அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சுட்டதுபோல் ஆசை (பொது)
முருகா!
மோன நிலையில் சும்மா இருக்கும் சுகம் அருள்வாய்.
தனதனன தானதத்த தனதனன தானதத்த
தனதனன தானதத்த ...... தனதான
சுட்டதுபோ லாசை விட்டுலகா சார
துக்கமிலா ஞான ...... சுகமேவிச்
சொற்கரணா தீத நிற்குணமூ டாடு
சுத்தநிரா தார ...... வெளிகாண
மொட்டலர்வா ரீச சக்ரசடா தார
முட்டவுமீ தேறி ...... மதிமீதாய்
முப்பதுமா றாறு முப்பதும்வே றான
முத்திரையா மோன ...... மடைவேனோ
எட்டவொணா வேத னத்தொடுகோ கோவெ
னப்பிரமா வோட ...... வரைசாய
எற்றியஏ ழாழி வற்றிடமா றாய
எத்தனையோ கோடி ...... யசுரேசர்
பட்டொருசூர் மாள விக்ரமவே லேவு
பத்திருதோள் வீர ...... தினைகாவல்
பத்தினிதோள் தோயு முத்தமம றாது
பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சுட்டது போல் ஆசை விட்டு, உலக ஆசார
துக்கம் இலா ஞான ...... சுகமேவி,
சொல் கரண அதீத நிற்குணம் ஊடு ஆடு
சுத்த நிராதார ...... வெளிகாண,
மொட்டு அலர் வாரீச, சக்ர, சட ஆதாரம்
முட்டவும் மீது ஏறி, ...... மதிமீதாய்
முப்பதும், ஆறுஆறும், முப்பதும் வேறு ஆன
முத்திரையாம் மோனம் ...... அடைவேனோ?
எட்ட ஒணா வேதனத்தொடு, கோ கோ
எனப் பிரமா ஓட, ...... வரைசாய,
எற்றிய ஏழ் ஆழி வற்றிட, மாறு ஆய
எத்தனையோ கோடி ...... அசுரஈசர்
பட்டு, ஒரு சூர் மாள, விக்ரம வேல் ஏவு
பத்து இருதோள் வீர! ...... தினைகாவல்
பத்தினிதோள் தோயும் உத்தம! மறாது
பத்தி செய் வான் நாடர் ...... பெருமாளே.
பதவுரை
எட்ட ஒணா வேதனத்தொடு கோ கோ எனப் பிரமா ஓட ---தாங்கமுடியாத வலியோடு பிரமன் கூக்குரலிட்டு ஓடவும்,
வரை சாய --- கிரெளஞ்ச மலையானது சாய்ந்து விழவும்,
எற்றிய ஏழாழி வற்றிட --- அலைகள் வீசுகின்ற ஏழு கடல்களும் வற்றிப் போகவும்,
மாறு ஆய எத்தனையோ கோடி அசுர ஈசர் பட்டு --- பகைமையோடு வந்த கோடிக்கணக்கான அசுரர்களும், அவர்களது தலைவர்களும் அழிந்து,
ஒரு சூர் மாள --- (அர்க்கர்களில்) ஒப்பற்றவன் ஆன சூரபதுமன் மாளவும்,
விக்ரம வேல் ஏவு பத்து இருதோள் வீர --- பேராற்றல் மிக்க வேலை விடுத்து அருளிய பன்னிருதோள்களை உடைய வீரரே!
தினைகாவல் பத்தினிதோள் தோயும் உத்தம --- தினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்த கற்புடை நாயகி ஆகிய வள்ளியம்மையின் தோள்களைத் தழுவும் உத்தமரே!
மாறாது பத்திசெய் வான் நாடர் பெருமாளே --- நிலைத்த மனதுடன் பத்தி செய்து தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!
