கச்சித் திரு அகவல்

பட்டினத்து அடிகளார் அருளிய

கச்சித் திரு அகவல்


திருச்சிற்றம்பலம்


-----


திருமால் பயந்த திசைமுகன் அமைத்து

வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து

மலைமகள் கோமான் மலர் அடி இறைஞ்சிக்

குலவிய சிவபதங் குறுகாது அவமே

மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும் 5

   

மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன்

விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்;

முள்ளும் கல்லும் முயன்று நடக்கும்

உள்ளங் காலைப் பஞ்சென உரைத்தும்,

வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால் 10


துள்ளும் வரால் எனச் சொல்லித் துதித்தும்,

தசையும் எலும்புந் தக்கபுன் குறங்கை

இசையுங் கதலித் தண்டென இயம்பியும்

நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத்

துடிபிடி யென்று சொல்லித் துதித்தும், 15

   

மலமும் சலமும் வழும்புந் திரையும்

அலையும் வயிற்றை ஆலிலை யென்றும்,

சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து

திரண்டு விம்மிச் சீப்பாய்ந்து ஏறி

உகிரால் கீறல் உலர்ந்து உள் உருகி 20

   

நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்

முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்,

குலையும் காமக் குருடர்க்கு உரைப்பேன்;

நீட்டவும் முடக்கவும் நெடும் பொருள் வாங்கவும்

ஊட்டவும் பிசையவும் உதவி இங் கியற்றும் 25

   

அலங்கையைப் பார்த்துக் காந்தள் என்றுரைத்தும்,

வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தைப்

பாரினில் இனிய கமுகெனப் பகர்ந்தும்,

வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்

துப்பு முருக்கின் தூய்மலர் என்றும், 30

   

அன்ன முங் கறியும் அசைவிட்டிறக்கும்

முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்

நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும்

கூறிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும்

தண்ணீர் பீளை தவிராது ஒழுகும் 35

   

கண்ணைப் பார்த்துக் கழுநீர் என்றும்

உள்ளுங் குறும்பி ஒழுகுங் காதை

வள்ளைத் தண்டின் வளம் என வாழ்த்தியும்

கையும் எண்ணெயும் கலவாது ஒழியில்

வெய்ய அதரும் பேனும் விளையத் 40


தக்க தலை யோட்டில் முளைத்து எழுந்த

சிக்கின் மயிரைத் திரள் முகி லென்றும்

சொற்பல பேசித் துதித்து நீங்கள்

நச்சிச் செல்லும் நரக வாயில்

தோலும் இறைச்சியும் துதைந்து சீப்பாயும் 45

   

காமப் பாழி; கருவிளை கழனி;

தூமைக் கடவழி; தொளைபெறு வாயில்;

எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி!

மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்;

நச்சிக் காமுக நாய்தான் என்றும் 50

   

இச்சித் திருக்கும் இடைகழி வாயில்;

திங்கள் சடையோன் திருவருள் இல்லார்

தங்கித் திரியும் சவலைப் பெருவழி;

புண் இது என்று புடவையை மூடி

உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண்; 55

   

மால்கொண்டு அறியா மாந்தர் புகும்வழி;

நோய் கொண்டு ஒழியார் நுண்ணியர் போம்வழி;

தருக்கிய காமுகர் சாரும் படுகுழி;

செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி;

பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி; 60

   

மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே

சலம்சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்;

இத்தை நீங்கள் இனிது என வேண்டா;

பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி

மெச்சிச் சிவபத வீடருள் பவனை 65

   

முத்தி நாதனை மூவா முதல்வனை

அண்டர் அண்டமும் அனைத்துள புவனமும்

கண்ட அண்ணலைக் கச்சியிற் கடவுளை

ஏக நாதனை இணையடி இறைஞ்சுமின்

போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே! 70


பொருள் ---

திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் - திருமாலின் திருமகன் ஆன பிரமதேவன் படைத்து வருகின்ற எழுவகைப் பிறவிகளிலும்,  மானுடத்து உதித்து - மனிதப் பிறவியில் தோன்றி,  மலைமகள் கோமான் மலர் அடி இறைஞ்சி - மலைமகள் கேள்வன் ஆன சிவபரம்பொருளின் திருவடி மலர்களை வழிபட்டு, குலவிய சிவபதம் குறுகாது - விளங்குகின்ற சிவபதவியை அடையாமல், அவமே - வீணாக, மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும் மானிடர்க்கு எல்லாம் - பெண்களின் மீது இச்சை கொண்டு ஆசை பாராட்டித் திரிகின்ற மனிதர்கள் யாவருக்கும், யான் எடுத்து உரைப்பேன் - அடியேன் எடுத்துச் சொல்லுவேன். விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின் - புறக் கண்களை உடைய மனிதர்களே! நீங்கள் தெளிவு அடையக் கேளுங்கள்.

