பாடிய இந்த தகனப் பாடல், இறுதி ஊர்வலப் பாடலாய்த் திருவாசகத்துடன் இன்றும் மக்களால் சேர்த்துப் பாடப்படுகிறது.
“ஐயிரண்டு திங்களாய் அங்கம்எலாம் நொந்து பெற்றுப்
பையல் என்ற போதே பரிந்து எடுத்துச் - செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி”
இதன் பொருள் ---
பத்து மாதங்கள் வருத்தப்பட்டுச் சுமந்து, கால்முதல் தலை அளவு உள்ள உறுப்புக்கள் அனைத்தும் வருத்தம் அடையுமாறு பிரசவித்து, ஆண் குழந்தை என அருகில் உள்ளோர் கூறக் கேட்ட உடனே விரும்பிக் கையில் எடுத்து அணைத்து, பொன்னால் ஆன அணிகலன்களைப் பூண்ட தனங்களில் பொழிகின்ற பாலினை அருந்துமாறு அளித்த எனது அன்னையை, இனி எந்தப் பிறப்பில் காணப் போகின்றேன்? (காண முடியாது என்பது கருத்து)
ஓதுவார் பட்டினத்தாரின் இந்தப் பாடலைப் பாடும்போது உயிரற்ற அந்த உடலை இன்னொரு தரம் பார்க்க வைக்கிறது. பிணம் சுடுவதற்கு முன்போ அல்லது புதைப்பதற்கு முன்போ வாய்க்கு அரிசி இடுதல் என்ற சடங்கு உண்டு. உறவும் சுற்றமும் வாய்க்கரிசி இடும் நேரத்தில் ஓதுவார் அல்லது பரியாரி இந்தப் பாடலைப் பாடுவார்.
“அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு,
வரிசை இட்டுப் பார்த்து மகிழாமல், - உருசியுள்ள
தேனே! அமிர்தமே! செல்வத் திரவியப்பூ
மானே! என அழைத்த வாய்க்கு”
இதன் பொருள் ---
என்னைப் பெற்ற தாய்க்கு வரிசை வைத்துப் பார்த்து மகிழாமல், என்னைச் சுவையுள்ள தேனே எனவும், அமுதமே எனவும், செல்வத் திரவியத்தினை உடைய அரசனே எனவும் பாராட்டிய வாய்க்கு அரிசியையா நான் இடுவது?
இந்தப் பாடலைக் கேட்டு, வாய்க்கரிசி இடுபவர் மனம் அழும்.
வெட்டியான் மண்ணால் உடலை மூடுகிறான். அல்லது உடலை வறட்டியால் (எரு மூட்டையால்) மூடுகிறான். அந்த உடலை இறுதியாக ஒரு தடவை பார்க்கத் துடிக்கிறது.
“ஐயிரண்டு திங்களாய் அங்கம் எலாம் நொந்து பெற்றுப்
பையல் என்ற போதே பரிந்து எடுத்துச் - செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி”
உடலுக்குத் தீ வைக்கச் சொல்லுகிறான் வெட்டியான். மனம் பதறுகிறது. எத்தனை அருமையாய் எம்மைப் பாதுகாத்த ‘தாய்’ அவளுக்கா இந்தக் கொடியவன் தீமூட்டச் சொல்லுகிறான். முடியாதய்யா முடியாது என்ற வருத்தத்தில், பின்வருமாறு பாடுகிறார் பட்டினத்து அடிகளார்.
“முந்தித் தவம் கிடந்து, முந்நூறு நாள் அளவும்
அந்தி பகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்”
இதன் பொருள் ---
குழந்தைப் பேறு வேண்டும் என்று முன்னே தவம் செய்து கிடந்து, அந்தத் தவத்தின் பலனாக, கருவானது பதிந்த நாள் முதலாக முந்நூறு நாள் வரையும் இரவிலும் பகலிலும் சிவபரம்பொருளைப் பிரார்த்தித்துக் கொண்டு இருந்து, வயிறு முன்னே தள்ளும்படியாக என்னைச் சுமந்து பெற்ற தாய்க்கு, அவளது உடல் பற்றி எரியும்படியாகத் தீயையா வைப்பேன்?
குழந்தைப் பருவத்தில் சோறூட்டிய தாயாரின் கருணை முகம் மனதில் நிழலாடுகிறது. பட்டினத்தார் துடித்துப் போகிறார்.
“வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்து என்னைக் காதலித்து, - முட்டச்
சிறகில் இட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகில் இட்டுத் தீ மூட்டுவேன்”
இதன் பொருள் ---
துணியால் உண்டாக்கப்பட்ட ஏணையிலும், மரம் முதலியவற்றால் அமைக்கப்பட்ட தொட்டிலிலும், தனது மார்பின் மேலும், தோள்களின் மேலும், மஞ்சத்திலும் வைத்து, என்னை விரும்பி இடுப்பில் தூக்கி வைத்துக் காப்பாற்றிச் சிறப்பு அனைத்தும் செய்த அன்னைக்கோ கட்டையில் வைத்துத் தீப்பற்ற வைப்பேன்?
பட்டினத்து அடிகளார் மனத் தடுமாற்றத்தை இன்னுமொரு பாடலும் கூறுகிறது.
