அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கொலையிலே மெத்த (பொது)
முருகா!
போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய்.
தனதனா தத்த தனதனா தத்த
தனதனா தத்த ...... தனதான
கொலையிலே மெத்த விரகிலே கற்ற
குவளையேர் மைக்கண் ...... விழிமானார்
குழையிலே யெய்த்த நடையிலே நெய்த்த
குழலிலே பற்கள் ...... தனிலேமா
முலையிலே யற்ப இடையிலே பத்ம
முகநிலா வட்ட ...... மதின்மீதே
முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை
மொழியிலே சித்தம் ...... விடலாமோ
கலையனே உக்ர முருகனே துட்டர்
கலகனே மெத்த ...... இளையோனே
கனகனே பித்தர் புதல்வனே மெச்சு
கடவுளே பச்சை ...... மயிலோனே
உலகனே முத்தி முதல்வனே சித்தி
உடையனே விஷ்ணு ...... மருகோனே
ஒருவனே செச்சை மருவுநேர் சித்ர
வுருவனே மிக்க ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கொலையிலே, மெத்த விரகிலே கற்ற,
குவளை ஏர் மைக்கண் ...... விழிமானார்,
குழையிலே, எய்த்த நடையிலே, நெய்த்த
குழலிலே, பற்கள் ...... தனிலே,மா
முலையிலே, அற்ப இடையிலே, பத்ம
முகநிலா வட்டம் ...... அதின்மீதே,
முதுகிலே, பொட்டு நுதலிலே, தத்தை
மொழியிலே, சித்தம் ...... விடல்ஆமோ?
கலையனே! உக்ர முருகனே! துட்டர்
கலகனே! மெத்த ...... இளையோனே!
கனகனே! பித்தர் புதல்வனே! மெச்சு
கடவுளே! பச்சை ...... மயிலோனே!
உலகனே! முத்தி முதல்வனே! சித்தி
உடையனே! விஷ்ணு ...... மருகோனே!
ஒருவனே! செச்சை மருவுநேர் சித்ர
உருவனே! மிக்க ...... பெருமாளே.
பதவுரை
கலையனே --- கலைகளின் வடிவானவரே!
உக்ர முருகனே --- உக்கிரமான முருகப் பெருமானே!
துட்டர் கலகனே --- துட்டர்களைக் கலங்கச் செய்து அடக்குபவரே!
மெத்த இளையோனே --- மிகவும் இளையவரே!
கனகனே --- பொன் வடிவானவரே!
பித்தர் புதல்வனே --- பித்தர் எனப் பேர் பெற்ற சிவபரம்பொருளின் திருப்புதல்வரே!
மெச்சு கடவுளே --- யாவராலும் மெச்சப்படும் கடவுளே!
பச்சை மயிலோனே --- பச்சை மயில் வாகனரே!
உலகனே --- உலகில் உள்ள எல்லாவற்றிலும் நிறைந்தவரே!
முத்தி முதல்வனே --- முத்தியை அளிக்கவல்ல முதற்பொருளே!
சித்தி உடையனே --- வீடுபேற்றைத் தருபவரே!
விஷ்ணு மருகோனே --- திருமாலின் திருமருகரே!
ஒருவனே --- ஒப்பற்றவரே!
செச்சை மருவு நேர் சித்ர உருவனே --- செம்மை பொருந்திய அழகான திருவருவத்தை உடையவரே!
மிக்க பெருமாளே --- மேம்பட்ட பெருமையில் மிக்கவரே!
