திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 63 -- இடுக்கண் அழியாமை
இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "ஒருவன் தொழில் செய்யுமிடத்து, முயற்சியால் வரும் துன்பத்தையே இன்பம் எனக் கொண்டானாயின், அதனால் அவனுடைய பகைவரும் அவனை மதிக்கும் உயர்வு உண்டாகும்" என்கின்றார் நாயனார்.
துன்பம் என்பது உயிர்க்கு இயல்பாகவே உள்ளதல்ல. அது மனத்தில் உண்டாகும் கோட்பாடு என்று அறிந்து, துன்பத்தை இன்பமாக எண்ணிக் கொண்டால், அதனால் சிறிதும் வருந்துதல் இல்லாமல், மிக்க மகிழ்ச்சி உண்டாகி, எடுத்த காரியத்தை சிறப்பாக முடித்துவிடக் கூடிய ஆற்றல் உண்டாகும்.
இதற்குத் திருக்குறள்...
இன்னாமை இன்பம் எனக் கொளின், ஆகும் தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
இன்னாமை இன்பம் எனக் கொளின் --- ஒருவன் வினை செய்யும் இடத்து முயற்சியான் வரும் துன்பந் தன்னையே தனக்கு இன்பமாகக் கற்பித்துக் கொள்வானாயின்;
தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - அதனால் தன் பகைவர் நன்கு மதித்தற்கு ஏதுவாய உயர்ச்சி உண்டாம்.
(துன்பந்தானும் உயிர்க்கு இயல்பன்றிக் கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோட்பாடு ஆகலின், அதனை மாறுபடக் கொள்ளவே, அதற்கு அழிவு இன்றி மனமகிழ்ச்சி உடையனாய், அதனால் தொடங்கிய வினை முடித்தே விடும் ஆற்றல் உடையனாம் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் மெய்வருத்தத்தான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
விற்ற மனையாளை வெட்டுதலும் உற்றதுயர்
இற்றது மன்னற்கு, இரங்கேசா! --- அற்றுஉலகில்
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.
இதன் பொருள் ---
இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! மன்னற்கு - அரிச்சந்திர மன்னனுக்கு, விற்ற மனையாளை - (தான் அந்தணனுக்கு விற்று விட்ட) மனைவியை, வெட்டுதலும் - வெட்டினவுடனே, உற்ற துயர் - அதுவரையில் பொருந்தியிருந்த துன்பமானது, இற்றது - நீங்கிற்று, (ஆகையால், இது) உலகில் அற்று - உலக மாயா இன்பத்தில் ஆசையற்று, இன்னாமை - (ஒருவன் தான் தொழில் முயற்சி செய்யுமிடத்து) வரும் துன்பத்தை, இன்பம் எனக் கொளின் - இன்பமாக எண்ணிக் கொள்வானாயின், ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - (அதனால் அவனுக்குத் தன்) பகைவரும் விரும்பிப் புகழ்கின்ற மேன்மை உண்டாகும் (என்பதை விளக்குகின்றது).
கருத்துரை --- துன்பத்தை அஞ்சாத தூயோர் இன்பத்தை அடைவர்.
