அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தத்துவத்துச் செயலொடு (பொது)
முருகா!
அடியாரோடு கூட்டி அருள் புரிவாய்.
தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன
தத்தனத் தத்ததன ...... தனதான
தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு
சத்துவிட் டப்படிபொ ...... லடியேனுஞ்
சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி
சத்துவத் தைப்பிரிய ...... விடும்வேளை
சுத்தமுத் தப்பதவி பெற்றநற் பத்தரொடு
தொக்குசற் றுக்கடையன் ...... மிடிதீரத்
துப்புமுத் துச்சரண பச்சைவெற் றிப்புரவி
சுற்றவிட் டுக்கடுகி ...... வரவேணும்
வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய
வெற்றிசத் திக்கரக ...... முருகோனே
வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல
விட்டபச் சைச்சரண ...... மயில்வீரா
கத்தர்நெட் டுச்சடையர் முக்கணக் கக்கடவுள்
கச்சியப் பர்க்கருள்செய் ...... குருநாதா
கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர்
கற்பினுக் குற்றுபுணர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
தத்துவத்துச் செயலொடு ஒட்டில் பட்டக் குருகு
சத்து விட்டப்படி பொல் ...... அடியேனும்,
சச்சில் உற்றுப் படியில் விட்டு விட்டுக் குளறி,
சத்துவத்தைப் பிரிய ...... விடும்வேளை,
சுத்த முத்தப் பதவி பெற்ற நல் பத்தரொடு
தொக்கு சற்றுக் கடையன் ...... மிடிதீர,
துப்பு முத்துச் சரண பச்சை வெற்றிப் புரவி
சுற்ற விட்டுக் கடுகி ...... வரவேணும்.
வித்தக அத்தி, பவள தொப்பை அப்பற்கு இளைய!
வெற்றி சத்திக் கரக ...... முருகோனே!
வெற்பும் எட்டுத் திசையும் வட்டம் இட்டுச் சுழல
விட்ட பச்சைச் சரண ...... மயில்வீரா!
கத்தர், நெட்டுச் சடையர், முக்கண் நக்கக் கடவுள்,
கச்சி அப்பர்க்கு அருள்செய் ...... குருநாதா!
கற்ப தத்தைக்கு உருகி, உன் பதத்துக் குறவர்
கற்பினுக்கு உற்று புணர் ...... பெருமாளே.
பதவுரை
வித்தக அத்திப் பவள தொப்பை அப்பற்கு இளைய --- ஞானமே வடிவாகியவரும், பவள நிறம் கொண்ட யானை முகத்தினை உடையவரும், பெருவயிற்றை உடையவவரும், தலைவர் ஆகிய மூத்தபிள்ளையாருக்கு இளையவரே!
வெற்றி சத்திக் கர அக முருகோனே --- வெற்றி பொருந்திய வேலாயுதத்தைத் திருக்கையில் ஏந்திய முருகப் பெருமானே!
வெற்பு எட்டு திசையும் வட்டம் இட்டுச் சுழல விட்ட பச்சைச் சரண மயில் வீரா --- கிரெளஞ்ச மலையும், எட்டு திக்குகளும் வட்டமாகச் சுழலும்படி செய்த பச்சை நிறமுள்ள தோகையைக் கொண்ட மயில் வீரரே!
கத்தர் --- உயிர்களுக்குத் தலைவரும்,
நெட்டுச் சடையர் --- நீண்ட திருச்சடையை உடையவரும்,
முக்க(ண்) --- மூன்று திருக்கண்களை உடையவரும்,
அக்கக் கடவுள் --- அக்கமணி மாலையினை அணிந்தவரும்,
கச்சி அப்பர்க்கு அருள்செய் குருநாதா --- காஞ்சிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் தந்தையாகிய சிவபெருமானுக்கு உபதேசம் செய்தருளிய குருநாதரே!
