பட்டினத்து அடிகளார் அருளிய
கோயில் திரு அகவல் - 1
---
திருச்சிற்றம்பலம்
நினைமின் மனனே ! நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே !
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க ! 5
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; 10
அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்;
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், அனைத்து நினைக்கொன்றன. 15
தின்றனை அனைத்தும், அனைத்து நினைக் கொன்றன;
பெற்றனை அனைத்தும், அனைத்து நினைப் பெற்றன;
ஓம்பினை அனைத்தும், அனைத்து நினை ஓம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை;
சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை; 20
இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை;
ஒன்றொன்று ஒழியாது உற்றனை; அன்றியும்,
புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்
என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாகக் கருதினை; இதனுள் 25
பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி;
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி;
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி; 30
சலமும் சீயும் சரியும் ஒருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை. 35
ஒழிவருஞ் சிவபெரும் போகஇன் பத்தை,
நிலுலெனக் கடவா நீர்மையொடு பொருந்தி
எனதற நினைவற இருவினை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபரம் அற ஒரு 40
முதல்வனைத் தில்லையுள் முனைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை ஆனந்தக் கூத்தனை
நெருப்பினில் அரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத்து ஒளிருஞ் சீவனை,
நினைமின் மனனே ! நினைமின் மனனே ! 45
சிவபெரு மானைச் செம் பொனம்பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே !
பொருள் ---
நினைமின் மனனே, நினைமின் மனனே - மனமே நினைவாயாக, மனமே நினைவாயாக, சிவபெருமானை - மங்கலப் பொருளானவனை, செம்பொன் அம்பலவனை - சிவந்த மொன்னினால் ஆன அம்பலத்துள் ஆடல் புரிகின்றானை, நினைமின் மனனே நினைமின் மனனே - மனமே நினைவாயாக மனமே நினைவாயாக.
அலகைத் தேரின் அலமரு காலின் - பேய்த்தேர் போலவும், சுழலுகின்ற காற்றினையும் ஒத்த, உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க - பொய்யாகிய இவ்வுலக வாழ்கையையும், உடம்பையும் பாதுகாத்தலை ஒழிக.
பிறந்தன இறக்கும் - பூமியில் பிறந்தன அனைத்தும் இறந்து ஒழியும், இறந்தன பிறக்கும் - அவ்வாறு இறந்து ஒழிந்தன அனைத்தும் மீண்டும் பிறக்கும். தோன்றின மறையும் - உலகில் தோன்றிய பொருள்கள் முழுதும் மறைந்து ஒழியும். மறைந்தன தோன்றும் - மறந்த பொருள்கள் அனைத்தும் மீண்டும் உண்டாகும். பெருத்தன சிறுக்கும் - பெருத்த பொருள்கள் அனைத்தும் சிற பொருள்கள் ஆகும். சிறுத்தன பெருக்கும் - சிறுத்த பொருள்கள் அனைத்தும் பெருத்த பொருள்கள் ஆகும். உணர்ந்தன மறக்கும் - அறிந்தவை அனைத்தும் மறந்து போகும், மறந்தன உணரும் - மறந்தவை அனைத்தும் மீண்டும் உணர்வில் கொள்ளும். புணர்ந்தன பிரியும் - சேர்ந்தவை அனைத்தும் நீங்கும், பிரிந்தன புணரும் - நீங்கின பொருள்கள் அனைத்தும் மீண்டும் வந்து சேரும்,
அருந்தின மலமாம் - உண்ணப்பட்டவை அனைத்தும் மலமாய் நீங்கும். புனைந்தன அழுக்காம் - அணியப்பட்டவை எல்லாம் அழுக்காகி விலகும். உவப்பன வெறுப்பாம் - களிக்கத் தக்கவை அனைத்தும் வெறுக்கத் தக்கன ஆகும். வெறுப்பன உவப்பாம் - வெறுக்கத் தக்கவை அனைத்தும் விரும்பப்படும். என்றிவை அனைத்தும் உணர்ந்தனை - என்று இவை முழுதும் அறிந்து கொண்டாய்.
அன்றியும் - இவை அல்லாமலும், பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும் - பலவாகப் பிறந்த பிறவிகளில் எல்லாம், கொன்றனை அனைத்தும், அனைத்து நினைக் கொன்றன - பல உயிர்களையும் நீ கொன்றாய், உன்னால் கொல்லப்பட்டவை அனைத்தும் உன்னைக் கொன்றன. தின்றனை அனைத்தும், அனைத்து நினைத் தின்றன - நீ தின்றன அனைத்தும் உன்னை உணவாகக் கொண்டன.
பெற்றனை அனைத்தும், அனைத்து நினைப் பெற்றன - எல்லாப் பொருள்களுக்கும் பிறப்பிடமாக நீ நின்றாய், அப் பெற்ற அனைத்தும் உன்னைப் பெற்றன. ஓம்பினை அனைத்தும், அனைத்து நினை ஓம்பின - எல்லாவற்றையும் நீ காப்பாற்றினாய், அவை அனைத்தும் உன்னைக் காப்பாற்றின. செல்வத்துக் களித்தனை - செல்வத்தினால் களிப்பு அடைந்து இருந்தாய். தரித்திரத்து அழுங்கினை - வறுமையால் வருந்தினாய். சுவர்க்கத்து இருந்தனை - கவர்க்கத்தில் இன்பத்தைத் துய்த்துக் கொண்டு இருந்தாய். நரகில் கிடந்தனை - நரகத்தில் துன்பத்தினை அனுபவித்துக் கொண்டு கிடந்தாய்.
