திருக்குறள்
பொருட்பால்
ஆ. அமைச்சியல்
அதிகாரம் 64 -- அமைச்சு
இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "அறிந்து சொல்லினவரது அறிவையும் அழித்து, அரசன் தானே அறியாத போது, அக் குற்றத்தை நோக்கி அவனை விட்டு நீங்காது, அரசனுக்கு உறுதியானவற்றைச் சொல்லுதல், உடன் இருந்த அமைச்சனுக்குக் கடன்" என்கின்றார் நாயனார்.
அரசன் அறிந்து சொன்ன அமைச்சர்களது நன்மை பயக்கும் சொற்களை மனத்தில் கொள்ளாமல், அவர்களை இழிவுபடுத்திப் பேசினாலும், அரசன் செய்த அந்தக் குற்றத்தை மனத்தில் கொள்ளாமல், உறுதியானவற்றைச் சொல்லுதல் அமைச்சரது கடமை ஆகும்.
இதற்குத் திருக்குறள்...
அறி கொன்று, அறியான் எனினும், உறுதி
உழை இருந்தான் கூறல் கடன்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
அறி கொன்று அறியான் எனினும் --- அறிந்து சொல்லியாரது அறிவையும் அழித்து அரசன் தானும் அறியானே ஆயினும்;
உறுதி கூறல் உழையிருந்தான் கடன் --- அக்குற்றம் நோக்கி ஒழியாது, அவனுக்கு உறுதியாயின கூறுதல் அமைச்சனுக்கு முறைமை.
('அறி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். கோறல் - தான் கொள்ளாமை மேலும் இகழ்ந்து கூறுதல். 'உழையிருந்தான்' எனப்பெயர் கொடுத்தார், 'அமாத்தியர்' என்னும் வடமொழிப் பெயர்க்கும் பொருண்மை அதுவாகலின். உறுதி கூறாக்கால், அவனது இறுதி எய்தல் குற்றத்தை உலகம் தன்மேல் ஏற்றும் என்பார். 'கூறல் கடன்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...
மானவன்மால் தேவர் வனசரராம் மாதைவிடாய்
ஈனமுறும் என்றான், இரங்கேசா! --- ஞானத்து
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
இதன் பொருள் ---
இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! மால் - ஸ்ரீமந் நாராயணமூர்த்தியே, மானவன் - (நீ) மனிதன் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அந்த இராமன், தேவர் - தேவர்களே, வனசரர் ஆம் - (நீ) குரங்குகள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் அவனுடைய சேனைகளாம், (ஆகையால்) மாதை விடாய் - (இது தெரிந்த பிறகாயினும் நீ சாதாரண மானுடப் பெண் என்று எண்ணியிருக்கும்) சீதையை விட்டுவிடு, ஈனம் உறும் - உனக்கு அவமானம் வந்து சேரும், என்றான் - (என்று விபீஷணாழ்வான் தன் தமையனுக்குத் தான் மந்திரிபோல் பின்வரும் காரியத்தை முன் அறிந்து) சொன்னான் (ஆகையால், இது) ஞானத்து - நல்லறிவால், அறி கொன்று - (மந்திராலோசனைக்காரர் அறிந்து சொன்ன) நன்மையையும் அழித்து, அறியான் எனினும் - தானும் (அதை) அறியானே ஆயினும், உறுதி - (அரசனுக்கு) நன்மை தரும் விஷயத்தை, உழை இருந்தான் – அவனுக்கு அருகிலுள்ள மந்திரியானவன், கூறல் கடன் - சொல்லுதல் முறைமையாகும் (என்பதை விளக்குகின்றது).
கருத்துரை --- மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்.
