கோயில் திரு அகவல் - 3

 



பட்டினத்து அடிகளார் அருளிய

கோயில் திரு அகவல் - 3

திருச்சிற்றம்பலம்

---


பால்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்

திருமிடற்று அடக்கிய சிவனே அடைக்கலம்!

அடங்கலும் அடக்கிடும் கடுங்கொலைக் காலனைக்

கால்எடுத் தடக்கிய கடவுள் நின் அடைக்கலம்

உலகு அடங் கலும்படைத்து உடையவன் தலைபறித்து 5

   

இடக்கையில் அடக்கிய இறைவ! நின் அடைக்கலம்!

செய்யபொன் னம்பலச் செல்வ! நின் அடைக்கலம்;

ஐய! நின் அடைக்கலம்; அடியன் நின் அடைக்கலம்;

மனவழி அலைத்திடும் கனவெனும் வாழ்க்கையும்;

விழுப்பொருள் அறியா வழுக்குமறு மனனும்; 10

   

ஆணவ மலத்துதித்து அளைந்ததில் உளைந்திடும்

நிணவைப் புழுவென நெளிந்திடு சிந்தையும்;

படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்,

தவறும் அழுக்காறும் இவறுபொச் சாப்பும்

கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சின 15

   

இகலும், கொலையும், இழிப்புறு புன்மையும்,

பகையும், அச்சமும், துணிவும், பனிப்பும்,

முக்குண மடமையும், ஐம்பொறி முயக்கமும்,

இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கையை;

உயிர் எனுங் குருகுவிட்டு ஓடும் குரம்பையை 20

   

எலும்பொடு நரம்புகொண்டு இடையில் பிணித்துக்

கொழுந்தசை வேய்ந்தும் ஒழுக்கு விழுங் குடிலைச்

செழும்பெழு உதிரச் சிறுபுழுக் குரம்பையை,

மலவுடல் குடத்தைப் பலவுடல் புட்டிலைத்

தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக் 25

   

கொலை படைக் கலம்பல கிடைக்கும் கூட்டைச்

சலிப்புறு வினைப் பலசரக்குக் குப்பையைக்

கோள்சரக்கு ஒழுகும் பீற்றல் கோணியைக்

கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை,

ஐம்புலப் பறவை அடையும்பஞ் சரத்தை. 30

   

புலராக் கவலை விளைமரப் பொதும்பை,

ஆசைக் கயிற்றில் ஆடும்பம் பரத்தைக்

காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை,

மக்கள் வினையின் மயக்குந் திகிரியைக்,

கடுவெளி உருட்டிய சகடக் காலைப் 35

   

பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்

காமக் காற்றெடுத்து அலைப்பக்

கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை

இருவினை விலங்கொடும் இயங்குபுற் கலனைக்

நடுவன்வந் தழைத்திட நடுங்கும் யாக்கையைப் 40

   

பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுநின்

அடிமலர்க் கமலத்துக்கு அபயம்நின் அடைக்கலம்;

வெளியிடை உரும்இடி இடித்தென வெறித்தெழுங்

கடுநடை வெள்விடைக் கடவுள்நின் அடைக்கலம்;

இமையா நாட்டத்து இறையே! அடைக்கலம்; 45

   

அடியார்க்கு எளியாய்! அடைக்கலம் அடைக்கலம்;

மறையவர் தில்லை மன்றுள்நின் றாடிக்

கருணை மொண்டு அலையெறி கடலே! அடைக்கலம்,

தேவரும் முனிவரும் சென்றுநின் றேத்தப்

பாசிழைக் கொடியொடு பரிந்து அருள் புரியும் 50

   

எம்பெரு மானின் இணையடிக்கு அபயம்

அம்பலத் தரசே அடைக்கலம் உனக்கே!  


திருச்சிற்றம்பலம்


பொருள் ---

பால்கடல் கடையப் படும் கடுவெண்ணெயைத் திருமிடற்று அடக்கிய சிவனே அடைக்கலம் - தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்த காலத்தில் அதில் இருந்து திரண்ட ஆலகால விடம் ஆகிய வெண்ணெயை அழகிய கண்டத்தில் இருக்கச் செய்த சிவபரம்பொருளே! அடியேன் உனக்கு அடைக்கலம்.

அடங்கலும் அடக்கிடும் கடுங்கொலைக் காலனைக் கால் எடுத்து அடக்கிய கடவுள் நின் அடைக்கலம் - எல்லாவற்றையும் தனது வல்லமையினால் அடக்குகின்ற கடுமையான தொழிலைச் சுபாவமாகப் புரிகின்ற எமனை, திருவடியைத் தூக்கி எடுத்து உதைத்து அடக்கிவிட்ட கடவுளே! அடியேன் உனக்கு அடைக்கலம்.