“அள்ளி இடுவது அரிசியோ? தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல், - மெள்ள
முகம் மேல் முகம் வைத்து முத்தாடி, என்றன்
மகனே என அழைத்த வாய்க்கு”
இதன் பொருள் ---
மெல்லெனத் தனது முகத்தின் மீது எனது முகத்தை வைத்து முத்தம் இட்டு, 'எனது மகனே' என்று வாயார அழைத்த எனது தாயின் வாய்க்கு அரிசியையா அள்ளிப் போடுவது? அதுவும் அல்லாமல், கூச்சம் இல்லாமல் கொள்ளியையும் வைப்பதா?
இனியும் காத்திருக்க இயலாது. அன்னை உடல் எரிக்குள் மூழ்குவதே சரி என்று நினைத்த பட்டினத்து அடிகளார், அவ்வுடலைப் புதிய முறையில் பாட்டாலேயே தீயை மூளச் செய்கிறார்.
“முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே”
இதன் பொருள் ---
முன்னொரு காலத்தில் சிவபரம்பொருளால் இடப்பட்ட நெருப்பு, திரிபுரத்தில் மூண்டு எரிந்தது. அதன் பின்னர் சிறந்த வானரமான அனுமனால் இடப்பட்ட சீதையின் கற்பு என்னும் நெருப்பு அழகிய இலங்கை நகரத்தில் மூண்டு எரிந்தது. எனது தாய் எனக்கு இட்ட நெருப்பானது எனது அடிவயிற்றில் மூண்டு எரிந்தது. ஆதலின், நானும் எனது தாயில் உடலில் இட்ட தீயானது பற்றி எரியட்டும்.
தீக்கடவுள் பட்டினத்து அடிகளாரின் வாக்குக்குப் பணிந்து உடலைத் தீக்கிரையாக்கினான். அப்போது அடிகளாருக்கு உடல் பதறுகிறது. வெந்தழலில் வேகும் அவ்வுடலைப் பார்த்து,
“வேகுதே தீயதனில், வெந்து பொடி சாம்பல்
ஆகுதே, பாவியேன், ஐயகோ! - மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்து எடுத்த கை”
என்று, "வானில் பறக்கும் குருவிகள் எனது நேரே பறக்காதவண்ணம் என்னைப் பாராட்டி, 'இவனால் நான் அனைத்தும் உடையவள் ஆனேன்' என்று எண்ணி என்னை வளர்த்த தாயின் உடல் நெருப்பினில் வேகின்றதே. வெந்து பொடி சாம்பல் ஆகின்றதே. இதனைக் கண்டும் இருக்கின்றேனே, ஐயகோ" என்னும் பொருள்படப் பாடுகிறார்
தீ உடலை எரித்துவிட்டது. மேடாக இருந்த உடற்கூடு சாம்பலாய்ப் போய்விட்டது.
“வெந்தாளோ? சோணகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ? என்னை மறந்தாளோ? - சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து, என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்”
என்று, "அண்ணாமலை வடிவாக விளங்கும் ஞான வடிவினனே! எப்பொழுதும் உன்னையே தியானத்து மிழ்வுடன் வரம் வேண்டி என்னைப் பெற்ற தாய் உடல் வெந்து போனாளோ! உனது திருவடி நிழலில் வந்து சேர்ந்தாளோ! என்னை மறந்து விட்டாளோ? (நான் அறிகிலேன்)" என்னும் பொருள்படப் பாடுகிறார்.
இப்பொழுது அவர் மனம் பக்குவ நிலைக்கு வந்து விட்டது. உடல் சாம்பல் சேகரிக்கப்படுகிறது. நேற்று உடலாய் நடமாடினாள். இன்று சாம்பலாய்த் தோற்றம் தருகிறாள். இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் அடைகிறார்.
“வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்று இருந்தாள், இன்று வெந்து நீறானாள், - பால்தெளிக்க
எல்லீரும் வாருங்கள், ஏது என்று இரங்காமல்,
எல்லாம் சிவமயமே யாம்”
என்று, "தாயானவள் சுகமாகத்தான் இருந்தாள். வீதியிலும் உலாவிக் கொண்டு இருந்தாள். நேற்று உயிரோடு இருந்தாள். இன்று சாம்பல் ஆயினாள். இது என்ன? என வருந்தாமல் பால் தெளிப்பதற்கு அனைவரும் வாருங்கள். அனைத்தும் சிவமயமே ஆகும்" என்னும் பொருள்படப் பாடி முடித்து எல்லோரையும் பால் தெளிக்க அழைக்கின்றார் பட்டினத்து அடிகளார்..
பட்டினத்து அடிகளார் பாடிய பாடல்களில், பின்வரும் பாடல் மிகவும் புகழ் பெற்று விளங்குவது.
“மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும்தன் வாயில்மட்டே,
இனமான சுற்ற மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை?
தினையாம் அளவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே”
இதன் பொருள் ---
மனைவியும், மக்களும், வாழ்க்கையும், பொன்னும் உடலை விட்டு உயிர் செல்லும் அளவும் வீட்டிலேயே இருந்து விடும். இனமாய் உள்ள உறவுகள் சுடுகாட்டு அளவிலேயே நின்று விடும். உயிர் போகும் வழிக்குத் துணையாக வருவது யாது? ஒன்றும் இல்லை. தினையரிசியின் சிறிய அளவாகிலும் தினையினும் குறுகிய எள்ளின் அளவு ஆகிலும், உயிரோடு உள்ளபோதே தவச் சிந்தையோடு பிறருக்குக் கொடுத்து உதவியது இருக்குமானல், அந்தப் புண்ணியம் உயிரைக் காக்க, அதனால் மோட்சம் கிடைக்கும். இதுவே உண்மை.
No comments:
Post a Comment