“என்னெஞ்சே! உன்னை இரந்தும் உரைக்கின்றேன்,
கன்னம்செய் வாய்ஆகில்; காலத்தால் வல்நெஞ்சுஏய்
மாகம்பத்து ஆனை உரித்தானை, வண்கச்சி
ஏகம்பத் தானை இறைஞ்சு.”
இதன் பொருள் ---
என்னெஞ்சே - எனது நெஞ்சமே! கன்னம் செய்வாயாகில் – காது கொடுத்துக் கேட்பாயாகில்; உன்னை இரந்தும் உரைக்கின்றேன் - உன்னைக் கெஞ்சியும் வேண்டிச் சொல்கின்றேன்; காலத்தால் – உயிருள்ள காலத்திலேயே, வல் நெஞ்சு ஏய் மா கம்பத்து ஆனை உரித்தானை --- வலிய கொடிய நெஞ்சினை உடைய பெரிய அசைகின்ற (மலைபோன்ற) யானையின் தோலை உரித்தப் போர்த்துக் கொண்டவரும், வண் கச்சி ஏகம்பத்தானை இறைஞ்சு – வளப்பம் பொருந்திய திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியவரும் ஆகிய திருவேகம்ப நாதரை வணங்குவாயாக.
கன்னம் - காது; கன்னஞ் செய்தல் - செவிகொடுத்துக் கேட்டல்; இரந்தும் - மிகக் கெஞ்சியும்; காலத்தால் - உயிரும் ஆற்றலும் உள்ள காலத்திலே. "காலம் உண்டாகவே காதல் செய்து உய்மின்" என்பது மணிவாசகம். காலம் உள்ளபோதே இறைவரை வணங்கு. வன்னெஞ்சு - மாறுபட்ட வலிய கொடிய நெஞ்சு; மா - பெரிய; உருவுடைய; கம்பத்து ஆனை - கம்பம் - அசைவு; எப்போதும் அசைந்து கொண்டு இருப்பது யானையின் இயல்பு. கம்பம் - நடுக்கம் என்று கொண்டு பெரிய நடுக்கத்தை விளைக்கும் யானை என்றும் பொருள் கொள்ளலாம். கம்பம் - கட்டுத்தறி என்றாலும் பொருந்தும். வண் - வளப்பமாவது முத்தி அறிக்கும் ஏழு திருத் தலங்களுள் ஒன்று திருக்காஞ்சி. ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு அண்டம் எல்லாம் உய்ய அறம் செய்கின்ற அம்மைக்கு இருப்பிடமாக உள்ளதும் திருக்காஞ்சி.
காஞ்சிபுரம், தொண்டை நாட்டில் உள்ள முதல் திருத்தலம். சென்னையில் இருந்து 80 கி.மீ. தொலைவு. சென்னையில் இருந்து இரயில் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது. பிற நகரங்களில் இருந்தும் வருவதற்குப் பேருந்து வசதிகள் உள்ளன.
வரலாற்றுக்கு முற்பட்ட நகரம். "நகரேஷு காஞ்சி" என்று வடமொழியில் மகாகவி காளிதாசரால் சிறப்பித்துக் கூறப் பெற்றது. தொண்டை நல்நாட்டின் தலைநகரமாகத் திகழ்ந்தது. கோயில்கள் நிறைந்த நகரம் என்ற சிறப்புடையது. முக்தி தரும் தலங்கள் ஏழில் ஒன்று. வள்ளல் பெருமான் தாம் பாடிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “கண் ஆர்ந்த நாகம் பராம் தொண்ட நாட்டில், உயர் காஞ்சி ஏகம்பம் மேவும் பேரின்பமே” என்று போற்றி உள்ளார். மூவர் முதலிகள் பாடி வழிபட்ட திருத்தலம். இத் திருத்தலத்தில் எந்தக் கோழிலிலும் அம்புகைக்குத் தனிச் சந்நிதி இல்லை என்பது சிறப்பு. நகரின் நடுநாயகமாக அம்மை வீற்றிருக்கும் காமக் கோட்டம் அமைந்து உள்ளது. மூவர் முதலிகளும், காமக் கோட்டம் சென்று அம்பிகையை வழிபட்டனர் என்பது பெரும் சிறப்பு. பாடல் பெற்ற திருத்தலங்கள் ஆகிய திருமேற்றளி, திரு ஓணகாந்தன்தளி, திருக்கச்சி அனேகங்காவதம், திருக் கச்சிநெறிக் காரைக்காடு ஆகியவை இந்நகரில் அமைந்து உள்ளன. சிறந்த வைணவத் தலமாகவும் விளங்குகின்றது. குமரக் கோட்டம் இங்கு அமைந்துள்ளது. பலவேறு திருக்கோயில்கள் உள்ளன.
