கோயில் திரு அகவல் - 2

 

பட்டினத்து அடிகளார் அருளிய

கோயில் திரு அகவல் - 2

திருச்சிற்றம்பலம்


-----


காதள வோடிய கலகப் பாதகக்

கண்ணியர் மருங்கில் புண்ணுடன் ஆடும்

காதலும் கருத்தும் அல்லால்நின் இருதாள்

பங்கயம் சூடப் பாக்கியம் செய்யாச்

சங்கடம் கூர்ந்த தமியேன் பாங்கிருந்து 5

   

அங்கோடு இங்கோடு அலமருங் கள்வர்

ஐவர் கலகமிட்டு அலைக்குங் கானகம்

சலமலப் பேழை; இருவினைப் பெட்டகம்;

வாதபித்தம் கோழை குடிபுகுஞ் சீறூர்;

ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை; 10


நாற்றப் பாண்டம்; நான் முழத்து ஒன்பது

பீற்றல் துண்டம்; பேய்ச்சுரைத் தோட்டம்

அடலைப் பெரிய சுடலைத் திடருள்;

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்;

ஓயா நோய்க்கிடம்; ஓடும் மரக்கலம்;          15

   

மாயா விகாரம்; மரணப் பஞ்சரம்;

சோற்றுத் துருத்தி; தூற்றும் பத்தம்;

காற்றில் பறக்கும் கானப் பட்டம்;

விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை;

சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை;          20

   

ஈமக் கனலில் இடுசில விருந்து;

காமக் கனலில் கருகும் சருகு;

கிருமி கிண்டுங் கிழங்கஞ் சருமி,

பவக்கொழுந்து ஏறுங் கவைக் கொழு கொம்பு;

மணமாய் நடக்கும் வடிவின் முடிவில்          25

   

பிணமாய்க் கிடக்கும் பிண்டம்; பிணமேல்

ஊரில் கிடக்க வொட்டா உபாதி;

கால் எதிர் குவித்தபூளை; காலைக்

கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்;

அந்தரத்து இயங்கும் இந்திர சாபம்; 30

   

அதிரும் மேகத்து உருவின் அருநிழல்;

நீரில் குமிழி; நீர்மேல் எழுத்து;

கண்துயில் கனவில் கண்ட காட்சி;

அதனினும் அமையும் பிரானே! அமையும்;

இமைய வல்லி வாழிஎன் றேத்த          35

   

ஆனந்தத் தாண்டவம் காட்டி

ஆண்டுகொண்டருள்கை நின் அருளினுக்கு அழகே!  


திருச்சிற்றம்பலம்


பொருள் ---

காது அளவு ஓடிய கலகப் பாதகக் கண்ணியர் - காதின் அளவாக ஒடி உள்ள பாதகத்தை விளைக்கும் கலகத்தைப் புரியும் கண்ணினை உடைய பெண்களது, மருங்கில் புண்ணுடன் ஆடும் காதலும் கருத்தும் அல்லால் - இடையில் உள்ள புண்ணாகிய யோனியின் வயப்பட்டு இருக்கின்ற ஆசையும் அதைக் கொண்ட மனமும் அல்லாமல், நின் இருதாள் பங்கயம் சூடப் பாக்கியம் செய்யா - தேவரீரது இணையார் திருவடிகளை முடியில் அணியப் பாக்கியம் செய்யாத, சங்கடம் கூர்ந்த தமியேன் பாங்கு இருந்து - துன்பம் மிகுந்த அடியேனுடன் இருந்து, அங்கோடு இங்கோடு அலமருங் கள்வர் ஐவர் - அங்கும் இங்குமாகச் சுழலுகின்ற ஐம்புலன்கள் ஆகிய கள்வர்கள், கலகம் இட்டு அலைக்கும் கானகம் - ஒருவரோடு ஒருவர் கலகம் புரிந்து வருத்துகின்ற காடு.

சலமலப் பேழை - சல மலங்கள் தங்கியுள்ள பெட்டி. இருவினைப் பெட்டகம் - நல்வினை தீவினைகள் நிறைந்த பெட்டி, வாத பித்தம் கோழை குடிபுகும் சீறூர் - வாதம் பித்தம் சிலேத்துமம் ஆகியவை குடி இருந்து வரும் சிறிய ஊர். ஊத்தைப் புன்தோல் - அழுக்குடன் கூடிய புன்மையான தோல், உதிரக் கட்டளை - செந்நீர் நிறைந்த கருவி. நாற்றப் பாண்டம் - துர்நாற்றம் வீசும் பாண்டம்.  நான் முழத்து ஒன்பது பீற்றல் துண்டம் - நான்கு முழ நீளுமும், ஒன்பது கிழிச்சல்களும் உடைய துண்டுத்துணி..  பேய்ச் சுரைத் தோட்டம் - பேய்ச் சுரைக் கொடிகள் போன்ற உள்ளுறுப்புகள் நிறைந்த தோட்டம். அடலைப் பெரிய சுடலைத் திடருள் - உயிர்களை கொன்று தின்பது பற்றி, மிக்க சாம்பல் நிறைந்த சுடலை ஆகிய மேட்டு உள்ளிடம், ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம் - ஆசை என்கிற கயிற்றினால் சுழலுகின்ற பம்பரம் என்னும் சுழற்கருவி.

