மையிலே தோய்ந்தவிழி வஞ்சியரைச்
சேர்ந்தவர்க்கு மறுமை யில்லை!
மெய்யிலே பிணியும் உண்டாம்! கைப்பொருளும்
கேடாகி விழலர் ஆவார்!
செய்யிலே வளந்தழைத்த தண்டலையார்
வளநாட்டில் தெளிந்த தன்றோ?
கையிலே புண்இருக்கக் கண்ணாடி
பார்ப்பதென்ன கருமம் தானே?
இதன் பொருள் ---
செய்யிலே வளம் தழைத்த தண்டலையார் வளநாட்டில் - கழனியிலே நெல் முதலியவற்றின் வளம் மிகுந்த திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் வளம் பொருந்திய நாட்டினில்; மையிலே தோய்ந்த விழி வஞ்சியரைச் சேர்ந்தவர்க்கு மறுமையில்லை - மை தீட்டிய கண்களை உடைய பொதுமகளிரைச் சார்ந்தவர்களுக்கு மறுமையில் நன்மை இல்லை, மெய்யிலே பிணியும் உண்டாம் - (இம்மையிலும்) உடலில் நோய்கள் உண்டாகும், கைப்பொருளும் கேடு ஆகி விழலர் ஆவார் - கையில் உள்ள பொருளையும் இழந்து (பிறர்க்குப்) பயனற்றவரும் ஆவார்; தெளிந்தது அன்றோ - இது தெளிவானது தானே?, கையிலே புண் இருக்கக் கண்ணாடி பார்ப்பது என்ன கருமம் - கையினிற் புண் இருக்கையில் (அதை நேரே பாராமற்) கண்ணாடியிலே பார்ப்பது என்னசெயல்?
பொதுமகளிரை விழைவோரின் இல்லறம் கெடும். அவர்கள் கைப்பொருளும் கெட்டுப் போகும். இது கைப்புண் போல வெளிப்படையாகத் தெரிவதால், ‘கைப்புண் இருக்கக் கண்ணாடி பார்ப்பது என்ன கருமம் தானே?' என்றார். ‘கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?' என்பது பழமொழி.
இம்மை வாழ்க்கையும், உம்மை வாழ்க்கையும், அம்மை வாழ்க்கையும் செம்மையுற அமைவதற்கு இறைவன் அருளால் இம்மையில் வாழ்க்கைத் துணையாய் வாய்த்த ஒருத்தியுடன் கருத்து ஒருமித்து இல்லறத்தை நடத்துதலே சிறப்பானதாகும். காம உணர்வு மேலீட்டினால், அரிதில் தேடிய பொருளை நல்வழியில் செலவழிக்காமல், பொருட் பெண்டிருக்கு அளவின்றித் தந்து, அவர் விரும்பிய ஆபரணங்களை எல்லாம் பூட்டியதற்குப் பதிலாக, அவர்கள் இவர்களுக்கு வாதம் சூலை முதலிய திருவாபரணங்களைப் பூட்டியனுப்புவர். எனவே, “மெய்யிலே பிணி உண்டாம்” என்று சொல்லப்பட்டது. அருணகிரிநாதர், விலைமாதர் தரும் நோய்களைப் பூஷணங்கள் என்கிறார்.
“வாதமொடு, சூலை, கண்டமாலை, குலை நோவு, சந்து
மாவலி, வியாதி, குன்ம ...... மொடு, காசம்,
வாயு உடனே பரந்த தாமரைகள், பீனசம், பின்
மாதர்தரு பூஷணங்கள்...... என ஆகும்
பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து,
பாயலை விடாது மங்க, ...... இவையால், நின்
பாதமலர் ஆனதின் கண் நேயம் அறவே மறந்து,
பாவ மதுபானம் உண்டு, ...... வெறிமூடி,
ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று,
ஈன மிகு சாதியின்கண் ...... அதிலே,யான்
ஈடு அழிதல் ஆனதின் பின், மூடன் என ஓதும் முன்பு, உன்
ஈர அருள் கூர வந்து ...... எனை ஆள்வாய்” –-திருப்புகழ்
“அரிய பெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்தது
அமையும்,உன் க்ருபைச் சித்தம்என்று பெறுவேனோ” --திருப்புகழ்.
No comments:
Post a Comment