இப் பாடல் ஆசிரியர் ஆகிய, ஐயடிகள் காடவர்கோன் அவதரித்து, ஆட்சி செய்து தொண்டாற்றிய திருத்தலம். குருபூசை நாள் - ஐப்பசி - மூலம். காடவர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூஉ ஆகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும். ஐயடிகள் உலகில் புகழ் நிலவ அரசு புரிந்த பல்லவர் குலத்தில் தோன்றினார். நாட்டில் வறுமையும் பகையும் குடிகளை வருத்தாவண்ணம் நீதிநெறியோடு ஆட்சி புரிந்தார். சிவநெறியைப் போற்றி வளர்த்தார்.
“திருமலியும் புகழ்விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும்
பெருமையுடன் இனிதுஅமரப் பிறபுலங்கள் அடிப்படுத்துத்
தருமநெறி தழைத்தோங்கத் தாரணிமேல் சைவமுடன்
அருமறையின் துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில்”
என இம்மன்னரது பெருவீரத்தையும் சிவநெறிப் பற்றையும் சேக்கிழார் விளக்கியுள்ளார்.
மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம் மாமன்னர் அரசுரிமை தன் சிவனடித் தொண்டுக்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துத் திருத்தல யாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துத் திருத் தலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார். அவ்வெண்பாக்களில் இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே “சேத்திரத் திருவெண்பா” எனப் பெறுகிறது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் விளங்கக் காணலாம். இவ்வாறு ஐயடிகள் செந்தமிழால் சிவநெறி போற்றியும் தமக்கு இயைந்த ஆலயத் திருப்பணிகள் ஆற்றியும் வாழ்ந்து முடிவில் சிவலோகம் எய்திச் சிவபிரான் திருவடிகளை அடைந்தார் என்பது பெரிய புராணம் உணர்த்தும் இந்நாயனார் வரலாறாகும்.
கழற்சிங்க நாயனார் அவதரித்து ஆட்சி செய்த திருப்பதி. குருபூசை நாள் - வைகாசி - பரணி. கழற்சிங்க நாயனார் பல்லவர் குலத்திலே தோன்றியவர்; சிவனடி அன்றி வேறொன்றை அறிவில் குறியாதவர். வடபுல வேந்தரை வென்று அறநெறியில் நின்று நாடாண்ட வேந்தராகிய இவர் ஒரு நாள் திருவாரூரை அடைந்து திருக்கோயிலை வணங்கச் சென்றார். அப்பொழுது திருக்கோயிலை வலம்வந்து திருப்பூ மண்டபத்தை அடைந்த பட்டத்தரசி அங்கு கீழே வீழ்ந்து கிடந்த மலர் ஒன்றை எடுத்து மோந்தாள். அவள் கையில் புதுமலரைக் கண்ட அங்குவந்த செருத்துணை நாயனார், இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை மோந்தாள் என்று வெகுண்டு அம்மலரை எடுத்து மோந்த மூக்கினை கத்தியால் அரிந்தார். பட்டத்தரசி கீழே விழுந்து அரற்றி அழுதாள். உள்ளே பூங்கோயில் இறைவரைப் பணிந்து வெளியே வந்த கழற்சிங்கர், அரசியின் புலம்பலை அறிந்து வந்து மிகவும் வெகுண்டு "அச்சமின்றி இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவர் யார்?" என வினவினார். அருகே நின்ற செருத்துணையார், "இவள் இறைவர்க்குச் சாத்துதற்குரிய மலரை எடுத்து மோந்தமையாலே நானே இதைச் செய்தேன்" என்றார். அப்போது கழற்சிங்கர் அவரை நோக்கி, "பூவை எடுத்த கையை அல்லவா முதலில் வெட்டுதல் வேண்டும்?" என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப் பட்டத்தரசியின் கையைத் தடிந்தார். இத்தகைய அரிய தொண்டினைச் செய்த கழற்சிங்க நாயனார் சைவநெறி தழைத்தோங்க அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் பெருவாழ்வு பெற்றார்.
