064. அமைச்சு - 01. கருவியும் காலமும்

திருக்குறள்

பொருட்பால்

ஆ. அமைச்சியல்

அதிகாரம் 64 -- அமைச்சு


இந்த அதிகாரம் அமைச்சனது குணங்களையும் செயல்களையும் கூறுவது.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில். "தொழில் புரியும்போது அதற்கு வேண்டிய சாதனங்களும், அதற்கு ஏற்ற காலமும், தொழிலைச் செய்யும் விதமும், செய்யப்படும் அரிய தொழிலும் பொருந்த எண்ணவல்லவனே அமைச்சன் ஆவான்" என்கின்றார் நாயனார்.

இதனால் அமைச்சனின் இலக்கணம் கூறப்பட்டது.


இதற்குத் திருக்குறள்...


கருவியும், காலமும், செய்கையும், செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


கருவியும் --- வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும்; 


காலமும் --- அதற்கு ஏற்ற காலமும்; 


செய்கையும் --- அது செய்யுமாறும்; 


செய்யும் அருவினையும் --- அவ்வாற்றில் செய்யப்படும் அவ்வரிய வினைதானும்; 


மாண்டது அமைச்சு --- வாய்ப்ப எண்ண வல்லவனே அமைச்சனாவான்.


(கருவிகள் - தானையும் பொருளும், காலம் - அது தொடங்குங் காலம், 'செய்கை' எனவே, அது தொடங்கும் உபாயமும், இடையூறு நீக்கி முடிவு போக்குமாறும் அடங்கின. சிறிய முயற்சியால் பெரிய பயன் தருவது என்பார், 'அருவினை' என்றார். இவை ஐந்தினையும் வடநூலார் மந்திரத்திற்கு அங்கம் என்ப.)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறள் கருத்துக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


காலமும் இடனும் ஏற்ற

     கருவியும் தெரிந்து, கற்ற

நூல் உற நோக்கி, தெய்வம்

     நுனித்து, அறம் குணித்த மேலோர்; 

சீலமும், புகழ்க்கு வேண்டும்

     செய்கையும், தெரிந்துகொண்டு,

பால்வரும் உறுதி யாவும்

     தலைவற்குப் பயக்கும் நீரார் ;    ---  மந்திரப் படலம், கம்பராமாயணம்.


இதன் பொருள் ---


     ஏற்ற காலமும் இடனும் கருவியும் தெரிந்து - வினை செய்தற்குத் தக்க காலத்தையும் இடத்தையும், அதற்குரிய கருவிகளையும் அறிந்து; கற்ற நூல் உற நோக்கி - தாம் படித்த அரசநீதி நூல்களின் கருத்துகளோடு ஒப்பிட்டுக் கண்டு;  தெய்வம் நுனித்து - தெய்வத்தையும் தியானித்து;  அறம் குணித்த மேலோர் - அரசியல் அறத்தைப் பெருக்கிய மேலோர்கள்; சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் - ஒழுக்கத்தையும் புகழ் அடைவதற்குரிய செயல்களையும்;  தெரிந்து கொண்டு - ஆராய்ந்து அறிந்துகொண்டு;  பால் வரும் உறுதி யாவும் - அவ் ஆராய்ச்சிகளின் பயனாக வரும் நற்பயன்கள் யாவற்றையும் ;  தலைவற்குப் பயக்கும் நீரார் - தம் அரசனுக்குக் கொடுக்கின்ற தன்மை உடையவர்கள்.


     இதனால் அமைச்சர்கள் பணிபுரியும் வகை கூறப்பட்டது. இடன் - கடைப்போலி. நுனித்தல் - நுட்பமாக அறிதல். பால்வரும் உறுதி - அந்த அந்தப் பகுதிகளால் விளையும் நன்மை.


No comments:

064. அமைச்சு - 02. வன்கண் குடிகாத்தல்

திருக்குறள் பொருட்பால் ஆ. அமைச்சியல் அதிகாரம் 64 -- அமைச்சு இந்த அதிகரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "தொழிலில் அசைவு இல்லாமையும...