விளக்கவுரை --- அரிச்சந்திர மன்னன் சத்தியம் தவறாமல் கோசிகர்க்குத் தாரை வார்த்துக் கொடுத்த பொன்னுக்காகத் தன்னுடைய கற்பில் சிறந்த மனைவியாகிய பெண்ணையும் தன் மகனையும் பார்ப்பானுக்கு விற்றுக் கொடுத்தும் தீராமல், தன்னையும் புலையனுக்கு விற்றுக் கொடுத்துக் கடன் தீர்த்தான். இப்படிச் சத்தியம் காத்த மன்னன் விஷயத்தில் விசுவாமித்திரர்க்குப் பொறாமை வளர்ந்தது. ஆகையால், அவனுக்கு அவர் அநேக இடுக்கண்கள் இயற்றினார். விடத்தால் மகனைக் கொல்வித்தார். காசிராஜன் மைந்தனைக் கொன்றவள் என்று, மனைவியைக் கொலைக்காரி ஆக்கினார். அந்தக் கொலைக்காரியைக் கொல்ல அம் மன்னனையே கொலையாளி ஆக்கினார். என்ன செய்தும் மன்னன், "இடுக்கண் வருங்கால் நகுக, அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்" என்றபடி கொஞ்சமேனும் அஞ்சாமல், வைராக்கியத்தோடு விளங்கினான். மனைவியைத் தன் கை வாளால் அஞ்சாமல் வெட்டினான். அது அவள் கழுத்தில் பூமாலையாய் விழுந்தது. திரிமூர்த்திகளும் பிரசன்னமானார்கள். அவர்கள் வாழ்த்தி வரம் கொடுத்து, அவர்களுடைய அடிமைத் தனத்தை நீக்கிப் பழையபடி அவர்களுக்கு நாடும் நகரமும் விசுவாமித்திரருடைய வரத்தில் பாதியும் கொடுப்பித்தார்கள். சத்தியத்தை ஒரே பிடிவாதமாகக் கொண்டு, உலகத்தில் மற்றப் பற்றற்று, சத்தியம் காத்தல் தொழிலின் முயற்சியில் வந்த துன்பங்களை இன்பங்கள் எனக் கொண்டதனால், அரிச்சந்திரன் தன்னுடைய ஒன்னார்களாகிய விசுவாமித்திரன் முதலியோரும் விரும்பிப் புகழும் பெரும் சிறப்புப் பெற்றான்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
செற்றுச் சுயோதனன்செய் தீங்கைஇன்பில் தேர்தருமன்
முற்றும்இன்பம் துய்த்தான், முருகேசா! --- பற்றிவரும்
இன்னாமை இன்பம்எனக் கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.
இதன் பொருள் ---
முருகேசா - முருகப் பெருமானே, செற்று - வருத்தி, சுயோதனன் செய் தீங்கை - துரியோதனன் செய்த தீமையை, இன்பில் தேர் தருமன் - இன்பமாகவே கொண்ட தருமபுத்திரன், முற்றும் இன்பம் துய்த்தான் - தான் அடைந்த எல்லாவற்றையும் இன்பமாகவே கொண்டு நகர்ந்தான். பற்றி வரும் - தொடர்ந்து வருவதாகிய, இன்னாமை - துன்பத்தை, இன்பம் எனக் கொளின் - இன்பம் என்று ஒருவன் கொண்டால், தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - தன் பகைவரும் விரும்பத்தக்க சிறப்பை அடைவான்.
தருமரானவர், துரியோதனன் பகைகொண்டு செய்த தீமைகளை எல்லாம் இன்பமாகவே கொண்டு நுகர்ந்தார். துன்பத்தையே இன்பமாகக் கொண்டால் பகைவரும் விரும்பும்படியான சிறப்பு உண்டாகும் என்பதாம்.
தருமர் கதை
துரியோதனன் பாண்டவர்களிடத்திலே பகை கொண்டான். அவர்களுக்கு எப்பொழுதும் தீமையையே செய்துகொண்டு இருந்தான். வீமனைக் கொன்று தொலைத்து விடுவதற்குப் பலவாறு முயன்றான். ஐவருக்கும் அரக்கு மாளிகை கட்டி அதில் தீயிடச் செய்தான். தன் மாமனாகிய சகுனியைக் கொண்டு தருமரோடு சூதாடச் செய்து நாடு நகரங்களை எல்லாம் கைப்பற்றினான். திரௌபதியை அவைக்குக் கொண்டுவரச் செய்து துகில் உரிந்தான். காட்டிலே இருந்தபொழுதும் ஐவருக்கும் பலவாறு தீமை செய்ய முயன்றான். தருமர் துரியோதனன் செய்த தீமைகள் எவற்றையும் பாராட்டவில்லை. அவைகளை எல்லாம் நன்மையாகவே கொண்டு மகிழ்ந்திருந்தார். இதனால் இறுதியில் துரியோதனனையும் வென்று சிறப்படைந்தார்.
No comments:
Post a Comment