கற்ப தத்தைக்கு உருகி --- கற்பக மரம் உள்ள தேவலோகத்துக் கிளியாகிய தெய்வயானை அம்மையாரின் அன்புக்கு உருகியதோடு,
உன் பதத்துக் குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே ---
தேவரீரது திருவடியையே மனத்தில் பதித்து இருந்த குறமகள் ஆகிய வள்ளிநாயகியைத் தேடி அணைந்த பெருமையில் மிக்கவரே1
ஒட்டில் பட்டக் குருகு சத்து விட்டப்படி --- கண்ணியில் சிக்கிய பறவையானது தனது ஆற்றலை இழந்துவிட்டது போன்று,
தத்துவத்துச் செயலொடு பொல் அடியேனும் சச்சில் உற்று --- பொல்லாதவன் ஆகிய அடியேனும் தத்துவச் செயல்களால் பதர் போலப் பயனற்றவன் ஆகி, ,
படியில் விட்டு விட்டுக் குளறி --- இந்த உலகவாழ்வில் தடுமாற்றத்தினை அடைந்து,
சத்துவத்தைப் பிரிய விடும் வேளை --- உண்மைப் பொருளை விட்டு விலகிப் போகும் வேளையில்,
சுத்த முத்தப் பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு --- தூய சீவன்முத்தி நிலையை அடைந்துள்ள சிறந்த அடியவர்களோடு கூட்டி,
சற்று கடையன் மிடி தீர --- எளிதாக அடியேனது வறுமை தொலைய,
துப்பு முத்துச் சரண பச்சை வெற்றிப் புரவி சுற்ற விட்டுக் கடுகி வரவேணும் --- பவளம், முத்து இவைகளின் நிறம் கொண்ட தோகையினை உடைய, பச்சை நிறம் உள்ளதும், வெற்றியே கொண்டதுமான குதிரையாகிய மயிலைச் சுற்ற விட்டு, விரைந்து அடியேன் முன் வந்தருள வேண்டும்
பொழிப்புரை
ஞானமே வடிவாகியவரும், பவள நிறம் கொண்ட யானை முகத்தினை உடையவரும், பெருவயிற்றை உடையவவரும், தலைவர் ஆகிய மூத்தபிள்ளையாருக்கு இளையவரே!
வெற்றி பொருந்திய வேலாயுதத்தைத் திருக்கையில் ஏந்திய முருகப் பெருமானே!
கிரெளஞ்ச மலையும், எட்டு திக்குகளும் வட்டமாகச் சுழலும்படி செய்த பச்சை நிறமுள்ள தோகையைக் கொண்ட மயில் வீரரே!
உயிர்களுக்குத் தலைவரும், நீண்ட திருச்சடையை உடையவரும், மூன்று திருக்கண்களை உடையவரும், அக்கமணி மாலையினை அணிந்தவரும், பெருந்தொண்டை நன்னாட்டில் காஞ்சிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் தந்தையாகிய சிவபெருமானுக்கு உபதேசம் செய்தருளிய குருநாதரே!
கற்பகமரம் உள்ள தேவலோகத்துக் கிளியாகிய தெய்வயானை அம்மையாரின் அன்புக்கு உருகியதோடு, தேவரீரது திருவடியையே மனத்தில் பதித்து இருந்த குறமகள் ஆகிய வள்ளிநாயகியைத் தேடி அணைந்த பெருமையில் மிக்கவரே1
கண்ணியில் சிக்கிய பறவையானது தனது ஆற்றலை இழந்தது போன்று, பொல்லாதவன் ஆகிய அடியேனும் தத்துவச் செயல்களால் பதர் போலப் பயனற்றவன் ஆகி, இந்த உலகவாழ்வில் தடுமாற்றத்தினை அடைந்து, உண்மைப் பொருளை விட்டு விலகிப் போகும் வேளையில், தூய சீவன்முத்தி நிலையை அடைந்துள்ள சிறந்த அடியவர்களோடு கூட்டி, எளிதாக அடியேனது வறுமை தொலைய, பவளம், முத்து இவைகளின் நிறம் கொண்ட தோகையினை உடைய, பச்சை நிறம் உள்ளதும், வெற்றியே கொண்டதுமான குதிரையாகிய மயிலைச் சுற்ற விட்டு, விரைந்து அடியேன் முன் வந்தருள வேண்டும்
விரிவுரை
வித்தக, அத்திப் பவள, தொப்பை அப்பற்கு இளைய ---
வித்தகம் – அறிவு. இங்கே ஞானத்தைக் குறிக்கும்.