கொலையிலே --- கொலைத் தொழில் வல்லவரும்,
மெத்த விரகிலே கற்ற --- தந்திரங்களை நிறையக் கற்றவரும்
குவளை ஏர் மைக்கண் விழி மானார் --- குவளை மலரை ஒத்த, மையிட்ட கண்களை உடைய பொதுமகளிரின்,
குழையிலே --- காதில் அணிந்துள்ள குண்டலங்களிலும்
எய்த்த நடையிலே --- ஒயிலான நடையிலும்,
நெய்த்த குழலிலே --- நெய் பூசப்பட்டு உள்ள கூந்தலிலும்,
பற்கள் தனிலே --- பற்களின் அழகிலும்,
மாமுலையிலே --- பெருத்த முலைகளின் மீதும்,
அற்ப இடையிலே --- சிறுத்த இடையிலும்,
பத்மமுக நிலா வட்டம் அதின் மீதே --- தாமரை போன்றதும்,சந்திர பிம்பத்தை ஒத்தும் ஆன முகத்தின் மீதும்,
முதுகிலே --- முதுகின் அழகிலே,
பொட்டு நுதலிலே --- பொட்டு இட்ட நெற்றியிலும்,
தத்தை மொழியிலே --- கிளி போன்ற பேச்சிலே,
சித்தம் விடலாமோ --- அடியேன் மனதைப் பறி கொடுக்கலாமோ?
பொழிப்புரை
கலைகளின் வடிவானவரே! உக்கிரமான முருகப் பெருமானே! துட்டர்களைக் கலங்கச் செய்து அடக்குபவரே! மிகவும் இளையவரே! பொன் வடிவானவரே! பித்தர் எனப் பேர் பெற்ற சிவபரம்பொருளின் திருப்புதல்வரே! யாவராலும் மெச்சப்படும் கடவுளே! பச்சை மயில் வாகனரே! உலக உயிர்களும், உலகில் உள்ள எல்லாவற்றிலும் நிறைந்தவரே! உயிர்களுக்குப் பாசநீக்கத்தை அளிக்கவல்ல முதற்பொருளே! வீடுபேற்றைத் தருபவரே! திருமாலின் திருமருகரே! ஒப்பற்றவரே! செம்மை பொருந்திய அழகான திருவருவத்தை உடையவரே! மேம்பட்ட பெருமையில் மிக்கவரே!
கொலைத் தொழில் வல்லவரும், தந்திரங்களை நிறையக் கற்றவரும், குவளை மலரை ஒத்த, மையிட்ட கண்களை உடைய பொதுமகளிரின், காதில் அணிந்துள்ள குண்டலங்களிலும், ஒயிலான நடையிலும், நெய் பூசப்பட்டு உள்ள கூந்தலிலும், பற்களின் அழகிலும், பெருத்த முலைகளின் மீதும், சிறுத்த இடையிலும், தாமரை போன்றதும்,சந்திர பிம்பத்தை ஒத்தும் ஆன முகத்தின் மீதும், முதுகின் அழகிலே, பொட்டு இட்ட நெற்றியிலும், கிளி போன்ற பேச்சிலே, அடியேன் மனதைப் பறி கொடுக்கலாமோ? (ஆகாது)
விரிவுரை
இத் திருப்புகழின் பிற்பகுதியில் அடிகளார் முருகப் பெருமானின் வடிவழகைப் பலவாறாக எடுத்துக் கூறி, அவற்றில் மனதைச் செலுத்த வேண்டும் என்பதாக அறிவுறுத்தி, சிற்றின்பம் கருதி பொதுமகளிரின் அழகில் மனதைச் செலுத்துதல் ஆகாது என்று அறிவுறுத்தினார்.
கலையனே ---
இறைவன் கலைகளின் வடிவானவர். உயிர்களுக்கு இயல்பிலேயே பொருந்திய அறியாமை இருளைக் கலைத்து அறிவு ஒளியை விளங்கச் செய்வதால் 'கலை' என்பதாகச் சொல்லப்பட்டது. ஒவ்வொரு கலையும், அதற்கான கல்வியின் மூலம் கற்கப்படும். "கல்வி கரைகண்ட புலவோனே" என்று முருகப் பெருமானை வள்ளிமலைத் திருப்புகழில் அடிகளார் பாடினார்.
