பாடல் 1

திருச்சிற்றம்பலம்

“ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்

கோடுகின்றார், மூப்பும் குறுகிற்று, நாடுகின்ற

நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன், நன்னெஞ்சே!

தில்லைச்சிற் றம்பலமே சேர்.”

திருச்சிற்றம்பலம்

இதன் பொருள் ---

ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும் கோடுகின்றார் – ஓடவும் நடக்கவும் இருந்த தன்மை (உடலில்) நீங்கியதுமே, இந்தப் பிறவியிலே அன்புடையவராய்ப் பொருந்தின மனைவி, மக்கள் சுற்றத்தார் முதலாயினார் முகமும் அகமும் திரிந்து வேறுபடுகின்றார்கள். மூப்பும் குறுகிற்று – கிழத் தன்மையும் வந்து சேர்ந்தது. நல் நெஞ்சமே – (ஆதலால்) எனது நல்ல மனமே! நாடுகின்ற நல் அச்சு இற்று அம்பலமே நண்ணாமுன் – மிகவும் விரும்பப்படுகின்றதும், வண்டியில் பாரத்தைத் தாங்குகின்ற நல்ல அச்சாணியைப் போல, உயிரானது இருந்து செயல்படுவதற்கு இடமான இந்த உடம்பு செயலற்று வீழ்ந்து இறந்து, யாவருக்கும் பொதுவான இடமாகிய சுடுகாட்டினை அடையும் முன்பாகவே, தில்லைச் சிற்றம்பலமே சேர் – திருச்சிற்றம்பலத்தில் அனவரதமும் ஆனந்தத் திருநடனம் பெருமான் எழுந்தருளி உள்ள தில்லை என்னும் திருத்தலத்தைச் சேர்வாயாக. 

ஓடுகின்ற நீர்மை – ஒடுகின்ற தன்மை. நடத்தலோடு ஓடுகின்ற தன்மையும் உள்ள உடம்பு நோயும் முதுமையும் வந்த காலத்துத் தளர்ந்து போகும். முதுமை வந்த பிறகு மூன்று கால் என்பது போல, தடி ஊன்றி நடக்க நேரிடும். பிறர் துணை இல்லாமல் இயங்கமுடியாது. மனைவி, மக்கள், உற்றார், உறவினர் யாவரும் நம்மை வெறுக்கத் தலைப்பட்டுவிட்டார் என்பது அவருடைய முகம் திரிந்த நிஙலையால் அறியலாம். அகம் திரியவே முகமும் திரிந்து விடும். எனவே, “ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும் கோடுகின்றார்” என்றார். உற்றாரும் என்று உம்மை கொடுத்திருப்பது, மனைவி மக்கள் முதலாயினாரையும் குறிக்கும்.


வண்டியானது இயங்குவதற்கு அச்சாணி என்கிற அச்சு அவசியம். அது போலவே, உயிர் இயங்குவதற்கு அச்சாக அமைந்துள்ளது இந்த உடம்பு. நோய், நொடி, முதுமை காரணமாக, விதிக்கப்பட்ட வாழ்நாள் முடிவில் இந்த உடம்பு இற்றுப் போகும். உயிர் பிரிந்த உடம்பை இடுகின்ற இடம் எல்லோருக்கும் பொதுவானது என்பதால் “அம்பலம்” என்றார்.


தில்லையைத் தரிசிக்க முத்தி என்பது பெரியோர் வாக்கு. தில்லையை அடைந்து, திருச்சிற்றம்பலத்தில் பெருமானை வணங்கப் பெறுவாயானால், அப்பெருமான் உன்னை இறப்பு பிறப்பு என்னும் இன்னல்களில் இருந்து நீக்கி, என்றும் இன்பம் பெருகும் நிலையில் வைத்து அருளுவார் என்பது அறிவுறுத்தப்பட்டது.