சுட்டதுபோல் ஆசை விட்டு --- சூடு பட்டவுடன் கையில் உள்ள பொருள் எப்படி உதறப்படுகிறதோ, அப்படி ஆசைகளை அடியேன் உதறித் தள்ளி,
உலக ஆசார துக்கமிலா ஞான சுகமேவி --- உலகியல் ஆசார சங்கற்ப விகற்பங்களால் உண்டான துக்கம் ஏதும் இல்லாத, ஞான சுகத்தினை அடியேன் அடைந்து,
சொற்கரண அதீத நிற்குணம் ஊடாடு சுத்த நிராதார வெளிகாண --- சொல்லும், மனமும் கடந்த குணங்களே இல்லாத,
தூயதான, பற்றுக்கோடு அற்றதாக விளங்கும் பரவெளியை அடியேன் காணுமாறு,
மொட்டு அலர் வாரீச சக்ர சடாதாரம் முட்டவும் மீது ஏறி --- மொட்டுக்கள் மலர்ந்துள்ள தாமரைகளாகிய சக்கரங்கள் பொருந்தி உள்ள ஆறு வகையான ஆதாரங்களையும் கடந்து மேல் சென்று,
மதிமீதாய் --- அமுதம் ஊறுகின்ற சந்திர மண்டலத்தினுக்கும் அப்புறமாய்,
முப்பதும் ஆறாறு முப்பதும் வேறு ஆன முத்திரையாம் --- தொண்ணூற்றாறு தத்துவங்களுக்கும் வேறுபட்டதற்கு அடையாளம் ஆகிய
மோனம் அடைவேனோ --- மோன நிலையை அடியேன் அடைதல் கூடுமோ?
பொழிப்புரை
தாங்கமுடியாத வலியோடு பிரமன் கூக்குரலிட்டு ஓடவும், கிரெளஞ்ச மலையானது சாய்ந்து விழவும், அலைகள் வீசுகின்ற ஏழு கடல்களும் வற்றிப் போகவும்,பகைமையோடு வந்த கோடிக்கணக்கான அசுரர்களும், அவர்களது தலைவர்களும் அழிந்து, அர்க்கர்களில் ஒப்பற்றவன் ஆக விளங்கிய சூரபதுமன் மாளவும், பேராற்றல் மிக்க வேலை விடுத்து அருளிய பன்னிருதோள்களை உடைய வீரரே!
தினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்த கற்புடை நாயகி ஆகிய வள்ளியம்மையின் தோள்களைத் தழுவும் உத்தமரே!
நிலைத்த மனதுடன் பத்தி செய்து தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!
சூடு பட்டவுடன் கையில் உள்ள பொருள் எப்படி உதறப்படுகிறதோ, அப்படி ஆசைகளை அடியேன் உதறித் தள்ளி, உலகியல் ஆசார சங்கற்ப விகற்பங்களால் உண்டான துக்கம் ஏதும் இல்லாத, ஞான சுகத்தினை அடியேன் அடைந்து, சொல்லும், மனமும் கடந்த குணங்களே இல்லாத, தூயதான, பற்றுக்கோடு அற்றதாக விளங்கும் பரவெளியை அடியேன் காணுமாறு, மொட்டுக்கள் மலர்ந்துள்ள தாமரைகளாகிய சக்கரங்கள் பொருந்தி உள்ள ஆறு வகையான ஆதாரங்களையும் கடந்து மேல் சென்று, அமுதம் ஊறுகின்ற சந்திர மண்டலத்தினுக்கும் அப்புறமாய், தொண்ணூற்றாறு தத்துவங்களுக்கும் வேறுபட்டதற்கு அடையாளம் ஆகிய மோன நிலையை அடியேன் அடைதல் கூடுமோ?
விரிவுரை
எட்ட ஒணா வேதனத்தொடு கோ கோ எனப் பிரமா ஓட ---
வேதனம் – வேதனை. சூரபதுனது கொடுமைகளைத் தாங்கமுடியாத வலியோடு வேதன் ஆகிய பிரமன் வேதனையோடு அஞெசி ஓடினான்.
வரை சாய ---
வரை – மலை. மலைப்பைத் தருவது மலை. அது இங்கே கிரவுஞ்ச மலையைக் குறித்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும்.
இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சும் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.
"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.
"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்
இள க்ரவுஞ்சம் தனோடு
துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தி, அன்று இந்த்ர லோகம்
அழித்தவன் பொன்றுமாறு,
சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"
என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.
கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.
"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
தனி வேலை வாங்கத் தகும்."
என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.
"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.
எற்றிய ஏழாழி வற்றிட ---
எற்றுதல் – மோதுதல், எறிதல். ஏழ் ஆழி – ஏழுகடல். அலைகள் மோதுகின்ற ஏழகடல்களும் வற்றிப் போகுமாறு முருகப் பெருமான் வேலை விடுத்து அருளினார். “வேலை சுவறிட வேலை விட வல்ல பெருமாளே” என்பது திருப்புகழ்.
