064. அமைச்சு - 06. மதிநுட்பம் நூலோடு

 திருக்குறள்

பொருட்பால்

ஆ. அமைச்சியல்

அதிகாரம் 64 -- அமைச்சு


இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "இயற்கையாகிய நுண்ணறிவும், செயற்கையாகிய நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு, மிக்க நுட்பத்தை உடைய ஆலோசனைகளாய் முன் நிற்பவை ஏதும் இல்லை" என்கின்றார் நாயனார்.

மதி - அறிவு. அறிவுடைமை என்னும் அதிகாரத் தலைப்பிற்கு, "அறிவு உடைமையாவது, கல்வி கேள்விகளால் ஆகிய அறிவோடு, உண்மை அறிவினையும் உடையவராய் இருத்தல் ஆகும்" என்று முன்னர் கூறப்பட்டது காண்க.

அதிநுட்பம் என்பதனை, அதின் நுட்பம் என்று பிரித்துக் கொண்டு, அதை விட நுட்பம் எது உள்ளது என்று கூறுவாரும் உண்டு.


இதற்குத் திருக்குறள்...

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு, அதிநுட்பம்

யாஉள முன் நிற்பவை.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு --- இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கை ஆகிய நூலறிவோடு உடையவராய அமைச்சர்க்கு; 

அதி நுட்பம் முன் நிற்பவை யாஉள --- மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்நிற்பன யாவையுள?

('மதி நுட்பம்' என்பது பின்மொழி நிலையல், அது தெய்வம் தர வேண்டுதலின் முன்கூறப்பட்டது. 'நூல்' என்பதூஉம், 'அதிநுட்பம்' என்பதூஉம் ஆகுபெயர்.  'அதி' என்பது வடசொல்லுள் மிகுதிப் பொருளதோர் இடைச்சொல், அது திரிந்து நுட்பம் என்பதனோடு தொக்கது. 'முன் நிற்றல்'  மாற்றார் சூழ்ச்சியாயின தம் சூழ்ச்சியால் அழியாது நிற்றல். இனி 'அதினுட்பம்' என்று பாடம் ஓதி, 'அதனின் நுட்பம் யா' என்று உரைப்பாரும் உளர். அவர் சூழ்ச்சிக்கு இனமாய் முன் சுட்டப்படுவது ஒன்றில்லாமையும், சுட்டுப்பெயர் ஐந்தாம் உருபு ஏற்றவழி அவ்வாறு நில்லாமையும் அறிந்திலர். பகைவர் சூழ்வனவற்றைத் தாம் அறிந்து அழித்து, அவர் அறிந்து அழியாதன தாம் சூழ்வர் என்பது கருத்து. இதனான் அவரது சிறப்புக் கூறப்பட்டது.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


நல்லாவின் பாலின் நந்தேன்கலந் தென்னப் பன்னூல்

வல்லாரும் ஆகி, மதிநுட்பரும் ஆகிச் சோர்வில்

சொல்லால் அடையார் மனமுங்களி தூங்கச் சொல்லிப்

பல்லார் பிறர்சொற் பயனாய்ந்து கவர வல்லார்.   ---  தி.வி.புராணம்.


இதன் பொருள் ---


நல் ஆவின் பாலில் நறுந்தேன் கலந்தென்ன - நல்ல ஆனின் பாலில் நறுந்தேன் கலந்தாற்போல, பல்நூல் வல்லாருமாகி மதிநுட்பருமாகி - பல நூல்களும் கற்று வல்ல செயற்கை அறிவினை உடையராய், அதனோடு இயற்கையாகிய நுண்ணறிவும் கலத்தல் உடையராய், சோர்வு இல் சொல்லால் - சோர்வில்லாத சொற்களால், அடையார் மனமும் களிதூங்கச் சொல்லி - பகைவர் மனமுங் களிப்படையுமாறு பேசி, பிறர் பல்லார் சொல் பயன் ஆய்ந்து கவர வல்லார் - பிறர் பலருங் கூறுஞ் சொற்களிலுள்ள குற்ற நோக்காது அவற்றின் பயனை மட்டும் ஆராய்ந்து கொள்ளுதலில் வல்லார்.



மலர்மகள் மார்பன் பொன்னின்

மன்னவன் பயந்த தெய்வக்

குலமகள் உடனே வந்த

குலச்சிறை குணனும் கேள்வித்

தலைமையும் மதியின் மிக்க

தன்மையும் தூக்கி நோக்கி

நலமலி அமைச்சன் ஆக்கி

நானிலம் புரக்கும் நாளில். ---  தி.வி. புராணம்.


இதன் பொருள் ---


மலர்மகள் மார்பன் - திருமகள் தங்கும் மார்பினையுடைய பாண்டியன், பொன்னி மன்னவன் பயந்த - காவிரி நாடாளும் சோழமன்னன் பெற்றெடுத்த, தெய்வக் குலமகளுடனே வந்த -தெய்வத்தன்மை பொருந்திய மங்கையர்க்கரசியாருடனே வந்த, குலச்சிறை குணனும் கேள்வித் தலைமையும் - குலச்சிறையாரின் நற்குணங்களையும் அவரது நூற்கேள்வியின் சிறப்பினையும், மதியின் மிக்க தன்மையும் - இயற்கை அறிவின் மேம்பட்ட தன்மையினையும், தூக்கி நோக்கி - சீர்தூக்கிக் கண்டு, நலம் மலி அமைச்சனாக்கி - அவரைத்  தனக்கு நன்மை நிறைதற்கு ஏதுவாகிய முதன்மந்திரியாக்கி, நானிலம் புரக்கும் நாளில் - புவியினைப் பாதுகாத்து வரும் நாளில்.



No comments:

064. அமைச்சு - 08. அறிகொன்று அறியான்

திருக்குறள் பொருட்பால் ஆ. அமைச்சியல் அதிகாரம் 64 -- அமைச்சு இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "அறிந்து சொல்லினவரது அறிவை...