கற்பூர வல்லியொரு பாகர்செழுந்
தண்டலையார் கடலேழ் சூழ்ந்த
நற்பூமி தனிற்பிறந்தோர் எல்லோரும்
மக்களென நாட்ட லாமோ?
அற்பூரும் பண்புடையார் நற்குணமும்
பண்பிலார் அழகும் காணின்
பொற்பூவில் வாசனையும் புன்முருக்கம்
பூவுமெனப் புகலல் ஆமே.
இதன் பொருள் ---
கற்பூரவல்லி ஒருபாகர் – கற்பூரவல்லியாகிய உமாதேவியாரைத் தனது திருமேனியின் வொரு பாகத்தில் கொண்டவரும், செழுந்தண்டலையார் கடல் ஏழ் சூழ்ந்த நற்பூமிதனில் – வளப்பம் மிக்க திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியவரும் ஆன சிவபரம்பொருளின், எழுகடலால் சூழப்பெற்ற இந்த நல்ல நிலவுலகத்தில், பிறந்தோர் எல்லோரும் மக்கள் என நாட்டல் ஆமோ - தோன்றியவர் யாவரும் மக்கட்பண்பு உடையவர் என உறுதியாகக் கூறுதல் பொருந்துமோ?, அற்பு ஊரும் பண்பு உடையார் நற்குணமும் – உள்ளத்தில் அன்பு மிக்கு உள்ள நற்பண்பு கொண்டோரின் தன்மையும், பண்பு இலார் அழகும் - மக்கட் பண்பு இல்லாதாரின் உடலழகும், காணின் - ஆராய்ந்தால், பொன்பூவில் வாசனையும் – பொன்னால் ஆன மலரிலே நறுமணமும், புன்முருக்கம் பூவும் – மணம் அற்ற புல்லிய முருக்கமலரும் போல இருக்கும், எனப் புகலல் ஆம் - என்று சொல்லலாம்.
அற்பு – அன்பு. அன்புடைமையே மனிதப் பண்பு ஆகும். அன்பு தழைக்கும் உள்ளத்தினை உடைய மனிதர்களை பொன்னால் ஆன பூவில் நறுமணம் என்று புகழத்தக்கது ஆகும். அன்புடையாரின் உள்ளத்தைக் கூறிய ஆசிரியர், அன்பு அற்றவரின் உடலழகைக் கூறி, அது மணம் அற்ற புல்லிய முருக்கம் பூவினைப் போலப் பயன் அற்றது என்று கூறினார்.
இதையே குமரகுருபர அடிகள் வேறுவிதமாக, “நீதிநெறி விளக்கம்” என்னும் நூலில் கூறி உள்ளார். என்றும் ஒருபடித்தாக வாடாமல் இருக்கின்ற மலரைப் "பொன்மலர்" என்றார். ஒருவர் கற்ற கல்வி எவ்வளவு பெரிய அளவினதாக இருந்தாலும், கற்ற நூலின் தரம் அறிந்து, நூற்பொருளை ஆராய்ந்து உணரும் உணர்வு இல்லையானால், அவர் கற்ற கல்வி பயன்றறதாகும். ஒருகால், உணர்ந்து இருந்தாலும், பிறருக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லும் திறமை இல்லையானால், கற்ற கல்வியால் ஒரு பயனும் இல்லை. ஏனவே, ஆராய்ந்த அறிவோடு, சொல்வன்மையும் இருக்குமானால், அது, பொன்னால் செய்யப்பட்ட மலருக்கு, நறுமணமும் பொருந்தி இருப்பது போல் ஆகும் என்று பின்வரும் பாடலை அருளிச் செய்தார்.
“எத்துணைய ஆயினும் கல்வி இடம் அறிந்து
உய்த்து உணர்வு இல்எனின் இல்லாகும், - உய்த்து உணர்ந்தும்
சொல்வன்மை இன்றுஎனின் என்ஆகும்? அஃது உண்டேல்
பொன்மலர் நாற்றம் உடைத்து. “ --- நீதிநெறி விளக்கம்.
கல்வி அறிவு செயற்கை அறிவு. இயற்கை அறிவு என்பது கற்ற நூலின் பொருளை உய்த்து உணர்ந்து, சொல்லவேண்டிய இடம் அறிந்து, பிறருக்கும் எடுத்து உரைக்கும் வன்மையை உடையது. அப்படிச் சொன்னால், அது பொன்னால் ஆன மலர் நறுமணமும் பொருந்தியது போல் ஆகும். பொன்னால் ஆன மலர் எப்போதும் வாடாது. வாடாத மலரில் மணம் இருந்துகொண்டே இருக்கும்.
எனவே, "இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர், கற்றது உணர விரித்து உரையாதார்" என்றார் திருவள்ளுவ நாயனார். தாம் கற்ற நூற்பொருளைத் தெளிந்து பிறருக்கும் பயன்படுமாறு விரித்துச் சொல்லமாட்டாதவர், மணம் அற்ற மலரைப் போன்றவர்கள்.
பொன்னால் செய்யப்பட்ட மலர் அழகாக இருக்கும். அழகுடைய அந்தப் பொன்மலரில் நறுமணமும் இணைந்து இருந்தால் எவ்வளவு உயர்வாகக் கருதப்படுமோ, அதைப் போன்றே கல்வி அறிவுடன் சொல்லாற்றலும் பெற்றவன் மதிக்கப்படுவான் என்று குமரகுருபரர் குறிப்பிட்டுள்ளார்.
வெற்று உடல் அழகை மதிப்பவர்கள் புல்லிய முருக்கமலர் போன்றவர்கள் என்றார் ஆசிரியர். முருக்கமலர் மணம் அற்றது. மலர்ந்து சில நேரத்திலேயே அது வாடிவிடும். அதை யாரும் விரும்பார்கள்.
No comments:
Post a Comment