விளக்கவுரை --- இலங்கையைக் கொளுத்திவிட்டு, அநுமார் சென்ற பிறகு, இராவணன் மந்திராலோசனை செய்தான். அப்போது, "குரங்கு அல்ல இலங்கையைக் கொளுத்தியது, சீதையாகிய நெருப்பை நீயே கொண்டு வந்து வைத்து இலங்கையைக் கொளுத்தினாய்" என்று பலரும் அறிவு கூற, அவனுக்கு மட்டும் அது தோன்றவேயில்லை. இன்னும் தாழ்ப்பது தகாது என்று விபீஷணர் எழுந்து, "அண்ணா! ஸ்ரீமந் நாராயணமூர்த்திதான் நீ மனிதன் என்று சொல்லும் அந்த இராமன். தேவர்களே நீ குரங்குகள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அவனுடைய படைகளாம். இன்னும் என்ன வேண்டும். நரர்களாலும் வானரர்களாலும் சாவாதிருக்க நாம் வரம் பெற்றோம் இல்லை. ஆகையால், அவர்களை வெல்ல நம்மால் ஆகாது. நீ சாதாரண மானுடப் பெண் என்று எண்ணிக்கொண்டு வந்து சிறை வைத்திருக்கும் சீதாதேவியை விட்டுவிடு. இல்லையேல் நாம் சாவது உண்மை. பிறன்மனை புகாமையே மேலான விரதம்" என்று உறுதி கூறினான். அறி கொன்று அறியான் இராவணன். ஆனாலும், அவனுக்கு முதன் மந்திரிபோல் உழை இருந்தானாகிய விபீஷணன் உறுதி கூறல் தனது கடன் என்று உரைத்தமை காண்க.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
சேக்கிழார் சென்னிக்குத் தொண்டர் சிறப்புணர்த்தி
மோக்கநெறி தந்தார், முருகேசா! --- ஊக்கி
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழைஇருந்தான் கூறல் கடன்.
இதன் பொருள் ---
முருகேசா - முருகப் பெருமானே, சேக்கிழார் - பெரியபுராணம் பாடிய சேக்கிழார், சென்னிக்கு - சோழ மன்னனுக்கு, தொண்டர் சிறப்பு உணர்த்தி - சிவத்தொண்டர்களுடைய சிறப்புக்களை எல்லாம் எடுத்துக் கூறி, மோக்க நெறி தந்தார் - வீடுபேற்று நெறியைக் கொடுத்தருளினார். ஊக்கி - முயன்று, அறிகொன்று - அறிவுடையார் சொல்லையும் பிழைத்து, அறியான் எனினும் - தானும் அறியாதவனாக இருந்தாலும், உறுதி - உறுதியானவைகளை, உழை இருந்தான் - பக்கத்திலே இருப்பவன், கூறல் கடன் - கூறவேண்டியது கடமையாகும்.
சேக்கிழார் சோழமன்னனுக்குத் திருத்தொண்டர் பெருமைகளை எல்லாம் சொல்லி வீடுபேற்று நெறியைக் கொடுத்தார். ஒருவன் அறிவுடையார் சொல்லையும் கேளாது தானும் அறியாதவனாக இருந்தாலும், பக்கத்திலே இருப்பவன் அவனுக்கு நன்மையானவைகளைக் கூற வேண்டியது கடமையாகும்.
சேக்கிழார் அநபாய மன்னனுடைய அமைச்சராக அமர்ந்திருந்தார். அவ் அரசன் சைவசமய நூல்களை ஆராயாமல் சமண நூல்களை ஆராய்ந்து மகிழ்ந்துகொண்டிருந்தான். சேக்கிழார் அவ் அரசனுக்கு இவ்வாறு புறச்சமய நூல்களை ஆராய்தல் தக்கது அன்று என்று அறிவுரை கூறித் திருத்தொண்டர் புராணத்தை இயற்றிக் கொடுத்து அதனை ஆராயச் செய்தார். இவ்வாறு சைவ சமய நூல்களை ஆராயத் தொடங்கியபடியால் வீட்டுநெறிக்கு உரியவனாகிச் சிறப்படைந்தான். சேக்கிழார் தம்முடைய கடமையைச் செய்தபடியால் தாமும் சிறப்படைந்தார்.
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை அறியலாம்...
உலப்பில் உலகத்து உறுதியை நோக்கிக்
குலைத்து அடக்கி நல்லறம் கொள்வார்க் கொளுத்தல்
மலைத்து அழுது உண்ணாக் குழவியைத் தாயர்
அலைத்துப்பால் பெய்து விடல். --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
உலப்பு இல் உலகத்து உறுதியை நோக்கி - அழிவில்லாத உலகத்து அடையும் உறுதியாகிய நன்மையை நோக்கி, நல்லறம் கொள்ளார் குலைத்து அடக்கி கொளுத்தல் - நல்ல அறநெறியைக் கைக்கொள்ளாதாரை அந் நெறியினின்றும் நீக்கி அடக்கி அறநெறியைக் கொள்ளுமாறு அறிவு கொளுத்துதல், மலைத்து அழுது உண்ணா குழவியை - மாறுபட்டு அழுதுகொண்டு பாலுண்ணாத குழந்தைகளை, தாயர் அலைத்து பால் பெய்துவிடல் - தாய்மார்கள் வருத்திப் பால் உண்பித்தலை ஒக்கும்.