உலகு அடங்கலும் படைத்து உடையவன் தலைபறித்து இடக்கையில் அடக்கிய இறைவ! நின் அடைக்கலம் - உலக முழுதையும் படைக்கின்ற பிரமதேவனின் ஒரு தலையைக் கிள்ளி இடது திருக்கரத்தில் தரித்துக் கொண்ட இறைவனே! அடியேன் உனக்கு அடைக்கலம்.

செய்ய பொன்னம்பலச் செல்வ! நின் அடைக்கலம் -செவ்விய பொன்னம்பலத்தில் எழுந்தருளி உள்ள செல்வமே! அடியேன் உனக்கு அடைக்கலம்.

ஐய! நின் அடைக்கலம் - ஐயனே! அடியேன் உனக்கு அடைக்கலம்.  அடியன் நின் அடைக்கலம் - அடியேன் உனக்கு அடைக்கலம்.

மனவழி அலைத்திடும் கனவு எனும் வாழ்க்கையும் - மனத்தினை அதன் வழியே அலைக்கப்படுகின்ற கனவுக்கு நிகரான வாழ்க்கையும், விழுப்பொருள் அறியா வழுக்குமறு மனனும் - திருவருள் என்னும் மேன்மையான பொருளை ஆராய்ந்து அறியாத அழுக்கு அடைந்த மனமும், ஆணவ மலத்து உதித்து அளைந்து அதில் உளைந்திடும் நிணவைப் புழு என நெளிந்திடு சிந்தையும் - ஆணவம் என்னும் மலத்தில் தோன்றி, அதிலேயே உழன்று கொண்டு இருக்கும் நிணத்தில் உண்டாகிய புழுவைப் போல நெளிகின்ற சிந்தையும், படிறும் பாவமும் - வஞ்சகமும், பாவமும், பழிப்புறு நினைப்பும் - பலரின் பழிப்புக்கு இடமான நினைவும்,  தவறும் - குற்றமும், அழுக்காறும் - பொறாமையும், இவறு பொச்சாப்பும் - மிகுந்த மறதியும், கவடும் - வஞ்சகமும், பொய்யும் - பொய்யும், சுவடும் - இவற்றின் தழும்பும், பெருஞ்சின இகலும் - பெரும் கோபத்தால் உண்டாகின்ற பகைமை உணர்வும், கொலையும் - உயிர்க் கொலையும்,  இழிப்பு உறு புன்மையும் - இழிவைத் தருகின்ற புன்மையான செயல்களும், பகையும் - வெறுப்பு உணர்வும், அச்சமும், துணிவும், - அச்சமும் துணிவும், பனிப்பும் - நடுக்கமும், முக்குண மடமையும் - சத்துவம், இராசதம், தாமதம் என்னும் முக்குணங்களால் உண்டான அறியாமையும், ஐம்பொறி முயக்கமும் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களால் உண்டாகும் மயக்கமும்,  இடும்பையும் - துன்பமும், பிணியும் - நோயும், இடுக்கிய ஆக்கையை - கைக்கொண்டு இருக்கின்ற உடம்பை, 

உயிர் எனும் குருகு, விட்டு ஓடும் குரம்பையை - உயிர் என்கிற பறவையானது விட்டு ஓடுகின்ற கூட்டினை, எலும்பொடு நரம்பு கொண்டு இடையில் பிணித்து - எலும்புகளோடு நரம்புகளயும் கொண்டு இடையிடையே கட்டி, கொழுந்தசை வேய்ந்தும் - கொழுமிய தசையினால் மூடியும், ஒழுக்கு விழும் குடிலை - மெழுகிய குடிசையை, செழும்பு எழு உதிரச் சிறுபுழுக் குரம்பையை - செழுமையான உதிரமயம் ஆகிய சிறிய புழுக்கள் பொருந்திய கூட்டினை, மலவுடல் குடத்தை - மலம் நிறைந்த உடம்பாகிய பாண்டத்தை, புலவுடல் புட்டிலை - புலால் சரக்கைக் கொண்டு இருக்கும் கூடையினை, தொலைவு இலாச் சோற்றுத் துன்பக் குழியை - நீக்கம் இல்லது சோற்றினால் தூர்க்கப்பட்ட துன்ப மயமாகிய பள்ளத்தை, கொலை படைக்கலம் பல கிடைக்கும் கூட்டை - கொலை செய்தற்கு உரிய பல படைக் கருவிகள் தங்கி உள்ள கூட்டினை, சலிப்புறு வினைப் பலசரக்குக் குப்பையை - மிகவும் சலித்தற்கு உரிய வினைகள் என்கிற பலவகைப்பட்ட சரக்குகளின் குவியலை,  கோள் சரக்கு ஒழுகும் பீற்றல் கோணியை - கோள் சொல்லுதல் அல்லது பழிமொழிகள் ஆகிய துன்பச் சரக்குகள் சிந்துகின்ற கிழிச்சல் கோணியை, கோபத் தீ மூட்டும் கொல்லன் துருத்தியை - கோபம் என்னும் தீயை மூள்விக்கின்ற கொல்லனது உலைக்களத்தில் உள்ள துருத்தியை, ஐம்புலப் பறவை அடையும் பஞ்சரத்தை - ஐம்புலன்கள் ஆகிய பறவைகள் வந்து அடையும் கூட்டினை,  புலராக் கவலை விளை மரப் பொதும்பை - தீராத கவலைகள் விளைதற்கு இடமான மரப் பொந்தினை, ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரத்தை - ஆசையாகிய கயிற்றினால் ஆட்டப்படுகின்ற பம்பரம் என்னும் சுழல் கருவியை, காசில் பணத்தில் சுழலும் காற்றாடியை - காசிலும், பணத்திலும் சுழலுகின்ற காற்றாடியை, மக்கள் வினையின் மயக்கும் திகிரியை - ஆன்மாக்கள் செய்யம் கன்மத்திற்குத் தக்கபடி அறிவு மயங்கி எக்காலமும் சுழன்று வரும் சக்கரத்தினை, கடுவெளி உருட்டிய சகடக் காலை - கொடிய வெட்ட வெளியில் உருட்டிய வண்டிச் சக்கரத்தை,