சைவர்களுக்குக் கோயில் என்று சொன்னால், அது தில்லையையே குறிக்கும். தில்லைக் கூத்தனைக் கண்ணாரக் கண்டு வணங்கும் பேறுபெற்ற பிறகுதான், தாம் எப்படிப்பட்ட அருமையான பிறவியை எடுத்து வந்துள்ளோம் என்று மகிழ்ந்தார் அப்பர் பெருமான். தில்லைக் கூத்தனை வழிபட்டு மகிழ்வதானால், இந்தப் பிறவி வேண்டத்தக்கதே என்று எண்ணி மகிழ்ந்து,

 

"குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,

பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்,

இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்,

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே"

 

என்று அப்பர் பெருமான் பாடி, நமக்கு எல்லாம் ஒரு சிறந்த நல்வழியைக் காட்டி அருள் புரிந்தார். பொதுவாகவே, எல்லா அடியவர்களும் பிறவி வேண்டாம் என்றுதான் கூறிப் போந்தார்கள். ஆனால், அப்பர் பெருமான்,  இறைவனைக் கண்ணாரக் கண்டு வழிபடும் பேறு கிடைக்குமானால்,  இந்த மனிதப் பிறவியும் வேண்டத் தக்கதே என்றார்.

 

  இக் கருத்தை, "கோயில் புராணம்" வலியுறுத்துவதையும் பின்வரும் பாடல்களால் அறியலாம்..

 

“மண்ணில் இருவினைக்கு உடலாய்,

      வான் நிரயத்துக்கு உடலாய்,

எண்ணில் உடல் ஒழிய முயல்

      இருந் தவத்தால், எழில் தில்லைப்

புண்ணிய மன்றினில் ஆடும்

      போது செய்யா நடம் காண

நண்ணும் உடல் இது அன்றோ,

      நமக்கு உடலாய் நயந்த உடல்.

 

இதன் பொருள் ---

 

      மண்ணில் இருவினைக்கு உடலாய் - பூமியிலே புரியும் புண்ணிய பாவங்கள் ஆகிய இருவினைகளக்கு உடலாக வாய்த்தும், வான் நிரயத்துக்கு உடலாய் - சுவர்க்க நரகங்களிலே அனுபவிக்கின்ற, புண்ணியத்தின் பயனாகிய இன்பத்தையும், பாவத்தின் பயனாகிய துன்பத்தையும் அனுபவிக்கின்ற உடலாகவும்,  எண்ணில் உடல் ஒழிய - எடுத்து வந்த எண்ணில்லாத உடல்கள் (பிறவிகள்) ஒழியும்படியாக,  முயல்  இருந்தவத்தால் - இப்பிறவியில் முயல்கின்ற அரும்பெரும் தவத்தின் காரணமாக, எழில் தில்லைப் புண்ணிய மன்றினில்  ஆடும் - அழகு விளங்கும் தூய திருச்சிற்றம்பலத்தில் இயற்றுகின்ற, போது செய்யா நடம் காண - காலந்தோறும் ஒருதன்மைத்தாக அமைந்துள்ள திருக்கூத்தைக் கண்டு மகிழும்படியாக, நண்ணும் உடல் இது அன்றோ  நமக்கு உடலாய் நயந்த உடல் - வாய்த்த இந்த உடல் தானே நமக்கு விருப்பமாக அமைந்த உடல்.

 

      ஒரு தன்மைத்தாக அமைந்த திருக்கூத்து. இறைவன் ஆடுகின்ற திருக்கூத்து எப்போதும் ஒரு தன்மையை உடையதாகவே இருக்கும். அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ப அது திருவருள் புரியும், விளக்கம் தரும். ஊன நிலையில் உள்ளவர்க்கு, ஊனத்தைப் போக்குகின்ற திருநடனம். ஊனம் நீங்கியவர்க்கு ஞானத்தை அருளுகின்ற திருநடனம். ஞானத்தைப் பெற்றோர்க்கு ஞானானந்தத்தை அருளுகின்ற திருநடனம். மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றான "உண்மை விளக்கம்" என்னும் நூலில் இதன் விரிவைக் காணலாம்.