அத்தி --- யானை. யானை முகத்தை உடையவர் மூத்தபிள்ளையார் ஆகிய விநாயகப் பெருமான்.
மூத்த பிள்ளையார் ஆகிய விநாயகப் பெருமானை, “பவள மதயானை” என்றார் பிறிதொரு திருப்பகழில். யானையின் நிறம் கறுப்பு. ஆனால், விநாயகப் பெருமான் திருமேனியின் நிறம் பவளம். அவரது தந்தையார் ஆகிய சிவபரம்பொருளும் "பவளம் போல் மேனியன்" ஆவார்.
வெற்றி சத்திக் கர அக முருகோனே ---
வெல் என்னும்சொல்லை அடிப்படையாக உடையது வேல் என்னும் ஆயுதம். சத்தியாகிய உமையம்மை தந்ததாலும், சத்தியை உடையதாலும், அது சத்திவேல் எனப்பட்டது.
கரக என்னும் சொல்லை, கர+அக என்று பிரித்துப் பொருள் கொள்க.
வெற்பு எட்டு திசையும் வட்டம் இட்டுச் சுழல விட்ட பச்சைச் சரண மயில் வீரா ---
சரணம் --- மயில் தோகை. அது தோகையினை உடைய மயிலைக் குறிக்கும்.
இங்கே குறித்துள்ள மயிலின் ஆற்றல் குறித்து, அடிகளார் மயில் விருத்தப் பாடலில் பின்வருமாறு காட்டி உள்ளார்...
“சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்து வெளி
பட்டு க்ரவுஞ்ச சயிலம்
தகர, பெருங்கனக சிகரச் சிலம்பும், எழு
தனி வெற்பும் அம்புவியும் எண்
திக்கும் தடங்குவடும் ஒக்கக் குலுங்க வரு
சித்ரப் பதம் பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல் புரி வெம் சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்”
கத்தர் ---
கர்த்தர் என்னும் சொல், கத்தர் என வந்தது. கர்த்தர் – தலைவர், கடவுள்.
நெட்டுச் சடையர் ---
நீண்ட திருச்சடையை உடையவர் சிவபெருமான். “தாழ்சடை எட்டுத் திசையும் வீசி” என்றார் காரைக்கால் அம்மையார்.
முக்கணக்கக் கடவுள் ---
சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவற்றைத் தனது திருக்கண்களாக உடையவர் உடையவர் சிவபெருமான். எனவே, முக்கண்ணர் எனப் போற்றபடுகிறார். “நற்பகல் சோமன் எரிதரு நாட்டத்தன்” என்று மணிவாசகப் பெருமான் திருக்கோவையாரில் அருளியமை காண்க.
முக்கண் + நக்கர் எனப் பிரித்து, மூன்று திருக்கண்களை உடைய திகம்பரர் என்று கொள்ளலாம்.
முக்கண் + அக்கர் எனப் பிரித்து, மூன்று திருக்கண்களையும், அக்கமணி மாலையையும் உடையவர் என்றும் கொள்ளலாம்.
கச்சி அப்பர்க்கு அருள்செய் குருநாதா ---
கச்சி அப்பர் – காஞ்சிபுரம் என வழங்கபடும் திருகச்சியம்பதியில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருள். அவருக்கு ஓங்காரத்தின் உட்பொருளை உபதேசித்து அருளியவர் முருகப் பெருமான்.