பாவச் சரக்கொடு பவக்கடல் புக்கு - பாவம் ஆகிய சரக்குகளைக் கொண்டு பிறவி என்னும் கடலில் புகுந்து,  காமக் காற்று எடுத்து அலைப்ப - காமம் என்னும் காற்றானது மோதி அலைத்தலால், கெடு வழிக் கரைசேர் கொடு மரக்கலத்தை - தவறான வழியில் சென்று கரையைச் சேர்கின்ற கொடிய மரக்கலத்தை, இருவினை விலங்கொடும் இயங்கு புற்கலனை - நல்வினை தீவினை என்னும் சங்கிலிகளோடு இயங்குகின்ற உடலை, நடுவன் வந்து அழைத்திட நடுங்கும் யாக்கையை - எமன் வந்து அழைக்கும்போது நடுக்கம் அடைகின்ற உடலை, பிணம் எனப் படுத்தி - பிணத் தன்மையை அடைந்து, யான் புறப்படும் பொழுது- உடலை விட்டு உயிராகிய நான் புறப்படும் காலத்தில், நின் அடிமலர்க் கமலத்துக்கு அபயம் - உனது திருவடித் தாமரையே அடியேனுக்கு அபயம் தந்து அருள வேண்டும். நின் அடைக்கலம் - அடியேன் உனக்கு அடைக்கலம்.

வெளியிடை உரும் இடி இடித்து என வெறித்து எழும் கடுநடை வெள்விடைக் கடவுள் நின் அடைக்கலம் - வானத்தில் இடி இடித்தால் போன்று முழங்கி வேகமாகிய நடையினை உடைய வெள்ளை நிறம் பொருந்திய இடபத்தின் மீது எழுந்தருளும் கடவுளே! அடியேன் உனக்கு அடைக்கலம்.

இமையா நாட்டத்து இறையே! அடைக்கலம் - இமையாத திருக்கண்களை உடைய இறைவனே! அடியேன் உனக்கு அடைக்கலம்.

  அடியார்க்கு எளியாய்! அடைக்கலம் அடைக்கலம் - அடியவர்க்கு எளியவனே! அடியேன் உனக்கு அடைக்கலம். அடியேன் உனக்கு அடைக்கலம்.

மறையவர் தில்லை மன்றுள் நின்று ஆடி - தில்லை மூவாயிரவர் போற்றுகின்ற தில்லைப் பதியில் பொன்னம்பலத்தில் எழுந்தருளி ஆனந்தத் திருநடனம் புரிந்து, கருணை மொண்டு அலை எறி கடலே! அடைக்கலம் - திருவருட் கருணையை அலைகளைப் போல வீசுகின்ற அருட்கடலே! அடியேன் உனக்கு அடைக்கலம்.

தேவரும் முனிவரும் சென்று நின்று ஏத்த - தேவர்களும் முனிவர்களும் சென்று இருந்து துதி செய்ய, பாசிழைக் கொடியொடு பரிந்து அருள் புரியும் - பசுமையான பொன்னால் ஆன அணிகலன்களை அணிந்து உள்ள உமாதேவியாரோடு உயிர்களுக்கு இரங்கி அருள் புரிகின்ற,எம்பெருமான் நின் இணையடிக்கு அபயம் - எம்பெருமானே! உமது இணையார் திருவடிகளில் அடியேன் தஞ்சம் அடைகின்றேன். அம்பலத்து அரசே அடைக்கலம் உனக்கே - பொன்னம்பல இறைவனே! அடியேன் உனக்கு அடைக்கலம்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 7

  "அன்ன விசாரம் அதுவே விசாரம், அது ஒழிந்தால், சொன்ன விசாரம் தொலையா விசாரம், நல் தோகையரைப் பன்ன விசாரம் பலகால் விசாரம், இப் பாவி நெஞ்சுக...