இன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை - இன்ப துன்பங்களை அனைத்தையும் இப் பூவுலக வாழ்வில் அனுபவித்தாய். ஒன்று ஒன்று ஒழியாது உற்றனை - மேற்கூறிய ஒவ்வொன்றையும் நீங்காமல் பொருந்தினாய். அன்றியும் - அல்லாமலும்,
புற்புதக் குரம்பை - நீர்க்குமிழியை ஒத்த உடம்பு. துச்சில் ஒதுக்கிடம் - துச்சில் என்னும் ஒதுக்கிடத்தை ஒத்தது, என்ன நின்று இயங்கும் இருவினைக் கூட்டை - என்று சொல்லும்படி நின்று உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற, இருவினைகள் ஆகிய பறவைகள் தங்கும் இந்தக் கூடாகிய உடம்பை, கல்லினும் வலிதாகக் கருதினை - கல்லைக் காட்டிலும் வலிமை பொருந்தியதாக நீ எண்ணினாய். இதனுள் - (நிலையாமை பொருந்திய கூடாகிய) இந்த உடம்பினுள்,
பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி - பீளையும் அதனுடன் பொருந்திய நீரும் கண் என்னும் ஒரு பொறியின் வழியாகப் புறப்படும். மீளும் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி - வெளிப்படும் குறும்பி காது என்னும் ஒரு பொறியின் வழியாக வெளிப்படும். சளியும் நீரும் தவழும் ஒருபொறி - சளியும் நீரும் மூக்கு என்னும் ஒரு பொறியில் தவழும். உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி - உமிழ்நீரும் கோழையும் வாய் என்னும் ஒரு பொறியின் வழியாக வெளிப்படடும். வளியும் மலமும் வழங்கும் ஒருவழி - அபானக் காற்றும் மலமும் எருவாய் என்னும் ஒரு பொறியின் வழியாக வெளிப்படும். சலமும் சீயும் சரியும் ஒரு வழி - நீரும் சீழும் கருவாய் என்னும் ஒரு பொறியின் வழியாக வெளிப்படும்.
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும் சட்டகம் - உள்ளிடமாகத் தொடங்கி வெளிப்பட்டு நாறுகின்ற உடம்பு, முடிவில் சுட்டு எலும்பு ஆகும் - உயிர் நீங்கிய காலத்து சுடப்பட்டு எலும்பு ஆகும் தன்மையைப் பெற்ற, உடல் உறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து - உடலுடன் கூடி இருந்து வாழ்கின்ற வாழ்க்கையை முழுதும் ஆராய்ந்து,
கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை - மணம் தங்கிய கொன்றை மலரைச் சடைமுடிக்கு அணிந்த சிவபரம்பொருளை, ஒழிவு அரும் சிவ பெரும்போக இன்பத்தை - என்றும் நீங்குதல் இல்லாத சிவமாம் பேரானந்தப் பெருவாழ்வைத் தருகின்ற இன்பத்தினை, நிழல் எனக் கடவா நீர்மையொடு பொருந்தி - (பாச வெயிலில் களைப்பு உறுவோர்க்கு இளைப்பாறுதற்கு உரிய) நிழல் என எண்ணி, அந்நிழலை விட்டு நீங்காத தன்மையொடு பொருந்தி, எனது அற - எனது என்னும் புறப்பற்று நீங்க, நினைவு அற - நினைவு ஒன்றும் நீங்க, இருவினை மலம் அற - நல்வினை தீவினைகளால் ஆகும் மல அழுக்கு நீங்க, வரவொடு செலவு அற - பிறப்போடு இறப்பும் நீங்க, மருள் அற - அறிவு மயக்கம் நீங்க, இருள் அற - அஞ்ஞான இருள் நீங்க, இரவொடு பகல் அற - இரவு என்னும் கேவல நிலை நீங்க, பகல் என்னும் சகலநிலை நீங்க, (நினைப்பும் மறப்பும் அற்றுப் போக) இகபரம் அற -இகத்திலும், பரத்திலும் உண்டாகும் வினைகள் நீங்க,
ஒரு முதல்வனை - ஒப்பற்ற முதற்கடவுளை, தில்லையுள் முளைத்து எழுஞ் சோதியை - திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளும் சோதி வடிவானவனை, அம்பலத்து அரசனை - திருச்சிற்றம்பலத்தில் அரசனை, ஆனந்தக் கூத்தனை - ஆனந்தத் திருநடனம் புரியும் பெருமானை, நெருப்பினில் அரக்கு என - நெருப்பினிலு பட்ட அரக்கு என்று சொல்லும்படியாக, நெக்கு நெக்கு உருகி - மனம் பலகாலும் நெகிழ்ச்சி அடைந்து, திருச்சிற்றம்பலத்து ஒளிரும் சீவனை - திருச்சிற்றம்பலத்தில் ஒளிவிடும் சிவபரம்பொருளை, நினைமின் மனனே ! நினைமின் மனனே - மனமே நினைவாயாக மனமே நினைவாயாக.
சிவபெருமானை - சிவபெருமானை, செம் பொன் அம்பலவனை - சிவந்த பொன் போலும் அம்பலவாணப் பெருமானை, நினைமின் மனனே, நினைமின் மனனே - மனமே நினைவாயாக, மனமே நினைவாயாக.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment