வெஞ்சொல்லும் பொய்ம்மையும் வேண்டா


வெஞ்சொல்லும் பொய்மையும் வேண்டா
-----

    மனிதன் மனிதனாக வாழ அறநூல்கள் வழிகாட்டுகின்றன. சமயத் தலைவர்களும் தத்தம் கடவுளரைப் பாடுகையில், செம்மை நெறியில் நின்று வழிபட வேண்டும் என்றே பாடுகின்றனர். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பி, சைவம் வளர்த்த பெருமை தேவார மூவர் முதலிகளைச் சாரும். தலங்கள்தோறும் சென்று, மக்களொடு மக்களாய்ப் பழகி, அவர்தம் வாழ்வைத் தம் வாழ்வாக எண்ணி,  சமுதாயத்துக்கு உரிய அறநெறிகளை ஆங்காங்கே தத்தம் தேவாரப் பாடல்களில் பாடியுள்ளனர். மனிதவாழ்வுக்கு நெறிசார்ந்த இறைவழிபாடு இன்றியமையாதது என்பதை வலியுறுத்தினர். தேவாரம் பாடிய மூவரும் கடவுள் நெறிக்கு இன்னின்ன தேவை - இன்னின்ன ஒதுக்க வேண்டியவை என வற்புறுத்திக் காட்டுகின்றனர். “இன்சொல் இனிது ஈன்றல் காண்பான், எவன்கொலோ வன்சொல் வழங்குவது” என்கிறார் திருவள்ளுவ நாயனார். 

    கதிரவனின் வெம்மையான கிரணங்களால் கடல் பொங்குவது இல்லை. குளிர்ந்த நிலவொளியிலேயே கடல் பொங்குகிறது. அதுபோல, இந்தப் பரந்த உலகமானது வன்சொல்லால் மகிழாது. இனிய சொல்லாலேயே மகிழும் என்கிறார் சிவப்பிரகாச சுவாமிகள்.

“இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே, - பொன்செய் 
அதிர்வளையாய்! பொங்காது அழல்கதிரால், தண்ணென்
கதிர்வரவால் பொங்குங் கடல்.” -- நன்னெறி.

    அப்பர் பெருமான் ஏழாம் நூற்றாண்டில், சமணத்தை விடுத்து, சைவம் சார்ந்த ஒன்றிற்காகவே எல்லையற்ற துன்பங்கை அனுபவித்தவர். எந்தவிதமான துன்பத்துக்கு அஞ்சாது வாழ்ந்து, “என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்" என்றும் “அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை” என்றும் பாடியவர். அவர் அனுபவித்த அத்தனைத் துன்பங்களுக்கும் இடையில் ஒரு வெஞ்சொல் கூட விளம்பவில்லை. “எப்படி ஆயினும் ஏத்துவன் எந்தையை” என்று இறைவனைப் பாடினாரே ஒழிய, தனக்குத் துன்பத்தை இழைத்தவர்களைப் பார்த்து ஒரு கடுஞ்சொல்லும் கூறவில்லை. “ஈண்ட வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று மூண்ட மனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார்” என்று அப்பர் பெருமான் இருந்ததாகத் தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடுகிறார்.

    திருஞானசம்பந்தர் அடியார்களோடு தங்கி இருந்த மடத்தில், தமது சமயத்துக்கு உரிய மந்திர உச்சாடணையால் தீயை வைப்பதாக மன்னனிடம் சொல்லிச் சென்று, அது பலிக்காமல் போகவே, தீப்பந்தத்தைக் கொண்டு நெருப்பை இட்டார்கள் சமணர்கள். திருஞானசம்பந்தப் பெருமான் சமணர்களைப் பார்த்து எவ்விதமான வெய்ய சொல்லையும் சொல்லாமால், சமணர்கள் இட்ட தீயை, “பையவே சென்று பாண்டியற்கு ஆகவே”  என்று பாடி, தனது இனிமையான அருள்வாக்கால், பாண்டியனின் வெப்பு நோயைத் தீர்த்து அவனை நல்வழிப்படுத்தினார். “வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இல்லாச் சமண்” என்று திருஞானசம்பந்தர் பாடுகின்றார். அப்பர் பெருமான் “வெஞ்சொல் இன்றி விலகுமின் வீடுற” என்று அறிவுறுத்துகின்றார். 

    திருவலிவலம் என்னும் திருத்தலத்தில் இறைவர் மீது அருளிய திருப்பதிகத்தின் முதற்பாடலில், உள்ளத்தில் பரபரப்பு ஏதும் இல்லாமல், உள்ளமானது இறைவன் திருவடியில் ஒன்றி இருந்து, கள்ளத்தனத்தை முற்றிலுமாக விட்டுவிட்டு, கடுமையான சொற்களைத் தவிர்த்து, உள்ளத்தைத் தூய்மை செய்து, காமாதி குற்றச் செயல்களை ஒழித்து, நல்ல முறையில் இறைவன் திருநாமத்தை வாயாரச் சொல்லி வழிபடவேண்டும் என்று அறிவுறுத்துகிறார் திருஞானசம்பந்தப் பெருமான்.

“ஒல்லைஆறி, உள்ளம்ஒன்றி, கள்ளம் ஒழிந்து,வெய்ய
சொல்லை ஆறி, தூய்மைசெய்து, காமவினை அகற்றி,
நல்லவாறே உன்றன் நாமம் நாவில் நவின்று ஏத்த,
வல்லவாறே வந்துநல்காய் வலிவலம் மேயவனே.

(ஒல்லை - வேகம். அதாவது பரபரப்பு. கள்ளம் - வஞ்சனை. வெய்ய சொல் - கொடுஞ்சொல். தூய்மை செய்து - மனத்தைப் பண்படுத்தி. நாமம் - திருவைந்தெழுத்து. வல்லவாறு - அடியேனுடைய தகுதி ஏற்க வல்லவாறு)

    எனவே, நல்வாழ்வுக்கு இன்றியமையாதது இன்சொல் என்பது தெளிவாகும். வெஞ்சொல்லை விலக்குவது போல, பொய்ம்மையும் விலக்கப்பட வேண்டும். பொய் நீங்கினாலன்றி, வேறு எத்தகைய வழிபாட்டாலும் இறைவனை அடைய முடியாது என்ற உண்மையினைச் சுந்தர்மூர்த்தி சுவாமிகள் “பொய்யா நாவதனால் புகழ்வார்கள் மனத்துள்ளே, மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்” என்று பாடுகிறார். “பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள் மெய்யனை” என்று பாடுகிறார் அப்பர் பெருமான். பொய்மைகளையும் கைவிட்ட அடியவர்களின் உள்ளத்தே மெய்ப்பொருளாகிய இறைவன் விளங்குவான். 

    எனவே வெம்மையான சொல்லும், பொய்ம்மையும் இன்றி அருளாளர்கள் காட்டிய வழியில் நின்று ஒழுகினால் இறையருள் பெற்று வாழ்வாங்கு வாழலாம். 

No comments:

வெஞ்சொல்லும் பொய்ம்மையும் வேண்டா

வெஞ்சொல்லும் பொய்மையும் வேண்டா -----      மனிதன் மனிதனாக வாழ அறநூல்கள் வழிகாட்டுகின்றன. சமயத் தலைவர்களும் தத்தம் கடவுளரைப் பாடுகையில், செம்ம...