தம்உயிர்க்கு இறுதி எண்ணார் ;
தலைமகன் வெகுண்ட போதும்,
வெம்மையைத் தாங்கி, நீதி
விடாதுநின்று, உரைக்கும் வீரர் ;
செம்மையின் திறம்பல் செல்லாத்
தேற்றத்தார் ; தெரியும் காலம்
மும்மையும் உணர வல்லார் ;
ஒருமையே மொழியும் நீரார். --- கம்பராமாயணம், மந்திரப் படலம்.
இதன் பொருள் ---
தலைமகன் வெகுண்ட போதும் - அரசன் சீற்றங்கொண்ட காலத்திலும்; தம் உயிர்க்கு இறுதி எண்ணார் - இதனைச் சொன்னால் தம் உயிர்க்கு அழிவு விளையும் என்றுகூட நினையாதவராய் ; வெம்மையைத் தாங்கி - அவனது சீற்றத்தின் கொடுமையை ஏற்றுக்கொண்டு ; விடாதுநின்று நீதி உரைக்கும் வீரர் - தம் கடமையை விட்டுவிடாமல் உறுதியாக நின்று உரிய நீதிகளை எடுத்துச் சொல்லும் துணிவு மிக்கவர்கள் ; செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் - நன்னெறியிலிருந்து வழுவுதல் இல்லாத தெளிவுடையவர்கள் ; தெரியும் மும்மைக் காலமும் - அறியத்தக்க முக்கால நிகழ்வுகளையும் ; உணர வல்லார் - உணரத்தக்க ஆற்றல் பொருந்தியவர்கள் ; ஒருமையே மொழியும் நீரார் - உண்மையையே பேசும் இயல்பினை உடையவர்கள்.
ஒருமையே மொழியும் நீரார் என்பதற்கு முன்னுக்குப்பின் மாறுபட்டுப் பேசாமல் ஒருபடியாகப் பேசுபவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
கதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான்.
இனியன கழறி.
பதம் கொள் பாகனும் மந்திரி
ஒத்தனன்; பல் நூல்
விதங்களால். அவன். மெல்லென
மெல்லென விளம்பும்
இதங்கள் கொள்கிலா இறைவனை
ஒத்தது - ஓர் யானை. --- கம்பராமாயணம், மந்திரப் படலம்.
இதன் பொருள் ---
கதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான் - கறுவு கொள்ளும் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு; இனியன கழறி - (அந்த யானைக்கு) இனிமையான வார்த்தைகளைக் கூறி; பதம்கொள் - (பக்குவமாக அதனை) வசப்படுத்த முயலும்; பாகனும் - யானைப் பாகனும்; மந்திரி ஒத்தனன் - (தவறான வழியில் செல்லும் அரசனை வசப்படுத்த முயலும்) அமைச்சனை ஒத்திருந்தான்; ஓர் யானை - (அப்போது அப் பாகனது இன்சொல்லைக் கொள்ளாது வெறிகொண்ட) ஒரு யானையானது; பன்னூல் விதங்களால் - பல நூல்களில் கூறிய முறைக்கு ஏற்ப; அவன் - அந்த அமைச்சன்; மெல்லென மெல்லென - (மன்னவன் மனங்கொள்ளுமாறு) மெல்ல மெல்ல; விளம்பும் - சொல்லுகின்ற; இதங்கள் - நன்மை பயக்கும் சொற்களை; கொள்கிலா - காது கொடுத்துக் கேட்காத (மாறான வழிச்செல்லும்); இறைவனை - அரசனை; ஒத்தது - ஒப்பதாக ஆயிற்று.
பாகனுடைய இன்சொல்லைக் கேளாது மதவெறி கொண்ட யானைக்கு அமைச்சனின் இனிய சொல்லைக் கேளாது மாறுவழியில் நடக்கின்ற மன்னவன் உவமை.
மன்னவர் செவி அழல் மடுத்ததாம் என
நன் நெறி தருவது ஓர் நடுவு நீதியைச்
சொன்னவர் அமைச்சர்கள் துணைவர் மேலையோர்
ஒன்னலர் விழைந்தவாறு உரைக்கின்றார் களே. --- கந்தபுராணம்.