முள்ளும் கல்லும் முயன்று நடக்கும் உள்ளங் காலைப் பஞ்சு என உரைத்தும் - முள்ளின் மீதும், கல்லினை மீதும் முயன்று நடக்கின்ற உள்ளங் கால்களைப் பஞ்சு என்று சொல்லியும், வெள் எலும்பாலே மேவிய கணைக்கால் துள்ளும் வரால் எனச் சொல்லித் துதித்தும் - வெள்ளையான எலும்புகளால் ஆன கணைக்காலைத் துள்ளுகின்ற வரால் மீன்கள் என்று புகழ்ந்து கூறியும், தசையும் எலும்பும் தக்க புன்குறங்கை இசையும் கதலித் தண்டு என இயம்பியும் - புலாலும் எலும்பும் பொருந்திய புல்லிய தொடையை, பொருந்துகின்ற வாழைத் தண்டு எனக் கூறியும், நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத் துடிபிடி என்று சொல்லித் துதித்தும் - நெடிய உடம்பைச் சுமந்து நிற்கும் இடையை உடுக்கை என்றும், பிடி என்னும் பெண் யானை என்றும் சொல்லிப் புகழ்ந்தும்,

மலமும் சலமும் வழும்பும் திரையும் அலையும் வயிற்றை ஆல் இலை என்றும் - மலமும் நீரும் நிணமும், திரைச்சலும் தங்கி அசைகின்ற வயிற்றை ஆலம் இலை எனக் கூறியும், சிலந்தி போலக் கிளைத்து முன் எழுந்து - கொப்புளம் போல இரண்டாகி முன் பக்கத்தில் எழுந்து, திரண்டு விம்மி - திரட்சியும் பூரிப்பும் பெற்று, சீப் பாய்ந்து ஏறி - சீயானது பெருகி ஏறி, உகிரால் கீறல் உலர்ந்து - நகத்தால் கிழிக்க உலர்ந்து போய்,  உள் உருகி நகுவார்க்கு இடமாய் = மனம் உருகி நகைப்பவர்களுக்கு இடம் தந்து, நான்று வற்றும் முலையைப் பார்த்து - தொங்கி வற்றிப் போகின்ற முலைகளைப் பார்த்து, முளரி மொட்டு என்றும் - தாமரை மொக்கு என்றும், குலையும் காமக் குருடர்க்கு உரைப்பேன் - குழறுகின்ற காமக் குருடருக்குச் சொல்லுவேன்.

நீட்டவும் முடக்கவும் - நீட்டுவதற்கும் முடக்குவதற்கும், நெடும் பொருள் வாங்கவும் - பெரிய பொருள்களை ஏற்றுக் கொள்வதற்கும், ஊட்டவும் - உண்பிக்கவும், பிசையுவும் - பிசையவும், உதவி - உதவியாக இருந்து, இங்கு இயற்றும் அங்கையைப் பார்த்துக் காந்தள் என்று உரைத்தும் - இங்கே தொழில் புரிகின்ற அழகிய கைகளைப் பார்த்துக் காந்தள் மலர் என்று கூறியும், வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தை - வியர்வையும், அதனால் உண்டான அழுக்கையும் பொருந்தி உள்ள கழுத்தினைப் பார்த்து, பாரினில் இனிய கமுகு எனப் பகர்ந்தும் - பூமியில் இனிமையாகிய கமுகு என்று கூறியும், வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத் துப்பு முருக்கின் தூய்மலர் என்றும் - தீநாற்றமும் ஊத்தையும் தங்கிய வாயை பவளம் என்றும், தூய்மையான முருக்க மலர் என்று சொல்லியும்,

அன்னமும் கறியும் அசைவு இட்டு இறக்கும் முன்னிய பல்லை முத்து என மொழிந்தும் - சோற்றையும் கறிகளையும் மென்று இறக்குகின்ற முற்பட்ட பல்லை முத்து என்று கூறியும், நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும் கூரிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும் - நீரும் சளியும் நின்று நின்று ஒழுகுகின்ற கூர்மை பொருந்திய மூக்கினை குமிழம்பூ எனக் கூறியும், தண்ணீர் பீளை தவிராது ஒழுகும் கண்ணைப் பார்த்துக் கழுநீர் என்றும் - தண்ணீரும் பீளையும் நீங்காமல் ஒழுகுகின்ற கண்களைப் பார்த்துக் கழுநீர் மலர் என்று கூறியும், உள்ளும் குறும்பி ஒழுகும் காதை வள்ளைத் தண்டின் வளம் என வாழ்த்தியும் - உள்ளிடத்து நின்று குறும்பி ஒழுகுகின்ற காதை வள்ளைத் தண்டின் வளமை உள்ளது என்று புகழ்ந்து கூறியும், கையும் எண்ணெயும் கலவாது ஒழியில் - கையில் எண்ணெயைக் குழப்பித் தடவாது இருந்தால், வெய்ய அதரும் பேனும் விளையத் தக்க - வெப்பமாகிய நோய்களை உண்டு பண்ணுதலோடு பேனும் விளைதற்கு உரிய, தலை ஒட்டில் முளைத்து எழுந்த - தலை ஓட்டின் மேல் முளைத்துத் தோன்றிய, சிக்கின் மயிரைத் திரள் முகில் என்றும் - சிக்கொடு கூடிய மயிரைத் திரண்ட மேகம் என்று கூறியும்,  சொற்பல பேசித் துதித்து - இவ்வாறு பலவாறாக உவமானச் சொற்களால் புகழ்ந்து சொல்லி, நீங்கள் நச்சிச் செல்லும் நரக வாயில் - நீங்கள் விரும்பி அடையும் நரக வாயிலானது, (எத் தன்மையது? எனில், கூறுதும்)