ஒரு காலத்தில் தேவர்கள், முனிவர்கள் முதலியோர் கூடினார்கள். அக்குழுவில் யார் முதன்மைப் புலவர்? அத்தகைய முதன்மைப் புலவர்க்கு வித்வா தாம்பூலம் தரவேண்டும் என்ற ஆராய்ச்சி நிகழ்ந்தது. கலைமகளின் அம்சமான ஒளவையாரே சிறந்த புலவர், அவருக்குத்தான் தாம்பூலம் தரவேண்டும் என்று முடிவு செய்து, எல்லோரும் ஒளவையாரிடம் சென்று, "அம்மையே! தாங்கள் புலவர் சிகாமணி. இந்த வித்வா தாம்பூலம் உமக்கே உரியது. பெற்றுக் கொள்ளும்" என்று நீட்டினார்கள். தாம்பூலம் கொடுப்பது என்பது ஒருவகை உபசாரம்.
ஒளவையார், "புலவர்களே! இதைப் பெறுந் தகுதி எனக்கு இல்லை. புலவர்கள் என்றால் தேவரையும் குறிக்கும். எனவே, புலவர்களாகிய தேவர்க்கு அதிபதி இந்திரன். இந்திரன் ஐந்திரம் என்ற வியாகரனத்தைச் செய்தவன். அவன்பால் சென்று இதனைக் கொடுங்கள்" என்றார். எல்லோரும் இந்திரனிடம் போய் இதைக் கூறித் தாம்பூலத்தை நீட்டினார்கள்.
இந்திரன் அஞ்சினான். "ஒரு வியாகரண நூலைச் செய்ததனால் மட்டும் ஒருவன் சகல கலாவல்லவனாகி விடுவனோ? அகத்தியர் தான் பெரும்புலவர். அவரிடம் சென்று இதைக் கொடுப்பீராக" என்றான். அனைவரும் சென்று, "தலைமைப் புலவர் நீர். இவ் வித்வா தாம்பூலத்தைப் பெற்றுக் கொள்ளும்" என்றார்கள்.
அகத்திய முனிவர் புன்முறுவல் செய்து, "நன்று கூறினீர்கள். நான் தலைமைப் புலவன் ஆவேனோ? சகலகலாவல்லி கலைமகளே ஆவள்.. அப்பெருமாட்டியிடம் போய் இதைச் சமர்ப்பணம் செய்யுங்கள்" என்றார். எல்லோரும் வாணிதேவியிடம் போய், "இந்த வித்வ தாம்பூலம் உமக்கே உரியது; பெற்றுக் கொள்ளும்" என்றார்கள். கலைமகள் நிலை கலங்கி, "நான் இத் தாம்பூலத்துக்கு உரியவள் ஆகேன். என் கணவரே உரியவர். அவர் வேதத்தில் வல்லவர். அவருக்கு இதைத் தருவது முறைமை" என்றார்.
பிரமதேவனிடம் போய் "இது சிறந்த புலவர்க்கு உரிய தாம்பூலம்; நீர் பெற்றுக் கொள்ளும்" என்றார்கள் பிரமதேவர், "நான் புலவனோ? அல்ல, அல்ல. வாகீசுவரி, ஞானேசுவரி, ஞானாம்பாள் உமாதேவியார்தான். அப் பரமேசுவரிக்குத் தான் இது உரியது. ஆதலால் அம்பிகையிடம் போய்க் கொடுங்கள்" என்றார். திருக்கயிலாய மலை சென்று எல்லோரும் வணங்கி, "தேவீ! பரமேசுவரி! ஞானாம்பிகையே! இது வித்வ தாம்பூலம். இது உமக்கே உரியது" என்றார்கள். உமாதேவியார், “நன்று நன்று; நான் இதற்கு உரியவள் அல்லள். எனது குமாரன் ஞானபண்டிதன், சிவகுருநாதன், அம் முத்துக்குமார சுவாமியே இதற்கு உரியவன்" என்று அருளிச் செய்தார். எல்லோரும் கந்தகிரிக்குச் சென்று, “முருகா! மூவர் முதல்வா! இது வித்வ தாம்பூலம். இதனைத் தேவரீர் ஏற்றருள வேண்டும்" என்று வேண்டி நின்றார்கள். "நல்லது" என்று முருகப் பெருமான் அத்தாம்பூலத்தை ஏற்றுக் கொண்டருளினார். அதனால் அவர் சகல கலாவல்லவர்!