மன்னவர் செவியில் நெருப்புப் பாய்ச்சியது போல, நல்ல நெறிமுறையையும், நடுவுநிலைமையான நீதியையும் எடுத்துச் சொல்லும் அமைச்சரே அவனுக்கு உண்மையான துணைவரும், சான்றோரும் ஆவர்.
செவிசுடச் சென்றுஆங்கு இடித்துஅறிவு மூட்டி
வெகுளினும் வாய்வெரீஇப் பேரா கவுண்மத்தத*
கைம்மா வயத்ததோ பாகு,மற்று எத்திறத்தும்
அம் மாண்பினவே அமைச்சு. --- நீதிநெறி விளக்கம்.
இதன் பொருள் ---
பாகு - பாகன், எத்திறத்தும் - எவ்வகையாலும், கவிழ் மதத்த - பொழியும் மதத்தினையுடைய, கைமா --- யானையின், வயத்ததோ - வயத்தினனாவனோ, (அதுபோல்) அமைச்சு - அமைச்சர்கள், எத்திறத்தும் - எவ்வகையாலும், அம் மாண்பினவே - அத்தன்மையரே ஆவர், (ஆகையால்) சென்று - (அரசன் தன்நெறி தவறினால் அவனிடத்துப்) போய், செவி சுட - (அவன்) செவிகள் வருந்தும்படி, இடித்து - (அவன் குற்றங்களை எடுத்துக்காட்டி) இடித்துரைத்து, அறிவு மூட்டி - (அவனுக்கு) அறிவுவரச் செய்து, வெகுளினும் - (அவன் குற்றங்களை எடுத்துக்காட்டி) இடித்துரைத்து, வெகுளினும், அவன் தம்மைக்) கோபிக்கினும், வாய்வெரீஇ - (அவனுக்கு) அஞ்சி, பேரா - (அவனைவிட்டு) அகலார்.
யானை தன்னியல்பிலிருக்கும்போது அதனைத் தம்வசப்படுத்தி நடத்தும் பாகர், அது மதங்கொண்டு தம்வசம் அடங்காமல் ஓடும்போதும் அதனை விடாது சென்று அதனை அங்குசம் இட்டு இடித்து, அதன் மதத்தை அடக்கி மறுபடியும் அதனைத் தன்னியல்பிற்குக் கொண்டுவருவது போல், அரசன் தன்னியல்பில் நின்றபோது அவன் மனம்போல் நடக்கும் அமைச்சர் அவன் வெகுண்டு தன்னிலை தவறுங்கால் அவன் செவிகளில் நன்மொழிகளை இடித்துரைத்து அவனுக்கு அறிவு புகட்டி அவனை மறுபடியும் தன்னியல்பிற்குக் கொணர்வர்.
மறத்தாம வேலான் மனக்கொள்கைதந் நெஞ்சுள் வான
நிறத்தாடி நீழ லெனத்தோற்ற நிறுத்து மற்ற
தறத்தா றெனிலாற் றுவரன்றெனி லாக்க மாவி
இறத்தான் வரினு மனத்தானு மிழைக்க வெண்ணார். --- தி.வி. புராணம்.
இதன் பொருள் ---
மறத்தாம வேலான் - கொலையிற் பயின்ற ஒளியினை உடைய வேற்படையேந்திய மன்னனது, மனக்கொள்கை - மனக் கருத்து, தம் நெஞ்சுள் - தமது நெஞ்சின்கண், வானம் நிறத்து ஆடி நிழல் எனத் தோற்ற - வானம் போன்றதும் ஒளியையுடையதும் ஆகிய கண்ணாடியில் நிழல் போல விளங்கித் தோன்ற, நிறுத்து - அதனைச் சீர்தூக்கி, அது அறத்து ஆறு எனில் ஆற்றுவர் - அஃது அறநெறியிற்பட்டதாக இருந்தால் செய்வர்; அன்று எனில் – அந்நெறியிற்படாதாக இருந்தால், ஆக்கம் ஆவி இற வரினும் - (அது செய்யாவழி) தம் பொருளும் உயிரும் அழிய வருமாயினும், மனத்தானும் இழைக்க எண்ணார் - (அக்கேடு வருதலையஞ்சி) அதனைச் செய்ய மனத்தினாலுங் கருதார்.
No comments:
Post a Comment