 

 

“மறந்தாலும் இனி இங்கு

      வாரோம் என்று அகல்வர் போல்

சிறந்து ஆர நடம் ஆடும்

      திருவாளன் திருவடி கண்டு,

இறந்தார்கள், பிறவாத

      இதில் என்ன பயன்? வந்து

பிறந்தாலும் இறவாத

      பேரின்பம் பெறலாம்ஆல்.”

 

இதன் பொருள் ---

 

      மறந்தாலும் இனி இங்கு வாரோம் என்று அகல்வர் போல் - இனி இந்தப் பூதலத்தில் மறந்தும் வந்து பிறக்கமாட்டோம் என்று இந்தப் பிறவியினை வெறுத்து ஒழித்துச் சென்றவர்களைப் போல, சிறந்து ஆர நடம் ஆடும் திருவாளன் திருவடி கண்டு - உயிர்களுக்குத் திருவருள் சிறக்கத் திருநடம் புரிகின்ற திருவாளன் ஆகிய பெருமானின் திருவடிகளைத் தரிசித்து, இறந்தார்கள் - இந்தப் பிறவியை நீத்து சிவபதத்தை அடைந்தவர்கள், பிறவாத இதில் என்ன பயன் - மீட்டு இங்கு வந்து வினைப் பிறவியைச் சாராத தன்மையினால் என்ன பயன் உண்டு? வந்து பிறந்தாலும் இறவாத  பேரின்பம் பெறலாம் (ஆல்-அசை) - மீண்டு வந்து இந்த பூவுலகில் பிறந்தாலும், இறைவன் திருக்கூத்தைக் கண்டு மகிழ்கின்றதால் உண்டாகும் ஒழியாத பேரின்பத்தைப் பெறலாமே.

 

      இந்த உண்மையை, தில்லையில் திருநடம் கண்டு மகிழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் அனுபவித்ததாக, தெய்வச் சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் பின்வருமாறு பாடி நம்மைத் தெளிவித்து அருளுகின்றார்.

 

“தெள்நிலா மலர்ந்த வேணியாய்! உன்றன்

    திருநடம் கும்பிடப் பெற்று

மண்ணிலே வந்த பிறவியே எனக்கு

    வாலிதாம் இன்பமாம் என்று,

கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக்

    கைம்மலர் உச்சிமேல் குவித்துப்

பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்

    பாடினார், பரவினார், பணிந்தார்.”

 

இதன் பொருள் ---

 

      தெள்நிலா மலர்ந்த வேணியாய் - வெண்மையான இளம்பிறை விளங்கும் திருச் சடையை உடை பெருமானே! உன்றன் திருநடம் கும்பிடப் பெற்று - உன்னுடைய ஆனந்தத் திருக்கூத்தைக் கண்டு வழிபாடு செய்யப் பெற்று, மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் என்று - இந்நிலவுலகத்தில் வந்த மானிடப் பிறவியே எனக்கு மேலான இன்பம் என்று, கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரிய - கண்களில் இருந்து இன்பக் கண்ணீர் அருவியாகச் சொரிய, கைம்மலர் உச்சிமேல் குவித்து - கைகளாகிய மலர்களைத் தலைமிசை வைத்துக் குவித்து,  பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார், பரவினார், பணிந்தார் - இசையோடு கூடிய அறிதற்கு அரிய திருப்பதிகத்தை இசைத்தார். போற்றினார், வணங்கினார்.


No comments:

43. காலத்துக்கு ஏற்ற இன்பம் தருவன

 “வாவியுறை நீரும், வடநிழலும், பாவகமும், ஏவனைய கண்ணார் இளமுலையும், - ஓவியமே! மென்சீத காலத்து வெம்மைதரும், வெம்மைதனில் இன்பு ஆரும் சீதளம் ஆமே....