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் அவதரித்து சிவனடியார்களுக்கு கந்தை வெளுத்துக் கொடுத்து தொண்டாற்றிய பெரும்பதி. குருபூசை நாள் - சித்திரை - சுவாதி. காஞ்சி மாநகரத்தில் ஏகாலியர் மரபில் தோன்றியவர். இவர் நாயன்மார்களில் ஒருவர். சிவனடியார்களின் உள்ளத் திருக்குறிப்பை உணர்ந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யும் தன்மையில் நிலைத்த மேன்மையால் இவருக்கு 'திருக்குறிப்புத் தொண்டர்' என்று வழங்கப்படும் சிறப்புப்பெயரை உடையவரானார். இவர் செவ்விய அன்புடையவர். நல் ஒழுக்க நெறி நிற்பவர். சிவனடித்தொண்டு புரிபவர். மன, மொழி, மெய்யாகிய முக்கரணங்களும் அண்ணலார் சேவடியின் சார்பாக அணைவிப்பவர்; இத்திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார்களது ஆடையினைத் துவைத்து வெளுத்துக் கொடுத்தலை தமது முதற் பணியாகக் கொண்டிருந்தார். இப்பணியால் துணி அழுக்குப் போவது போல் மும்மலப் பிறப்பு அழுக்கும் போக்குவார் ஆயினர்.
இவ்வடியவரது அன்பின் பெருமையை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங்கொண்டார் திருவேகம்பப் பெருமான். குளிர் மிகுந்த ஒருநாள், திருமாலும் காணமுடியாத திருவடிகளை மண்மீது பதித்து ஓர் ஏழை போன்று மெலிந்த மேனியும், வெண்ணீற்று மேனியில் அழுக்கடைந்த கரிய கந்தைத் துணியுமாய்க் குறுகிய நடையுடன் வந்தார். தளர்ந்த திருமேனியுடைய சிவனடியாராகிய அவரைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர், அன்பினால் எதிர்கொண்டு உரோமம் சிலிர்ப்ப நிலமுற விழுந்து வணங்கினார். எழுந்து நின்று இன்மொழிகள் பல கூறினார். “திருமேனி இளைத்திருக்கின்றதே?” என இரக்கத்துடன் கேட்டார். பின்னர் கூப்பிய கையுடன் ‘தாங்கள் உடுத்துள்ள இக் கந்தையைத் துவைப்பதற்குத் தாருங்கள்’ என்று கேட்டார். வந்த சிவனடியார் "நான் உடுத்துள்ள இக்கந்தை அழுக்கேறி எடுப்பதற்குத் தகுதியில்லாத நிலையிலிருப்பினும் உடம்பினை வருத்தும் குளிருக்குப் பயந்து கைவிடாது உடுத்துள்ளேன். மாலைப் பொழுதாவதற்குள் தருவீராயின் விரைந்து கொண்டுபோய் துவைத்துத் தருவீராக" என்று கூறினார். அதுகேட்ட திருக்குறிப்புத் தொண்டர், "அடியேன் காலந்தாழ்த்தாமல் மாலைப்பொழுதிற்குள் விரைவில் வெளுத்துத் தருகின்றேன், தந்தருள்வீராக" என்று வேண்டினார். வந்த அடியவர், “கந்தையாகிய இதனை விரைவிற் துவைத்து உலர்த்தித் தாராது ஒழிவீராயின், இந்த உடம்பிற்கு இடர் செய்தீராவீர்” என்று சொல்லி தாம் உடுத்திருந்த கந்தையை அவர் கையிற் கொடுத்தார்.