முருகப் பெருமான் தந்தைக்கு உபதேசித்த வரலாறு
வேதங்களுக்கு முதல் எழுத்தாக உள்ளது பிரணவம் என்னும் மந்திரம் ஆதலால், "மறை ஆதி எழுத்து என்று உகந்த பிரணவம்" என்றார் குமரகுருபர அடிகள். "ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற காமன் தன் உடல் எரியக் கனல் சேரந்த கண்ணானே" என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். "எல்லையில்லா மறைமுதல்" என்பார் தெய்வச் சேக்கிழார். பிரணவம் சிவபெருமானுக்கு இருப்பிடமாகவும், வேதங்களுக்கு முதலாகவும், பிரமன் முதலிய தேவர்களுக்குப் பிறப்பிடம் ஆகவும், காசிப் பதியில் இறப்பவர்களுக்கு எம்பெருமான் உபதேசிக்கும் தாரக மந்திரமாகவும், முருகக் கடவுளின் திருமுகங்களில் ஒன்றாகவும் விளங்குவது.
திருக்கயிலாய மலையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளியிருந்தார். முருகப் பெருமான் தனியாக இருந்த திருக்கோயில் ஒன்றிலே எழுந்தருளியிருந்தார். அக்கோயில் சிவபெருமானுடைய திருவோலக்க மண்டபத்திற்குச் செல்லும் வழியில் அமைந்திருந்தது. ஒருநாள் தேவர்களும் திருமாலும் இந்திரனும் நான்முகனும் சிவபிரானை வழிபடுதல் பொருட்டுத் திருக்கயிலையை அடைந்தார்கள். அத் தேவர்களுள் நான்முகன் ஒழிந்த பிற தேவர்கள் முருகக்கடவுளையும் வணங்கிச் சென்றார்கள். நான்முகன் ஒருவன் மட்டும் "இம் முருகன் சிறுவன் தானே, இவனை எதற்காக வணங்கவேண்டும்" என்னும் எண்ணம் உடையவனாய் வணங்காது ஒதுங்கிச் சென்றான்.
இறைவனை வணங்கச் சென்ற தேவர்களில் நான்முகன் ஆணவத்தோடு சென்ற தன்மையை அறுமுகப்பரமன் அறிந்து கொண்டார். நான்முகனுடைய செருக்கினை அழித்தொழிக்கத் திருவுள்ளம் கொண்டு, "தேவர்கள் வெளியே வரும் பொழுது நான்முகனைப் பிடித்துக் கொண்டுவந்து என்முன் நிறுத்துவாயாக" என்று தம்முடைய இளவலாகிய வீரவாகு தேவர்க்குக் கட்டளையிட்டருளினார். வீரவாகு தேவரும் அறுமுகப்பரமன் கட்டளைப்படி நான்முகனைப் பிடித்து வந்து திருமுன் நிறுத்தினார். இதனைக் கண்ட பிறதேவர்கள் அச்சம் கொண்டவர்களாய்த் திக்குக்கு ஒருவராக ஓடிப் போயினர்.
முருகக்கடவுள் நான்முகனைப் பார்த்து, "நீ எதனில் மிக்கவன்? வாழ்வில் மிகுந்தவன் என்றால், எந்தையாகிய சிவபிரானை நாள் தோறும் வந்து வணங்கவேண்டிய கட்டாயமில்லை. வீரத்தில் மிக்கவன் என்றால், இப்போது என் தம்பியாகிய வீரவாகுவால் பிடிபட்டு வந்ததுபோல் வந்திருக்க மாட்டாய்; எல்லாவற்றையும் நான் படைப்பேன் என்று கூறுவாயாகில், உன்னையும் திருமாலையும் சிவகணத்தவரையும் நீ படைக்கவில்லை" என்று இப்படிப் பலவாறு கூறவும், நான்முகன் அப்பொழுதுகூட வணங்காமலும் மறுமொழி கூறாமலும் நின்றான். உடனே முருகப்பெருமான் நான்முகனுடைய தலையில் பலமாகக் குட்டிக் கடிய சிறையில் அடைத்தருளினர். பிறகு, படைப்புத் தொழிலையும் தாமே மேற்கொண்டருளினர். இவ்வாறு சிலகாலம் சென்றது. திருமால் முதலியோர் இச்செய்தியைச் சிவபிரானிடம் தெரிவித்தனர். சிவபிரான் திருமால் முதலிய தேவர்களைப் பார்த்துச், "செம்மையான ஞானசத்தியின் திருவுருவத்தினைத் தனக்குத் திருவுருவமாகக் கொண்ட தலைவனாகிய முருகன் எம்மினும் வேறுபட்டவன் அல்லன். யாமும் அவனிலிருந்து வேறாக உள்ளேம் அல்லேம். இளமை பொருந்திய வடிவினை உடைய அம்முருகனிடத்தில் அன்பு செய்தவர்கள் நம்மிடத்தில் அன்பு செய்தோர் ஆவர். பிழை செய்தவர்கள் நம்மிடத்திலும் பிழை செய்தவர்களாவர். மிகுந்த குற்றத்தினைச் செய்த நான்முகனுக்குக் கிடைத்த தண்டமானது தகுதியுடையதே ஆகும். அந் நான்முகனை எவ்வாறு சிறையில் இருந்து வெளிப்படுத்த முடியும்?" என்று கூறினார். தேவர்கள் நான்முகன் செய்த குற்றத்தினைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.
சிவபெருமான் நந்திதேவரை அழைத்து, "நீ முருகனிடம் சென்று வணங்கி, நான்முகனைச் சிறையில் இருந்து வெளிவிடுமாறு நாம் கூறியதாகக் கூறி, விடச் செய்து முருகனையும் இங்கு அழைத்துக்கொண்டு வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். திரு நந்திதேவர் அறுமுகப் பரமனிடம் சென்று வணங்கிச் சிவபெருமான் கூறிய செய்தியைத் தெரிவித்தார். அவ்வளவில் முருகப்பெருமான் நான்முகனைச் சிறையிலிருந்து விடுவித்துத் தாமும் திருக்கயிலையை அடைந்தார். சிவபெருமான் முருகக்கடவுளைப் பார்த்து, "அறிவினாலே பெருந்தன்மைய உடைய பெரியவர்கள் செய்தற்கரிய பிழைகளைத் தமது மனம் அறிந்து செய்யமாட்டார்கள். சிற்றறிவு உடையவர்கள் அறிந்தோ அறியாமலோ பிழைகளைச் செய்வார்கள். பெரியோர்கள் அக்குற்றத்தினை ஒரு பொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள். சிறந்த அறிவு இன்மையாலே நான்முகன் உன்னை வணங்காது சென்றான். நீ அவனுடைய குற்றத்தைப் பொறுக்காமல் பெரிதாகக் கொண்டு தண்டம் செய்து வருத்திவிட்டாய். தேவர்களுடைய துன்பத்தைப் போக்கி இன்பத்தினைக் கொடுக்க வந்த நீ இவ்வாறு செய்தல் தகுதியாகுமோ?" என்று உசாவினார்.
முருகக்கடவுள் சிவபிரானைப் பார்த்து "எந்தையே! நான்முகனைச் சிறந்த அறிவில்லாதவன் என்றீர். சிறந்த அறிவில்லாதவன் பிரணவம் என்னும் அருமறையின் மெய்ப்பொருளை உணரமாட்டான். இத்தகைய நிலையில் உள்ளவனுக்குப் படைப்புத் தொழிலை ஏன் வழங்கினீர்?" என்று உசாவினார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ பிரணவத்தின் பொருளை அறிவாயானால் கூறுவாயாக" என்று சொன்னார். அதற்கு முருகப்பிரான், "அதனைக் கூறவேண்டிய முறைப்படி கூற வேண்டுமே அல்லாமல் கண்டபடி சொல்லலாமோ?" என்றார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ விருப்பத்தோடு தங்கியிருக்கும் தணிகைமலைக்கு அருளுரை பெறும்பொருட்டு நாம் வருகின்றோம். மாசிமகமும் வருகின்றது. அப்பொழுது கூறுவாயாக" என்றார். அவ்வாறே தணிகைமலைக்குச் சென்று வடகிழக்கு எல்லையில் ஒரு கணப்பொழுது தணிகைவேலனை எண்ணி அமர்ந்தார். குருநாதனாகிய முருகக்கடவுள் சிவபிரான் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து தந்தையாகிய சிவபிரானுக்குப் பிரணவ மறைப்பொருளை முறையோடு உரைத்தருளினார்.
தனக்குத் தானே மகனும் குருவும் மாணவனும் ஆகிய சிவபிரான், ஓங்கார வடிவினனாகிய முருகக் கடவுளின் அறிவுரையைக் கேட்ட அளவில் பெருமுழக்கஞ் செய்து நகைத்துக் கூத்தாடினார். சிவபெருமான் அவ்வாறு பெருமுழக்கம் செய்து இன்பக் கூத்தாடியபடியால் அவ்விடம் "வீராட்டகாசம்" என்று பெயர் பெற்றது. பிரணவப் பொருளைக் கூறியபடியால் தணிகை என்னும் திருத்தலமானது, "பிரணவ அருத்த நகர்" என்னும் பெயரையும் பெற்றது. திருத்தணிகையில் ஒரு கணப்பொழுது தவம் முதலிய நல்வினைகளைச் செய்பவர்கள் பெறுதற்கரும் பயனை அடைவார்கள்.
“அருள்உரு ஆகும் ஈசன் அயற்கு இது புகன்ற பின்னர்,
முருகவேள் முகத்தை நோக்கி முறுவல் செய்து, அருளை நல்கி,
"வருதியால் ஐய" என்று மலர்க்கை உய்த்து, அவனைப் பற்றித்
திருமணிக் குறங்கின் மீது சிறந்து வீற்றிருப்பச் செய்தான்.”
“காமரு குமரன் சென்னி கதும்என உயிர்த்துச் செக்கர்த்
தாமரை புரையும் கையால் தழுவியே, "அயனும் தேற்றா
ஓம்என உரைக்கும் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ?
போம் எனில், அதனை இன்னே புகல்" என இறைவன் சொற்றான்.”
"முற்றுஒருங்கு உணரும் ஆதி முதல்வ! கேள், உலகமெல்லாம்
பெற்றிடும் அவட்கு நீமுன் பிறர் உணராத ஆற்றால்
சொற்றது ஓர்இனைய மூலத் தொல் பொருள் யாரும் கேட்ப
இற்றென இயம்பலாமோ, மறையினால் இசைப்பது அல்லால்".
“என்றலும், நகைத்து, "மைந்த! எமக்குஅருள் மறையின் என்னா,
தன்திருச் செவியை நல்க, சண்முகன் குடிலை என்னும்
ஒன்றொரு பதத்தின் உண்மை உரைத்தனன், உரைத்தல் கேளா
நன்றருள் புரிந்தான்" என்ப ஞான நாயகனாம் அண்ணல்.”
எனவரும் கந்தபுராணப் பாடல்களைக் காண்க.
"முக்கண் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து" என வரும் அருணகிரிநாதர் வாக்கையும் காண்க. இதனால் முருகன் சுவாமிநாதன் எனப் பெற்றார்.
“நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ
ஞான வார்த்தை அருளிய பெருமாளே. --- (ஆலமேற்ற) திருப்புகழ்.
“நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்” --- கந்தர்அநுபூதி
“மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த மதியாளா....” --- (விறல்மாரன்) திருப்புகழ்.
பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால் ஐம்முகச் சிவனார் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு, வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.
“அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகொடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.” --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.
"சுசி மாணவ பாவம்" என்பது பாம்பன் சுவாமிகள் பாடியருளிய அட்டாட்ட விக்கிரக லீலைகளில் ஒன்று. மூவராலும் அறிய ஒண்ணாத ஆனந்த மூர்த்தியாகிய சிவபரம்பொருள், மாணவ பாவத்தை உணர்த்தி, உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணர, முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது என்பதைப் பின்வரும் தணிகைப் புராணப் பாடல் இனிது விளக்கும்.
“தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்,
தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.” --- தணிகைப் புராணம்.
“மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,
வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,
எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!
பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!”
என்னும் திருவாசகப் பாடலாலும், சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.
அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.
திருக்கோவையாரிலும்,
“தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.”
என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.
“வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.” --- திருமந்திரம்.
“கனகம் ஆர் கவின்செய் மன்றில்
அனக நாடகற்கு, எம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்....” --- குமரகுருபரர்.
“பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.” --- அபிராமி அந்தாதி.
“தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.” --- அபிராமி அந்தாதி.
“சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,
உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.” --- சிவஞான சித்தியார்.
கற்ப தத்தைக்கு உருகி ---
கற்பம் – தேவலோகத்தில் உள்ள ஐந்து மரங்களில் ஒன்றாகிய கற்பக மரத்தைக் குறிக்கும்.
தத்தை – கிளி. பெண்களைக் கொடி என்றும் கிளி என்றும் கூறுவது பாவலர் மரபு.
தேவலோகத்தில் வளர்ந்த கிளியாகிய தெய்வயானை அம்மையாரை முருகப் பெருமான் திமணம் புணர்ந்து அவரது அன்புக்கு உளம் உருகினார்.
குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே ---
குறமகள் ஆகிய வள்ளிநாயகியைத் தேடிச் சென்று அவரை ஆட்கொண்டு திருமணம் புணர்ந்தவர் முருகப் பெருமான்.
ஒட்டில் பட்டக் குருகு சத்து விட்டப்படி ---
ஒட்டு --- பறவையைப் பிடிக்கும் கண்ணி.
குருகு – பறவை.
சத்து – வலிமை.
கண்ணியில் சிக்கிய பறவையானது தனது ஆற்றலை இழந்துவிடும்.
தத்துவத்துச் செயலொடு பொல் அடியேனும் சச்சில் உற்று ---
பொல் – போல் என்பது பொல் என்று வந்த்தாகக் கொள்ளலாம். பொல்லாதவன் என்றும் கொள்ளலாம்.
சச்சில், சச்சு – சிறுமை, பதர். (சரசுவதி என்னும் அருமையான பெயரை, சச்சு என்று அழைப்பது எவ்வளவு கேவலம் என்று இதன் மூலம் தெரியவரும்.)
உயிரானது உண்மை அறிவைப் பெறுவதற்குத் துணை புரிபவை தத்துவங்கள். அவற்றின் மூலம் அறிவைப் பெற்று, அவற்றைக்ங கடந்து மேல் ஏறிச் சென்று உண்மை ஞானத்தைப்பெற முயலுதல் வேண்டும். ஒரு வகுப்பிலே சிலகாலம் பயின்று மேல்வகுப்புக்குச் செல்வதுபோல இது. “தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்” என்பார் வள்ளற்பெருமான். தத்துவங்களைக் கடந்து சென்று சிவத்தை அடைதல் வேண்டும். இறைநிலையை அடையவதற்குப் படிநிலைகளாக அமைந்தவை இவை. “பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி, ஆணையாம் சிவத்தைச் சார” என்பார் தெய்வச்சேக்கிழார் பெருமான். (சோபானம் – படி)
படியில் விட்டுவிட்டுக் குளறி சத்துவத்தைப் பிரிய விடும் வேளை ---
படி – உலகம். உலகவாழ்வில் தடுமாற்றத்தை அடைதல் கூடாது.
சத்துவம் – உண்மைப்பொருள். மெய்ப்பொருள். பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருள் நிலையில், மெய்ப்பொருள் தோன்றாது.
சுத்த முத்தப் பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு ---
ஆணவத்தால் அறியாமை அடைந்த உயிர் அந்தக்கரணங்களுடன் சேர்ந்து செயல்படும்போது பலவித நிலைகளை அடையும். அவ்வாறு அடையும் நிலைக்கு அவத்தை என்று பெயர்.
அவத்தை 1. காரணாவத்தை, 2. காரியாவத்தை என இருவகைப்படும்.
காரணாவத்தை 1. கேவல நிலை, 2. சகல நிலை, 3. சுத்த நிலை என மூவகைப்படும்.
கேவலம் – தனிமை. உயிர் ஆணவத்தோடு மட்டும் கூடித் தனிமையில் கிடக்கின்றதால் கேவல நிலை எனப் பெற்றது. அறிவுப் பொருளாகிய உயிர், அறிவே சிறிதும் இல்லாமல் தன்னையும் உணராமல் கிடக்கும். ஆணவ மலத்தில் மூழ்கிக் கிடப்பதால் கேவல நிலை எனப் பெற்றது.