தோலும் இறைச்சியும் துதைந்து சீப்பாயும் காமப் பாழி - தோலும் சதையும் நெருங்கிச் சீப் பெருகுகின்ற காமக் குகை ஆகும். கரு விளை கழனி - பிறவிப் பயிர் விளைகின்ற வயல். தூமைக் கடவழி - சூதகம் அல்லது உதிரம் ஒழுகுகின்ற பெருவழி. தொளை பெறு வாயில் - தொளைகளை உடைய வாயில்,  எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி - எட்டுச் சாண் அளவு உள்ள உடம்பானது பெருகி வருகின்ற வாயில். மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம் - மண்ணுலகத்தாரிடம் உள்ள காமத்தைக் கழிக்கின்ற (அதாவது, ஆண்மக்களாய் உள்ளோரது இந்திரியத்தினை ஒழிக்கின்ற) மறைவான இடம். நச்சிக் காமுக நாய்தான் என்றும் இச்சித்து இருக்கும் இடை கழிவாயில் - காமுகன் என்கிற நாயானது எப்போதும் அசைப்பட்டுக் கொண்டு இருக்கின்ற திட்டி வாசல். திங்கள் சடையோன் திருவருள் இல்லார்  தங்கித் திரியும் சவலைப் பெருவழி - சந்திரனைச் சூடிய திருச்சடையை உடைய சிவபரம்பொருளின் திருவருள் சிறிதும் பெற்று இல்லாதவர்கள் தங்கித் திரிகின்ற சவலை ஆகிய பெரிய வழி. புண் இது என்று புடவையை மூடி - இது புண்ணுக்குச் சமமானது என்று உணர்ந்து புடவையால் மூடியும், உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண் - உள்ளே இருந்து நீர் பெருகுகின்ற, ஆடவர்க்கு உவப்பைச் செய்கின்ற சிவந்த புண். மால்கொண்டு அறியா மாந்தர் புகும் வழி - காம மயக்கம் கொண்டு அறியாமை மிகுந்து உள்ள மனிதர்கள் நுழையும் வழி. நோய் கொண்டு ஒழியா நுண்ணியர் போம் வழி - காமநோய் கொண்டு, அது நீங்கப் பெறாத அறியாமை உள்ள மானிடர் நுழையும் வழி. தருக்கிய காமுகர் சாரும் படுகுழி - செருக்குக் கொண்டு உள்ள காமுகர்கள் அடைகின்ற படுகுழி. செருக்கிய காமுகர் சேரும் சிறுகுழி - செருக்குக் கொண்ட காமுகர்கள் அடைகின்ற சிறுபள்ளம். பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி - பெண்ணும் ஆணும் பிறத்தற்கு உரிய பெரிய வழி.

மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே சலம் சொரிந்து இழியும் தண்ணீர் வாயில் - மலத்தைச் சொரிந்து இழிவடைந்து இருக்கின்ற வாசலுக்கு அருகில் நீரைச் சொரிகின்ற இழிந்த வாயில். இத்தை நீங்கள் இனிது என வேண்டா - (இத்தகைய இழிதகைமைகளுக்கு இடமாகிய) நிதம்பத்தினை நீங்கள் இனியது என்று எண்ண வேண்டாம். போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே - போகத்திற்கு உரிய மங்கையர்களைப் பேணுதலை ஒழிந்து.

பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி  மெச்சிச் சிவபத வீடு அருள்பவனை - பச்சிலையை இட்டு அருச்சித்தாலும் அடியார்கள் மீது இரக்கம் கொண்டு, அவர்களைக் கொண்டாடி சிவபதம் ஆகிய மோட்சத்தை அருளுகின்ற பெருமானை, முத்தி நாதனை - முத்திக்குத் தலைவனை, மூவா முதல்வனை - நித்தியம்பாய் உள்ள முதல்வனை, அண்டர் அண்டமும் அனைத்து உள புவனமும் கண்ட அண்ணலை - தேவலோகமும், அதற்கு வேறாய் உள்ள அனைத்து உலகங்களையும் படைத்தளித்த பெரியோனை, கச்சியில் கடவுளை - திருக்கச்சியில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள கடவுளை, ஏக நாதனை - ஒப்பற்ற ஒரு பரம்பொருளை, இணையடி இறைஞ்சுமின் - இணையார் திருவடியைப் பணியுங்கள்,



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 7

  "அன்ன விசாரம் அதுவே விசாரம், அது ஒழிந்தால், சொன்ன விசாரம் தொலையா விசாரம், நல் தோகையரைப் பன்ன விசாரம் பலகால் விசாரம், இப் பாவி நெஞ்சுக...