கலைஞானம் என்பது மெய்ந்நூலறிவு எனப்படும். நூல்கள் இருவகைப்படும். அவை உலகநூல்கள், மெய்ந்நூல்கள் என்பன. உலகியல் பற்றி எழுந்தவை உலகநூல்கள். வீட்டு நெறியை உணர்த்துவன மெய்ந்நூல்கள். உலகநூல்களை யாரும் கற்கலாம். பல துறைகளைச் சார்ந்த உலகநூல்களை அவ்வத் துறையில் வல்ல ஆசிரியரை அடுத்துக் கேட்டு விளங்கிக் கொள்ளலாம்.
ஆனால், மெய்ந்நூல்கள் அத்தகையன அல்ல. அவற்றைக் கற்பதற்குப் பக்குவம் வேண்டும். பக்குவமில்லார் அவற்றைக் கற்க விழையார். கற்க முன்வரார். ஒருவேளை முன்வந்த போதிலும் அவற்றின் பொருளை உள்ளவாறு விளங்கிக் கொள்ளார். ஏனெனில் ஆசை, வெகுளி முதலிய மாசுகள் மனத்தில் இருக்கின்ற வரையில் அம் மனத்தில் ஞானநூற் பொருள்கள் சென்று பதியா. முன்கூறியபடி மனம் மொழி மெய்களினால் இறைவனை உண்மையாக வழிபட்டு வருவோர்க்கு மனமாசுகள் அகலும்; உள்ளத்தூய்மை உண்டாகும். அவரே பக்குவம் உடையவர். அவரே மெய்ந்நூலறிவைப் பெறுதற்கு உரியவர்.
பொருளியல்பை உள்ளவாறு உணர்தலே ஞானமாகும். அதாவது, தனக்குப் புகலாகிய இறைவனது இயல்பையும், அவன் வழியில் நிற்றற்குரிய தனது இயல்பையும், அவ்வாறு நிற்கவொட்டாது தன்னைத் தடுத்து நிற்கும் தளையினது நிலையையும் உள்ளவாறு உணர்தலே ஞானமாகும். இந்த ஞானத்தைத் தரும் மெய்ந்நூல்களை ஒருவர் தாமே முயன்று கற்று ஞானத்தைப் பெறுதல் என்பது இயலாது. ஏனைய ஆசிரியன்மார்களை அடைந்து வருந்திக் கற்று ஞானத்தைப் பெறலாம் என்பதும் இயலாது. ஏனெனில் நம்மினும் சிறிது அதிகம் கற்ற அவ்வாசிரியர்கள் உலகநூற் பொருளை உணர்த்த வல்லவரேயன்றி ஞானநூற் பொருளை உணர்த்தும் தகுதியுடையவர் அல்லர்.
அவ்வாறாயின் ஞானத்தைப் பெறுதல்தான் எவ்வாறு? என்ற வினா எழும். ஞானமே வடிவாகிய இறைவன் திருவடிகளை இடையறாது பற்றி நின்று வழிபட்டு வந்தால், இறைவனே உள் நின்று உணர்த்த மெய்ந்நூலறிவு எளிதில் வந்தடையும் என்பதே அதற்கான விடையாகும். வழிபாட்டின் மூலம் பக்குவம் எய்திய உயிருக்கு இறைவன் தானே ஞானத்தை உணர்த்துவன் என்பது கருத்து.
பித்தர் புதல்வனே ---
பித்தர் எனப் பேர் பெற்றவர் சிவபரம்பொருள். பின்வரும் திருமுறைப் பாடல்களைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
"விண்ணோர் பெருமானே! விகிர்தா! விடைஊர்தீ!