செய்த வினைகளின் காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இன்றிப் பிறவிகள் வருதலின், பிறவியைப் பெருங்கடல் என்றனர் நம் முன்னோர். "அலைகடல் உடுத்த தலம்" என்பார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். "ஆழிசூழ் உலகம்" என்பார் கம்பநாடர். "நீர் ஆரும் கடல் உடுத்த நிலமடந்தை" என்பார் மனோன்மணீயம் சுந்தரனார். "இருங் கடல் உடுத்த இப் பெருங் கண் மாநிலம்" என்பது புறநானூறு. “பிறவிப் பெருங்கடல்” என்பார் திருவள்ளுவ நாயனார். “பெரும்பிறவிப் பௌவம்” என்பார் மணிவாசகப் பெருமான். கடலில் எப்போதும் அலகளை வீசிக் கொண்டே இருக்கும். அதனை, “எவ்வத் தடம் திரை” என்றார் மணிவாசகப் பெருமான். (எவ்வம் – துன்பம்). காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இல்லாமல் கடலில் அலைகள் சிறிதும் பெரிதுமாக வந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கடலால் சூழப்பட்டு உள்ளது இந்த நிலவுலகம்.
(1) கடலில் ஓயாமல் அலைகள் வீசிக்கொண்டே இருக்கின்றன. பிறவியாகிய கடலில் இன்ப துன்பங்களாகிய அலைகள் ஓயாமல் வந்துகொண்டே இருக்கின்றன.
(2) கடலில் கப்பல்கள் மிதந்து கொண்டே இருக்கின்றன. பிறவியாகிய கடலிலும் ஆசைகளாகிய மரக்கலங்கள் மிதக்கின்றன.
(3) கடலில் திமிங்கிலங்கள், முதலைகள் வாழ்கின்றன. பிறவியாகிய கடலிலும் நம்மை எதிர்க்கின்ற பகைவர்கள் வாழ்கின்றனர்.
(4) கடலில் பலவகைப்பட்ட மீன்கள் உலாவி வயிறு வளர்க்கின்றன. பிறவியாகிய கடலிலும், மனைவி மக்கள் முதலியோர் உலாவி வயிறு வளர்க்கின்றனர்.
(5) கடலுக்குள் மலைகள் இருக்கின்றன. பிறவியாகிய கடலிலும் அகங்காரமாகிய மலை பெரிதாக வளர்ந்திருக்கின்றது.
(6) கடல் ஆழமும் கரையும் காணமாட்டாமல் பயங்கரமாக இருக்கின்றது. பிறவியாகிய கடலும் எவ்வளவு சம்பாதித்துப் போட்டாலும் போட்ட இடங்காணாது முடிவு இன்றி பயங்கரத்தை விளைவிக்கின்றது.
ஒரு சூர் மாள ---
ஒரு - ஒப்பற்ற. சூர் – சூரபதுமன். அர்க்கர்களில் ஒப்பற்றவன் ஆக விளங்கியவன் சூரபதுமன்.
விக்ரம வேல் ஏவு பத்து இருதோள் வீர ---
விக்ரமம் – பேராற்றல். பெருமான் திருக்கரத்தில் விளங்குகின்ற வேல் பேராற்றல் படைத்தது. பத்து இருதோள் – பன்னிரண்டு திருத்தோள்களை உடையவர் முருகப் பெருமான்.
தினைகாவல் பத்தினிதோள் தோயும் உத்தம ---
தினைப் புனத்தைக் காவல் புரிந்துகொண்டு இருந்த வள்ளிநாயகியைப் பத்தினி என்றார் அடிகளார். “நினைவோர் சித்தமொடு அகலாமல் புகு நிழலாள் பத்தினி மணவாளா” என்றார் சிதம்பரத் திருப்புகழில். “திருமால் அளித்தருளும் ஒரு ஞானபத்தினியைத் திகழ்மார்பு உறத் தழுவும் அயில்வேலா” என்றார் பிறிதொரு திருப்புகழில்.
சுட்டதுபோல் ஆசை விட்டு ---
ஆசையே பிறவிக்குக் காரணம். அது எப்போதும் உயிரை விடாது. “ஆசைக்கு ஓர் அளவில்லை” என்பார் தாயுமான அடிகளார். “ஆசையை அளவு அறுத்தார் இங்கு ஆரே” என்பது திருவிசைப்பா. அந்த ஆசையே துன்பத்திற்கு மூலம். “ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்” என்று அருளிய திருமூலதேவ நாயானர், ஆசையை விட்டுவிட்டால் ஆனந்தம் உண்டாகும் என்பதைக் காட்ட, “ஆசை விட விட ஆனந்தம் ஆமே” என்றார். “அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம்” என்று அருளிய திருவள்ளுவ நாயானர், அந்த ஆசை உண்டானால், துன்பமானது மேலும் மேலும் வந்துகொண்டே இருக்கும் என்பதைக் காட்ட, “அஃது உண்டேல் தவா அது மேன்மேல் வரும்” என்று அருளினார்.