    ஓயா நோய்க்கு இடம் - ஒயாது வந்து கொண்டு இருக்கின்ற நோய்களுக்கு இடமானது. ஓடும் மரக்கலம் - நீர் மேல் ஓடுகின்ற கப்பல். மாயா விகாரம் - மாயை ஆகிய விகாரத்தோடு கூடியது. மரணப் பஞ்சரம் - மரணம் அடையும் கூடு. சோற்றுத் துருத்தி - சோறு நிறைக்கும் துருத்தி, தூற்றும் பத்தம் - காற்றில் தூற்றுகின்ற கருவி. காற்றில் பறக்கும் கானப் பட்டம் - காற்றில் பறக்கின்ற ஒசையுடன் கூடிய காற்றாடி. விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை - இறைவன் விதித்தபடி கன்மத்துக்கு ஏற்றவாறு எமன் வெட்டுகின்ற கட்டை. சதுர்முகப் பாணன் தைக்கும் சட்டை - நான்கு முகங்களை உடைய பிரமன் ஆகிய தையல்காரன் தைக்கின்ற சட்டை. ஈமக் கனலில் இடு சில விருந்து - சுடுகாட்டு நெருப்பில் வைக்கப்பட்ட சிறு விருந்து. காமக் கனலில் கருகும் சருகு - காமமாகிய நெருப்பினால் சாம்பல் ஆகாது கருகிக் கெடுகின்ற சாரம் இல்லாத தழை. கிருமி கிண்டும் கிழங்கஞ் சருமி - புழுக்களால் கிண்டப்படுகின்ற தோலுடன் பொருந்திய கிழங்கு. பவக் கொழுந்து ஏறும் கவைக் கொழு கொம்பு - பிறவி என்னும் இளந்தளிர் ஏறிப் படருதற்கான சிறு கிளைகள் கிளைத்து உள்ள கொழு கொம்பு.

    மணமாய் நடக்கும் வடிவின் முடிவில் பிணமாய்க் கிடக்கும் பிண்டம் - முன்னர் திருமணம் கொண்டு நடக்கும் வடிவத்துடன் பொருந்தி இருந்து, பின்னர் வாழ்நாள் முடிவில் பிணம் ஆகிய இசைவு இன்றிக் கிடக்கும் பிண்டம்.  பிணமேல் ஊரில் கிடக்க ஒட்டா உபாதி - பிணம் ஆன பின்னரும் ஊரில் சிறுபொழுதும் தங்க வைக்காதபடி பலராலும் செய்யப்படுகின்ற துண்டம் உடையது. கால் எதிர் குவித்த பூளை - காற்றின் எதிரில் குவித்து வைக்கப்பட்ட பூளை மலர். காலைக் கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம் - காலையில் எழும் கதிரவனுக்கு எதிர்ப்பட்ட கொடிய பனியின் சும்மை. அந்தரத்து இயங்கும் இந்திர சாபம் - மழைக் காலத்து வானில் இயங்குகின்ற வானவில். அதிரும் மேகத்து உருவின் அருநிழல் - ஒலிக்கும் மேகத்தின் உருவினை உடைய அருகிய நிழல்.  நீரில் குமிழி - நீரில் எழுகின்ற குமிழி.  நீர்மேல் எழுத்து - நீரின் மேல் எழுதிய எழுத்து. கண்துயில் கனவில் கண்ட காட்சி - உறக்கக் காலத்து உண்டான கனவின் தோற்றம். பிரானே - பெருமானே! அதனினும் அமையும் அமையும் - இந்த உடலுடன் கூடிய வாழ்க்கை போதும், போதும்.

இமைய வல்லி வாழி என்று ஏத்த - இமவான் மகள் ஆகிய பார்வதிதேவி வாழ்த்துச் சொல்லித் துதிக்க, ஆனந்தத் தாண்டவம் காட்டி - சிவானந்தத் திருநடனத்தை அடியேன் கண்டு வணங்குமாறு திருவருள் புரிந்து, ஆண்டுகொண்டு அருள்கை நின் அருளினுக்கு அழகே - அடியேனை ஆண்டுகொண்டு அருள் புரிதல் தேவரீரது திருவருளுக்கு அழகு ஆகும். 


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 7

  "அன்ன விசாரம் அதுவே விசாரம், அது ஒழிந்தால், சொன்ன விசாரம் தொலையா விசாரம், நல் தோகையரைப் பன்ன விசாரம் பலகால் விசாரம், இப் பாவி நெஞ்சுக...