பெண்ஆண் அலியாகும் பித்தா! பிறைசூடீ!
எண்ஆர் எருக்கத்தம் புலியூரு உறைகின்ற
அண்ணா! எனவல்லார்க்கு அடையா வினைதானே."
முதல் திருமுறையில் திருஞானசம்பந்தப் பெருமானால் அருளப்பட்ட இப் பாடலின் பொருள் --- விண்ணவர் தலைவனே! வேறுபட்ட வடிவும் பண்பும் உடையவனே! விடைமீது ஏறி வருபவனே! பெண், ஆண், அலி என்னும் திணை பால் பாகுபாடுகளைக் கடந்து உள்ளவனே! பித்தனே! பிறைசூடியவனே! எல்லோராலும் எண்ணத்தகும் எருக்கத்தம்புலியூரில் உறைகின்ற தலைவனே! என்று உரைத்துப் போற்ற வல்லவரை, வினைகள் அடையா.
"எண்ணார் முத்தம் ஈன்று மரகதம் போல்காய்த்துக்
கண்ணார் கமுகு பவளம் பழுக்கும் கலிக்காழிப்
பெண்ஓர் பாகா பித்தா பிரானே என்பார்க்கு
நண்ணா வினைகள் நாள்தொறும் இன்பம் நணுகும்மே."
முதல் திருமுறையில் திருஞானசம்பந்தப் பெருமானால் அருளப்பட்ட இப் பாடலின் பொருள் --- அழகிய கமுக மரங்கள், எண்ணத்தில் நிறையும் அழகிய முத்துக்களைப் போல அரும்பி மரகதம் போலக் காய்த்துப் பவளம் போலப் பழுக்கும் ஆரவாரம் மிக்க காழிப்பதியில் விளங்கும் பெண்ணோர் பாகனே! பித்தனே! பிரானே! என்பவர்களை வினைகள் நண்ணா. நாள்தோறும் அவர்கட்கு இன்பங்கள் வந்து சேரும்.
"திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக்கொள் செஞ்சடை யார்இவர் பித்தரே."
ஐந்தாம் திருமுறையில் அப்பர் பெருமானாரால் அருளப்பட்ட இப் பாடலின் பொருள் --- வேதங்களால் பூசிக்கப்பெற்று அடைக்கப்பட்டிருந்த மறைக்காட்டுத் திருக்கதவத்தைத் திறக்குமாறு பாடியவன் அடியேன் என்னினும், செந்தமிழ்ப்பாடலை உறுதியுடன் பாடி அடைப்பித்தவராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் உதோ நின்றார். திருவாய்மூரில் பிறையைக் கொண்ட செஞ்சடை உடையாராகிய பெருமான் தம்மை மறைக்க வல்லரோ? இவர் பித்தரே ஆவர்.
'பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை
வைத்தாய், பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்
அத்தா! உனக்கு ஆளாய்இனி அல்லேன்எனல் ஆமே."
ஏழாம் திருமுறையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளிய இப் பாடலின் பொருள் --- பித்தனே! பிறையைக் கண்ணியாகச் சூடியவனே! பெருமை உடையவனே! உயிர்களுக்கு அருள் புரிபவனே! பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய, `அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே! எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்தருளினாய். அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகி, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
உலகனே ---
உலகில் உள்ள எல்லா உயிர்களிலும், எல்லாப் பொருள்களிலும் நிறைந்தவன் இறைவனே.
"ஊன்ஆய் உயிர் ஆனாய்உடல் ஆனாய்உலகு ஆனாய்
வானாய் நிலன் ஆனாய்கடல் ஆனாய்மலை ஆனாய்
தேன்ஆர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
ஆனாய்உனக்கு ஆளாய்இனி அல்லேன்எனல் ஆமே." --- சுந்தரர் தேவாரம்.
இதன் பொருள் ---
பூக்களின் தேன் நிறைந்த பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய் நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் நீங்காது எழுந்தருளியிருப்பவனே! நீ உடலிடத்து நின்று பொருள்களை உணர்ந்து வருகின்ற உயிர்கள் ஆகியும், அவைகள் நிற்கின்ற அவ்வுடல்களாகியும், வானாகியும், நிலமாகியும், கடலாகியும், மலையாகியும் நிற்கின்றாய்; இப்பெற்றியன் ஆகிய உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!
"பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே! என்பது திருவாசகம்.
முத்தி முதல்வனே ---
முத்தி என்பது பாச நீக்கம் ஆகும். அதை அருள்பவர் இறைவன். "முத்தி விதரண! உதாரக் கார" என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் போற்றிப் பாடி உள்ளார்.
கொலையிலே ....... சித்தம் விடலாமோ ---
போகத்தைத் தருகின்ற பொதுமாதரைப் போற்றுதல் ஒழிந்து, வீடுபேற்றினை அருளுகின்ற இறைவனைப் போற்ற வேண்டும். பொதுமாதரைப் போற்றினால் பெறுகின்றவை எவை எவை என்பதை அடிகளார் ஒரு திருப்புகழில் காட்டி உள்ளார். அரிதில் தேடிய பொருளை நல்வழியில் செலவழிக்காமல், பொருட் பெண்டிருக்கு அளவின்றித் தந்து, அவர் விரும்பிய ஆபரணங்களை எல்லாம் பூட்டியதற்குப் பதிலாக, அவர்கள் இவர்களுக்கு வாதம் சூலை முதலிய பிணிகளைத் தந்து அனுப்பவர். இவற்றை "மாதர் தரு பூஷணங்கள்" என்று காட்டுகின்றார் அருணை வள்ளலார்.
"வாதமொடு,சூலை, கண்டமாலை, குலை நோவு, சந்து
மாவலி, வியாதி, குன்ம ...... மொடு, காசம்,
வாயு உடனே பரந்த தாமரைகள், பீனசம், பின்
மாதர்தரு பூஷணங்கள்...... என ஆகும்
பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து,
பாயலை விடாது மங்க, ...... இவையால், நின்
பாதமலர் ஆனதின் கண் நேயம் அறவே மறந்து,
பாவ மதுபானம் உண்டு, ...... வெறிமூடி,
ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று,
ஈன மிகு சாதியின்கண் ...... அதிலே,யான்
ஈடு அழிதல் ஆனதின் பின், மூடன் என ஓதும் முன்பு, உன்
ஈர அருள் கூர வந்து ...... எனை ஆள்வாய்"
என்பது அடிகளார் அருளிய திருப்புகழ்ப் பாடல்.
இறைவனது புகழே பொருள்சேர் புகழ் ஆகும். எனவே, இறைவனைப் புகழ்வதை நன்மையைத் தரும். போகம் வேண்டிப் பொதுமாதரைப் புகழ்ந்து அவமே திரிதல் கூடாது என்கின்றார் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.
"பெண்அருங் கலமே, அமுதமே எனப்பெண்
பேதையர்ப் புகழ்ந்து, அவம் திரிவேன்,
பண்உறும் தொடர்பில் பித்தஎன் கினும்,நீ
பயன்தரல் அறிந்து,நின் புகழேன்;
கண்உறும் கவின்கூர் அவயவம் கரந்தும்
கதிர்கள் நூறுஆயிரம் கோடித்
தண்நிறம் கரவாது உயர்ந்துஎழும் சோண
சைலனே கைலைநா யகனே." --- சோணசைல மாலை.
இதன் பொருள் ---
காணக்கூடிய அழகிய உறுப்புக்களை மறைத்தும், இலக்கம் கோடி சூரியர்களுடைய ஒளியை மறைக்காது உயர்ந்து விளங்கும் சோணசைலப் பெருமானே, திருக்கயிலையின் நாயகனே, பெண்களுக்குள் அழகிய அணிகலன் போன்றவளே, அமுதம் நிகர்த்தவளே என்று பேதைகளாகிய அவர்களைப் புகழ்ந்து வீணே திரிகின்றேன். இனிய பாடலால் பித்தா என்று உன்னைப் பழித்தாலும் நீர் நன்மை செய்வதை அறிந்து உம்மைப் புகழேன். என் அறியாமை என்னே.
"பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி
மெச்சிச் சிவபத வீடு அருள்பவனை,
முத்தி நாதனை, மூவா முதல்வனை,
அண்டர் அண்டமும் அனைத்துள புவனமும்
கண்ட அண்ணலை, கச்சியிற் கடவுளை,
ஏக நாதனை, இணையடி இறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே" --- பட்டினத்தார்.
"தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே
சிற்றிடையிலே, நடையிலே,
சேலொத்த விழியிலே, பாலொத்த மொழியிலே,
சிறுபிறை நுதற்கீற்றிலே,
பொட்டிலே, அவர்கட்டு பட்டிலே, புனைகந்த
பொடியிலே, அடியிலே,மேல்
பூரித்த முலையிலே, நிற்கின்ற நிலையிலே,
புந்திதனை நுழைய விட்டு
நெட்டிலே அலையாமல், அறிவிலே, பொறையிலே,
நின்னடியர் கூட்டத்திலே,
நிலைபெற்ற அன்பிலே, மலைவற்ற மெய்ஞ்ஞான
ஞேயத்திலே, உன்இருதாள்
மட்டிலே மனதுசெல நினதருளும் அருள்வையோ?
வளமருவு தேவை அரசே!
வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை
வளர்காத லிப்பெண்உமையே! --- தாயுமானார்.
இதன் பொருள் ---
எல்லா வளமும் பொருந்திய தேவை நகருக்கு அரசியே! வடபெருமலை எனப்படும் இமயமலை அரையனுக்கு இரு கண்மணியாகத் திருத்தோற்றம் காட்டி அருளிய மலைவளர்காதலிப் பெண் உமையே! வன்மையாகிய இளமை வாய்ந்த மயக்கும் பெண்களின் வஞ்சகச் செயலிலும், வாயில் இருந்து வரும் வெட்டுமொழியிலும், துவளும் சிறிய இடையிலும், அன்னம்போல் நடக்கும் நடையிலும், கயல்மீன் போன்ற கண்களின் கள்ளப் பார்வையிலும், இனிமை போற் சொல்லும் சொல்லிலும், இளம் பிறைபோன்ற நெற்றியில் காணப்படும் கீற்று வரையிலும், நெற்றிப் பொட்டிலும், அவர் அழகுற உடுத்தி உழலும் பட்டிலும், பூசப்படும் வெண் பொடியிலும், அவர் காலடியிலும், மேலிடத்துப் பருத்துக் காணப்படும் ஈர்க்கு இடைபோகா இளமுலையிலும், அவர் நிற்கும் தனிநிலையிலும் அடியேனுடைய புல்லறிவினை மனம் போகும் போக்கிலே போகவிட்டு, நீள உழன்று ஒழியாமல், நன்னெறி ஒழுக்கத்திலும், திருவருளால் உண்டாகும் அளவிறந்த பொறுமையிலும், நின்னுடைய அடியார் திருக்கூட்டத்திலும் இறவாத இன்பத்திற்கு ஏதுவாகிய உறுதியான அன்பிலும், மாசற்ற மெய்யுணர்வினால் பெறப்படும் மெய்ப்பொருள் உண்மையிலும், உன்னுடைய இரண்டு திருவடிகள் மட்டிலும் அடியேன் நெஞ்சம் இடையறாது சென்று பொன்றாப் பயன் துய்க்க உன்னுடைய திருவருளையும் அருள்வாயோ?
கருத்துரை
முருகா! போகமாதர்பால் அடியேனது சித்தம் புகாமல் அருள்வாய்.
No comments:
Post a Comment