ஒரு பொருளை இறுகப் பற்றிக் கொண்டு உள்ள ஒருவனது கையில் சூடுபடுமானால், அவன் தனது கையை உள்ள பொருளைப் பற்றிக் கவலை ஏதும் கொள்ளாமல் உதறிவிடுவான். கையில் உள்ள பொருள் சிதறிப் போகும். அப்படி ஆசையை விட்டுவிட வேண்டும் என்கிறார் அடிகளார்.
உலக ஆசார துக்கமிலா ஞான சுகமேவி ---
உலகியல் என்பது வேதங்களில் விதித்தபடி ஒழுகுதலே ஆகும். “உலகியல் வேதூல் ஒழுக்கம்” என்பதைக் காட்டத் திருஞானம்பந்தப் பெருமான் திருப்பாசுரம் பாடியதாகத் தெய்வச் சேக்கிழார் பெரியபுராணத்தில் அருளினார். உலகாசாரமாகிய நடை வேதநூலின் விதித்த ஒழுக்கமே.
“வேதத்தை விட்ட அறம் இல்லை” என்று திருமூலதேவ நாயனார் அருளிபடி, அறநூல் வேதம் ஆகும். வேதங்களில் சொல்லப்பட்டு உள்ள அறங்களில் வழுவி, அவரவர் மனம் போன போக்கில் ஒழுகுவது உலக ஆசாரம் அல்லது உலகியல் என்று ஆகிவிட்டது. அதனால் துக்கமே நிறைந்து உள்ளது. அனாசாரத்தால், அஞ்ஞானத்தால் உண்டாகும் துக்கம் நீங்கி ஞானசுகத்தைப் பெற உயிர்கள் முயலவேண்டும்.
சொற்கரண அதீத நிற்குணம் ஊடாடு சுத்த நிராதார வெளிகாண ---
சொற்கரண அதீதம் – வாக்கும் மனமும் இல்லா மனோலயம். இறைவனை “மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே” என்றும், “சொல்லும் பொருளும் இறந்த சுடர்” என்றும் கூறுவார் மணிவாசகப் பெருமான். அப்படிப்பட்ட பரம்பொருளை அடையந்து ஆனந்தக்லகடலில் திளைத்து இருக்கவேண்டுமானால், வாக்கும் மனமும் இறந்த நிலையை நாம் அடையவேண்டும். அந்த நிலைஅலை ஓய்ந்த கடல் போல் விளங்கும். அதில் இன்பம் விளையும். அதில் உண்டாகும் இன்பம் இத் தன்மைத்து என்று சொல்லால் விளக்க ஒண்ணாது.
“போக்கும் வரவும், இரவும் பகலும், புறம்பும் உள்ளும்,
வாக்கும் வடிவும் முடிவும் இல்லாது ஒன்று, வந்து வந்து
தாக்கும், மனோலயம் தானே தரும், எனைத் தன் வசத்தே
ஆக்கும், அறுமுகவா, சொல்லொணாது இந்த ஆனந்தமே. “--- கந்தர் அலங்காரம்.
“ஆதாரத்தாலே நிராதாரத்தே சென்று மீதானத்தே செல உந்திபற, விமலற்கு இடம் அது என்று உந்திபற" என்று மெய்கண்ட சாத்திர நூல்களில் ஒன்றான “திருவுந்தியார்” கூறும். யோகப் பயிற்சி என்பது ஆதாரயோகம் என்றும் நிராதாரயோகம் என்றும் இருவகையாகச் சொல்லப்படும். இருவகை நிலையிலும் நின்றவர்கள் மிக மேலான இறைவன் திருவடியிலே சென்று கூடுவது உறுதி. இவற்றுள் ஆதார யோகம் என்பது ஞானாசிரியனால் கற்பிக்கப்பட்ட ஆறு ஆதாரங்களிலும் இறைவனது அந்தந்த இடத்துக்குரிய திருமேனிகளை உள்ளக் கிழியில் உரு எழுதி வழிபட்டுப் பயன் பெறுவதாகும். நிராதார யோகம் என்பது இவை யாவற்றிலும் உயர்ந்ததாய் மனத்தின் அசைவும் அற்றதாய்ப் பற்றுக் கோடும் இல்லாததாய் இறைவனது திருவடியைப் பொருந்துவதாய் அமைவது.
ஆறு ஆதாரங்கள் என்பன மூலாதாரம், சுவாதிட்டானம், மணி பூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியன. இவை ஒவ்வொன்றுக்கும் அதி தெய்வங்கள் முறையே விநாயகர், பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் ஆவர். இந்த ஆறு ஆதாரங்களுக்கும் வடிவங்களாக மூலாதாரத்துக்கு நான்கு இதழ்த் தாமரையும் சுவாதிட்டானத்துக்கு ஆறு இதழ்த் தாமரையும், மணிபூரகத்துக்குப் பத்து இதழ்த் தாமரையும், அநாகதத்திற்குப் பன்னிரண்டு இதழ்த் தாமரையும் விசுத்திக்குப் பதினாறு இதழ்த் தாமரையும், ஆஞ்ஞைக்கு இரண்டு இதழ்த் தாமரையும் கூறப்படும்.
ஆஞ்ஞை என்பது புருவ நடுவில் நிலைபெறுவதாகக் கொள்ளுவர். மீதானம் என்ற நிலை நிராதாரம் எனப்படும். இது உச்சிக்கு மேல் பன்னிரண்டு அங்குல உயரத்தில் ஆயிரம் இதழ்த் தாமரை வடிவாக அமைந்தது என்பர். இது பிரமரந்திரம் என்றும் கூறப்படும். இவ்விடத்தில் சிவசத்தியுடன் பிரியாது நின்ற சிவபெருமானை வழிபடுதல் வேண்டும். ஆதார யோகம் பயிற்சி முறை என்றும் நிராதார யோகம் பயிற்சியின் பயன் எனவும் கொள்ளப்படும்.
மொட்டு அலர் வாரீச சக்ர சடாதாரம் முட்டவும் மீது ஏறி ---
மொட்டு அலர் வாரீசம் – மொட்டு மலர்ந்த தாமரை.
சக்ர சடாதாரம் – சக்கரங்கள் பொருந்தி உள்ள ஆறு ஆதாரங்கள்.
சடாதாரம் – ஆறு ஆதாரம்.
ஆறு ஆதாரங்கள் என்பன மூலாதாரம். சுவாதிட்டானம், மணி பூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியன. இவை ஒவ்வொன்றுக்கும் அதி தெய்வங்கள் முறையே விநாயகர், பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் ஆவர். இந்த ஆறு ஆதாரங்களுக்கும் வடிவங்களாக மூலாதாரத்துக்கு நான்கு இதழ்த் தாமரையும் சுவாதிட்டானத்துக்கு ஆறு இதழ்த் தாமரையும், மணிபூரகத்துக்குப் பத்து இதழ்த் தாமரையும், அநாகதத்திற்குப் பன்னிரண்டு இதழ்த் தாமரையும் விசுத்திக்குப் பதினாறு இதழ்த் தாமரையும், ஆஞ்ஞைக்கு இரண்டு இதழ்த் தாமரையும் கூறப்படும்.
மூலாதாரம் - இது குதத்திற்கும் குறிக்கும் நடுவில் இருப்பது, முக்கோண வடிவுள் நான்கு இதழ்த் தாமரை, மாணிக்க நிறமாய் உள்ளது. கணபதி, குண்டலினி சத்தி, 'ஓம்' என்ற ஓரெழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.
“ஆதார மூலத்து அடியில் கணபதியைப்
பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம்.”
முக்கோண வடிவமாகிய மூலாதாரத்தின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் கணபதியின் திருவடித் தாமரைகளைப் பணிவது எப்போது.
--- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.
“மூலத்து உதித்து எழுந்தமுக்கோணச் சதுரத்துள்
வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே.”
எங்கும் நிறைந்த பொருளே, மூலாதாரத்தில் உதித்த திரிகோண வடிவமாய் உள்ள யந்திரத்தின் கண்ணே எழுந்தருளி இருக்கும் வாலாம்பிகைத் தாயை வணங்காமல் அறிவிழந்தேன்.
--- பட்டினத்தார் பூரணம்.
சுவாதிட்டானம் - இது குறிக்கும் நாபிக்கும் நடுவில் இருப்பது, நால்சதுர வடிவுள் ஆறு இதழ்த் தாமரை, செம்பொன் நிறமாய் உள்ளது, பிரமன் - சரசுவதி, 'ந' கரம் என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.
“மண்வளைந்த நற்கீற்றில் வளைந்து இருந்த வேதாவைக்
கண்வளைந்து பார்த்து உள்ளே கண்டு இருப்பது எக்காலம்.”
நாற்கோண வடிவத்தோடும் கூடிய சுவாதிட்டான மத்தியில் எழுந்தருளி இருக்கும் பிரமாவை, உள்ளே கண்டு தரிசித்தும் மனம் மகிழ்ந்து இருப்பது எப்போது?
--- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.
“உந்திக் கமலத்து உதித்து நின்ற பிரமாவைச்
சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே.”
எங்கும் நிறைந்த பொருளே, சுவாதிடாடானத்தில், அதாவது உந்தியாகிய கமத்தில் விளங்கும் நான்முகனை நெருங்கித் தரிசியாமல் நிலைகுலைந்தேன். -- பட்டினத்தார் பூரணம்
மணிபூரகம் - இது நாபிக் கமலத்தில் இருப்பது, மூன்றாம் பிறை வடிவுள் பத்து இதழ்த் தாமரை, மரகத நிறமாய் உள்ளது. விஷ்ணு - இலட்சுமி, 'ம' கரம் என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.
“அப்புப் பிறைநடுவே அமர்ந்து இருந்த விட்டுணுவை
உப்புக் குடுக்கை உள்ளே உணரந்து அறிவது எக்காலம்.”
மூன்றாம் பிறைபோன்ற மணிபூரகத்தின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் விட்டுணுவை, உப்புக் குடுக்கை போன்ற தேகத்தின் உள்ளே தெரிந்து கொள்வது எப்போது?
--- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.
“நாவிக் கமலநடு நெடுமால் காணாமல்
ஆவிகெட்டு யானும் அறிவுஅழிந்தேன் பூரணமே.”
எங்கும் நிறைந்த பொருளே, மணிபூரகத்தில் விளங்குகின்ற விண்டுவைத் தரிசியாமல் உயிர் இழந்து புத்தி கெட்டேன். -- பட்டினத்தார் பூரணம்
அநாகதம் - இது இருதய கமலத்தில் இருப்பது. முக்கோண வடிவுள் பன்னிரண்டு இதழ்த் தாமரை, படிக நிறமாய் உள்ளது. உருத்திரன் - பார்வதி. 'சி' கரம் என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.
“மூன்று வளையம் இட்டு முளைத்து எழுந்த கோணத்தில்
தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்.”
முக்கோண வடிவமாகிய அனாகதத்தின் நடுவில் எழுந்தருளி இருக்கும் உருத்திர மூர்த்தியைத் தொழுவது எப்போது? --- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.
“உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்
கருத்து அழிந்து நானும் கலங்கினேன் பூரணமே.”
எங்கும் நிறைந்த பொருளே, அநாகதத்தில், அதாவது இருதயத்தில் உருத்திர மூர்த்தியைத் தரிசியாமல் மனம் கெட்டுச் சஞ்சலம் உற்றேன். -- பட்டினத்தார் பூரணம்
விசுத்தி - இது கண்டத்தில் இருப்பது. ஆறு கோண வடிவுள் பதினாறு இதழ்த் தாமரை. மேக நிறமாய் உள்ளது. மகேசுவரன் - மகேசுவரி. 'வ' கரம் என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.
“வாயுஅறு கோணம்அதில் வாழும் மகேச்சுரனைத்
தோயும் வகை கோட்கத் தொடங்குவதும் எக்காலம்.”
அறுகோண வடிவாய் உள்ள விசுத்தியின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் மகேச்சுரனைத் தரிசித்து அவனுடன் இரண்டறக் கலக்கும் வழியை ஆராய்ந்து தொடங்குவது எப்போது?
--- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்.
“விசுத்தி மகேசுரனை விழிதிறந்து பாராமல்
பசித்து உருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே.”
எங்கும் நிறைந்த பொருளே, விசுத்தியில் அதாவது கண்டத்தில் விளங்கும் மகேசுரனை நோக்கி விழித்துக் கொண்டு இருந்து தரிசியாமல், பசியால் வருந்தி மனம் கலங்கினேன்.
--- பட்டினத்தார் பூரணம்.
ஆஞ்ஞை - இது புருவ மத்தியில் இருப்பது, வட்ட வடிவமான, மூன்ற இதழ்த் தாமரை. படிக நிறமாய் உள்ளது. சதாசிவன்- மனோன்மணி. 'ய' கரம் என்ற எழுத்து இவற்றைப் பெற்று விளங்குவது.
“வட்ட வழிக்கு உள்ளே மருவும் சதாசிவத்தைக்
கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்.”
வட்ட வடிவமாகிய ஆஞ்ஞையின் நடுவில் எழுந்தருளி இருக்கும் சதாசிவத்தினைத் தேடிக் கிருபை அடைவது எப்போது? --- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.
“நெற்றி விழி உடைய நிர்மல சதாசிவத்தைப்
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே.”
எங்கும் நிறைந்த பொருளே, விசுத்தியில் விளங்குகின்ற முக்கண் வாய்ந்த சதாசிவத்தினை அதாவது, நெற்றியின்கண்ணே நேத்திரத்தினை உடைய மலரகிதமாய் உள்ள சதாசிவத்தினைத் அறிவுடன் தரிசியாமல், ஐம்பொறியில் சிக்கி ஞானத்தை இழந்தேன். --- பட்டினத்தார் பூரணம்.
துவாதசாந்தம் - இது பிரமரந்திரத்திற்கு (உச்சிக்குழிக்கு) மேல் இருப்பது. ஆயிரத்து எட்டு இதழ்த் தாமரை. சோதி வடிவாய் இருப்பது. பரசிவம் - பராசத்தி. சிவ சிவ இவற்றைப் பெற்று விளங்குவதாகத் தியானிப்பது.
“உச்சிக் கிடைநடுவே ஓங்கு குருபதத்தை
நிச்சயித்துக் கொண்டு இருந்து நேர்வது இனி எக்காலம்.”
ஆறு ஆதாரங்களுக்கும் மேற்பட்டு இருக்கின்ற உச்சியில் விளங்கும் குருவின் திருவடியை மனத்தில் தியானித்துக் கொண்டு இருந்து பொருந்துவது எப்போது.
“ஆறுஆதாரம் கடந்த ஆனந்தப் பேரொளியை
பேறாகக் கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம்.”
ஆறு ஆதாரங்களையும் கடந்த சிவானந்த சொரூபமாய் உள்ள அருட்பெருஞ் சோதியை யான் அடையக் கூடிய பாக்கியமாகத் தரிசித்து, அதனை அடையப் பெறுவது எப்போது?
– பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.
“உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும் அறிவுஅழிந்தேன் பூரணமே.”
எங்கும் நிறைந்த பொருளே, உச்சியிலே இருக்கும் சிதாகாசத்தை நிலையாகத் தரிசிக்காமல், பயத்துடனே புத்தி கெட்டேன். – பட்டினத்தார் பூரணம்.
ஆறு ஆதாரங்களிலும் ஞானாசிரியன் கற்பித்த நெறியிலே இறைவனை வழிபட்டு அதனதனுக்குரிய திருவடிவத்தை உள்ளத்துள் பதித்து தியானம் செய்து அதிலேயே நெடுநாள் நிலைத்திருந்தால், தன் முனைப்புக் கெட்டுச் சிவபரம் பொருள் ஒன்றே முதிர்ந்து உயிரில் ஒங்கித் தோன்றும். வழிபடுவானும் வழிபடப் பெறும் பொருளும் வழிபடுகிறேன் என்ற உணர்வும் நெகிழ்ந்து போக, ஒன்றேயாகிய சிவபரம் பொருள் இவனோடு பிரிப்பின்றி நிற்கும் நிலை ஆதார யோகமாகும்.
மதிமீதாய், முப்பதும் ஆறாறு முப்பதும் வேறு ஆன முத்திரையாம் மோனம் அடைவேனோ ---
மதி மீதாய் – சந்திர மண்டலத்தையும் கடந்து.
முப்பதும் – முப்பதும், ஆறாறு – முப்பத்தாறு, முப்பதும் – முப்பதும் முப்பதாறும் கூட்டி, தொண்ணூற்றாறு தத்துவங்கள். இவைகளையும் கடக்க வேண்டும். “தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்” என்பார் வள்ளற்பெருமான். தத்துவங்களைக் கடந்து சென்று சிவத்தை அடைதல் வேண்டும். இறைநிலையை அடையவதற்குப் படிநிலைகளாக அமைந்தவை இவை. “பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி, ஆணையாம் சிவத்தைச் சார” என்பார் தெய்வச்சேக்கிழார் பெருமான்.
ஆறு ஆதாரங்களும் மூன்று மண்டலங்களாய் வகுத்துச் சொல்லப்பட்டன. மூலாதாரமும் சுவாதிட்டானமும் அக்கினி மண்டலம். மணிபூரகமும் அனாகதமும் சூரியமண்டலம். விசுத்தியும் ஆக்கினையும் சந்தர மண்டலம். இந்த மூன்று மண்டலங்களையும் ஊடுருவிச் சென்று மேல் ஏற வேண்டும்.
“மூளும்வினை சேர, மேல்கொண்டிடா, ஐந்து
பூதவெகு வாய மாயங்கள் தான் நெஞ்சில்
மூடி, நெறி நீதி ஏதும் செயா. வஞ்சி ...... அதிபார
மோக நினைவான போகம் செய்வேன், அண்டர்
தேட அரிது ஆய ஞேயங்களாய் நின்ற,
மூல பரயோக மேல் கொண்டிடா நின்றது ......உளதாகி
நாளும் அதிவேக கால்கொண்டு தீமண்ட,
வாசி அனல்ஊடு போய்ஒன்றி வானின்கண்
நாம மதி மீதில் ஊறும் கலா இன்ப .....அமுது ஊறல்
நாடி, அதன் மீது போய் நின்ற ஆநந்த
மேலை வெளி ஏறி, நீஇன்றி நான்இன்றி,
நாடிஇனும் வேறு தான்இன்றி வாழ்கின்றது .....ஒருநாளே”
என்று இந்த யோகநிலையை அடிகளார் பிறிதொரு திருப்புகழில் காட்டுவார்.
மோனநிலை – சொல்லும் செயலும் அற்றுச் சும்மா இருக்கும் நிலை. இதுவே முடிந்த நிலை ஆகும். “சும்மா இருக்கும் சுகம்” என்று இதனைக் கூறவர். “மோனம் என்பது ஞானவரம்பு” என்பது ஔவையின் அருள்மொழி. சும்மா இருப்பதை "மோனநிலை" என்று சொல்லப்படும். உடல் அசையாமல் இருப்பது "காஷ்டமெளனம்". வாக்குப் பேசாமல் இருப்பது "வாய்மெளனம்". மனம் சிந்திக்காமல் இருப்பது "மனோமெளனம்". இந்த மூன்று வகையான மெளனங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. மனம் ஓடாமல் நிற்கிற போதுதான் பேச்சு நிற்கும்.உடம்பு அசையாமல் இருக்கும்.
ஒருவன் கட்டை போலப் படுத்து உறங்கினான் என்றால் அது மெளனம் ஆகாது. ஒருவன் உண்பதற்கு எதுவும் இல்லை என்பதனால் பட்டினி கிடக்கிறான். மற்றவன் உண்பதற்கு மிகுதியான பொருள்கள் இருந்தும், ஏகாதசி என்பதனால் ஒன்றையும் உண்ணாது பட்டினி கிடக்கிறான். சாப்பிடுவதற்குப் பொருள் இருந்தும் எதையும் புசிக்காமல் இருப்பதே விரதம். அதைப்போல உடம்பில் உணர்ச்சி இருக்கும் பொழுது, தூண்டுதல் பல இருந்தாலும் விழிப்பு நிலையில் எதுவும் செய்யாமல் எதுவும் பேசாமல், எதுவும் சிந்திக்காமல் உடம்பு, வாக்கு, மனம் முதலியவற்றால்,உடம்பு அசையாமல் இருக்கப் பழகலாம். இது மோன நிலைக்கு முதற்படி. உடம்பும் வாக்கும் எப்பொழுது செயலற்று இருக்கும்? மனம் பலபல பொருள்களைப் பற்றிச் சிந்திக்காமல் ஏதேனும் ஒன்றைப் பற்றியே சிந்தித்தால்தான் இருக்கும். அதற்குத்தான் தியானம் என்று பேர். ஏதேனும் ஓர் உருவத்தை மனத்தில் இருத்திக்கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தால் மனம் அடங்கி,மனோலயம் உண்டாகும்.
"சொல்லும் பொருளும்அற்றுச் சும்மா இருப்பதற்கே
அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே".
"சும்மா இருப்பதுவே சுட்டு அற்ற பூரணம் என்று
எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே". --தாயுமானார்.
கருத்துரை
முருகா! மோன நிலையில் சும்மா இருக்கும் சுகம் அருள்வாய்.
No comments:
Post a Comment