அதனைப் பெற்றுக்கொண்ட திருக்குறிப்புத் தொண்டர், குளத்திற் சென்று முன் சிறிது அழுக்கைப் போக்கி வெள்ளாவியில் வைத்து புழுக்கி துவைக்கத் தொடங்கினார். அப்பொழுது பெருமழை விடாது பெய்வதாயிற்று. அதுகண்ட திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார்க்கு தாம் சொன்ன உறுதிமொழியை எண்ணி "இனி நான் யாது செய்வேன்" என்று கவலையுற்று மழைவிடுவதை எதிர்பார்த்து அங்கேயே நின்றார். மழையோ நிற்கவில்லை. இரவுப் பொழுதும் நெருங்குவதாயிற்று. திருக்குறிப்புத் தொண்டர் “ஐயோ குளிரால் திருமேனி நடுங்குகின்ற சிவனடியார்க்கு நான் செய்ய விரும்பிய அடிமைப்பணி தவறிப் போயிற்றே’"என்று சோர்ந்து வீழ்ந்தார்; மழையோ விடவில்லை; அடியார் சொல்லிய கால எல்லையும் முடிந்து விட்டது. "முன்னமே அவரது உடையினை வீட்டிலேயே துவைத்துக் காற்றில் உலர்த்திக் கொடுப்பதற்கு அறியாது போயினேனே; அடியார் திருமேனி குளிரால் வருந்தத் தீங்கு புரிந்த கொடியேனுக்கு இனி இதுவே செயல்" என்று எழுந்து "துணி துவைக்கும் கல்லிலேயே எனது தலை சிந்தும்படி மோதுவேன்" என்று தமது தலையை மோதினார்.
அப்போது அப்பாறையின் அருகே திரு ஏகம்பரது திருக்கை தோன்றி அவரைப் பிடித்துக் கொண்டது. வானத்தில் விடாது பெய்த நீர்மழை நீங்க, மலர்மழை பொழிந்தது. உமையொருபாகராய் இறைவன் விடைமேல் எழுந்தருளி, காட்சி கொடுத்தருளினார். அத்தெய்வக் காட்சியினைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர் அன்புருகக் கைதொழுது நின்றார். சிவபெருமான் அவரை நோக்கி, "உனது அன்பின் திறத்தை மூவுலகத்தாருக்கும் அறியச் செய்தோம். இனி நீ நம்முடைய உலகத்தை அடைந்து நம்மைப் பிரியாது உறைவாயாக" என்று திருவருள் புரிந்து மறைந்தருளினார்.
திருக்கயிலாயத்தில் ஆகமங்களைஎல்லாம் இறைவர் அருளிச் செய்ய அம்மையார் கேட்டருளினர். எண்ணில் ஆகமங்களை அருளிய இறைவர் தாம் விரும்பும் உண்மையாவது பூசனையே ஆகும் என்று அருளிச் செய்ய, அவ்வாறே தாம் பூசைசெய்ய அம்மையார் மனம் கொண்டனர். அதற்கேற்ற இடம் காஞ்சிபுரத்தின் மாவடியே ஆகும் என்று இறைவர்பால் அறிந்த இறைவியார் அங்கு நின்றும் போந்து, மலையரசன் வந்து விடுத்த பரிசனங்களுடன் சென்று காஞ்சியில் பதும மாநாகம் வேண்டியபடி அதன் பிலத் துவாரத்தில் எழுந்தருளியிருந்து, கம்பையாற்றின் கரையில் மாவின் மூலத்தில், தவஞ்செய்து, சிவனுரு வெளிப்படக் கண்டு, பூசிக்கத் தொடங்கி மெய்ப்பூசை எய்த ஆகம விதியெலாம் செய்தருளினர். அப்போது இறைவனார் ஒரு திருவிளையாட்டினால் அம்மையாருக்கு அருள் செய்யத் திருவுள்ளம் கொண்டு, கம்பையாற்றில் பெருவெள்ளம் வர அருளினர். ஆறு பெருக்கெடுத்து மேலெழுந்து வரக் கண்டு தம் திருக்கையால் தடுத்து நில்லாமையால், அம்மையார் வெருக்கொண்டு காதலால் முலைக்குவட்டொடு வளைக்கையால் நெருக்கி இறுகச் சிவபெருமானைத் தழுவிக்கொண்டனர். இறைவர் அதனை விரும்பியவராய், யானையை உரித்துப் போர்த்த தமது திருமேனி குழைந்து காட்டி முலைச்சுவடும் வளைத்தழும்பும் அணிந்துகொண்டு அத்திருமேனி காட்டி வெளிப்பட்டருளினர். எல்லா உயிரும் உடம்பும் உருகி ஒன்றாகி இறைவரருளை ஏத்திப் போற்றின. கம்பையாறு வெள்ளந் தவிர்ந்து வணங்கியது. மணவாள நற்கோலங் காட்டி நின்ற இறைவனார், அம்மையாரை நோக்கி, "வேண்டும் வரம் கொள்க" என்றருள, அம்மையார், இறைஞ்சி நின்று, "இன்றைய என் பூசை இன்னும் முடிந்ததில்லையாதலின் அதனைக் குறை நிரம்பிடக் கொண்டருளல் வேண்டும்" ன்று விண்ணப்பிக்க, அதற்கு இறைவனார் “நம்பால் நின்பூசனை என்றும் முடிவதில்லை" என்றருளவே, அம்மையார் இறைவர்பால் வரம் கேட்கலாயினர். அவையாவன : - "இந்தப் பூசை என்றும் மாறாது நிலைத்திருக்கும்படி தேவரீர் மகிழ்ந்து கொண்டருளுதல் வேண்டும். இந்தப் பதியில் எல்லா அறங்களும் யான்செய்யும்படி அருளுதல்வேண்டும். திருவடிப் பிழைத்தல் ஒன்றொழிய இங்குள்ளவர் வேறு செய்வினை எதுவேயாயினும் மாதவப்பயன் கொடுத்தருளப் பெறவும் வேண்டும்" என்ற மூன்றுமே ஆம். எல்லா வுயிர்களின் பிறப்பையும் ஒழிக்கும் பேரருட் செல்வியாகிய அம்மையார் கேட்டருள, அவ்வாறே இறைவனார் அந்தப் பூசனையை விரும்பி வீற்றிருந்தும், இடையறாத அறங்களை யெல்லாம் வளர்க்கும் வித்தாக இகபரத்து இருநாழி நெல்லை அளித்தும், காஞ்சி வாழ்பவர் செய்த தீவினையும் தடையின்றி மெய்ந்நெறியடையச் செய்யும் தவங்களாகவும் வரங்களை மகிழ்ந்து தந்தருளினர்.
அவ்வாறே அம்மையார் நித்தமாகிய பூசனை செய்து கொண்டு உயிர்களிடத்து இல்லறம் பெருக்கும் கருணையினால் புண்ணியத் திருக்காமக் கோட்டத்தில் எழுந்தருளியிருந்து முப்பத்திரணடு அறங்களையும் அளித்தருள்கின்றனர்.
No comments:
Post a Comment