நிலைசேரும் அதிகவித ரணசுமுக
துரைகளுடன் நேசம் ஆகிப்
பலநாளு மேஅவரை அடுத்தவர்க்குப்
பலனுண்டாம்! பயமும் இல்லை!
கலைசேரும் திங்கள்அணி தண்டலையா
ரே! சொன்னேன்! கண்ணிற் காண
மலைமீதில் இருப்பவரை வந்துபன்றி
பாய்வதெந்த வண்ணந் தானே?”
இதன் பொருள் ---
கலைசேரும் திங்கள் அணி தண்டலையாரே - (ஒற்றைக்) கலையுடன் பொருந்திய (பிறைச்) சந்திரனைத் திருச் சடையில் அணிந்த திருத்தண்டலை இறைவரே! கண்ணில் காண மலை மீதில் இருப்பவரைப் பன்றி வந்து பாய்வது எந்த வண்ணம் - கண்ணில் காணுமாறு மலைமேல் இருப்பவரைத் தரையிலிருக்கும் பன்றி வந்து எவ்வாறு பாயும்?, (ஆகையால்), நிலைசேரும் அதிக விதரண சுமுக துரைகளுடன் நேசம் ஆகி - நிலைபெற்ற சிறந்த அறிவும் இன்முகமும் உடைய தலைவர்களுடன் நட்புக்கொண்டு, அவரைப் பலநாளும் அடுத்தவர்க்குப் பலன் உண்டாம் - அவர்களைப் பல நாள்களில் அடைந்து இருந்தவர்க்கு நன்மை உண்டு; பயமும் இல்லை - அச்சமும் உண்டாகாது.
மலை என்றது கல்வி, அறிவு ஒழுக்கங்களில் சிறந்த பெரியோரைக் குறிக்கும். பன்றி என்றது, கீழோரைக் குறிக்கும். விதரணம் என்னும் வடசொல் அறிவு என்னும் பொருளது. சுமுகம் என்னும் வடசொல் இன்முகம் என்னும் பொருளது. ‘ஆம் பிள்ளாய்' எனத் தொடங்கும் பாடலில், பெரியோரை அடுத்தவர் உயர்வு பெறுவார் என்று கூறப்பட்டது. இப் பாடலில் ‘பெரியோரை அடுத்தவர்க்குத் தீமையில்லை, நன்மையும் உண்டாகும் என்பது காட்டப்பட்டது. “பெரியோருடன் கூடல் பேரின்பம் ஆமே” என்பது திருமூலர் திருமந்திரம். நல்லறிவு, நற்பண்பு மற்றும் அனுபவத்தில் சிறந்த பெரியோருடன் பழகுவது அல்லது அவர்களுடன் கூடி இருப்பது பேரின்பத்தைத் தரும், வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் மிக உயர்ந்த நிலை ஆகும். இது அறத்தை அறிந்து செயல்படவும், மனச் செருக்கை அறுத்து சிவநெறியில் நிலைபெறவும் துணைபுரிகிறது.
No comments:
Post a Comment