ஆணவ இருளில் மூழ்கிக் கேவல நிலையில் கிடந்த உயிர்க்கு இரங்கி இறைவன் மாயையிலிருந்து உடல், கருவி, உலகம், நுகர்பொருள் ஆகியவற்றைப் படைத்துக் கொடுப்பான். இவற்றைத் தனு, கரணம், புவனம், போகம் எனக் கூறுவர். இவற்றின் துணையால் ஆணவமல மறைப்புச் சிறிதே நீங்கப் பெற்று அறிவும் செயலும் ஓரளவு விளங்கி உலக வாழ்வில் உயிர் செயல்படும். உலக வாழ்வில் முன்செய்த வினைகளுக்கேற்ப இன்ப, துன்பங்களை அனுபவித்தும் நல்வினை, தீவினைகளைச் செய்தும் மாறி மாறி இறந்தும், பிறந்தும் உயிர் சுழன்று கொண்டே இருக்கும். இந்நிலைக்குச் சகல நிலை என்று பெயர்.
உயிர் கேவலம், சகலம் ஆகிய இரண்டையும் நீங்கி இறைவனைச் சார்ந்து பேரின்பத்தை அனுபவிக்கும் நிலை சுத்தம் எனப் பெறும். கேவலம் இருள்நிலை; இரவு போன்றது. சகலம் மருள்நிலை; பகல் போன்றது. சுத்தம் தெருள்நிலை; இரவு பகலற்ற நிலை எனப்படும்.
“இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு” --- திருக்குறள்.
இருள் – கேவலம், மருள் – சகலம், இரண்டு நீங்கிய மாசறு காட்சியர்க்கு இன்பம் பயத்தல் – சுத்தம். இம்மூன்று அவத்தைகளும் பல பிறப்புக்களில் நடைபெறுவனவாகும்.
அவ்வாறு சுத்த நிலையை அடைந்த ஆன்மா பாசங்களில் இருந்து விடுபட்டு இருக்கும் நிலை முத்திநிலை எனப்படும். "முத்தி" என்றால் விடுபடுதல், வெளிப்படுதல் என்று பொருள். பாசங்களில் இருந்து விடுபடுவது "முத்தி". எனவே, "முத்தி" என்பதன் பொருள் "பாசநீக்கம்" ஆகும். உடலோடு வாழ்ந்துகொண்டு இருக்கும்போதே, பாசநீக்கம் பெற்றோர் “சீவன்முத்தர்” எனப்படுவர். அப்படி சிவன்முத்தப் பதவியைப் பெற்று உள்ள சிறந்த அடியார்களோடு கூடி ஒருவன் இருந்தால், அவனும் அந்த நிலையை அடைவான் என்பதால் அடியார்களோடு கூட்டி வைக்கத் திருவருள் துணை புரியவேண்டும்.
கடையன் மிடி தீர ---
மிடி – வறுமை. இங்குப் பொருள் வறுமையைக் குறிக்காது. அருள் வறுமையைக் குறிக்கும்.
துப்பு முத்துச் சரண பச்சை வெற்றிப் புரவி சுற்ற விட்டுக் கடுகி வரவேணும் ---
துப்பு – பவளம்.
சரணம் – மயில்தோகை.
பச்சை – பச்சைமயில்.
வெற்றிப் புரவி – வேகமாகச் செல்லும் குதிரை. வேகமாகச் செல்லுவது குதிரை என்பதை நாம் அறிவோம். முருகப் பெருமான் ஏறிவரும் மயிலின் வேகத்தை நம்மால் அறியமுடியாது. எனவே, அறிந்த ஒன்றைக் காட்டி, அறியாத ஒன்றை விளக்கினார் சுவாமிகள்.
அருள் புரிதற்கு விரைந்து வருதல் வேண்டும் என்பதைக் குறிக்க, வேகமாகச் செல்லும் மயிலின் மீது வந்து அருள வேண்டும் என்றார்.
கருத்துரை
முருகா! அடியாரோடு கூட்டி அருள் புரிவாய்.
No comments:
Post a Comment